வாழ்ந்து பார்த்த தருணம்…142

பா.ரா பற்ற வைத்த நெருப்பு…

முதல் வரியில் சொல்ல முடியாததை, முந்நூறு பக்கம் முக்கி, முக்கி எழுதினாலும் சொல்ல முடியாது. யார் இதை சொன்னது. எங்கே எனப் பார்ப்பதற்கு முன்பாக, இங்கே சொல்லப் போவது என்னுடைய வாசிப்பனுவத்தின் வழியே எனக்குப் புரிந்ததை, தெரிந்ததை தான் சொல்லப்போகிறேனே ஒழிய, வேறேதுவும் இல்லை பராபரமே. அதையெல்லாம் யோசிக்காமல் இவன் யாரடா எழுத்தாளர்கள் பற்றி கருத்து சொல்ல என யாருக்காவது பொங்கும் என்றால், இதற்கு மேல் வாசிக்காமல் கடந்து விடவும். கடந்த சனிக் கிழமை பா.ரா அவர்கள் எழுத்தார்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தியப் பயிற்சிப் பட்டறையில், மேலே முதல்வரியில் சொன்னதை தான் அடிப்படையாக கொண்டு நிறைய பேசினார். பா.ராகவன் இப்படி ஒரு பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தப் போகிறார் என்பதே சாருவின் முதநூல் பக்கத்தின் வழியே தான் தெரியவந்தது. சாருவும் சும்மா சொல்லக் கூடாது இந்தப் பயிற்சிப் பட்டறைப் பற்றி மிக, மிக அட்டகாசமானச், சிறப்பான முன்னோட்டத்தை கொடுத்தார் என்பதையும் இங்கே சொல்லித் தான் ஆக வேண்டும். சரி இனி பயிற்சி பற்றி, பா.ரா அவர் பேச்சை தொடங்கும் முன் சொன்ன ஒரு விஷயம் தான் எனக்கு கொஞ்சம் முரணாக பட்டது. அவர் சொன்னது என்னவெனில், எனக்கு சுவாரஸ்யமாக, கேட்பவர்களை கவரும்படி பேச வராது, என்னுடையப் பேச்சில் கண்டிப்பாக, ஆழமான, பயனுள்ள கருத்துக்கள், விஷயங்கள் இருக்கும், அதற்கு உத்தரவாதமும் உண்டு. ஆனாலும் எனக்கு சுவாரஸ்யமாக பேச வராது என பா.ரா சொன்னது தான் எனக்கு கொஞ்சம் முரணாகப் பட்டது. காரணம், என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் சுவாரஸ்யமாய் எழுதுவதில் வித்தகர் பா.ரா, இதனையும் சும்மா போகிற போக்கில் எல்லாம் சொல்லவில்லை. யாராவது உங்களிடம் இப்பொழுது தான் புத்தகம் என்பதை யோசித்து, வாசிப்பு என்கிற ஒன்றைத் தொடங்கப் போகிறேன் எனச் சொல்லி, உங்களிடம் புத்தகம் ஏதாவது பரிந்துரைக்க முடியுமா எனக் கேட்டால், கண்ணை மூடிக் கொண்டு பா.ராவின் புத்தகங்களை பரிந்துரைக்கலாம், என்னுடைய அனுபவத்தில் மிக சமீபத்திய உதாரணம், எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் வாசிக்க வேண்டும் எனச் சொன்ன போது, பா.ரா எழுதிய புத்தகமான யானி என்கிற புத்தகத்தைத் தான் பரிந்துரைத்தேன், அந்த புத்தகத்தை வாங்கி வாசித்தவர், மூன்று நாட்களில் படித்து முடித்து விட்டார். அப்படி படித்து முடித்ததும், ஒரு நாள் எங்கள் வீட்டுக்கும் வந்திருந்தார் என்னுடைய புத்தக அலமாரியில் இருக்கும் மேலும் இரண்டு, மூன்று புத்தகங்களை எடுத்து, அடுத்து இதை வாங்கி வாசிக்கலாமா என யோசித்து, கையில் எடுத்த புத்தங்களின் முதல் இரண்டு பக்கங்களை மட்டும் வாசித்துவிட்டு, யானி அளவுக்கு எளிதில் புரிந்துகொண்டு சுவாரஸ்மாய் படிக்கும் வகையில் இந்தப் புத்தகங்கள் எல்லாம் இல்லை எனச் சொல்லிவிட்டார், (அது என்னென்ன புத்தங்கள் என்பதை பொது வெளியில் சொல்வதை தவிர்க்கிறேன்) இது தான் பா.ரா.

