வாழ்ந்து பார்த்த தருணம்…164

அதிகாலைப் பசி…

உங்களில் யாருக்காவது அதிகாலை ஐந்து மணிக்கோ அல்லது அதற்கு அரைமணி நேரம் முன்னரோ, பின்னரோ பசியெடுத்திருக்கிறதா அதுவும் கொலப்பசி?. எப்பொழுதுமே பசி என்கிற வார்த்தையைக் கேட்டவுடன் என்னுடைய மனதினுள் பலவிதமான எண்ண அலைகள் வந்து மோதிக் கொண்டே இருக்கும். காரணம் என் வாழ்வு முழுவதுமே பசி என்கிற உணர்வின் வழியே எனக்கு கிடைத்த அனுபவங்கள் மிகப் பெரும் பொக்கிஷங்கள். எனதுப் பசியின் வழியே மிகப் பெரும் கொண்டாட்டங்களையும், அதே சமயம் மிகப் பெரிய அலட்சியத்தோடு கூடிய அவமானங்களையும் சரி சமமாக சந்தித்தே வந்திருக்கிறேன். வாழ்வின் எல்லா நிலைகளிலும், இப்பொழுது எனக்குப் பசிக்கிறது என்று சொன்னதற்காக, அந்தந்த நேரங்களில் எனக்கு நேர்ந்த சம்பவங்கள், என்னை நோக்கி வந்த வார்த்தைகள் ஒவ்வொரு முறையும் என்னை செதுக்கி இருக்கின்றன என்றால் அது மிகையான சொல் அல்ல. உண்மையில் என்னளவில் ஆரோக்கியமாக உடலை பேணும் யாருக்கும் பசி என்பது இயல்பானது. போதும் புராணம் நேராக விஷயத்திற்குள் போய்விடலாம். பொதுவாக என்னுடைய மனதினுள் உணவை பற்றியும் இடை இடையில் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிக் கொண்டே இருப்பது உண்டு. தலைப்பும் கூட யோசித்து விடுவேன். ஆனால் எழுதுவதற்கு முன்னதாக மனதிற்குள் அது கோர்வையாக தடையின்றி ஓட வேண்டும். அதனை ஓட விடத்தான் கொஞ்சம் தாமதமாகி விடுகிறது. என்னுடைய பழைய கட்டுரையான கட்டுரை எண் 71ல் நான் உணவகத் துறையில் பணியில் இருந்த சமயத்தில் வேலை செய்த ஒரு உணவகத்தை பற்றி எழுதியிருந்தேன். அதே உணவகத்தில் பணியில் இருக்கையில் நடந்த அனுபவம் தான் இப்பொழுது சொல்லப் போவதும். ஏற்கனவே பழைய கட்டுரையில் அந்த உணவகத்தின் பணிச் சூழல் பற்றி நிறைய எழுதிவிட்டதால் இங்கே அதனைப் பற்றி அதிகமாக எழுதப் போவதில்லை.

அந்த உணவகத்தில் பணிக்குச் சேர்ந்த சிறிது காலத்திலேயே காசாளராக வேலை செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் அதிகாலை தான் என்னுடய பணி நேரமாக இருக்கும். காலை 5:30 மணிக்கு கடை கதவுகள் திறக்கப்படும் போது. காசாளருக்கான மேஜையில் எல்லாவற்றையும் சுத்தம் செய்து பணத்தையெல்லாம் சரிபார்த்து தயாராக இருக்க வேண்டும். என்ன தம்பி கதவ திறக்கலாமா என என்னிடம் கேட்டுக் கொண்டே என்னுடைய பதிலுக்கு எல்லாம் காத்திருக்காமல் கதவு மேல் நோக்கி திறக்கப்பட்டு விடும். அப்படி 5:30 மணிக்கு தயாராக இருக்க வேண்டும் எனில், ஐந்து மணிக்கெல்லாம் கடைக்குள் இருந்தால் தான், சுத்தம் செய்யும் வேலையெல்லாம் முடித்து விளக்கேற்றி கடை கதவு திறக்கும் போது தயாராகிட முடியும். அப்படியானால் தங்குமிடத்தில் அதிகாலை மூன்றரை மணியில் இருந்து நான்கு மணிக்குள் எழுந்திருக்க வேண்டும். அப்படித் தான் ஒவ்வொரு நாளும் விடியும். மூன்றரை மணிக்கு எழும் ஒருவனுக்கு அதுவும் மார்கழி போன்ற குளிர் பட்டைய கிளப்பும் மாதத்தில் எத்தனை மணிக்கு பசியெடுக்கும் என என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?!. அல்லது தொடர்ந்து மூன்றரை மணிக்கு எழுந்து இருக்கிறீர்களா?!. அப்படி நீங்கள் எழுந்திருந்தால், அடுத்து நான் சொல்லப் போவதை எளிதில் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும். பொதுவாக ஏதாவது உணவகத்தில் நுழைகையில் நம்முடைய நாசிக்குள் உணவின் வாசனை நுழைவதை கவனித்திருந்தால் தெரியும். அதுவும் அப்பொழுது நான் வேலை செய்த உணவகம் அந்த ஊரில் சுவைக்கு மிகவும் பெயர் பெற்றது. கடை திறப்பதற்கு முன்பான பரபரப்பெல்லாம் அடங்கி அசுவாசமாக காசாளர் மேஜையின் இருக்கையில் அமர்கையில் அவ்வளவு நேரம் கவனிக்கப்படாமல் விட்ட வயிற்றின் உள்ளே பசி சிறியதாக எட்டிப்பார்க்கும். அதற்கு காரணம் அந்த அதிகாலையில் கடைக்குள் போடப்பட்ட சாம்பிராணியின் மனத்தையும் மீறி சமையலறையில் இருந்து அந்த கடைக்குள் பரவும் உணவனின் வாசனை.

