வாழ்ந்து பார்த்த தருணம்…132

வழி(லி)த் தடம் தேடி…

கடந்த சில நாட்களாக இல்லை மாதங்களாக எழுதவே இல்லை. காரணம் சுற்றிலும் இருந்த சூழல், நோய்தொற்று என பல காரணங்கள். அதனைப் பற்றி விரிவாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசலாம். இப்பொழுது பேச வந்த விஷயமே வேறு. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 15 யானைகளின் பயணம் ஒன்றைப் பற்றி மிக விரிவான செய்தியொன்று பரப்பரப்பாக எல்லாவித ஊடகங்களிலும் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. பேசப்பட்டது சரி, ஆனால் அதில் என்ன மாதிரியான வார்த்தை பிரயோகங்களை நாம் பயன்படுத்தினோம் எனப் பார்த்தால், அந்த வார்த்தைப் பிரயோகங்கள் அனைத்தும் மிக மட்டமாக இருந்தது தான் இங்கே வருத்தப்பட வேண்டிய, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. நாம் செய்திகளின் வழியே பயன்படுத்திய வார்த்தைகள் தான், நாம் நம்முடன் கூடவே இருக்கும் ஒரு உயிரினை பற்றி என்ன மாதிரியான மனநிலையை கொண்டிருக்கிறோம் என்பதற்கான சாட்சி. அந்தச் செய்தியில் அந்த யானைகளைப் பற்றி குறிப்பிடுகையில் பயன்படுத்தப்பட்ட சில சொல்லாடல்கள் இப்படித்தான் இருந்தது. அவை அட்டுழியம், அத்துமீறல், இழப்பு, சேதம், நாசம், தாக்குதல், சூறையாடல் இப்படி மிகச் சிறப்புக் கூரிய மட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தான் அந்த யானைகளைப் பற்றிய செய்திகள் பெரும்பாலும் சொல்லப்பட்டன அல்லது எழுதப்பட்டன. இப்படியான வார்த்தைகளின் வழியே ஒரு சக உயிரினைப் பற்றி நீங்கள் என்ன மாதிரியான பிம்பத்தை இன்றைய தலைமுறைக்கு சொல்ல நினைக்கிறீர்கள் அல்லது கட்டமைக்க நினைக்கிறீர்கள்? நம்முடன் வாழும், நாம் இந்த பூமியில் சொகுசாக வாழ்வதற்கு, இயற்கையின் சுழற்சி கன்னியில் முக்கியமானதாக கருத்தப்படும் ஒரு உயிரினைப் பற்றி பேசுகையில் எழுதுகையில் கொஞ்சமாவது பொறுப்பும், நாகரிகமும் வேண்டாமா? அந்த உயிருக்கு நாம் பேசுவது எங்கே கேட்கப் போகிறது என்கிற தைரியமும், அலட்சியமும் மனிதன் என்பவன் எவ்வளவு சுயநலமானவன் என்பதை மிகச்சிறப்பாக காட்டுகிறது.

உணவைத் தேடி, நீரைத் தேடி பயணிக்கும், ஒரு சக உயிரின் பயணம் ஐநூறு கிலோ மீட்டர்களை தாண்டியும் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது எனில் தவறு யார் மீது? இன்றைய தலைமுறை முன் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்வியும் அது தான். ஆனால், அதனைப் பற்றி சின்னதாக மட்டும் சொல்லிவிட்டு, அந்த பயணத்தில் தங்களுடைய வாழ்விடத்துக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை பற்றி மட்டும் சொல்லி, சக உயிரினை குற்றவாளி கூண்டில் நிறுத்தி, இந்த மனிதர்கள் ஆக்கிரமித்த சக உயிரின் வாழ்விடங்களை பற்றிப் பேசுவதே இல்லை. அந்தச் செய்தியில் போகிற போக்கில் சொல்லப்பட்ட, ஆனால், முக்கியமாய் விவாதிக்க வேண்டிய விஷயம். இந்த மனிதன் வனங்களை அழித்து அதனை ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றியதைத் தான். ஆனால் அதை பற்றி பேசுவதையோ, அதற்கான தீர்வை நோக்கி நகர்வதையோ விட்டுவிட்டு, 15 யானைகளின் உணவு தேடியப் பயணத்தை பரப்பரப்பான செய்தியாக மாற்றி, அந்தச் செய்திகளுக்குள் வார்த்தைகளை மட்டமாக கட்டமைத்து, அதனையும் 24 மணிநேர நேரலையாகி ஒளிபரப்பி, அதனையும் ஒரு விளம்பரதாரர் வழியே வழங்கி, உயிர் வாழ்வதற்கான ஒரு சக உயிரின் பயணத்தை நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சியாக மாற்றி விட்டது இந்த சுயநலமான மனித சமூகம். இந்த லட்சணத்தில் இன்றைய தலைமுறைக்கு இயற்கை என்றால் என்னவென்று மனதுக்குள் பதிய வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என சிந்தித்து இருக்கிறீர்களா? பச்சை பசேல் என இருக்கும் வயல்வெளியைத் தான் இந்த தலைமுறையை இயற்கை என சிலாகித்து சொல்லிக்கொண்டிருக்கிறது. அதனைத் தான் இன்றைய திரைப்படங்களும் மற்ற காட்சி ஊடகங்களும் நிலை நிறுத்திக் கொண்டே இருக்கின்றன. அப்படியானால் வனம், மலை, அருவி எல்லாம் என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது இல்லையா?

