வாழ்ந்து பார்த்த தருணம்…148

முற்றத்தில் விளையாடும் வெயில்…

முற்றம் என்றால் இன்றைய தலைமுறைக்கு என்னவெனத் தெரியுமா? நீங்கள் முற்றம் வைத்து கட்டப்பட்ட வீட்டை கடைசியாக எப்பொழுது பார்த்தீர்கள்? அப்படியான வீட்டில் தங்கி இருக்கிறீர்களா? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன்னர், இன்றைக்கு நாம் வசிக்கும் வீடு எப்படியானதாக இருக்கிறது, அதன் சுற்றுப்புறம் எப்படியானதாக இருக்கிறது, இன்றைய நகர வாழ்க்கையில் வீடு கிடைப்பதே பெரியதாக இருக்கும் போது சுற்றுபுறத்தையோ, மற்றவைகளையோ யோசிக்கக் கூடிய மனநிலை எல்லோருக்கும் வாய்த்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம். நகரங்களில் மக்கள் வாழும் வீடுகளுக்கு செல்ல கூடிய நேரங்களில், தொடர்ச்சியாக ஒரு விஷயத்தை கவனித்தே வருகிறேன், மிக அருகருகே நெருக்கமான வீடுகளாக இருக்கின்றன. வெளிப்புற இயற்கையான வெளிச்சம் என்பது அறவே இல்லை. வெளிப்புறக் காற்று வாய்ப்பேயில்லை. வெளிச்சமே இல்லாத போது காற்று எங்கிருந்து வரும். கிட்டத்தட்ட 24 மணிநேரமும், மின்விசிறியும், மின்சார விளக்கும் அணைக்கப்படாமலே இருக்கின்றன. இயற்கைக் காற்றை சுவாசிக்க வேண்டுமெனில் கண்டிப்பாக வெளியே வந்து தான் ஆக வேண்டும். அதுவும் அதிகாலை எழுந்து வெளியே வந்தால் தான் உண்டு. இல்லையெனில், அந்த நாளைக்கான பரபரப்பில் வாகன சத்தங்களும், அதிலிருந்து வெளிப்படும் புகையுமே உங்களை ஒரு வ(லி)ழி ஆக்கிவிடும். இதற்கு வீட்டுக்குள்ளாகவே இருந்திருக்கலாம் எனத் தோன்றிவிடும். ஆனால் இதனையெல்லாம் தாண்டி, வெளிச்சமும் காற்றும் விளையாடும் வீடு ஒன்றைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும், அதிலும் முற்றம் வைத்த வீடு எனில், அந்த வீட்டை எப்படிப் பார்ப்பீர்கள், யோசியுங்கள்.

அப்படித் தான் கடந்த வாரம் ஒரு சின்ன வேலையாக, ஒரு சின்னப் பயணம், அப்படியானப் பயணத்தில் ஒரு சந்திப்பு இருந்தது. அந்தச் சந்திப்பு ஒரு வீட்டில், எந்த வேலைக்காக போயிருந்தேனோ அதனை மட்டும் யோசித்திருந்தால், அது பயணமாக இருந்திருக்காது. கண்டிப்பாக வேலையை மட்டும் முடித்துவிட்டு அந்த வீட்டின் வாசலோடு திரும்பி வந்திருப்பேன். அந்த வீட்டினுள்ளாகவே சென்று இருக்கமாட்டேன், அதனைத் தாண்டி அந்த வேலையை ஏதேனும் வித்தயாசப்படுத்த வேண்டும் என யோசித்ததால், சந்திக்க சென்றவரின் வீட்டினுள் போய் பார்க்க வேண்டும் என ஏதோ ஒரு உந்துதல், சந்திக்க சென்றவரும் உள்ள வாங்க என அழைத்துக் கொண்டு போனார். உள்ளே போன பிறகு தான் தெரிந்தது, அது வீடு மட்டுமல்ல அதையும் தாண்டியது என்பது. அது ஒரு மிகப் பழமையான முற்றம் வைத்துக் கட்டப்பட்ட மிக, மிக அட்டகாசமான வீடு. அந்த வீடு கட்டப்பட்டிருந்த விதமும், அதன் நேர்த்தியும் மிக, மிக அழகு. இன்றைக்கு நாம் தொலை நோக்கு பார்வையோடு, இன்றைய புதுமையோடு கட்டப்படும் எந்த ஒரு வீடும் அதன் முன் நிற்க முடியாது. வாய்ப்பேயில்லை. காரணம் இன்றைய காலகட்டத்தில் கட்டப்படும் வீட்டின் மதிப்பு அதிகபட்சமாக 40 வருடங்கள் மட்டுமே. அதனைத் தாண்டி அந்த வீட்டை வாங்குபவர்கள் வீட்டிற்கான மதிப்பை கழித்து விட்டு இடத்திற்கான மதிப்பை மட்டுமே யோசித்து வாங்குவார்கள். சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் நான் போயிருந்த வீடு மிகப் பழமையானது, ஆனால் இன்றைக்கும் மிக, மிக கம்பிரமாய் அட்டகாசமாய் மதிப்பு குறையாமல் அப்படியே இருக்கிறது. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் பழமையும், கம்பீரமும் தெறிக்கிறது, என்னை முதலில் அழைத்து சென்றது வீட்டின் பிரதான வாயில் வழியாக அல்ல, வீட்டின் வலதுபுறம் இருந்த வாயிலின் வழியாகத் தான் அழைத்துச் செல்லப்பட்டேன். வீட்டினுள் நுழைந்து ஒரு அறையைத் தாண்டியதும், என் கண்கள் பார்த்ததை என்னால் நம்பமுடியவில்லை, காரணம் வெகு சாதாரணமான ஒரு கிராமத்தில் இருக்கும் வீடு என்கிற மனநிலையில் தான் உள்ளே நுழைந்தேன். ஆனால் வீட்டின் நடுவே நான்கு தூண்களுக்கு நடுவே வெயில் வெளிச்சம் பரவ அட்டகாசமான கம்பீரத்தோடு இருந்த முற்றைத்தைப் பார்த்த போது, ஒரு சில கணம் அப்படியே அதனையே பார்த்தபடி நின்றுவிட்டேன். சட்டென உள்ளே வாங்க, ஏன் அங்கேயே நிக்குறீங்க என்கிற குரல் கேட்டதும் இயல்புக்கு வந்தவனாய் வீட்டின் உள்ளே சென்றேன். பழைய ஞாபகங்கள் பல மனதினுள் ஓடி மறைந்தபடி இருந்தது.

