ராக்கிபாயின் கனவு…
முன் எச்சரிக்கை : லென்த் பிரச்சனை…
நீங்க கொஞ்சம் லென்த்தா எழுதுறீங்க அது தான் பிரச்சனை என, மூன்று பத்தி எழுதுவதையே வாசிக்க முடியவில்லை என என்னிடம் சொல்கிறவர்கள் மற்றும் லென்த்தா படிக்கிற அளவுக்கு பொறுமையில்ல எனச் சொல்லும் ஆத்மாக்கள், இதனை வாசிப்பதை தவிர்த்தல் தங்கள் உடல் நலத்திற்கு நல்லது. காரணம் மூன்று பத்தியே லென்துன்னா, இது அதுக்கும் மேலே போயிடுச்சு, அதனால இத படிக்கிறதுக்கு பதிலாக வேற எதையாவது லென்த்தா பண்ணுங்க சரியா, மகிழ்ச்சி…
சமீப காலங்களில் திரைப்படத்திற்கு போவது என்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறேன். அதற்கு இரண்டு விதமான காரணங்கள் ஒன்று அதற்கு ஆகும் செலவு, அப்படிச் செலவைப் பற்றி யோசிக்கையில், அதற்கு ஒரு நல்ல புத்தகமாக வாங்கிவிடலாம் என்கிற எண்ணம் மேலோங்கி விடுகிறது. இரண்டாவது, அதற்கு ஒதுக்கும் நேரம், சில சமயங்களில் தவிர்க்க முடியாமல் போக வேண்டி வந்தாலும், அப்படிப் போகும் பல சந்தர்பங்களில் மூன்று மணி நேரங்கள் சும்மா வச்சு செய்துவிடுகிறார்கள், தாங்க முடியவில்லை. கடந்த முறை இப்படித் தான் ஒரு அன்பான வேண்டுகோளினால் போய் வகையாக சம்மட்டி அடி வாங்கியது தான் மிச்சம். இதனையெல்லாம் தாண்டி கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக உறுதியானதால், சரி போகலாம் என முடிவெடுத்தேன். காரணம், எனக்கு முதல் பாகம் பிடித்திருந்தது. சரி இப்பொழுது இரண்டாம் பாகமும் பார்த்தாயிற்று. கேஜிஎஃப் திரைப்படத்தில் கதை என்ற ஒன்றை வரையறுக்க முடியாது எனப் பரவலாக சொல்லப்பட்டது. அதனைக் கேட்டவுடன் ஒரு 2:30 மணி நேர திரைப்படத்தின் இயக்குநருக்கு அந்தத் திரைப்படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லத் தெரியவேண்டும் என்று சுஜாதா சொன்னதாக எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்து போனது. அவரின் கூற்றுப்படி பார்த்தால், இரண்டு பாகங்களும் சேர்த்து, மொத்தமாக ஆறு மணி நேரம் ஓடும் திரைப்படத்தின் கதையை, ஒற்றை வரியில் சொல்வதானால், தன்னுடைய அம்மாவின் கனவை நிறைவேற்ற போராடி வெற்றிபெறும் மகனின் கதை எனக் கொள்ளலாம். சரி இதற்கு மேல் எழுதப் போவதைப் பற்றி இரண்டு விஷயங்கள் சொல்லிவிடுகிறேன், அதற்கு மேல் உங்கள் விருப்பம், முதலாவது கேஜிஎஃப் திரைப்படம் இதுவரை பார்க்கவில்லை, இனிமேல் தான் பார்க்கப்போகிறேன் என்பவர்கள் இதனை வாசிப்பதை தவிர்த்துவிடுங்கள். இரண்டாவது இந்த சமூகத்தில் உறவுகளை எல்லாம் புனிதப்படுத்தி வைத்திருக்கிறோம் இல்லையா?, அம்மான்னா தெய்வம், அப்பான்னா தெய்வத்தின் தெய்வம். இப்படி அக்கா, தங்கை, அண்ணன், தங்கச்சி என எல்லாவிதமான உறவுகளையும் ஒரு மாதிரியாக புனிதப்படுத்தி கொண்டாடும் ஆளாக நீங்கள் இருந்தால், தயவு செய்து இதனைப் படித்துவிட்டு கொலைவெறி ஆக வேண்டாம், நீங்களும் இதற்கு மேல் வாசிப்பதை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் உங்களுடைய உறவு தெய்வங்களையே கொண்டாடித் தீருங்கள். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. சரி இனி நேரடியாக விஷயத்திற்குள் போய்விடலாம்.