அந்த உணவகம் காலை உணவில் இரண்டு, மூன்று பதார்தங்களுக்கு தனித்துவமானது. அதில் முறையே காபி, வெண் பொங்கல், வடை என வரிசைப்படுத்தலாம். அதிகாலை சமயலறையில் இருந்து வாசனை வரும் என்று சொன்னேன் இல்லையா. அப்படி வரும் வாசனைக்குள் காபியின் மணமும், நல்ல சுத்தமான நெய்விட்டு செய்யப்பட்ட வெண் பொங்கலின் மணமும், அதனோடு சேர்த்து சாம்பாரின் மணமும் கலந்து கட்டி காற்றில் பரவி அலைந்த படி இருக்கும். அதே நேரம் அந்தக் கடையில் உணவை பரிமாறுபவர் வெண் பொங்கலை கையாளும் விதமே அட்டகாசமாக இருக்கும். அதற்கு முன்னால் ஒரு வெண் பொங்கல் எப்படியான பதத்தில் செய்யப்பட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும் என்பதை அந்த உணவகத்தில் தான் அறிந்து கொண்டேன். அந்த உணவகத்தில் வெண் பொங்கல் முழுவதும் குழைவாகவும் இல்லாமல், அதே சமயம் உதிரியாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் குழைவோடு கூடிய உதிரியாக ஒருவித ஜென் நிலையில் இருக்கும். அந்த வெண் பொங்கலை எடுப்பதற்கென்று பிரதியேகமாக ஒரு கரண்டி வைத்திருப்பார்கள். அது கொஞ்சமே கொஞ்சம் பெரிய குழிக் கரண்டி. அந்த கரண்டியில் வெண் பொங்கலை, அந்த பொங்கல் இருக்கும் பாத்திரத்தின் ஓரத்தில் வைத்து அழுத்தி எடுத்து தட்டில் இட்டால், அது ஒரு பெரிய குழிப்பணியாரத்தை போல் அந்தத் தட்டில் விழும். அதன்பின் அந்த குழிக் கரண்டியைத் திருப்பி, அந்த வெண் பொங்கலுக்கு வலிக்காமல். அதன் மீது தட்டினால் சின்னதாக அந்த வெண் பொங்கலின் மேல் ஒரு குழி விழும். அதன் பின் அந்த குழிக்குள் அங்கே உருக்கியும், உருக்காமலும் வைக்கப்பட்டிருக்கும் நெய்யில் இரண்டு மேஜைக் கரண்டி எடுத்து விட்டால், அந்த உருகாமலிருக்கும் நெய்யின் மிதிப் பகுதி பொங்கலின் மிதமான சூட்டில் உருக ஆரம்பிக்கும். அந்தப் பொங்கலை, தான் வாடிக்கையாளருக்குப் பரிமாறப் போகும் பெரிய தட்டில் வைத்து ஏந்திய படி உணவைப் பரிமாறுபவர் எடுத்து வருவார். அப்படி வருகையில் அந்த நெய் அப்படியே அந்த வெண் பொங்கலின் மேலிருக்கும் குழியின் கரையை தொட்டு தொட்டு அசைந்தபடியே பொங்கலிருந்து வெளியே வரவா வேண்டாமா எனக் கண்ணாமூச்சி ஆடியபடியே வரும் அழகு இருக்கிறது இல்லையா, அதனை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அப்படி பரிமாறுபவர் எடுத்து வரும் பொங்கல், நெய் மற்றும் அதனுடன் சின்ன கிண்ணத்தில் இருக்கும் சூடான சாம்பார் என எல்லாவற்றிலிருந்தும் புறப்படும் மணம் அந்த உணவகத்தில் அந்த அதிகாலை ஓடிக் கொண்டிருக்கும் மின் விசிறியின் காற்றில் பட்டு, அந்த உணவகம் முழுவதும் நிறைந்து நம் நாசியை வந்தடையும் போது, எப்படா நம்மள மாத்திவிட ஆள் வருவான், எப்படா நாம சாப்பிட போகலாம் என மனமும், வயிறும் அரற்ற ஆரம்பிக்கும் தருணத்தை என்னவென்று சொல்ல.