மேலே சொல்லியுள்ள கேள்விக்கான இன்றைய தலைமுறையின் பதில் என்னவென்றால், வனம், மலை, அருவி, ஆறு அந்த காட்டுயிர்கள் உயிர்வாழும் இடம் எல்லாம் இன்பச் சுற்றுலா செல்லும் சுற்றுலா தளங்கள். அதுவும் போக மேலே சொல்லியுள்ள இயற்கை என்பதன் உண்மையான அர்த்தம் நிறைந்த இடங்கள் என்பதெல்லாம், இன்றைய தலைமுறைக்கு நண்பர்களுடன் சென்று குடிக்கவும், கும்மியடிக்கவும் அதன் வழியே அப்படியான இடங்களை பற்றி சிறிதளவேனும் அக்கறையற்று கொண்டு போன குப்பைகளை வீசி விட்டு வரும் இடங்களாக மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதில் ஏழைப் பணக்காரன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை, அவனவன் தகுதிக்கு ஏற்றது போல் சிறியதும், பெரியதுமாக பாட்டில்களும், நெகிழி குப்பைகளும் அதோடு நாம் சாப்பிட்டு விட்டு வீசி ஏறியும் மிச்சங்களையும் சுமக்கும் குப்பை தொட்டிகளாக இயற்கை வளமிக்க இடங்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதில் சுற்றுலா செல்லும் முன் சில பேச்சுக்கள் காதில் விழும் பாருங்கள். அதில் ஒரு சின்ன உதாரணம் காலையில் எழுந்ததும் அப்படியே பால்கனி கதவ திறந்தா எதிர்ல அருவி தெரியணும், அதோட சாரல் நம் மேலே விழுகுறப்ப ஒரு கப் காபி சாப்பிடற சுகமே தனி தான் என சிலாகிக்கும் மனிதனே இங்கே அதிகம். இதில் நாகரிகம் கருதி காபி என எழுதியிருக்கிறேன். இப்படி வனத்தையும், வனவிலங்குகளின் உணவு தேடும் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து விட்டு, இன்றைய தலைமுறைக்கு இயற்கையான இடங்கள் என்றால் நாம் பயிர் செய்யும் வேளாண் வயல்களை காட்டிக்கொண்டிருக்கிறோம். இந்த தலைமுறையும் வயல்வெளியும் மற்ற பயிரிடல் நிலங்களையும் இயற்கை என நம்பிக்கொண்டிருக்கிறது. அப்படியான இன்றைய தலைமுறைக்கு ஒரு சக உயிரின் உயிர்வாழ்வதற்கான தேடல் என்பது மற்றுமொரு செய்தி அவ்வளவே. அதில் சில பேர் அந்தச் செய்தியை, தனது அலைப்பேசியின் வழியே மற்றவர்களுக்கு பகிர்வதே மிகப்பெரும் செயலாக கருதி அதனை தங்களுக்குள்ளே சிலாகித்து அடங்கியும் விடுவார்கள். இவர்கள் யாருக்கும் அந்த சக உயிரின் போராட்டமான பயணத்திற்கு பின்னால் இருக்கும் வழி மிகுந்து தேடலுக்கு நாமும் ஏதோ ஒரு வகையில் காரணியாக இருக்கிறோம் என்பது உரைக்கும் புள்ளி தான் நாம் மாறுவதற்கான தொடக்கப்புள்ளி. அந்தப் புள்ளி என்பது நீங்கள் குறைந்த பட்சம் இந்த நிலத்தின் மீது சர்வ அலட்சியமாக வீசி ஏறியும் நெகிழி போன்ற இந்த நிலத்தை கொல்லும் பொருட்களை தவிர்ப்பதில் இருந்து தொடங்குகிறது. நமக்காகவும் நம்முடைய அடுத்த தலைமுறைக்காகவும் இதனை செய்தே ஆகவேண்டும். இல்லையெனில், இந்த இயற்கை எப்பொழுதும் நம்மை வேடிக்கை பார்த்துக் கொண்டே சும்மா இருக்காது…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916