பசித்திருக்கும் காலணிகள்…
இன்றைக்கு எத்தனை பேரிடம் நாம் யாரையாவது சந்திக்கப் போனால் சாப்பிடீங்களா எனக் கேட்கும் பழக்கம் இருக்கிறது எனத் தெரியவில்லை. நேரடியாக உண்மையைச் சொல்ல வேண்டும் எனில், என்னிடம் பெரும்பாலும் அப்படிக் கேட்கப்படுவதில்லை என்பது தான் வலியான உண்மை. அப்படியானால் நான், ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக கேட்கிறேன். சாப்பிட்டீங்களா எனக் கேட்பது ஒருவகையான அறம் சார்ந்த மரபு. சில நேரங்களில் மூன்று மணி நேரங்களுக்கும் மேல் யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் கூட, பசியைப் பற்றித் தவறியும் பேசுவதில்லை என்பது எந்த வகையில் சரி எனத் தெரியவில்லை. பசித்தல் என்பது அவ்வளவு பெரிய கொலைக் குற்றமா என்பதும் தெரியவில்லை. ஒரு வகையில் நம் பசியைப் பற்றியே நாம் சிந்திக்காத போது எப்படி மற்றவர்களிடம் சாப்பீட்டிங்களா எனக் கேட்கும் எண்ணம் வரும். இப்படியான சமூக சூழலில் தான், ஏற்கனவே பலமுறை பல சந்தர்ப்பங்களில் எழுதியது தான் என்றாலும், மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டே விஷயத்திற்குள் போகலாம். என்னுடைய தினசரி வாழ்வில் ஒரு விஷயத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். அது என்னவெனில், தினமும் அன்றாட அலுவல்களுக்காக கிளம்புகையில் எனக்கான மதிய உணவு பொதியோடு, கூடவே, இன்னுமொரு உணவு பொதியையும் சேர்த்தே எடுத்து வருவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறேன். வீட்டிலும் அது ஒரு பொது வழக்கமாகி விட்டபடியால், இரண்டு உணவுப் பொதிகள் வேண்டும் என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை என்றாகிவிட்டது. அப்படி எடுத்து வரும் உணவை அன்று யாருக்கு கொடுக்கிறேன் என்பதில் எனக்கு கிடைக்கும் அனுபவம் இருக்கிறது இல்லையா. அது தரும் பாடம் என்பது, கண்டிப்பாக, இந்த உலகின் எந்த ஒரு பல்கலைக்கழகமும் கொடுக்க முடியாத விலை மதிப்பில்லாதது.
இப்படித் தான் இரண்டு நாளைக்கு முன்பாக ஒரு சம்பவம். தினசரிக் கொண்டு வரும் உணவை தொடர்ந்து பல மாதங்களாக ஒரு வயதான எண்பது வயதைக் கடந்த ஒரு பாட்டிக்கு கொடுப்பது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அந்தப் பாட்டி அவர் இருக்குமிடத்தில் காணவில்லை. அந்தப் பாட்டி உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு எதிரே, ஒரு கூடையில் பழம் வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கும் அம்மாவிடம் கேட்டால் பாட்டியைப் பற்றித் தெரியும் என்றாலும், எனக்கென்னவோ இப்பொழுதைக்கு பாட்டியைப் பற்றிக் கேட்க வேண்டாம் என்று தோன்றிவிட்டபடியால் எதுவும் கேட்கவில்லை. (அப்படி அந்தப் பாட்டியைப் பற்றிக் கேட்கும் நாளில் அதனைப் பற்றி தனியே எழுதுகிறேன்) அந்தப் பாட்டியைக் காணமுடியவில்லை என்கிற காரணத்தால். அதே பகுதியில் இருக்கும் ஒரு கோவிலில், அதன் சுற்று சுவர் பக்கத்தில் ஒரு பெரியவர் உட்கார்ந்து கொண்டு, அந்த வழியாக போகிற எல்லோருக்கும் வணக்கம் வைத்தபடி இருப்பார், பல முறை அதனைப் பார்த்திருக்கிறேன். யாசகம் எல்லாம் கேட்க மாட்டார். ஆனால் ஒரு அட்டகாசமான சிரித்த முகத்தோடு அவர் வணக்கம் சொல்லும் அழகே அம்சமாய் இருக்கும். அவர் யாருக்கு வணக்கம் வைத்தாலும், அந்த வணக்கத்தில் அப்படி ஒரு நன்றி உணர்வு வழியும். பாட்டியைக் காண முடியாத நாளில் இருந்து, அந்த பெரியவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு போய்விடுவேன். இதில் ஒரு விஷயம் என்வென்றால் பாட்டி உட்கார்ந்திருந்த இடம், தொடர்வண்டி பணியாளர்களின் குடியிருப்பு பகுதியின் உள்நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பணம் வழக்கும் இயந்திர அறையின் வாசல் பகுதி, ஆனால் அந்தப் பெரியவர் இருக்கும் இடமோ, கொஞ்சம் தொலைவாக அந்தக் குடியிருப்பின் உள்ளே இருக்கும் கோவில் வளாகம். அதனால் பெரியவரிடம் உணவைக் கொடுக்க உள்ளே போய் ஒரு சுற்று சுற்றி வர வேண்டும், கொஞ்சம் தூரம் அதிகம். அதனால் இந்த பிரதான நுழைவாயில் இல்லாமல் பின்புறமாக ஒரு நுழைவாயில் ஒன்று அந்த தொடர் வண்டி பணியாளர் குடியிருப்புக்கு உண்டு. ஆனால், அதன் வழியாக இருசக்கர வாகனத்தை நுழைத்து வர முடியாது. உள்ளே நுழையும் இடத்தில் நிறுத்திவிட்டு, அங்கு ஊன்றி இருக்கும் கற்களில் இடையில் இடையை நுழைத்து தான் வந்து போக வேண்டும், பிரதான வாயில் வழியாக பெரியவரை அடைவது தூரம் என்பதால், பின்னால் உள்ள நுழைவாயிலின் வழியாக வண்டியை நிறுத்திவிட்டு நுழைந்து, அந்தப் பெரியவருக்கு உணவை கொடுத்து விட்டு வந்துவிடுவேன். அப்படிப் போகையில் தலைக்கவசத்தைக் கூட கழட்ட மாட்டேன்.
