Hridayam (மலையாளம்)
ஏன்…
கடந்த இரண்டு மூன்று தினங்களாக உடல்நிலை கொஞ்சம் சரியில்லை. அதனைச் சொல்லக் கூட பயமாக இருக்கிறது. பயத்துக்கான காரணம் ஒன்று ஊரறிந்த ரகசியம், மற்றொன்று அறிவுரைகள் காதுகளில் ரத்தம் வரும் அளவுக்கு சொல்லப்பட்டு, அதனாலேயே உடல்நலம் மேலும் ஓய்ந்து போய் விடுகிறது. இந்த இன்னல்களுக்காகவே யாருடனாவது பேச நேர்ந்தால் உடல்நலன் சரியில்லாமை பற்றி எதனால் சரியில்லை, என்ன சரியில்லை என்கிற விஷயங்களுக்குள் போகாமலேயே பேச்சை மாற்றி விடுகிறேன். முன்று நாட்கள் பெரும்பாலும் ஓய்வு, வெளியில் செல்லவில்லை. மூன்றாம் நாள் ஒரு அலைப்பேசி அழைப்பு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க சரியாகியிடுச்சா, ஏன் என்ன விஷயம், இல்ல சாயங்காலம் படத்துக்கு போகலாமான்னு கேட்கத் தான் கூப்பிட்டேன், என்ன படம் எனக் கேட்டவுடன், நானும் பார்க்க வேண்டும் என யோசித்து வைத்திருந்த ஹிருதயம் மலையாளப் படத்திற்க்குத் தான் போகலாமா எனத் தம்பி கேட்டான். யோசிக்காமல் போகலாம் எனச் சொல்லிவிட்டேன். நேற்று மாலைக் காட்சி 50 சதவித அனுமதியில் கிட்டத்தட்ட அரங்கு முழுவதுமாக நிரம்பி இருந்தது. ஏற்கனவேப் படத்தை பற்றி நல்லவிதமான பின்னூட்டங்கள் வந்து கொண்டிருந்ததும் காரணமாக இருக்கலாம். ஏற்கனவே போன பதிவில் நான் குறிப்பிட்டிருந்த அந்த மலையாளப் பாடல் இடம் பெற்றிருக்கும் படமும் இதுவே. கிட்டத்தட்ட நெருக்கி மூன்று மணி நேரங்கள் ஓடும் திரைப்படம். மற்றபடி மிக துள்ளலான எக்காலத்திலும் தப்பித்துவிடும் கல்லூரி மற்றும் அதன்பின் தொடங்கும் வாழ்க்கை தேடலின் பின்புலத்தில் நகரும் பல கோணக் காதல் கதை.
திரைப்படக் காணொளி விமர்சனங்களில் கவனிக்கப்படும் ஒருவரின் (பூளுசட்டையல்ல) விமர்சனக் காணொளியில் ஹிருதயம் மலையாளப்படத்தினைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அவர் ஆட்டோகிராபைப் போல் பிரேமம் இருக்கிறது என்று சொன்னாலும், பிரேமமும் எல்லோராலும் ரசிக்கப்பட்டது, அந்த வரிசையில் ஹிருதயமும் ஒன்று, இது போன்ற படங்கள் எக்காலத்திலும் ரசிக்கப்படும். காரணம், எக்காலத்திலும் காதலுக்கு அழிவே இல்லை, அதனை ரசிப்பவர்களுக்கும் அளவே இல்லை எனச் சொல்லியிருந்தார். எல்லாம் சரி, ஆனால் திரைப்படம் பார்த்து முடிந்ததும் என்னுள் எழுந்த ஒரு கேள்வி யாருடைய காதலுக்கு அழிவில்லை என்பது தான். ஆட்டோகிராப்பும் சரி, பிரேமம் (மலையாளம்) சரி, இப்பொழுது வெளியாகி இருக்கும் ஹிருதயம் மலையாளமும் சரி யாருடைய காதலை கொண்டாடுகின்றன எனப் பார்த்தால், முறையே செந்தில், ஜார்ஜ், வருணின் காதல்களை மட்டுமே