சில நிமிடங்களேனும் பைத்தியக்காரனாய்…
அவரைப் பைத்தியம் என அழைப்பது சரியா, அவர் உண்மையில் பைத்தியமா, ஆனாலும் அவரை இந்தச் சமூகம் பைத்தியம் எனச் சொல்லிவிட்டது. அதனால் அந்த நபர் பைத்தியமாய் ரோட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பசியைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுவும் அதன் தொடர்ச்சியே. காரணம், பசி என்கிற ஒன்றின் வழியே எனக்கு தினம், தினம் கிடைக்கும் அனுபவம் என்பது, இந்த எல்லையற்ற வாழ்வில், எனக்கு தொடர்பே இல்லையென தோன்றும், இந்த உலகத்தில் ஏதோ மூலையில் இருக்கும், வேறு ஒரு மனிதனின் ஆழ்மன உளவியலை என் கண் எதிரே கண்ணாடி போல் காட்டிக் கொண்டிருக்கிறது, அந்த கண்ணாடியில் பல நேரங்களில் என்னுடைய முகமும் தோன்றி மறைவது தான் என்னுடைய வாழ்வின் மிகப் பெரும் சுவாரஸ்யமாய் இருக்கிறது. இங்கே அடிக்கடி ஒரு சொலவடை, பல நேரங்களில், பற்பல இடங்களில், பலவிதமான மேடைகளில் மேற்கோள் காட்டி சொல்லப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. அது என்னவெனில் இந்த உலகத்தில் பிறந்த குழந்தையும், பைத்திக்காரனும் மட்டுமே எவ்விதமான கவலையுமற்ற நிம்மதியான ஜீவன்கள் என்று. ஒரு மனிதன் வளர்ந்த பிறகு குழந்தையாவது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் பைத்தியக்காரனாய் இருக்க முடியும். அப்படி உங்களை என்றைக்காவது பைத்தியக்காரனாய் உணர்ந்ததுண்டா, இல்லை குறைந்த பட்சம் இந்த சமூகம் பைத்தியம் எனச் சொல்லும் ஒரு நபரிடம் பேசியதுண்டா, உண்டு என்பவர்கள் பாக்கியவான்கள். என்னுடைய அன்றாட பணிக்கான பயணத்தில், தினசரி என்னோடு மதிய உணவுக்கான பொதியும் சேர்ந்தே இருக்கும், சமீப நாட்களில், அதோடு ஒவ்வொரு நாளும் இன்னொரு நபருக்கும் சேர்த்தே வீட்டில் சமைக்கப்படுகிறது, அப்படி ஒவ்வொரு நாளும் எனது கைகளில் இருக்கும் உணவுப் பொதியை கொடுக்கும் கரங்களை கண்டடைவது தான் இந்த எல்லையற்ற வாழ்வின் ஆகச் சிறந்த மிகப் பெரும் அனுபவம்.
ஒவ்வொரு நாளின் காலையிலும் அப்படியான தேடலில் கண்டையும் நபர்களிடம், சில நிமிடங்களேனும் பேசும் வாய்ப்பு மிக, மிக முக்கியமான வாழ்வியல் வெளிச்சங்களை எனக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி சில நாட்கள் முன்னதாக அன்றைக்குக் காலையில் இரு சக்கர வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்கையில், சாலையில் ஒரு நபரை கடந்து போக எத்தனிக்கும் போது, இன்றைக்கு கொண்டு வந்த உணவை அவருக்கு கொடுக்க வேண்டுமென மனத்துக்குள் தோன்ற, சட்டென இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, அப்படியே திரும்பி வந்து அவர் அருகில் வாகனத்தை நிறுத்தி சாப்பிடீங்களா எனக் கேட்டேன், அவர் இல்லையென தலையாட்ட இந்தாருங்கள் என அவரிடம் உணவு பொதியைக் கொடுக்க, அவர் ஒரு நிமிடம் எனச் சொல்லிவிட்டு, சாலையின் ஓரத்தில் இருக்கும் எதை எதையோ பொறுக்கி ஒரு இடத்தில் வைத்துவிட்டு, என்னிடம் வந்து.உணவு பொதியை வாங்கி விட்டு, எதுவும் பேசாமல் போய்விட்டார். எனக்கு நேரமாகிவிட்டபடியால், அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டேன். பின்னர் சில நாட்கள் அந்த நபரைப் பார்க்கவில்லை. நேற்றைக்கு முந்தைய நாள் மீண்டும் அதே நபர், அன்றும் அவரிடம் உணவு கொடுக்க வேண்டுமெனத் தோன்ற, அவர் அருகில் போய் வாகனத்தை நிறுத்தியவுடன் துணுக்குற்று திரும்பியவரிடம் சாப்பிடீங்களா எனக் கேட்டேன், சட்டென சாப்பிட்டது போல் தலையாட்டியவர். பின்னர் அடையாளம் கண்டு கொண்டவராய், சார், நீங்களா சார், கவனிக்கல சார் எனச் சொல்லிவிட்டு, உணவு பொதியை வேகமாக வாங்கிக் கொண்டார். இவை அனைத்தும் பரப்பான காலை பொழுதின் பிரதான சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இம்முறை அந்த நபர் உணவு பொதியை வாங்கிவிட்டு உடனே நகரவில்லை. சத்தமாக என்னுடன் பேச ஆரம்பித்தார். நான் எப்படி பைத்தியமானேன்னு தெரியுமா என என்னை நோக்கி கத்திக் கேட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தார். எனக்கு அவர் சொல்வதனை கோர்வையாக உள்வாங்க முடியவில்லை. மையமாக தலை ஆட்டிக் கொண்டே இருந்தேன். அந்த நேரம் என்னை அந்தச் சாலையில் பார்த்த எல்லோருக்கும் என்னடா ஒருத்தன் காலங்காத்தால, அதுவும் ரோட்ல நின்னு பைத்தியக்காரனோட பேசிக்கிட்டு இருக்கான் எனத் தோன்றி இருக்கும்.
