இனிய தொலைக்காட்சி திருநாள் வாழ்த்துகள்…
இந்தத் தலைப்பை பார்த்து ஏன் இப்படி என உங்களுக்கு தோன்றினால், உங்களுக்கு கொஞ்சமே, கொஞ்சம் இன்னும் நம்முடைய பராம்பரியம் மீது பற்று இருக்கிறது என அர்த்தம். அதுவே இந்தத் தலைப்பைப் பார்த்து, ஆமா இந்த தலைப்பு உண்மைதான் என்று உங்களுக்குள் தோன்றினால், பாராம்பரியம் என்றால் என்னவென்று கேட்கும் நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுவே, ஆமா இப்படி எவனாவது எதாவது சொல்லுவான் நாம் டிவிய பார்ப்போம், மத்தத அப்புறம் பாத்துக்கலாம் என்று தோன்றினால், உங்களுக்கு பராம்பரியமே தேவையில்லை என அர்த்தம் கேட்க கஷ்டமாக இருந்தாலும் உண்மை நறுக்கென்று சுடத்தான் செய்யும். முதலில் பொங்கல் நமது கிராமத்து தெருக்களில் சூரியனை நோக்கி இருந்தது, அப்புறம் சற்று விலகி நகரத்து குறுகலான தெருக்களுக்கு வந்தது, அப்புறம் கொஞ்சம் விலகி வீட்டின் பிரதான நடு அறைக்கு நடுவே மாறியது, அதன் பின் சமையலறைக்குள் போனது, இப்போழுது இன்றைய தலைமுறை கொஞ்சமே, கொஞ்சமாக கைபேசி வழியே உணவு விடுதியில் வாங்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியே போனால் விளங்கும். இன்றைய அவசரயுகத்தில் பொங்கலை குக்கரில் சமைத்துவிடுகிறோம், சரி அது கூட பரவாயில்லை. ஆனால், அதன் பின் பக்கத்து வீடுகளுக்கு பகிர்ந்து கொடுப்பது. அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வருவது போன்றவை அறவே இல்லை. அப்படியே போனாலும், அவர்கள் வீட்டிலும் தொலைக்காட்சி தான் ஒடிக்கொண்டிருக்கிறது. அதை சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு வந்தாயிற்று அப்புறம் எங்குபேச.
வீட்டில் பொங்கல் சமைக்கும் போது கூட தொலைக்காட்சி பெட்டி ஓடியபடியே தான் இருக்கிறது. சமையலறையில் சமைக்கும் போது கைகள் பொங்கல் பாணையைக் கிண்டி கொண்டிருந்தாலும், காது தொலைக்காட்சி பெட்டியில் தான் இருக்கிறது. இதில் பொங்கல் எந்த லட்சணத்தில் என்ன பதத்தில் வரும். கிட்டதட்ட விழா காலங்களில் கூட நாம் தெருவில் கூடுவதை இந்த தொலைக்காட்சி பெட்டி தடுத்து விடுகிறது. முன்னர் எல்லாம் பொங்கலின் பிரதான அம்சமாக விளையாட்டுக்கு முக்கிய பங்குண்டு. கோல போட்டியில் ஆரம்பித்து, சிறுவர் முதல் பல வயதினருக்கும் காலையில் இருந்து மாலை வரை பல்வேறு விளையாட்டுகள் அந்தந்த பகுதி மக்களால் நடத்தப்படும். இன்று அது கொஞ்சம், கொஞ்சமாக அருகிப்போய் ஒன்றுமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு அறிவியல் கண்டுப்பிடிப்பு நம்முடைய பராம்பரியம் அனைத்தையும் நிர்மூலமாக்கி கொண்டிருக்கிறது. ஒத்துக்கொண்டாலும், ஒத்துக்கொள்ளாவிட்டாலும் சுடும் உண்மை இது தான். பொங்கல் விளையாட்டுகள் தான் நம்முடைய குழந்தைகள், குடும்பங்கள் அனைத்தையையும் உணர்வோடு இணைத்தன. ஆனால் இன்று