ஆனால் பா.ரா என்னடாவென்றால், தனக்கு சுவாரஸ்யமாய் பேச வராது எனச் சொல்கிறாரே என்கிற யோசனையோடே, அவரது பேச்சைக் கேட்கத் தொடங்கினால், மனிதரின் பேச்சு குறிப்பிட்ட நேரம் தாண்டியும் பட்டாசாய் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் கொஞ்சம் கூட சுவாரஸ்யம் குறைய வேண்டுமே, அதற்கு வாய்ப்பேயில்லை, மொத்தமாக சொல்வதானால் பா.ரா பேச்சில் சும்மாப் பட்டையைக் கிளப்பினார். முதலில் நிகழ்வு, இரவு 7மணியில் இருந்து 8:15 வரை எனக் குறிப்பிட்டு இருந்தார்கள், 8:30 தாண்டியும் அட்டகாசமான கேள்விகளோடு தொடர்ந்து கொண்டிருந்தது. என்னால் 8:30க்கு மேல் இருக்க முடியாத சூழல், மனதே இல்லாமல், நிகழ்வில் இருந்து வெளிவந்தேன், பா.ராவின் சுவாரஸ்யமான பேச்சில் அதுவும் ஒரு எழுத்தின் முதல் வரி எந்த அளவு முக்கியமானது என்பதற்கு அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு உதாரணமும் அதகளம். அதிலும் குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்தமான இரண்டு உதாரணங்களை சொல்ல வேண்டுமானால், முதல் உதாரணம் கென்றி சாரியரின் பட்டாம்பூச்சி என்கிற புத்தகத்தின் முதல் வரியும், இரண்டாவது உதாரணமாக சுந்தர ராமசாமி பற்றி ஜெ.மோ எழுதியுள்ள நினைவின் நதியில் புத்தகத்தில், சு.ராவோடு தனக்கான முரண் எங்கே ஆரம்பிக்கிறது என்கிற விஷயத்தை பற்றி ஜெ.மோ எழுதத் தொடங்கும், அந்த முதல் புள்ளி இருக்கிறது இல்லையா, அதற்கு ஜெ.மோ கையாண்டுள்ள வார்த்தைகளோடு அந்த முரணை சொல்லத் தொடங்கும் முதல் வரியும் என மேலே சொல்லியுள்ள இரண்டு உதாரணங்களுமே அதகளம், அட்டகாசம் என என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் சில உதாரணங்களாக இனி இரவு எழுந்திரு – பாலக்குமாரன், ஜெ ஜெ சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி, அந்திக் கருத்தல் – வண்ணநிலவன், எழுத்தாளர் சதத் ஹசன் மண்ட்டோவின் புத்தகம் என ஒவ்வொருடைய புத்தககத்தினுடைய முதல் வரியும் எந்த அளவு அந்த புத்தகத்தை வாசிக்கும் வாசகனுக்கு தூண்டு கோலாக இருந்தது என்பதையும், அந்த முதல் வரியோ அல்லது முதல் பத்தியோ அந்த புத்தகத்தை வாசிக்கும் வாசகனை அந்த நாவலைப் பற்றி எப்படியான சுவாரஸ்யத்தை, வாசிக்கும் ஆர்வத்தை நோக்கி நகர்த்துகிறது எனப் பா.ரா சொன்ன ஒவ்வொரு விளக்கமும் மிக, மிக அற்புதம். அதுவும் நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் குத்துச் சண்டை பற்றி ஒரு நாவல் எழுதினால் அதன் முதல் வரி எப்படியானதாக இருக்க வேண்டும் எனக் கேட்க, அதற்கு பா.ரா சொன்ன பதில் மிகத்தரமான சம்பவம், சும்மாத் தெறி.