அந்த நேரம் என்னை கடந்த போன ஒவ்வொருவரின் கண்களிலும் மேலே சொன்ன விஷயங்கள் அவர்களின் மனதுக்குள் ஓடிக் கொண்டிருப்பது அப்பட்டமாய் தெரிந்தது. ஆனாலும் என்னிடம் பேசிய அந்தச் சகோதரனின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் சொன்னவைகள் எனக்குப் புரியாமல் போன முக்கியமான காரணம், அந்த பேச்சில் அவர் சடார் சடார் என பல தளங்களுக்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் போய்க் கொண்டே இருந்தது தான். பேச்சின் இடையே மனிதன், கடவுள், பிரபஞ்சம், விலங்கு, இயற்கை என பல தளங்களுக்கு போய் விட்டு வந்தார். இறுதியில் ஓரளவு கோர்வையாக அந்த சகோதரர் என்ன சொல்ல வருகிறார் எனப் புரிந்தது. அந்தச் சகோதரர் சொல்ல வந்ததின் அடிப்படை, இங்கே மனிதன் கொஞ்சம் கூட சுயஅறிவோ, சொரனையோ இல்லாமல் இயற்கையை அழித்துக் கொண்டே இருக்கிறான். அதுத் திருப்பி அடித்தால் தாங்க மாட்டான். அப்படி ஒரு அடி வாங்கித் தான் நான் பைத்தியமாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன். நீயாவது ஒழுங்காக இரு என முத்தாய்ப்பாய் சொல்லிவிட்டு நகர்ந்து சென்று விட்டார். அவர் போனதும் எனக்கு மனதிற்குள் ஒருவித குறுகுறுப்பு தோன்ற, அவருக்குத் தெரியாமல் அவரை தொடர்ந்து சென்று பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சகோதரர் அப்படியே நடந்து போய் ரோட்டில் படுப்பது, பின்னர் எழுவது எனச் சுற்றி விட்டு, ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அப்பொழுது தான் கவனித்தேன் அவரிடம் குடிக்கத் தண்ணீர் இல்லை, உடனே வேகமாக வாகனத்தை திருப்பி, அருகில் இருக்கும் கடைக்குப் போய் தண்ணீர் குப்பியை வாங்கி வந்து அவர் கைகளில் கொடுத்தால், தண்ணி மட்டும் வாங்கமாட்டேன் சார் கோவிச்சுக்காதீங்க எனச் சொல்லி வாங்க மறுத்து, மீண்டும் பேச ஆரம்பித்தார். இந்த முறை அவர் சொன்னது தான் அட்டகாசம், குர்ஆனில் இருக்கும் மிக முக்கியமான கடவுளின் சில வார்த்தைகளைச் சொல்லி, பசித்திருப்பவனுக்கு உணவுக் கொடுப்பது இறைச்செயல் எனச் சொல்லிக் கொண்டே போனவர், அதன் பின் வேறு ஏதேதோ பேசி சில நிமிடங்கள் கழித்து தான் கிளம்பச் சொன்னார். அவர் சொன்ன அந்த குர்ஆனின் உருது வார்த்தைகள் எனக்கு விளங்கவில்லை என்றாலும், அவர் அதனை சொன்ன விதம், சொன்ன நொடி மனதிற்குள் பலவிதமான சிலிர்ப்பான எண்ணங்கள் எழுந்து அடங்கியது. அதன்பின் தமிழில் அவர் சொன்ன பசியைப் பற்றிய வார்த்தைகள் என்னை என்னவோ செய்தது, கடைசியில் ஒன்றே ஒன்று தான் தோன்றியது, எல்லா புகழும் இறைவனுக்கே. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916