சந்தைக் கணக்கு…
கடந்த வாரம் திங்களன்று அமாவாசை என்பதால் வீட்டில் இருக்க வேண்டிய சூழல். அன்றைக்கான சில தனிப்பட்ட வேலைகள் இருந்தன. அதனால் வீட்டிலேயே இருந்து விட்டேன். பொதுவாக நான் வசிக்கும் பகுதியில் காய்கறி சந்தை ஒவ்வொரு திங்களன்றும் கூடும், பெரும்பாலும் என்னுடைய அன்றாடப் பணிகள் முடித்து வீடு திரும்ப தாமதமாகும் என்பதால், பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இருப்பவர்களே அந்த வேலையை முடித்து விடுவார்கள். அதனைத் தாண்டி வார நாட்களில் ஏதேனும் வேண்டுமெனில் வீடு திரும்பும் பொழுது வாங்கி வருவது வழக்கம். கடந்த திங்களன்று வீட்டில் இருந்ததால் வீட்டில் இருப்பவர்களுடன் காய்கறி சந்தைக்குப் போகும் வாய்ப்பு, அப்படிப் போகும் போதெல்லாம் எனக்கு இரண்டு பணிகள். ஒன்று பொதி சுமப்பது, மற்றொன்று பணம் பேரம் முடித்து காய் வாங்கியதும், எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ அதனை மட்டும் கொடுத்துவிட்டு வேடிக்கைப் பார்ப்பது மட்டுமே. ஒரு வேளை நான் ஆர்வத்தில் காய்கறிகளில் கை வைத்தால், குறைந்த பட்சம் பத்துக்கு, ஏழு இடங்களில் அத அப்படி எடுக்கக் கூடாது, இத இப்படிப் பார்த்து வாங்கணும் என ஏதாவது ஒரு திருத்தம் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். அதற்குப் பயந்தே நீங்கள் தேர்ந்தெடுங்கள் நான் வேடிக்கைப் பார்க்கிறேன் என சொல்லிவிடுவேன். அப்படி வேடிக்கைப் பார்ப்பதிலும் ஒரு செம்மயான அனுபவம் இருக்கிறது. முதலில் அந்தச் சந்தையில் ஒலிக்கும் குரல்கள். உதாரணமாக கூறு போட்டு விற்கப்படும் சில காய்கறிகளின் விலை பத்து ரூபாய் என வைத்துக் கொள்வோம், கூறு பத்து, கூறு பத்து, கூறு பத்து என அந்த பத்து ரூபாயைக் கூவி விற்கும் குரல்கள் இருக்கிறது இல்லையா, அது எத்தனை விதத்தில், என்னனென்ன ரகத்தில் எல்லாம் வெளிப்படும் என்பதை, நீங்கள் அங்கு வந்து நின்று பார்த்தால் தான் விளங்கி கொள்ள முடியும். அந்தக் குரல்களின் வயது ஐந்திலிருந்து ஆரம்பித்து சுமார் அறுபது எழுபது வயது வரை ரகம் ரகமாக வெளிப்படும். அதனை எல்லாம் கேட்டபடி பொதி சுமப்பது தனி சுகம்.
கடந்த வாரம் திங்களன்று சந்தைக்குப் போவதற்கு முன்பாக ஒரு அன்புக் கட்டளை. மருந்து செய்வதற்காக ஒரு ஐம்பது எலுமிச்சை பழங்களுக்கும் மேல் வேண்டும், இது போன்ற சந்தையில் தான் குறைவான விலைக்குக் கிடைக்கும். அது தான் நமக்குக் கட்டுப்படியாகும் என உடன்பிறப்பிடம் இருந்து உத்தரவு வந்திருந்தது. அதனையும் மனதிற்குள் யோசித்தபடி சந்தையை அலசினால், நான்கைந்து இடங்களில் எலுமிச்சை கூறு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. முடிவாக ஒரு இடத்தில், ஒரு நடுத்தர வயது பெண் வைத்திருந்த எலுமிச்சை பழங்கள் நன்றாக இருப்பதாக ஏகமனதாக முடிவெடுத்து, அந்தப் பெண்ணிடம் பேசியத்தில் அவர் சொன்ன விலையே மிக நியாயமாக இருந்ததால், யோசிக்காமல் வாங்கலாம் என வீட்டில் சொன்னவுடன், அதற்கு நாம் ஆட்சேபனை எல்லாம் சொல்ல முடியுமா என்ன?. சரி என தலையாட்டி