பிரியாணியைத் தேடி…
என் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட வருடங்கள் உணவுத் துறை சார்ந்த பணியில் இருந்திருக்கிறேன். அதன் அடிப்படையில் உணவின் மீதான காதல் என்பது என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்காக இந்த உணவு தான் வேண்டும். இது இருந்தால் தான் சாப்பிடுவேன் என்று சொல்பவனும் அல்ல. இதெல்லாம் ஒரு பக்கம் என்றால். மற்றொரு பக்கம் எனக்குப் பிடித்தமான உணவுகள் பட்டியல் கொஞ்சம் நீளமானது, உணவகத்துறையினுள் கடந்த வந்த பாதையில் எனக்குப் பிடித்தமான உணவுகளின் மிகச் சிறந்த சுவைகள் எனக்குப் பணி செய்த இடத்திலேயே வாய்த்திருக்கின்றன அல்லது சில நேரங்களில் தேடிப் போயும் சாப்பிட்டிருக்கிறேன் இரண்டுமே நடந்திருக்கிறது. அப்படியான என் விருப்பப் பட்டியலில் உள்ள முக்கியமான உணவுகளில் ஒன்று பிரியாணி. என்னுடைய பதின்ம வயது தொடக்கத்தில், பள்ளியில் படித்த நாட்களில், வருடத்தின் இறுதி விடுமுறை மாதங்களில் உணவு சார்ந்த துறையில் பணிக்கு சென்று இருக்கிறேன். அப்படிப் பணியில் இருந்த ஒரு ஊரில் உள்ள முக்கியமான உணவகத்தில், என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் முக்கிய பொறுப்பில் இருந்தார். அதனால், அந்த உணவகத்தில் எப்பொழுது போனாலும் சாப்பிடலாம். அந்த நாட்களில் அது ஒரு பிரசித்தி பெற்ற அசைவ உணவகம். பிரியாணியின் ஆகச் சிறந்த சுவையை அங்கே தான் முதன் முதலில் ருசித்தேன். அதன் பின் இதுவரை எத்தனையோ உணவகங்களில் பல முறை பிரியாணியை சுவைத்திருந்தாலும். முதன் முதலில் எனக்கு ருசித்த அந்த பிரியாணியின் ருசியை, இது வரை எந்த பிரியாணியும் தாண்டவில்லை. அதனால் எனக்கு எப்பொழுதுமே பிரியாணியின் மீது தனியாத காதல் உண்டு. இப்படிப்பட்ட நிலையில் கடந்த வருடம் இறுதியில் அலுவல் ரீதியாக தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்திற்கு போக வேண்டி இருந்தது. பயணப்படி பார்த்தால் நடப்பு வருடமான 2022ன் தொடக்கமும் அங்கே தான் என்பதாக இருந்தபடியால். புதுவருடம் இங்கே இல்லையா என நெருங்கிய வட்டத்தில் ஒரு கேள்வி, அதனையெல்லாம் சட்டை செய்யாமல் பயணம் திட்டம் போடப்பட்டு கிளம்பிவிட்டோம். பிரியாணி ரசிகனுக்கு அதற்காகவே பிரபலமான ஒரு ஊரை நோக்கியதான பயண தொடக்கம் எப்படியான குதூகலத்தை கொடுத்திருக்கும் எனத் தனியாக சொல்லத் தேவையில்லை.