இப்படிப் போய்க் கொண்டிருக்கையில் ஒரு நாள் வண்டியை நிறுத்திவிட்டு பெரியவருக்கு உணவைக் கொடுத்துவிட்டு மீண்டும் வந்து வண்டியை எடுக்கப் போகையில் வண்டி நிறுத்தியிருந்த இடத்தில் நடுத்தர வயதை கடந்த ஒருவர் என்னிடம் வந்து இன்னுமொரு சாப்பாடு இருக்குமா எனக் கேட்டார். நான் உதட்டை பிதுக்கி இல்லை என சொல்லிவிட்டு வண்டியை எடுக்க நகர்ந்தேன், ஆனாலும் என்னிடம் சாப்பாடு கேட்டவரின் முகத்தில் எவ்வித சலனமுமில்லாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார், என்னடா நாம் இல்லையென சொன்னோம் அதனை அவர் கவனித்தாரா, இல்லையா என, எனக்கு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போதே சந்தேகம் வர, அப்பொழுது தான் என்னுடைய தவறு ஒன்று எனக்கு விளங்கியது, நான் உதட்டை பிதுக்கி இல்லை எனச் சொன்னதை கழட்டாமலேயே இருந்த என்னுடைய தலைக் கவசம் மறைத்துவிட்டது. அதனால் என்னிடம் உணவுக் கேட்டவர் வண்டியை எடுப்பதற்கு முன்பாக இவன் தனக்கு உணவு கொடுப்பான் என நகராமல் நின்றிருக்கிறார். இதனை உணர்ந்ததும், நகராமல் நின்றிருந்த அந்த நபரின் முகம் மனதில் தோன்ற, எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நாளை கண்டிப்பாக அதே இடத்தில் அந்த நபர் இருந்தால் உணவை அவருக்கு கொடுத்திட வேண்டும் என முடிவு செய்தேன். அடுத்த நாள் அதே இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்தால், நேற்று என்னிடம் இன்னொரு உணவு பொட்டலம் இருக்குமா எனக் கேட்டவர், அந்த தொடர்வண்டி நிலைய பணியாளர் குடியிருப்பினுடைய நுழைவாயிலின் சாலை ஓரமாக உட்கார்ந்து, காலணிகளை செப்பனிடும் தொழிலாளி. முந்தைய நாள் இதனை நான் கவனிக்கவே இல்லை. இங்கே ஒரு விஷயத்தை கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். அது என்னவென்றால், இங்கே யாசகம் கேட்பவர்களுக்குக் கூட சில்லரையாகவோ, உணவாகவோ எதோ ஒன்று கிடைத்துவிடுகிறது. இதனை அந்தப் பெரியவருக்கு உணவு கொடுக்கும் போது சில நேரங்களில் கவனித்திருக்கிறேன். ஆனால், காலணிகளை செப்பனிடுவர்களைப் போன்ற அடிமட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள் இல்லையா, அவர்கள் எல்லாம் உண்மையில் மூன்று வேளையும் சாப்பிடுகிறார்களா என்பது, கண்டிப்பாக, இங்கே மிகப் பெரிய வலியான கேள்வி. என்னுடைய அனுபவத்தில் இப்படியான தொழிலாளர்கள் கண்டிப்பாக மூன்று வேளையும் சாப்பிடுவதில்லை. அதிலும் குறிப்பாக காலை உணவை சாப்பிடுவதில்லை என்பதை என் அனுபவத்தில் பல முறை பார்த்திருக்கிறேன். இந்த இடத்தில் இருந்து ஒன்றே ஒன்றை மட்டும் யோசியுங்கள், நாம் இன்று ஒவ்வொரு நாளும் எத்தனை, எத்தனை சாலையோர வியாபாரிகளை பார்க்கிறோம், கடந்தும் வருகிறோம். பூ விற்பவர் முதல் பற்பல பொருட்களை ரோட்டில் போட்டு விற்பனை செய்யும் பல பேரிடம் பல விதமான பொருட்களை பேரம் பேசி வாங்குகிறோம் இல்லையா. குறைந்த பட்சம் எல்லோரிடமும் போய் கேட்காவிட்டால் கூட பரவாயில்லை, ஒரே ஒரு நாளாவது, நாம் பேரம் பேசி பொருள் வாங்கும் இவர்களில் யாரேனும் ஒருவரிடமாவது சாப்பிடீங்களா எனக் கேட்டிருக்கிறோமா, ஒரே ஒரு முறையேணும் உங்கள் வாழ்க்கையில் அதனைச் செயல்படுத்தி பாருங்கள். அன்று கண்டிப்பாக அறம் என்பதன் உண்மையான உணர்வை உங்களால் பூரணமாக உணர முடியும். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916