ஒவ்வொரு தூணாக தொட்டுப் பார்த்தபடி இருந்தேன், அப்படியே அங்கிருக்கும் பழமையான கட்டில், சாய்விருக்கை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தேன். அப்பொழுது தான், சார் இங்க வந்து பாருங்க என வீட்டின் முன் புறத்தை கூப்பிட்டுக் காட்டினார்கள். ஒருவேளை வீட்டின் முன்புற பிரதான வழியின் வழியே உள்ளே நுழைந்திருந்தால், இவ்வளவு பெரிய ஆச்சர்யம் எனக்குக் கிடைத்திருக்குமா எனத் தெரியவில்லை, அப்பொழுது தான் இந்த வீடு கட்டி எத்தனை வருஷம் இருக்கும் என அந்த வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டேன். அதற்கு அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்மணி 102 வருஷம் ஆச்சு தம்பி என்றார். அந்த பெண்மணியிடமும் உங்களின் வயது என்ன எனக் கேட்க வேண்டுமெனத் தோன்றிய மறுநொடி, அதுவும் இந்த வீட்டை போல கம்பீரமாகத் தான் இருக்கும் எனத் தோன்றியதால் கேட்காமலேயே விட்டு விட்டேன். அதுவும் போக நான்கு குடும்பங்கள் அந்த வீட்டினுள் இருக்கிறார்கள் என்கிற தகவலும் சொல்லப்பட்டது. இன்றைக்கு ந(ர)கர வாழ்க்கைக்குள் வசிக்கும் வீடுகளை யோசித்து, இந்த பழமையான வீட்டை ஒப்பீட்டுப் பார்க்கையில், ஒரு வித ஏக்க பெருமூச்சு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. இன்றைக்கு நகர வாழ்வில் எந்த ஒரு வீட்டுக்குள்ளும் இயற்கையான காற்றும், வெளிச்சமும் அறவே இல்லை. பல வீடுகளில் பகலிலேயே மின்சார விளக்கை எரிய விட்டால் தான் நடமாடவோ, சாப்பிடவோ, படிக்கவோ முடிகிறது. ஆனால் நான் போயிருந்த அந்த பழைமையான வீட்டின் முற்றத்தில் இருந்து பரவிய வெயிலின் வெளிச்சம், வீடு முழுவதும் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த முற்றத்தின் ஒரு தூணில் சாய்ந்து, வெயிலின் வெளிச்ச விளையாட்டை ரசித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தேன். இன்றைய இளைய தலைமுறைக்கு முற்றம் என்றால் என்னவெனத் தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. நீச்சல் குளம் என்றால் கூடத் தெரியாது. ஸ்வுமிங்பூல் என்றால் உடனடியாகத் தெரிந்துவிடும். இதனை இங்கே சொல்லக் காரணம், இன்றைய தலைமுறையின் பல பேருடைய கனவு வீட்டில், கண்டிப்பாக ஸ்வுமிங்பூல் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆனால் முற்றம் இல்லை. முற்றம் என்றால் என்னவென்றே நாம் அவர்களுக்குச் சொல்லவில்லையே. அப்புறம் எப்படி அவர்களுக்குத் தெரியும். முழுவதுமாக செயற்கையாக குளிரூட்டப்பட்ட அறை, வெளியே வந்தால் மேற்கூரை வேயப்பட்ட ஸ்வுமிங்பூல், குளித்து தயாராகி, அப்படியே போய் வெயிலே உடம்பில் படாமல் சொகுசாக செல்ல ஒரு நான்கு சக்கர வாகனம் என இன்றைய தலைமுறை கனவில் உள்ள வீட்டில் இருப்பது எல்லாமே செயற்கை தான். அதனால் தானோ என்னவோ, இன்றைய கால கட்டத்தில் நமக்கு வரும் நோய் கூட இயற்கையானதாக இல்லாமல் போகிறது. அதையும் தாண்டி இன்றைக்கு கட்டப்படும் வீட்டின் ஆயுளுக்கும், நம்முடைய ஆயுளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றால், மேலே சொல்லியிருக்கும் பழமையான வீட்டினுடைய ஆயுளோடு, புதுமையான வீட்டின் ஆயுளையும் ஒப்பிட்டு பாருங்கள் விடை உங்கள் கைகளில். மகிழ்ச்சி….

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916