அலுவல் பணி சரியாக முடியும் பட்சத்தில் பிரியாணிக்காக ஒரு நாளை ஒதுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். தொடர் வண்டியில் தான் பயணம். இப்பொழுது இருக்கும் ஊரில் இருந்து மதியம் ஒரு மணிக்கு மேல் கிளம்பி, மறுநாள் மதியம் ஒரு மணிக்கோ அல்லது ஒண்ணே காலுக்கோ தெலுங்கானாவில் இருக்கும் ஒரு முக்கியமான ஊரை சென்றடையும் இருபத்தி நான்கு மணி நேர பயணம் அது. நோய் தொற்று மற்றும் ஊரடங்கெல்லாம் அப்பொழுது தான் முடிவுற்ற நேரம் என்பதால், தொடர் வண்டியில் உணவுத் தயார் செய்து கொடுக்கும் பெட்டி இல்லை. அதனால் தொடர் வண்டி நிற்கும் நிலையங்களில் என்ன விற்பனை செய்யப்படுகிறதோ அது தான் கதி. பயணம் தொடங்கிய நாளின் மதியத்துக்கான உணவை முதலியே வாங்கிவிட்டதால் பிரச்சனை இல்லை. அன்று இரவும் பெரியப் பிரச்சனை இல்லை. அடுத்த நாள் காலையில் இருந்து சரியான உணவுக் கிடைக்கவில்லை. மதியம் எப்படியும், போய் சேர வேண்டிய தொடர் வண்டி நிலையத்தை நாம் அடைந்துவிடுவோம், அதனால் இறங்கியதிலிருந்தே பிரியாணி தேடலின் ஆட்டத்தை ஆரம்பித்து விடலாம் என முடிவெடுத்திருந்தேன். தொடர் வண்டியும் சரியான நேரத்திற்கு தெலுங்கானாவில் இருக்கும் முக்கிய தொடர்வண்டி நிலையத்தை வந்தடைந்து விட்டது. தொடர் வண்டியில் இருந்து இறங்கும் போதே கொலைப் பசி, காலையில் இருந்தே ஒழுங்காக சாப்பிடவில்லை என்பதால் பசி காதை அடைத்தது. ஆனாலும் பிரியாணியின் சுகமான நினைவுகள் கண்முன் வந்து போனதால், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு இறங்க வேண்டிய தொடர்வண்டி நிலையம் வரை வந்து சேர்ந்துவிட்டோம். ஆனால், அங்கிருந்து வேறுவிதமான மண்டகபடி ஆரம்பமானது. இறங்கியவுடன் வந்து அழைத்துச் செல்ல வேண்டிய நபர் வரவில்லை. முன்னதாகவே தகவல் சொல்லியிருந்தாலும், வரும் நபர் போக்குவரத்து நெரிசலில் மாட்டியதால் வருவது தாமதமாகிக் கொண்டே இருந்தது. தாமதத்தின் காரணமாக பசி வேறு தலைக்கு ஏறிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக அழைத்துச் செல்ல வேண்டிய நபர் வந்து சேர்ந்தார். வந்தவரிடம் விஷயத்தை சொல்லி கொஞ்சம் சீக்கிரமா நல்ல பிரியாணிக் கடைக்கு வண்டிய விடு என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தால், வண்டியின் பயணம் நீண்டு கொண்டே போனது. யப்பா சாமிகளா, கடை எப்பப்பா வரும் என காதை அடைத்த பசியோடு கேட்டால், தீரன் திரைப்படத்தில் வரும் வசனத்தை போல தொ கிலோமீட்டர் பையா என்றபடி பயணம் நீண்டு கொண்டே போனது. போதும்டா உங்க தொ கிலோ மீட்டர் எனச் சொல்வதற்கு எத்தனிக்கும் போது சரியாக வண்டி ஒரு உணவகத்தில் போய் நின்றது.
கிட்டத்தட்ட காலையில் இருந்து சரியாக சாப்பிடாமல் கொலைப்பசியில் இருக்கும் ஒருவனை அந்த பசியோடே இந்தா, இந்தா வந்திருச்சு எனச் சொல்லிச் சொல்லியே இழுத்துக் கொண்டே வந்து, அவன் இதற்கு மேல் முடியாது சாமிகளா எனச் சொல்லுமிடத்தில் நிறுத்தி. இங்க தான் உங்களுக்கு ரொம்பபப பிடிச்ச பிரியாணி கிடைக்கும் எனச் சொல்லி, அவன் கண்களில் பிரியாணிக் கடையை காண்பித்தால். அவன் எப்படி அந்த பிரியாணிக் கடையை பார்ப்பானோ அப்படித் தான் நானும் அந்தக் கடையைப் பார்த்தேன். எல்லோருமாக கடைக்குள் நுழைந்தால், கடை பேரமைதியாக இருந்தது, பெரிய