கேஜிஎஃப் திரைப்படம் இப்படி ஒரு மரண ஓட்டம் ஓடுவதற்கு காரணம் அந்தக் கதை எதன் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்கிற புள்ளியில் இருக்கிறது. அந்தப் புள்ளி தான் அம்மா. பொதுவாக நம்முடைய சமூகத்தில் காலம் காலமாக அம்மா, அப்பா என்கிற உறவின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் இருக்கிறது இல்லையா?, அதன் புனிதத்தன்மை அப்படியே புல்லரிக்க வைக்கக் கூடியது. அப்படியே அந்தப் புல்லரிப்பின் மீது மிகச் சிறப்பான கதை ஒன்றினை கட்டமைக்க முடிந்தால், அந்தத் திரைப்படம் மிகப் பெரும் வெற்றி. அதுவும் அது ஒரு பழிவாங்கும் கதையாக இருந்தால் பிய்த்துக் கொண்டு ஓடும். காரணம், மக்களின் மனதில் அந்த அளவுக்கு வன்மமும், பழிவாங்கும் எண்ணமும் மேலோங்கியபடி இருக்கிறது. அதற்கு சட்டென மனதினுள் தோன்றும் மிகச் சிறந்த இரண்டு உதாரணங்கள் அண்ணாமலை, படையப்பா இந்த இரண்டுக்குள்ளும் மிக ஆழமான அம்மா, அப்பா உணர்ச்சிக் குவிப்புகள் உண்டு. அண்ணாமலையில் அம்மாவோடு மாடும் உண்டு. சரி இந்த புனிதத்தன்மையில் என்னடா பிரச்சனை எனப் பார்த்தால், இதுவரையில் என் வாழ்வின் எல்லா நிலைகளிலும் என் செவிகளில் வந்து விழுந்த கொண்டே இருக்கும் அறிவுரைகள், சொற்பொழிவுகள் என எல்லாவற்றிலும், அது ஆன்மீக சொற்பொழிவாக இருந்தாலும் சரி, அதிலும், அம்மா, அப்பா தான் தெய்வம். அவங்க என்ன செஞ்சாலும் உன்னோட நன்மைக்குத் தான். அவங்க எப்படி இருந்தாலும் அப்படியே ஏத்துக்கோ என்பது போன்ற பல இத்தியாதிகள் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதன் ஒரு நீட்சி தான் கேஜிஎஃப். இப்பொழுது கேஜிஎஃபிற்கு வரலாம். ராக்கிபாய் தான் திரைப்படத்தின் பிரதான நாயக கதாபாத்திரம், இரண்டு பாகங்களும் சேர்த்து மொத்தமாக கதை சொல்லப்படும் ஒரு ஐந்தரையில் இருந்து ஆறுமணி நேரங்களில், ஒரு அரை மணிநேரம் ராக்கிபாயின் அம்மாவின் கதைக்குக் கழித்தால், மிச்சம் இருக்கும் ஐந்து மணி நேரங்களும் ராக்கிபாய் தன்னுடைய அம்மாவின் கனவினை நிறைவேற்ற போராடிக் கொண்டேடேடே இருக்கிறார். கடைசியில் அதில் ஒரு குறிப்பிடத் தகுந்த வெற்றியும் பெறுகிறார், இவையெல்லாவற்றையும் இந்த சமூகம் உணர்ச்சி பொங்க வேறலெவல் எனப் புல்லரித்து, லரித்து, சொறிந்து, சொறிந்து கொண்டாடித் தீர்க்கிறது. எல்லாம் சரி, ஆனால் திரைப்படத்தின் இறுதிவரை தன்னுடைய அம்மாவின் கனவிற்காக போராடும் ராக்கிபாய்க்கு என தனிப்பட்ட கனவுகள் எதுவுமே இல்லையா? அல்லது அப்படியான கனவுகள் எதையும் ராக்கிபாய் காணக் கூடாது என இந்த சமூகம் விரும்புகிறதா? அது தான் தெரியவில்லை.