கொண்டாடுகின்றன. மற்ற இரண்டு படங்களின் கதாபாத்திர பெயர்கள் மறந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் ஹிருதயம் திரைப்படத்தின் கதாபாத்திரத்தில் இருந்தே வருகிறேன். இந்தத் திரைப்படம் முழுவதும் அருண் என்கிற பிரதான நாயக கதாபாத்திரத்தின் பார்வையில் கல்லூரி படிப்பு, காதல், தோல்வி இன்னபிற இத்யாதிகள் எனப் பயணிக்கிறது. எல்லாம் சரி, நீங்கள் எக்காலத்திலும் திரையில் கொண்டாட்டமாய் காட்டுவது யாருடைய காதல்களை, அருணின் காதல்களை மட்டுமே, நீங்கள் எக்காலத்திலும் அருணுடைய காதல்களை மட்டுமே தொடர்ந்து கொண்டாட்டமாய் காட்டிக் கொண்டே இருப்பீர்கள், அப்படியானால் மலர் டீச்சர்கள், தர்ஷணாக்கள்?.
ஆணும், பெண்ணும் சமம், பெண் சுதந்திரம், பெண்ணியம் என்று நிறைய விஷயங்களை வாய்கிழிய பேசுகிறோம், கத்துகிறோம், புரட்சி என்கிறோம், புண்ணாக்கு என்கிறோம், ஆனால் திரையில் உண்மையில் எதனைக் கொண்டாடுகிறோம் அல்லது எல்லோரும் எதனைக் கொண்டாட வேண்டும் என விரும்புகிறோம் எனத் தெரியவில்லை. அதனைத் தாண்டி, இன்று வரை மலர் டீச்சர்களின், தர்ஷாணக்களின் காதல்களை திரையில் கூட வேண்டாம், அருகில் இருந்து காது கொடுத்துக் கேட்க எத்தனை பேருக்கு திராணி இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் தர்ஷணாவை கூட்டிக் கொண்டு போய் திரையில் அருணின் காதல்களை பற்றி சிலாகித்து எனக்கும் இது போல் காதல் ஒன்று இருந்தது எனச் சொல்வதில் நமக்கு அப்படி ஒரு கொண்டாட்டம், ஆனந்தம். நம்முடைய கொண்டாடத்தையும், ஆனந்தத்தையும் தர்ஷணாக்கள் ரசித்து சிலாகித்து பதில் வேறு சொல்ல வேண்டும். ஆனால், அதே திரையைப் பார்த்து, எனக்கும் இப்படியான ஒரு காதல் இருந்தது என தர்ஷணாக்கள் சொல்வதை, முழுமனதுடன் மதித்துக் கேட்கும் பக்குவம் இங்கு எத்தனைப் பேருக்கு இருக்கிறது எனத் தெரியவில்லை. இவற்றையெல்லாம் யோசிக்கையில் ஏனோ ஜீரோ டிகிரி காயத்திரி சாருவின் இணைய பக்கத்தில் எழுதியிருந்த பாதி கதை என்கிற சிறுகதையின் தைலாம்பாள் கதாபாத்திரம் மனதிற்குள் நிழல் போல் வந்து போனது. உண்மையில் எனக்கு தர்ஷணாக்களின் காதல்களை திரையில் பார்க்க வேண்டும், அதனைக் கொண்டாட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. கண்டிப்பாக அது நடக்கும் என நம்புகிறேன், அந்த நம்பிக்கை எனும் அந்தப் புள்ளியை நாம் தொடும் வரை, இங்கே ஆணும் பெண்ணும் சரிசமம் என்பது எல்லாம் வெறும் வெட்டி பேச்சுத் தான். மற்றபடி எல்லோரையும் போல் படம் செம்மமயான லவ் படம் மச்சி கண்டிப்பா மிஸ் பண்ணிறாத, மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916