வாழ்ந்து பார்த்த தருணம்…134

பசி…

கடந்த 26ம் தேதி எழுத்தாளர் சாரு அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஷாலின் அவர்கள் எழுதியிருந்த சோற்று ஜாதி என்கிற கட்டுரையைப் பகிந்ததோடு இல்லாமல், அந்தக் கட்டுரையைப் பற்றிய அவருடைய கருத்துக்களையும் எழுதியிருந்தார். சாருவின் கருத்தைப் படித்தவுடன் உடனடியாக அந்த கட்டுரையை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மேலிட போய் வாசித்தேன். சாருவின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் மிக, மிக அற்புதமான கதை கட்டுரையாக விரிந்திருந்தது. சமீபத்தில் வாசித்த மிக, மிக உணர்வுப்பூர்வமான, உணர்ச்சிப்பூர்வமான கதை இது. நாம் வாசிக்கும் எழுத்து, எழுதுபவரின் வாழ்வில் நிகழ்ந்ததாக சொல்லப்படுகையில், அதனை வாசிக்கும் ஏதோ ஒரு கணத்தில், எழுதப்பட்டுள்ள நிகழ்வுக்குள் நாமும் ஒரு பாத்திரமாக நுழைந்து பயணிக்க ஆரம்பிப்போம் இல்லையா, அந்தப் புள்ளி தான் அந்த எழுத்துக்கும் நமக்குமான தொடர்பை வேறு ஒரு தளத்திற்கு நகர்த்தி செல்லும் வல்லமை உடையது. அப்படியொரு அற்புதமான கணத்தை சோற்று ஜாதி கதை கொடுத்தது. அதிலும் குறிப்பாக சாருவின் கருத்தில் என்னைப் பொறுத்தவரை உணவும், உணவை வெளியேற்றுவதும் மதம் போன்றவை என சொல்லியிருந்தார். மிக, மிக சத்தியமான உண்மை. அதனை உணர்ந்து பார்த்தவர்களுக்குத் தான் அது புரியும், தெரியும். அதுவும் போக சோற்று ஜாதி கட்டுரையில் சாருவை ஷாலின் சந்தித்த ஒரு நிகழ்வும், அதில் ஷாலினின் உணர்ச்சிப்பூர்வமான கண்களில் நீர் திரளும் நிகழ்வும் ஒன்று இருக்கிறது. அதனை வாசிக்கையில் என் கண்களில் நீர் வழியாமல் அந்த கணத்தை கடக்க முடியவில்லை. இதனை எழுதும் போது கூட அந்தப் பத்தியை மீண்டும், மீண்டும் படித்துவிட்டே கண்களில் வழிந்த நீரை துடைத்துவிட்டே எழுதுகிறேன். காரணம்…

சமீபத்திய நாட்களில் நோய் தொற்றின் காரணமாக என்னுடைய உடல்நிலை மோசமடைந்து கிட்டத்தட்ட 18 நாட்களுக்கும் மேல் நீர் கூட அருந்த முடியாமல் மிகப்பெரும் உடல் மற்றும் மனச்சோர்வோடு கடந்து போனது. அந்த நாட்களைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியிருப்பதால் அதனை தனியாக வேறொரு நேரத்தில் விரிவாக பேசலாம். இப்பொழுது சொல்ல வந்த விஷயத்திற்குள் போகலாம். கிட்டத்தட்ட 18 நாட்களுக்கும் மேலாக உணவும் நீரும் உட்கொள்ள முடியாமல் கடந்தது இல்லையா, அப்படியான நாட்களில் இந்தக் கொடுமையான காலகட்டம் எப்படா முடியும் என மிகப்பெரும் ஏக்கம் மனதினுள் தோன்றியபடியே இருக்கும். அதனைத் தாண்டி என் எதிரில் யாராவது உணவை ரசித்து சாப்பிடுகையில் ஒருவித ஏக்கத்தோடு கூடிய வலி ஒன்று மனதினுள் கீறிச் செல்லும் பாருங்கள், அப்படியான நேரங்களில் நோயினால் ஏற்பட்ட உடல் வலியை விட மனதினுள் ஏற்படும் வலி கொடுமையானது. இப்படியான நாட்கள் எல்லாம் முடிந்து, ஒரு நல்ல நாளில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்லலாம் என்கிற நிலை வந்த போது, முதலில் மனத்தினுள் தோன்றியது வீட்டில் போய் நன்றாக சாப்பிட வேண்டும் என்பது தான், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் நாளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக, குறைந்த பட்சமாவது கொஞ்சமேனும் உணவை உடல் ஏற்றுக்கொள்ள தொடங்கியிருந்தது. நோயின் தன்மை காரணமாக மருத்துவமனை ஒதுக்கி இருந்த இடத்தில் என்னுடன் யாருமே தங்க இயலாத நிலை, அதனால் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் வீட்டில் இருப்பவர்கள் யாரும் வரவேண்டாம் என சொல்லிவிட்டு, தனியாக ஒரு வாடகை வாகனம் பிடித்து வீடு வந்து சேர்ந்து விட்டேன்.

