மீட்டப்பட்ட நினைவலைகள்…
இன்று காலை எழுந்ததும் செய்ய வேண்டிய வேலைகளை ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டிருக்கும் போது, அலைப்பேசியில் இருந்து சன்னமான ஒலி, ஏதேனும் புதிய பதிவுகள் வந்தால் வரும் ஒலி அது. என்ன என எடுத்துப் பார்த்தால், நண்பர் ஜானகிராமன் அவருடைய முகநூல் பக்கத்தில், இன்று இளையாராஜாவின் பிறந்தநாள் என்று, அவருடைய பார்வையில் இளையராஜாவின் இசைப் பற்றிய கட்டுரை ஒன்றை பதிவேற்றியிருந்தார். இன்றுக் காலையிலேயே ஒரு அற்புதமான வாசிப்பனுவத்தை கொடுத்த கட்டுரை அது. வாசித்தப் பிறகு நினைவலைகள் இசையால் நிரம்ப, அதனை அசை போட்டபடி முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டிருந்தேன். எல்லாம் முடித்து அன்றாடப் பணிகளுக்கு தயாராகி கிளம்புகையில் வீட்டில் நாங்க சாப்பிட்ட பிறகு நீங்க கிளம்புங்க எனச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரைக்குமான காத்திருப்பின் இடையே, எனக்கு வந்த அலைப்பேசி அழைப்பு ஒன்றை எடுத்துப் பேசி முடிக்கையில் தான், ஒரு புதிய திரைப்படத்தின் முன்னோட்டம் ஒன்று அலைப்பேசியில் கண்ணில் பட்டது. உடனே அதனைச் சொடுக்கிப் பார்த்துக் கொண்டிருதேன். எஸ்.ஜே.சூர்யா நடித்த இயக்குநர் ராதா மோகனின் பொம்மை திரைப்படத்தின் முன்னோட்டம் தான் அது. மிக அட்டகாசமாக இருந்த முன்னோட்டத்தின் இறுதி நிமிடங்களில் தெய்வீக ராகமாக இளையராஜா வந்து போனார். அந்த முன்னோட்டத்தில் தெய்வீக ராகம் பாடல் இடம்பெற்ற இடமும், அதனைப் பாடிய அந்தக் குரலும் மனதிற்குள் என்னென்னவோ செய்தது. மீண்டும் என்னுடைய எண்ணங்களுக்குள் இசையின் அலைகள் ஆர்ப்பரித்தன. பொதுவாக இங்கே மிகப் பெரும்பாலும் இளையாராஜாவை பாடலுக்காக மட்டுமே அதிகமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது. அதிலும் இளையாராஜாவின் இசையைப் பாடலின் வரிகளோடு தொடர்புபடுத்தி அவற்றை கொண்டாடுகிறோம். ஆனால் அவர் பாடல்களைக் கடந்த வார்த்தைகளே தேவைப்படாத, பல பின்னனி இசைக் கோர்வைகளால் நம்முடைய மனதையும், உடலையும் நுட்பமாக கட்டிப்போடும் வல்லமை கொண்டவர் என்பதை பல நேரங்களில் என்னுடைய இசைக் கேட்டலின் நுட்பங்களின் வழியே கண்டுணர்ந்திருக்கிறேன். அது எப்படி.
என்னுடைய பதின்ம வயதின் தொடக்க காலத்தில் வெகு சீக்கிரமே சூழல் காரணமாக வேலைக்கு வந்து விட்டேன். அன்றைய சூழலில் பல நேரங்களில் வேலையின் அழுத்தத்தை போக்கும் அருமருந்தாக இளையராஜாவின் இசையே இருந்திருக்கிறது. அப்படியான பல மறக்க முடியாத தருணங்கள் என்னுடைய வாழ்வு எங்கிலும் உண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் இளையராஜாவின் பாடல் என்பதைத் தாண்டி அவரின் பின்னணி இசையின் நுட்பங்களை, மேதமைகளை கண்டுணர்ந்த போது தான், அவரின் மீது மிகப் பெரிய பிரம்மிப்பும், மரியாதையும் அதிகமாகியது. ஒரு நேரத்தில் திரைத்துறைக்குள் பணிபுரிந்த காலகட்டத்தில், அந்தச் சூழல் கொடுக்கும் மிகப்பெரும் அழுத்தம், அலட்சியப் பார்வைகள், நிராகரிப்புகள், அடிப்படை பொருளாதார தேவைகளுக்கு கூட திக்கித் திணறும் சூழ்நிலை எனப் போய்க் கொண்டிருந்த நேரம் அது. அப்படி ஒரு நாள் திரைத்துறையில் பணியாற்றும் காலகட்டத்தில் நெருக்கமாக இருந்த நண்பன் ஒருவனின் வீட்டில் அமர்ந்து எதை எதையோ பேசிக் கொண்டிருதோம், அப்பொழுது என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென என்னுடன் பேசிக் கொண்டிருந்த நண்பன் இங்கே உட்காரு, நான் என்னோட அறைக்குப் போய் ஒரு இசைக் கோர்வையை ஓடவிடுகிறேன், அந்த இசையை உன்னுடைய உள்ளுணர்வால் எப்படி உணர்கிறாய் என்பதை, அந்த