கூட்டமெல்லாம் இல்லை. ஆனாலும் கடையையும், அதன் உட்புற அமைப்புகளையும் பார்த்ததுமே வகையாக பில் வரும் என்பது தெளிவாகத் தெரிந்தது. சரியென கைகழுவி மேஜையில் அமர்ந்தவுடன். எங்களை அழைத்துச் செல்ல வந்திருந்த நண்பரிடம் உங்களுக்குத் தான் இங்குள்ள பிரியாணி பற்றித் தெரியும், அதனால் நீங்களே சொல்லுங்கள் எனச் சொன்னேன். ஏற்கனவே இருந்த காதடைக்கும் பசியோடு, உணவகத்தின் குளிர்சாதன குளிரும் சேர்ந்து கொண்டதால் பிரியாணி வரும் வரை கை விரல்கள் நடுங்கியபடி இருக்க, பிரியாணி பரிமாறப்பட்டது. ஹைதராபாத் பிரியாணிக்கென்று சில தனித்துவம் இருக்கிறது, அது என்னவெனில் நம் ஊரைப் போல் இல்லாமல், பாசிமதி சோறு முழுவதுமே பிரியாணியாக இல்லாமல், வேக வைத்த பாசிமதி சோற்றின் நடுவே பிரியாணி மசாலாவை வைத்துக் கொடுத்து விடுவார்கள். கொடுக்கப்பட்ட மசாலாவோடு அந்த பாசிமதி சோறை கலந்து சாப்பிட வேண்டும். எனக்கு வந்தது சிக்கன் பிரியாணி, அந்த சிக்கன் பிரியாணியில் மசாலா மணம் சும்மா தெறித்தது. இருந்த பசியில் பாசிமதி சோற்றின் நடுவே இருந்த மசாலா கலந்த சிக்கனை குழப்பி அடித்தால், கண்கள், காதுகள் மற்றும் மூக்கில் இருந்தெல்லாம் புகை வந்தது, காரணம் கொடுக்கப்பட்ட பிரியாணி மசாலாவில் காரத்தை சும்மா தெறிக்க விட்டிருந்தார்கள். இருந்த பசியில் காரமாவது, கத்திரிக்காயாவது எனக் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தெறிந்தபடி அனல் பறக்க சாப்பிட்டு முடித்தேன். கொலைப் பசியில் அனல் பறந்த காரத்தை சாப்பிட்டதன் விளைவு மறு நாள் காலை மிகச் சிறப்பாக வேலையைக் காட்டியது. மறுநாள் காலை காலைக்கடன்களை முடிக்கையில் தொடங்கிய எரிச்சல் நிற்க வெகு நேரமானது. இதற்கு இடையில் அலுவல் பணிகள் தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ந்து பணிகள் போய்க் கொண்டிருந்தது, அப்படி அலுவல் பணிக்காகப் போகுமிடமெல்லாம் காலை உணவு நேரத்தைத் தவிர, மதியம் மற்றும் இரவு எந்தக் கடைக்குப் போனாலும் ஹைதராபாத் பிரியாணி இல்லாத கடையே இல்லை. எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தது போல் கை விரல்கள் எரியும் அளவு காரத்தைப் போட்டு பொளந்திருந்தார்கள். அந்தப் பகுதியை பூர்வீகமாக கொண்டு அலுவல் ரீதியாக எங்களுடன் பயணப்பட்ட நண்பர் ஒருவரிடம் என்னப்பா எல்லா கடையிலுமே சொல்லி வச்ச மாதிரி இப்படிக் காரம் அதிகமா இருக்கே எனக் கேட்டேன். இதெல்லாம் ஒரு காரமே இல்லை எனச் சொல்லி விட்டு, ஒரு டபுள் மசாலா பிரியாணி கொடுங்கள் எனக் கேட்டு வாங்கி, ஒரு மசாலாவுக்கே கிழிந்து போய் நின்று கொண்டிருந்த என் கண்முன்னே, இரண்டு மடங்கு அனல் பறக்கும் மசாலா காரத்தை சர்வ அலட்சியமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நண்பரைப் பார்த்து, எப்படி இப்படியெல்லாம் உங்களால மட்டும் முடியுது என உள்ளுக்குள் தோன்றியதை அவரிடம் சொல்லாமல் அவர் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் தெலுங்கு திரைப்படங்களின் நாயகர்கள் கொலை வெறியில் ஏன் 100பேரை திரையில் பறக்க விட்டபடி இருக்கிறார்கள் என்பதன் உண்மையான அர்த்தம் விளங்கியது. பிரியாணி கேட்டது ஒரு குத்தமா, இப்படி கொல வெறி காரத்தோட குடுக்கிறீங்களேப்பா, என்னமோ போடா மாதவா…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916