சரி திரைப்படத்தில் எங்குமே தான் விரும்பியதை பிரதான நாயகன் செய்யவில்லையா என்றால், ஒன்றே ஒன்றை மட்டும் செய்கிறான், அதுவும் அவன் ஆணாக பிறந்ததினால் மட்டுமே நிகழ்கிறது. காரணம், எதிர்பாலின ஈர்ப்பு என்பது மனிதனாக பிறந்த எல்லோருக்குள்ளும் இருக்கிறது, இது தான் இயற்கையின் அடிப்படை விதி. (அதனை எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்கிற விமர்சனத்துக்குள் எல்லாம் செல்ல விரும்பவில்லை.) அப்படியான ஒரு ஈர்ப்பினால் நாயகன் ஒரு பெண் மீது காதல் கொள்கிறான். ஒட்டுமொத்த திரைப்படத்தில் தனக்காக என நாயகன் செய்யும் ஒரே ஒரு விஷயம் அது மட்டுமே. அதனையும் தன்னுடைய அம்மாவின் கனவை நிறைவேற்றும் போராட்டத்தில் தன் கண்முன்னே வீழ்ந்து போவதை பார்க்க வேண்டிய சூழல் நாயகனுக்கு வருகிறது, ஆக தான் விரும்பிய ஒன்றையும் இழக்கிறான். ஆனால், அந்த இழப்பினால் அவனுடைய ஓட்டம் நிற்பதில்லை, காரணம், அவனை துரத்திக் கொண்டே இருக்கும் அவனுடைய அம்மாவின் கனவு. தன்னுடைய வாழ்நாளே தொலைந்து போனாலும் அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்கிற அளவுக்கு அந்த கனவு முக்கியமானதா என்றால், இரண்டு கேள்விகள் தொக்கி நிற்கின்றன. ஒன்று இதுவரை திரையில் எத்தனையோ அம்மாக்களை பார்த்துவிட்டு புல்லரித்து இருக்கிறோம் இல்லையா?. ஆனால், நிஜத்தில் அம்மாக்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை குறிப்பாக திருமணம் முடித்த ஆண்களிடம் போய் கேட்க வேண்டும். அதே போல் தான் அப்பாக்களும். இரண்டாவது, பிள்ளைகள் என்பவர்கள் அம்மா, அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பிறப்பெடுக்கிறார்களா? என்கிற இரண்டு கேள்விக்களுக்கான விடை என்பது அவரவரின் மனசாட்சியின் உண்மைக்குள் ஒளிந்திருக்கிறது. இதனையெல்லாம் சொல்லும் போது இன்னொரு திரைப்படமும் நியாபகம் வருகிறது, அதுவும் இந்தியாவே புல்லரித்து தீர்த்த ஹிந்தி திரைப்படமான தங்கல். ஒரு குஸ்தி வீரன் தன்னால் அடைய முடியாத வெற்றியை தன் மகள்களைக் கொண்டு அடைகிறான். அப்படியானால் அந்த மகள்களுக்கு என கனவுகள் இல்லையா? எனக் கேட்டால், தெரியாது. அப்படிக் கேட்டால் நானும் கொலைக் குற்றவாளி ஆகிவிடுவேன். திரையில் தான் இப்படி என்றில்லை நிஜம் அதைவிட மோசமானது. அது எப்படி?, அதனையும் ஆகச் சிறந்த உதாரணதோடு பார்க்கலாம். இப்பொழுது சொல்லப் போவதும் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்தது தான் என்றாலும், இப்படியான கோணத்தில் இதனை நாம் அணுகியிருக்கவே மாட்டோம் என்பதற்காகத் தான் இந்த உதாரணம்.