வாழ்ந்து பார்த்த தருணம்…126

பொக்கிஷம்…

இளையராஜா என்கிற இந்த ஒற்றைப் பெயருக்குள் ஒளிந்திருக்கும் இசை என்கிற மிகப் பெரும் ரசவாதம், என் வாழ்வில் நிகழ்த்தியிருக்கும், நிகழ்த்திக் கொண்டிருக்கும் மிக, மிக நுட்பமான மனநிலை மாற்றங்களுக்கு அளவே இல்லை. பொதுவாக இங்கே இளையராஜா என்றவுடன் அவருடைய பாடல்கள் மட்டுமே நினைவுக்கு வந்து, அதைப் பற்றி மட்டுமே பல நேரங்களில் பேசிக் கொண்டிருப்பது மிக பெரும் சாபக்கேடு. இங்கே இளையராஜாவை மிக நுட்பமாக கவனப்படுத்தும் யாரும் அவரை கண்டிப்பாக அவரின் பாடல்களுக்காக மட்டும் தொங்கிக் கொண்டு பேசமாட்டார்கள். அதனைத் தாண்டி அவருடைய இசைக் கோர்வைகள் நம் மனதிற்குள் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் கணக்கில் அடங்காதவை. அவற்றில் சிலவற்றை மட்டும் பொறுக்கி எடுத்து, அந்த இசைக் கோர்வையின் ஆன்மாவுக்குள் அமிழ்ந்து போவதில் என்றைக்குமே எனக்கு அலாதி பிரியம் உண்டு. பொதுவாக இன்றைய இசை என்பது வெறும் வெற்று கூச்சலாக அல்லது நம்முடைய நரம்புகளை மட்டும் உசுப்பேற்றி போதையில் ஆட வைக்கும் போதை மாத்திரைகளாக மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட இசையைக் கேட்டு வளரும் தலைமுறைக்கு கண்டிப்பாக இசையின் ஆன்மாவை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கவே வாய்க்காது என நினைக்கிறேன். காரணம், இன்றைய தலைமுறைக்கு தினசரி கூத்துக்கு மட்டுமே இசை அவசியமாக இருக்கிறதே ஒழிய, அதனுள் ஆழ்ந்து போவதில் விருப்பமே இல்லை. அப்படியே அவர்களிடம் போய் இசையை நுட்பமாய், ஆழமாய் புரிந்து கொள்வதைப் பற்றி பேசினால், அது என்னப்பா அது ஆழ்ந்து போதல், ஆன்மான்னு எதோ புதுசா சொல்லுற ஒண்ணுமே புரியல என சொல்லிவிடுகிறார்கள். அதனால் அவர்களிடம் போய் எல்லாம் இளையராஜாவை பற்றியோ அல்லது அவரது இசை கோர்வைகளின் நுட்பம் பற்றியோ பேசவே முடியாது.

இந்தக் காரணத்தால் இளையராஜாவின் இசைப பற்றி யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. ஒரு ரசிகனாக இளையராஜாவின் இசையை மிகச் சிறப்பாக, ஆழமாக உள்வாங்குவதோடு நிறுத்திக்கொள்கிறேன். பொதுவாக எனக்கு இளையராஜா அவர்களின் பாடல்களை விட, அவரின் பின்னனி இசை கோர்வைகள் என்றைக்குமே மிக, மிகப பிடித்தமானவை. அதிலும் அவர் இசை அமைத்த படங்களின் தொடக்க இசைக்கு என மனம் அடிமை. குறிப்பாக சில திரைப்படங்களின் தொடக்கத்தில் திரையில் பெயர்கள் விரிய தொடங்குகையில் இளையராஜாவின் இசை ஒலிக்க ஆரம்பிக்கும் அந்த இசையை எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. அப்படி எனக்காக சில திரைப்படங்களின் தொடக்க இசையை திரும்ப, திரும்ப பல சந்தர்ப்பங்களில் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அந்த சில திரைப்படங்கள் வருஷம் 16, கோபுரவாசலிலே, இதயத்தை திருடாதே மற்றும் அபூர்வ சகோதர்கள். இந்த நான்கு திரைப்படங்களின் தொடக்க இசையை நேரம் வாய்க்கையில் கேட்டுப்பாருங்கள். மேலே குறிப்பிட்டிருக்கும் திரைப்படங்களின் தொடக்க இசையை அப்படி நீங்கள் கேட்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், தயவுசெய்து உங்களின் அலைபேசியை தொந்தரவு தராத வண்ணம் மாற்றிவிட்டு, நல்லதொரு ஒலிவாங்கியை காதுகளுக்குள் பொறுத்தி கண்களை முடி லயித்து கேட்டுப்பாருங்கள். அந்த இசை உங்களுக்குள் நிகழ்த்தும் ரசவாதம் என்பது கண்டிப்பாக விவரிக்க முடியாதவையாக இருக்கும் என்பது உறுதி.