உணர்வும் இல்லை, விளையாட்டும் இல்லை. வெறும் பொங்கல் தான் இருக்கிறது. இன்று விவசாயம் என்னுடைய Passion என்று பேசும் எத்தனை பேர் பொங்கலை விவசாயம் விளையும் பூமிக்கு சென்று, அவர்களுடன் அந்தக் கொண்டாடத்தை பகிர்ந்து கொள்ள தயாராய் இருக்கிறார்கள். சும்மா i support farmers என போட்ட டேக்லைனை டிரண்ட் ஆக்கினால் மட்டும், விவசாயம் செழித்து வளர்ந்து விளங்கிவிடுமா என்ன?. விவசாய திருநாளாம் பொங்கலன்று கூட தொலைக்காட்சி பெட்டிக்குள் போய் ஒடுங்கி விடும் சமூகத்திற்கு, விவசாயின் கஷ்டம் எப்படி உறைக்கும். எழுத்தாளர்களை மதிக்காத சமூகம் உருப்படாது என நிறைய எழுத்தாளர்கள் கத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த எழுத்தாளர்கள் எழுதி கிழிக்கவே அவர்களது உடம்பில் தெம்பு வேண்டும். அந்த தெம்புக்கு தட்டில் சோறு வேண்டும். அப்படியிருக்கும் போது முதலில் மதிக்கப்பட வேண்டியது போற்றப்படவேண்டியது விவசாயியும், விவசாயமும் தான்.
அதற்குத் தொலைக்காட்சியில் போடும் விளம்பரங்களில் தங்களுடைய பொருட்களுக்கு நடுவே விளம்பரங்களில் காட்டப்படும் காட்சி பொருள் அல்ல விவசாயம். அதைப் பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு கண்களில் நீர் வழிய அந்த பொருட்களை வாங்கி விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இன்று அது தான் நடந்து கொண்டிருக்கிறது. நீரை பாசனத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பதில் ஆரம்பித்து, பல வித புல்லரிக்க வைக்கும் யோசனைகளை, தங்களில் பொருட்களை சந்தைபடுத்தும் விளம்பரங்களின் வழி வாரி வழங்கி கொண்டிருக்கிறார்கள் பல்வேறு நிறுவனங்கள். தொலைக்காட்சிப் பெட்டி தான் என் உ(_)யிர் மூச்சு என வாழ்ந்து கொண்டிருக்கும், இந்த சமூகத்துக்கும் அதைப் பார்த்தவுடன் புல்லரித்து விடுகிறது. உடனே எடுடா வண்டிய. வாங்குடா பொருள, காப்பத்துறா விவசாயத்த எனப் பொங்கி, பொங்கிய வேகத்தில் அடங்கியும் விடுகிறோம். அதனால் தான் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், சுரணையுடன் அனைவருக்கும் இனிய தொலைக்காட்சி திருநாள் வாழ்த்துக்கள். நன்றி.
பின்குறிப்பு : ஒரு புகைப்பட கலைஞனாக விவசாயத்தையும், விவசாயியையும் புகைப்படமெடுக்க போகும் போது அவர்களுடன் பேசும் வாய்ப்பு அமையும். அப்படி பேசும்போது அவர்களின் உழைப்பில் கொஞ்சமேனும் என்னுடைய மூளைக்குள் எடுத்துவருவேன். அதனால் தான் என் தட்டில் விழும் சோறு பணத்தை மட்டும் கொடுப்பதனால் விழுந்துவிடாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். ஒவ்வொரு முறை எனது தட்டில் சோறு விழும்போதும் அந்த உழைப்புக்கு நன்றி சொல்ல மறந்ததில்லை. அப்படி மறந்தால் உலகின் என்னைவிட நன்றிகெட்டவன் எவனுமில்லை.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916