கடவுளும், மரணமும்…
நீங்கள் மட்டுமே ஒரு மலை முகட்டின் மேல் இருந்தால் என்ன யோசிப்பீர்கள் அல்லது என்ன செய்வீர்கள்? யோசியுங்கள். ஏற்கனவே சில முறை எழுதியிருக்கிறேன். என்னுடைய வார இறுதி நாட்களில் கண்டிப்பாக மலையேற்றம் உண்டு என்று, கிட்டத்தட்ட இந்தப் பழக்கம் தொடங்கி ஒரு வருடம் தாண்டப்போகிறது. வீட்டில் உள்ளவர்களின் உடல் நலனுக்காக ஒரு ஆயூர்வேத மருத்துவ சந்திப்பில் பரிந்துரைக்கப்பட்டு, பின்னர், அதுவே அருமையான பழக்கமாக மாறிவிட்டது. இத்தனை மாதங்களுக்குள் இது மூன்றாவது மலை, தொடர்ச்சியாக ஒரே மலை ஏறினால் சுவாராஸ்யம் இருக்காது என்பதால், முதல் சில மாதங்கள் ஒரு மலை, அதன் பின் வேறு ஒரு நண்பர் பரிந்துரையின் பேரில் வேறு ஒரு மலை. அதன் பின் இப்பொழுது மூன்றாவது மலை. இந்த மலை கடந்த மாதத்தில் இருந்து தான் ஏற ஆரம்பித்திருப்பதால், அடுத்த சில மாதங்கள், இங்கே தான் வார இறுதி நாட்களின் காலை ஏகாந்தமாய் கழியும். முடிந்த வாரமும் அப்படித்தான், அதிகாலையே கிளம்பலாம் என நினைத்தால் முடியவில்லை. காரணம், கடந்த ஐந்தாறு நாட்களாக விடாமலும், விட்டு, விட்டும் மழை பொழிந்தபடியே இருக்கிறது. அதனால் பெரும்பாலான நேரங்களில் என்னுடைய நேரத்தை மழையரசனே முடிவு செய்கிறான். கடந்த வார இறுதியும் மழை அதிகாலை எழுந்து கிளம்புவதை தடுத்து விட்டது. என்னுடைய வீட்டில் இருந்து மலை இருக்கும் இடம் சற்றே தூரம் அதிகம். அதனால் மழை நின்றவுடன் கிளம்புவது தான் சரியாக இருக்கும் என தாமதமாக தான் கிளம்பினேன். கிளம்ப தாமதமானதால் நான் மட்டுமே கிளம்பினேன். சரியாக ஒரு 40 நிமிடத்தில் என்னுடைய இரு சக்கர வாகனம் மலையடிவாரத்துக்கு போய் சேர்த்து விட்டது.
பொதுவாக இந்த மலையில் அதிகாலை சென்றால் குரங்குகள் எதுவும் இருக்காது. மலையேற்றம் முடிந்து தாமதமாக கீழ் இறங்கும் போது தான் குரங்கு ராஜாக்கள் மேலேறி கொண்டிருப்பார்கள். கையில் ஏதேனும் நெகிழிப்பைகள் இருந்தால், கண்டிப்பாக சுதாரிப்பாக இருத்தல் சாளச்சிறந்தது. இல்லையெனில், கன நேரத்தில் கையில் இருக்கும் பை கபளிகரம் செய்யப்படுவதற்கு சகலவிதமான வாய்ப்புக்களும் உண்டு. இந்த முறை மலையேற்றமே தாமதமாகி விட்டபடியால், மலையேறும் போதே மலையேற்ற வழிகளில் ஆங்காங்கே குரங்குகளின் நடமாட்டம் இருந்தது. மிக மெல்லியதாக மழைச் சாரலும் விழுந்தபடி இருந்ததால், மழையேற ஒருவரும் இல்லை. தனியாக ஏறிக் கொண்டிருந்த என் கைகளில் முககவசத்தையும், தலைகவசத்திற்கு உள்ளே அணியும் ஒரு துணியையும் சுருட்டி வைத்திருந்தேன். அப்பொழுது தான் கவனித்தேன், என் கைகளுக்குள் இருந்த துணியை, ஏதோ ஒரு உணவுப்பொருள் என நினைத்துக் கொண்டு, ஒரு வாட்டசாட்டமான குரங்கு ஒன்று என்னை நோக்கி புயல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. என் கைகளை தூக்கினால் அதன் சந்தேகம் வலுப்படும் என்பதால், என் கைகளை அப்படியே வைத்திருந்தேன். என்னுடைய கைகளுக்கு அருகே வர சில அடிகள் இருக்கையில், இவன் கையில் வைத்திருப்பது உணவுப் பொருள் இல்லை எனத் தெரிந்து, சுதாரித்து, சடாரென விலகியது அந்த ஜீவன். சில நொடிகள், ஒரு சின்ன பயம் மின்னலென மனதுக்குள் தோன்றி மறைய, அந்த ஜீவனையே பார்த்தபடி மலையேற ஆரம்பித்தேன். மேலே போனால் அன்று மழையின் காரணமாக கோவில் பூசாரியும் தாமதமாக வந்திருந்தார். அவரும் அப்பொழுது தான் கோவில் நடையைத் திறந்து பூஜையை ஆரம்பித்திருந்தார். தொடர்ச்சியாக அங்கே மலையேறிக் கொண்டிருப்பதால் அந்த பூசாரியும் நன்கு பரிச்சயமாகி இருந்தார். அதனால், போகும் போது எல்லாம், அவருக்கு ஏதாவது உதவிகள் தேவையா எனக் கேட்டு செய்து விட்டு வருவது பழக்கமாகி இருந்தது. காரணம், அந்த மலை மேல் இருக்கும் மூன்று கோவில்களையும் அவர் ஒருவரே பராமரித்து பூஜை செய்வதால், அவரின் பணிச் சுமை அதிகம்.