அப்படி என்னை அதிகளவு ரசிக்க வைத்த, பைத்தியம் பிடிக்க வைத்த, திரைப்பட தொடக்க இசைகளுள் முக்கியமானது கோபுரவாசலிலே திரைப்பட தொடக்க இசை. எங்காவது பயணம் கிளம்பும் போதெல்லாம் அந்த பயணம் என்னுடைய பணி நிமித்தமாகவோ அல்லது குடும்பத்தோடோ அது எப்படியான பயணமாக இருந்தாலும், உறுதியாக ஜன்னலோர இருக்கையும், இளையராஜாவின் கோபரவசலிலே திரைப்படத்தின் தொடக்க இசையும் என் கூடவே கண்டிப்பாக பயணித்தே தீரும், இதனாலேயே நீண்ட நாட்களாக கோபுர வாசலிலே திரைப்படத்தின் தொடக்க இசைக்கு, ஒரு அட்டகாசமான பயண அனுபவத்தை கொடுக்கும் மிகச்சிறப்பனாதொரு காட்சி மொழி ஒன்றை என்னுடைய கரங்களால் பதிவு செய்து, அதனை மிகச் சிறப்பாய் படத்தொகுப்பு செய்து இளையராஜா என்கிற மாபெரும் கலைஞனுக்கு சமர்ப்பிக்க வேண்டுமே என்கிற தீராத ஆசை மனதினுள் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில், என்னுடைய பணி நிமித்தமாக மூன்று நாட்கள் கடவுளின் தேசத்தின் மலைகளில் பயணிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. ஆனால் அந்தப் பயணம் தொடங்குகையில் கண்டிப்பாக என்னிடம் எவ்வித திட்டமிடலும் இல்லை, ஆனால் எப்பொழுதும் போல் ஜன்னாலோர இருக்கை, அதோடு ராக தேவனின் இசையும் கூடவே பயணிக்க, இசையோடு என்னுடைய பயணக்காட்சிகளும் ஒன்றோடு ஒன்று மிகச் சிறப்பாக பின்னிபிணைய, ஆகா இது தான் சரியான நேரம் என மனதினுள் இவ்வளவு நாட்களாக காத்திருந்த பட்சி சொல்ல, அப்படியே கோபுரவாசலியே திரைப்படத்தின் தொடக்க இசையை மனதினுள் ஓட விட்டபடி, காட்சிகளை பதிவு செய்ய ஆரம்பித்தேன். அந்த அனுபவத்தை என்னவென்று சொல்ல வாய்ப்பேயில்லை அதகளம். அப்படி என்னுடைய கரங்களால் காட்சியாக பதிவு செய்ததை, படத்தொகுப்பு செய்து இங்கே பதிவேற்றுகிறேன். இப்படியான ஒரு இசையை என்னுள் ஆழமாய் உணரச் செய்து, என்னை எனக்கே நுட்பமாய் உணரவைக்கும் ராக தேவனுக்கு நன்றி என்கிற வார்த்தையை தவிர வேறென்ன சொல்வது எனத தெரியவில்லை. மகிழ்ச்சி.

பின்குறிப்பு :
இந்த இசைக்காக எடுக்கப்பட்ட காட்சி மொழி முழுவதும் என்னுடைய அலைபேசியின் வழியே என்னால் எடுக்கப்பட்டது. மூன்று நாட்கள் பயணத்தில், பல்வேறு சந்தர்ப்பத்தில், இசையை என்னுடைய மனதிற்குள் ஓடவிட்டபடி எடுத்தது. இதில் எந்த இடத்திலும் என்னுடன் பயணித்தவர்களுக்கு எதற்காக அலைபேசியில் பதிவு செய்கிறேன் என்பதும் தெரியாது. காரணம் எந்த இடத்திலும் பணி நிமித்தமான பயணத்தின் இடையில் இதற்காக எங்கேயும் தனிப்பட்ட முறையில் வாகனத்தை நிறுத்தவேயில்லை. மகிழ்ச்சி…

https://www.facebook.com/share/v/Vs6xvBPY1WXrLekS/?mibextid=oFDknk

கடைசியாக : காணொளியை பார்ப்பவர்கள், கண்டிப்பாக, தர அமைப்பில், நல்ல தரத்தை தேர்ந்தெடுத்து பாருங்கள். அதே சமயம் நல்ல தரமான ஒலிவாங்கியை காதில் பொருத்திக் கேளுங்கள்.  மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916