இதனைத் தாண்டி இன்றைய வாசகன் என்பவன் யார், அவன் எப்படியான பின்னனியில் இருந்து வாசிக்க வருகிறான், அதிலும் பெரும்பான்மையாக வாசிக்க வரும் வாசகனை எழுத்தை நோக்கி இழுத்து வர என்னவெல்லாம் செய்ய வேண்டும். என்னவெல்லாம் செய்யக் கூடாது என மிக, மிகச் சிறப்பாக சொல்லிச் சென்றார். அதிலும், குறிப்பாக இன்றைக்கு புதியதாக வாசிக்க வரும் வாசகன் கண்டிப்பாக வர்ணனைகளை ரசிப்பததில்லை, என்னுடைய நாவல் ஒன்றில் கூட ஒரு முக்கியமான கட்டத்தில் அந்த நாவலின் பிரதான பெண் கதாபாத்திரத்தை வர்ணிக்க வாய்ப்பு கிடைத்து, கிட்டத்தட்ட பதினைந்து வரிகளுக்கு மேல் வர்ணித்து எழுதிய பிறகு, இதனை வாசகன் சுவாரஸ்யமாய் வாசிப்பானா என்று யோசித்ததில் வாசிக்க மாட்டான் எனத் தோன்றியதும், அந்த பதினைந்து வரிகளையும் அப்படியே நீக்கிவிட்டு, அவள் இந்த இயற்கையை போல் அழகாக இருந்தால் என ஒரே வரியில் முடித்துவிட்டேன் என்று பா.ரா சொன்னதோடு நிற்காமல், வர்ணணைகளை தவிர்ப்பதோடு மட்டுமில்லாமல், கறாராக சொற்களை கொலை செய்யுங்கள், அதுவே உங்களின் எழுத்தை மேலும் மேலும் சுவாராஸ்யமானதாக மாற்றும் என்றும் சொன்னார். பா.ரா வருத்தப்பட்டு சொன்ன ஒரு முக்கியமான விஷயம், இந்த பயிற்சிப் பட்டறைக்கு முன்பதிவு செய்த சில பேர் கலந்து கொள்ளவில்லை, ஒரே ஒருவரைத் தவிர, வேறு யாரும் தாங்கள் கலந்து கொள்ள முடியாமைப் பற்றி தகவலே சொல்லவில்லை, எனச் சொன்னார். அதனால் கண்டிப்பாக அடுத்த முறை பயிற்சிப் பட்டறை இலவசமாக நடத்தப்படாது, கட்டணம் கண்டிப்பாக உண்டு எனச் சொல்லியிருக்கிறார். எனக்கென்னவோ அப்பொழுதும் கூட ஒரு பத்து சதவீத ஆட்களாவது முன்பதிவு செய்து கட்டணமெல்லாம் கட்டிய பிறகும் கலந்துகொள்ளாமல் இருப்பார்கள் எனத் தோன்றுகிறது. காரணம், நம் மக்களுக்கு இப்படியான பயிற்சியை விட வேறு வேறு விதமான எளியதான கவனத்தை சிதறவைக்கும் நிகழ்வுகள் நிறையவே புதிது புதிதாக தோன்றிக் கொண்டே இருக்கின்றன. பார்க்கலாம் அடுத்த முறை கட்டணத்தோடு கூடிய பயிற்சிப் பட்டறையில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என, மற்றபடி அடுத்த பயிற்சி பட்டறைக்காக மரண காத்திருப்பில் இருப்பதில் பெரு மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916