தற்பொழுது குடியிருக்கும் வீடு முதல்தளத்தில் இருக்கிறது. நோயோடு போராடிய நாட்களில் வீடு என்கிற ஒரு எண்ணம் தோன்றினாலே மனதிற்குள் ஒருவிதமான ஏக்கத்தோடு கூடிய பெருமூச்சு வந்து போகும். அப்படியே கிட்டத்தட்ட மாதத்தின் பாதி நாட்களுக்கும் மேல் கடந்து போய் இப்பொழுது தான் வீட்டினுள் நுழைகிறேன், முதல்தளம் ஏற கால் வைத்தவுடன், அப்படியே மாடியேறும் படியில் முன் நெற்றியை வைத்து வணங்க வேண்டும் என மனதினுள் தோன்றியது வணங்கினேன். அந்த கணம், அந்த நொடி கண்களில் இருந்து சில துளிகள் படிகளில் படிந்து பரவியது, உள்ளிருந்து தோன்றிய உணர்வுப் பெருக்கை கட்டுப்படுத்தியபடி, அப்படியே மேலேறி வீட்டினுள் நுழைந்தவுடன், சூடான நீர் தயாராக இருந்தது. நேராக குளியலறை போய் குளித்துவிட்டு வாருங்கள் சாப்பிடலாம் என வீட்டில் சொன்னவுடன், குளித்துவிட்டு வந்து அமர்ந்தால், என்னுடைய கைகளில் கொடுக்கப்பட்ட தட்டில் சூடான இட்லியுடன் எனக்குப் பிடித்த பிரத்யேகமான வெங்காய சட்னியும் இருந்தது. சூடான இட்லியுடன், வெங்காய சட்னியின் வாசமும் நாசிகளுக்குள் நுழைந்த போது, உடல் மனம் இரண்டும் என்னவெல்லாமோ செய்தது. காரணம் கிட்டத்தட்ட 18நாட்களுக்கும் மேல் சரியாக சொல்வதானால் 22நாட்கள் என நினைக்கிறேன். என்னுடைய உடல் உணவை ஏற்றுக்கொள்ளவே இல்லை. நீரும் உட்செல்லவில்லை, கால் குவளை நீர் அருந்தினால் கூட உடல் ஏற்றுக்கொள்ளாமல் அப்படியே வாந்தி எடுத்தவிடுவேன். பசி என்கிற உணர்வே சுத்தமாக குறைந்து போனது. அதனால் இந்த நிலையை எல்லாம் கடந்து வந்து, பசி என்கிற உணர்வை உணரத் தொடங்கி, அப்படியான பசியியை உடல் உணரும் வேளையில் உணவை கையில் ஏந்திய அந்த நொடி கண்களில் இருந்து நீர் பொங்குவதை என்னால் தடுக்கவே முடியவில்லை. ஏற்கனவே மனித வாழ்வில் உணவு என்பது எந்தளவு நுட்பமான முக்கியத்துவம் வாய்ந்தது என புரிந்து, தெரிந்து, எழுதியும் இருந்தாலும், இந்த கடிமான சூழல் மீண்டும் ஒரு முறை அதனை ஆழமாக என்னுள் கடத்தியது. ஷாலின் அவர்கள் எழுதியிருந்த கதையை வாசிக்கையில் அப்படியான தருணம் ஒன்று வந்து போது என்னால் கண்களில் நீர் பொங்குவதை தடுக்க மனமே இல்லாமல் வாசித்து முடித்தேன். வாசித்து முடித்தவுடன் கண்களில் பொங்கிய கண்ணிருடன் அப்படியே ஓடிப்போய் ஷாலினையும், சாருவையும் இறுக அனைத்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916