இசையை முழுமையாய் கேட்ட பிறகு சொல் எனச் சொல்லிவிட்டு, தன்னுடைய கணினி இருக்கும் பக்கத்து அறைக்குப் போய் இசைக் கோர்வை ஒன்றை, அவன் வைத்திருந்த மிகச் சிறந்த ஒலிப்பெருக்கியில் ஓடவிட்டான். அந்த இசைக் கோர்வை இசைக்கத் தொடங்கிய முதல் நொடியில் இருந்து, அப்படியே நான் அதற்குள் கரைந்து போக ஆரம்பித்தேன், மனம் எங்கெங்கோ போய் என் கையை பிடித்து என்னுடைய பால்ய கால நினைவுகளுக்குள் முழ்கி இழுத்துக் கொண்டே போனது. பால்ய கால சுகமான நினைவுகள் என் உடல் முழுவதும் பரவ, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிதோடியடியே இருந்தது. என்னால் என்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அங்கிருந்த இருக்கையில் வெகு நேரம் கண்களையே திறக்காமால் அப்படியே தலைசாய்த்து அமர்ந்திருந்தேன். கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்தி எழுந்த பிறகு, அவனிடம் இந்த இசையை என்னுடைய பால்யத்தில் கண்டிப்பாய் கேட்டிருக்கிறேன். எந்தத் திரைப்படத்தின் இசைக் கோர்வை இது எனக் கேட்டேன். வருஷ்ம் 16 திரைப்பட தொடக்கத்தில் எழுத்துக்கள் திரையில் தோன்ற ஆரம்பிக்கும் போது வரும் பின்னனி இசை (Title Bgm) இது என்றான்.
வெகு காலம் தாண்டி இன்று வரை என்னுடன் சக தோழனைப் போல், தோழியைப் போல், காதலியைப் போல் இன்னும் என்னவெல்லாம் சொல்லமுடியுமா அத்தனையுமாய் என்னுடன் பயணிக்கும் இசைக் கோர்வை தான், அன்று நான் கேட்ட வருஷம் 16 திரைப்படத்தின் தொடக்க இசை. அந்த இசைக்கு வார்த்தையெல்லாம் தேவையே இல்லை. இரண்டரை மணி நேரம் ஓடும் ஒரு திரைப்படக் கதையின் மொத்த சாரத்தை, அதன் தொடக்க இசையாக ஓடும் இரண்டரை நிமிடங்களுக்குள் அடக்கிக் கொண்டு வரமுடியுமா என்றால். முடியும் என சொன்னவர் இளையராஜா. இதனை வாசிப்பவர்கள் யாருக்காவது அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால். என்னால் நிறையவே உதாரணங்களை அடுக்க முடியும். இருந்தாலும் உதாரணத்திற்கு இரண்டே இரண்டு திரைப்படங்களை பற்றி மட்டும் சொல்கிறேன். நீங்களே கேட்டு விட்டு அப்புறம் சொல்லுங்கள். ஒன்று மேலே குறிப்பிட்டுள்ள வருஷம் 16, இரண்டாவது கோபுர வாசலிலே. இந்த இரண்டு திரைப்படங்களையும் நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் நல்லது. அப்படி இரண்டு திரைப்படங்களின் கதையும் உங்களுக்கு முழுமையாய் தெரியும் என்றால், இணையத்தில் இருக்கும் இரண்டு திரைப்படங்களின் தொடக்க இசையை மட்டும், அதாவது திரைப்படத்தின் பெயரில் இருந்து தொடங்கி முழுமையாய் எழுத்துக்கள் தோன்றி மறையும் வரை இசைக்கப்படும் தொடக்க இசையை (Title Bgm) மட்டும் நல்ல ஒலி வாங்கியை காதுகளில் பொருத்திக் கண்களை மூடி கேட்டுப் பாருங்கள். மேலே சொல்லியுள்ள இரண்டு திரைப்படங்களின் மொத்த கதையினுடைய உணர்வின் சாரமும் அந்த இரண்டரை நிமிட இசைக்குள் ஒளிந்திருக்கும் அற்புதம் நம் மனக்கண்களுக்குள் விரிவதை மிகச் சிறப்பாய் உள்வாங்கி உணர முடியும். இன்றைக்கு உள்ள இசை அமைப்பாளர்களில் எத்தனை பேர் இவ்வளவு நுணுக்கமாய் ஒரு திரைப்படத்துக்கு இசை அமைக்கிறார்கள் என்று கேட்டால், கண்டிப்பாக அதற்கு பதில் இல்லை. ஒரு திரைப்படத்தினை காண வரும் பார்வையாளனுடைய அக உணர்வை, அங்கே அவன் கண்கள் முன்னால் திரையில் விரியப் போகும் கதைக்கானதாய் மாற்றும் வல்லமை இளையராஜா என்கிற அந்த மிகப்பெரும் இசை ஆளுமைக்கு உண்டு. அந்தக் காரணத்தால் தான் அவர் என்றென்றும் இசைக்கான ராஜா இளையராஜா. அந்த ராஜாவுக்கு இன்றும் என்றும் என்றென்றும் இசைப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916