விட்டு, நீங்கள் வாங்கிக் கொண்டிருங்கள் எனச் சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சந்தையை ஒரு சுற்று சுற்றப் போனேன். சுற்று முடிந்து வந்தால் தேவையான எலுமிச்சைகள் பொறுக்கி எடுத்து பைகளில் நிரபப்பட்டிருந்தன. அதுவும் போக அவரிடம் ஒரு கூறு காயும் வாங்கிவிட்டு பணத்தை கொடுக்கச் சொன்னார்கள், அந்தப் பெண்மணியிடம் எவ்வளவுக்கா எனக் கேட்டு அவர் சொன்ன தொகையை கொடுத்து விட்டு நகர்ந்து சில அடிதூரம் நடந்திருப்பேன், அப்பொழுது தான் கவனித்தேன், ஒரு எலுமிச்சை கூறினுடைய விலையாக அந்த பெண்மணி சொன்ன விலைக்கும், மொத்தமாக எலுமிச்சைக்கு கொடுத்த தொகைக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. எனக்குச் சந்தேகமாகி, கூட வந்தவர்களிடம் நான் சென்ற பிறகு அந்த பெண்மணியிடம் நீங்கள் எதுவும் பேரம் பேசினார்களா எனக் கேட்டால், இல்லை எனச் சொல்லிவிட்டார்கள். எனக்கு உடனே பொறிதட்ட, கூட வந்திருந்தவர்களை அங்கே நிற்கச் சொல்லிவிட்டு, ஒரு நிமிடம் இந்தா வந்திடுறேன் என சொல்லி, அந்த பெண்மணியிடம் போய் நின்றால், இவன் எதுக்கு திரும்ப வர்றான் என அவர் முழிக்க ஆரம்பித்தார்.
முழித்துக் கொண்டிருந்த அந்த பெண்மணியிடம் ஒரு கூறு எவ்வளவுக்கா சொன்னீங்க எனக் கேட்டேன், அவர் உடனே பதற்றமாகி இல்லண்ணே அம்மா ஒரு கூறு காய்கறி வேற எடுத்தாங்க அதுக்கு மட்டும் தான் அண்ணே காசு சேர்த்து வாங்குனேன் என்றார். நான் மீண்டும் அது சரிக்கா ஒரு கூறு எவ்வளவு சொன்னீங்க எனக் கேட்டேன். அவர் ஒரு தொகையைச் சொல்ல, அப்ப மொத்தமா அறுபது பழம் என்ன விலைக்கா என்றால், அவர் என்னத் தொகை என்னிடம் வாங்கினாரோ அதையே திரும்பச் சொன்னார், நான் உடனடியாக அதெப்படிக்கா எனக் கேட்டு விட்டு, உண்மையில் அவர் சொன்ன தொகைக்கும் வாங்கிய தொகைக்குமான வித்தியாசத்தைச் சொல்ல, அவருக்கும் அப்பொழுது தான், தான் செய்த தவறு புரிந்தது. முதலில் அவர் சொன்ன தொகையை விட பாதி தான் என்னிடம் இருந்து வாங்கியிருந்தார், முதலில் அவர் சொன்னது ஒரு கூறு பத்து ரூபாய், ஒரு கூறில் ஐந்து பழங்கள் இருந்தன, அப்படியானால் மொத்தமாக 60 பழம் 120ரூபாய், ஆனால் 60 பழத்தோடு ஒரு கூறு காய்கறி எடுத்ததை சேர்த்து 70ரூபாய் மட்டுமே வாங்கியிருந்தார். உடனே அவரிடம் உங்கள ஏமாத்திட்டு உங்க காச கொண்டு போய் என்னக்கா பண்ணப் போறேன் எனச் சொல்லிவிட்டு, மீதிப் பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, மொத்தமா யாராவது வாங்குன்னா தயவு செய்து பதறாம கணக்கு பார்த்து வாங்குங்க, இந்த பத்து ரூபாய் காசுக்குத் தான இப்படி வந்து உட்கார்ந்து உழைக்கிறீங்க எனச் சொன்னேன், அவருக்கு கண்கள் லேசாக கலங்கிவிட்டன. அப்படியே கரங்களை கூப்பியபடி ரொம்ப நன்றிணே என்றார். அட விடுங்கக்கா முதல்ல பதட்டமில்லாம பாருங்க எனச் சொல்லிவிட்டு நகர்ந்தேன். அங்கிருந்த சந்தை இரைச்சலுக்கு நடுவில் நீண்ட நேரம் நன்றி சொன்ன அந்த கலங்கிய கண்கள் மனதுக்குள் என்னனென்னவோ செய்து கொண்டே இருந்தது. என்றும் அந்தக் கண்கள் விரும்பி அறம் செய்தலின் அர்த்தத்தை எனக்குள் நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916