மேலே சொல்லியுள்ள விஷயங்கள் அனைத்தும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து அரக்க பறக்க தயாராகி ஓடி வந்து 5:30 மணிக்கு பணியில் இருக்கும் உங்களின் கண்முன்னே நடந்து கொண்டிருந்தால், அங்கே பரவியிருக்கும் உணவின் வாசனையை நீங்கள் நாசிகளில் நுகர்ந்து கொண்டிருந்தால், உங்களின் பசியின் அளவு எப்படி எகிறும் என யோசித்துப் பாருங்கள். அப்படியான பசியின் அளவு உச்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், சரியாக என்னை அந்தப் பணியில் இருந்து விடுவிக்க ஆள் வந்துவிடும். இப்பொழுது அது எனக்கான நேரம், அப்புறம் வேறேன்ன நேராக போய் உணவு மேஜையில் அமர்ந்ததும் யோசிக்காமல் வெண் பொங்கல் ஒன்று கொண்டு வரச் சொன்னால். மேலே சொன்ன அதே நெய்யின் தழும்பலுடன், கூடவே உளுந்த வடையோடு எடுத்து வரும் அந்த உணவு பரிமாறுபவரை பார்க்கையில், என் கண்களுக்கு அவர் ஒரு ஆண் தேவதையாக தெரிவதில் வியப்பெதுவும் இல்லையே. என் முன்னே கொண்டு வந்து வைக்கப்பட்ட வெண் பொங்கல் மற்றும் சாம்பாரின் வாசனையை நுகர்ந்த பொழுதில், பசியின் சூடு மெல்லியதாக வயிற்றில் இருந்து புறப்பட்டு மேல் நோக்கி வர ஆரம்பிக்கும். அப்பொழுது தட்டில் சிறிதளவு சூடான சாம்பாரை ஊற்றி, அதன் பின் வடையை சின்ன துண்டாக கிள்ளி எடுத்து, நிற்க. உளுந்த வடையை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். பொதுவாக வெண் பொங்கலுக்கு மிகச் சிறப்பான துணைவன் மெதுவடை. அதுவுமே எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்த உணவகத்தில் தான் உணர்ந்தேன். மெதுவடையை நீங்கள் தொட்டவுடன் அது மொறு மொறுப்பாகத் தான் இருக்கிறது என்பதை உங்களின் விரல்கள் உணர வேண்டும். அப்படியான மெதுவடையுடன் கூடிய வெண் பொங்கல் உங்களின் காலை கொலப்பசிக்கு உங்கள் முன்னால் இருக்கிறதென்றால் நீங்கள் கண்டிப்பாக பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இப்பொழுது மீண்டும் காலைச் சாப்பாட்டுத் தட்டுக்கு வந்துவிடலாம். அப்படியான அந்த மொறு மொறுப்பான மெதுவடையை விரல்கள் உணர்ந்தவுடன், அதனை துண்டாக கிள்ளி எடுத்து, அதனோடு வெண் பொங்கலையும் சேர்த்து, இரண்டையும் சாம்பாரில் தோய்த்து, அதனோடு பட்டும் படாமலும் தேங்காய் சட்னியையும், விருப்பமிருப்பவர்கள் தக்காளி சடனியையும் தொட்டுக் கொண்டு நாவில் இடுகையில், வயிற்றில் இருந்து மேல் நோக்கி வந்து கொண்டிருந்த பசியின் சூடு மிகச் சரியாக தொண்டைக்குள் வந்திருக்கும், அந்த பசியின் சூட்டை நீங்கள் நாக்கில் இட்ட வெண் பொங்கல் அப்படியே தணித்து, தொண்டையைக் கடந்து வயிற்றை நோக்கி இறங்குகையில் உணரப்படும் பரவசத்தில், உங்களின் கண்களில் நீர் எட்டிப் பார்த்தால், நீங்கள் கடவுளை கண்டு விட்டீர்கள் எனப் பொருள். பசியையும், உணவையும் கொண்டாடுவோம். மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916