பூஜையெல்லாம் முடிந்து மலையில் தனியே அமர்ந்திருந்தேன். பூசாரிக்கு வேறு வேலைகள் இருந்ததால், கொஞ்சம் தூரமாக அவர் அதனை பார்த்துக் கொண்டிருந்தார், ஒரு அற்புதமான மலை முகடு அதில் ஒரு கோவில், சின்னதாக விழுந்து கொண்டிருக்கும் மழைச்சாரல், சுற்றிலும் இருக்கும் பறவைகளின் கீரிச்சிடும் ஒலி, அதனோடு சேர்த்து கோவில் ஒலிப்பெருக்கியில் டி.எம். செளந்தராஜன் முருகனை நினைத்து உருகிக் கொண்டிருந்தார், சில்லென்று வீசும் காற்றின் ஒலி காதுகளை வருடியபடியே கடந்து போய்க் கொண்டிருந்தது. அந்த சூழலே மிக ரம்மியமாக அற்புதமாக, ரகளையாக, ரசனையாக இருந்தது. இவை எல்லாவற்றையும் தாண்டி, முதலில் இதையெல்லாம் நின்று நிதானமாக ரசிக்க ஒரு ஒருமித்த மனநிலை நமக்கு வாய்க்க வேண்டும். இல்லையெனில், எந்தவொரு மலை முகடும் இயற்கையும் உங்களின் ரசனைக் கோட்டுக்குள் வரவே வராது. இதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் பலமுறை என்னால் உணர முடிந்திருக்கிறது. அதற்குத் தான், அந்த சமநிலைக்குத்தான் என்னளவில் வாசிப்பும், எழுத்தும் கண்டிப்பாகத் தேவை. மேலே சொல்லியுள்ள அனைத்தையும் தாண்டி மிகப்பெரும் நகைமுரணாக வேறு ஒரு நிகழ்வு அந்த இடத்தை ஆட்கொள்ளத் தொடங்கியது. அது என்னவெனில் அந்த மலையடிவாரத்தின் கீழே கொஞ்சம் தூரத்தில் இருக்கும் எதோ ஒரு வீதியில், ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. அந்த வீட்டிலிருந்து ஓப்பாரிப்பாடல் ஒன்று ஒலிப்பெருக்கியின் வழியே கேட்க ஆரம்பித்தது. மேலே சொல்லியுள்ள அனைத்து விதமான ஒலிகளுடன் மரண வீட்டின் ஒப்பாரி பாடலும் இணைந்து கேட்க ஆரம்பித்தது. அப்பொழுது தான் பூசாரி என்னிடம் வந்து அந்த ஒப்பாரியைப் பற்றி புலம்ப ஆரம்பித்தார். தனிமனித அறம் காரணமாக அவர் என்னிடம் பேசியதை இங்கே வெளிப்படுத்த முடியாது. பூசாரியின் புலம்பலை மட்டும் காது கொடுத்து கேட்டு விட்டு, பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். அப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அந்த மலைக் கோவிலுக்கு ஆட்கள் வர ஆரம்பிக்க, பூசாரி தன் வேலையில் பரப்பரப்பாக ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினேன், கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருக்கையில் மலையின் மீது ஒலித்த ஆன்மீக பாடலோடு, ஓப்பாரி பாடலும் இணைந்து மலைக்காற்றில் கரைந்தபடி இருந்தது, அப்பொழுது நான் இறங்கிக் கொண்டிருந்த அந்த மலை இறக்க நடைபாதையில், ஒரு கீரிப்பிள்ளை என்னுடைய இடதுபுறமிருந்து வலதுபுறம் மின்னல் வேகத்தில் கடந்து ஓடியது, அப்பொழுது மனதுக்குள் ஒரு சிந்தனை, இந்த கீரிக்கு, நாம் மலைமுகட்டில் இருக்கிறோம் என்பதோ, அந்த மலை முகட்டின் மீது கடவுளின் ஆலயம் இருக்கிறது என்பதோ அல்லது தூரத்தில் ஒலிப்பது மரண வீட்டின் ஒப்பாரிப்பாடல் என்பதோ தெரியுமா என்றால் கண்டிப்பாக தெரியாது. அதனைப் பொறுத்தவரை இந்த நிலத்தின் மீது தன்னுடைய இருத்தலுக்கான தேடலில் எவ்வித அகசலனங்களும் அற்றுத் தொய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசிவரை அதனிடம் அந்தத் தேடலுடன் கூடிய செரிவான நெடிய ஓட்டம் மட்டுமே இருக்கும். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916