போன வருடமோ அல்லது அதற்கு முன்னாலோ எடுக்கப்பட்ட, தமிழக காவல் துறையின் முன்னால் உயர் அதிகாரியும், இந்நாள் மேடை பேச்சாளருமான கலியமூர்த்தி அவர்களின் நேர்காணல் ஒன்று இணையத்தில் இருக்கிறது. அந்த நேர்காணலில் தோல்வி பற்றி அவர் பேசிய ஒரு குறிப்பிட்ட பகுதி வெட்டி எடுக்கப்பட்டு, அது அலைப்பேசியின் வழியே பரவலாக பலருக்கும் பகிரப்பட்டது. அதனை நிறைய பேர் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. சரி அதில் என்னடா பிரச்சனை என்றால் பார்க்கலாம். அதில் கலியமூர்த்தி சொன்ன நிகழ்வொன்று இருக்கிறது, கலியமூர்த்தி சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் என்பதால், தான் சார்ந்த துறை சார்பாக அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டிக்கு அனுப்பப்படுகிறார். அப்படிப் போய் அவர் கலந்து கொண்ட துப்பாக்கி சுடும் போட்டியில், தொடர்ந்து மூன்று முறை தங்கமும் வெல்கிறார். ஒரு முறை தங்கம் வென்றவர்கள் அடுத்து மூன்று வருடங்கள் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்பது விதி, அந்த விதியின் படி மூன்று வருட இடைவெளியில் அவர் தொடர்ந்து கலந்து கொண்ட மூன்று போட்டிகளிலும் தங்கம் வென்றவர். அவர் தங்கம் வென்ற மூன்று போட்டியிலுமே, தங்கத்தை வெல்வதற்கான இறுதி சுற்றில், மூன்று முறையுமே இவரிடம் வெறும் அரைபுள்ளி, ஒருப் புள்ளியில் தங்க பதக்கத்தை பறிகொடுத்தது, கேரளாவைச் சேர்ந்த அச்சுதானத்தன் என்கிற ஒரு காவல்துறை உயர் அதிகாரி. ஒரு வகையில் அந்த அதிகாரி கலியமூர்த்தியை விட அனுபவத்திலும், பதவியிலும் மூத்தவர். இந்நிலையில், கலியமூர்த்தி மூன்று முறை தங்கம் வென்றதால், நான்காம் முறையும் போட்டிக்கு அவரையே அனுப்புகிறார்கள். இம்முறையும் கலியமூர்த்தி இறுதி சுற்று வரை வந்துவிடுகிறார், இறுதி சுற்றில் யாருடன் அவர் மோத வேண்டும் எனப் பார்த்தால், அவர் முன் வந்து நின்றது ஒரு இளம் பெண் அதிகாரி. அந்த இளம் பெண் அதிகாரியை பார்த்ததும், மூன்று முறை அகில இந்திய அளவில் தங்கம் வென்ற என்னை இந்தப் பெண்ணால் வீழ்த்த முடியுமா என யோசித்தவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இறுதிச் சுற்றில் அந்தப் பெண் கலியமூர்த்தியை வென்று விடுகிறார். கதை இத்தோடு முடியவில்லை. தோற்ற விரக்தியில் இருக்கும் கலியமூர்த்தியிடம் வந்து அந்தப் பெண் தன்னை இப்படி அறிமுகப்படுத்துகிறார். தான் வேறு யாருமல்ல மூன்று முறை தங்களிடம் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்த அச்சுதானதனின் மகள் தான் நான் எனச் சொல்கிறார். இந்தக் காணொளி இப்பொழுதும் இணையத்தில் இருக்கிறது போய் பார்த்துக் கொள்ளலாம். கலியமூர்த்தி அந்த நிகழ்வை சொல்லும் விதம் பார்ப்பவர்கள் அத்தனை பேரையும் புல்லரிக்க வைக்கக் கூடிய வகையில் இருக்கும் காணொளி அது. நான் உட்பட.
சரி, அதில் என்னடா பிரச்சனை என்றால், கலியமூர்த்தியிடம் மூன்று முறை தோற்ற அச்சுதானத்தனின் கனவு என்ன எனப் பார்த்தால், தான் எப்படியேனும் கலியமூர்த்தியை வெல்ல வேண்டும் என்பது தான், ஒரு வகையில் யோசித்தால் அச்சுதானந்தனால் தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்காக தன்னுடைய கனவை மகளின் வழியே நிறைவேற்றிக் கொள்கிறார். அப்படியானால் அந்த மகளின் மனதில் இருந்த உண்மையான கனவு எது? தெரியாது, இல்லையென்றால் அப்படியான கனவு ஒன்றினை அவர் காணவே முடியாத அளவு மாற்றப்பட்டாரா? தெரியாது, ஒருவேளை அந்த மகளுக்கு என்று ஒரு கனவு இருக்குமானால், அதனை அவரின் மகளோ, மகனோ தான் நிறைவேற்றுவார்களா? தெரியாது. இப்படி எத்தனை எத்தனை தெரியாதுகள் தொடரப் போகிறதோ தெரியவில்லை. தன்னால் நிறைவேற்ற முடியாத கனவுகளை சுமக்கும் நபர்களின் கனவுகளை, மிகப் பெரும் வலியோடு சுமக்கும் மகன்களை, மகள்களை, பேரன்களை, பேத்திகளை இன்னும் பிற உறவுகளை தொடர்ந்து பார்க்கிறேன். தங்களின் சொந்தக் கனவுகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும், அவர்களின் கண்களின் தெறிக்கும் வலி இருக்கிறது இல்லையா அது மிகக் கொடுரமானது. இறுதியாக, திரீ இடியட்ஸ் திரைப்படத்தில் நண்பனின் கனவுக்காக வரிந்து பேசும் அமிர்கான் தான், தங்கல் திரைப்படத்தில் தன்னுடைய மகளின் கனவுகளை பற்றி எதுவுமே பேசுவதில்லை. ஆனால் இரண்டையுமே திரையில் கொண்டாடுகிறோம் வெற்றியும் பெற வைக்கிறோம். உண்மையில் இரண்டில் எது முகத்தில் அறையும் நிஜம் என யோசித்துப் பாருங்கள். ஒரு சின்ன உதாரணக் காட்சியோடு முடிக்கிறேன். திரீ இடியட்ஸ் திரைப்படத்தில் (தமிழில் நண்பன்) ஒரு காட்சியில் தனக்கு பொறியாளன் ஆவதில் விருப்பமில்லை, தனக்கு புகைப்பட கலைஞன் ஆவதிலேயே விருப்பம் என அதுவும் பொறியாளனுக்கான படிப்பை முடித்த பிறகு ஒரு கதாபாத்திரம் தன்னுடைய தந்தையிடம் வந்து சொல்லும், சில நிமிட விவாத்திற்குள்ளாகவே, அந்தத் தந்தை தன் மகனை புரிந்து கொண்டு, தான் மகனுக்காக புதியதாக வாங்கி வைத்த மடிக்கணினியை கொடுத்துவிட்டு கேமரா ஒன்றை வாங்கிக் கொள் என சம்மதம் சொல்லிவிடும். உண்மையில் எத்தனை பேர் இயல்பு வாழ்க்கையில் இப்படியான தந்தைகளாகவோ, தாயாகவோ இருக்கிறார்கள். இதற்கான நேர்மையான பதில் ஒவ்வொருவரின் கனவுக்குள் ஒளிந்திருக்கிறது. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916