வாழ்ந்து பார்த்த தருணம்…176

ஈக்கு ஆறு கால்கள்…

அன்றும் பொழுது எப்பொழுதும் போல் தான் விடிந்தது, அவளின் உறக்கமும் அப்படியே, உறக்கத்தில் இருந்து எழுந்ததும் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லாமலேயே செய்ய ஆரம்பிப்பாள் அல்லது சொன்ன பிறகு. அன்று சொன்ன பிறகே வேலைகள் நடக்கத் தொடங்கின. படுக்கை விரிப்புகளை எல்லாம் எடுத்து வைத்து, பல் தேய்த்து என ஒவ்வொன்றாக செய்து கொண்டே வந்தாள், திடீரென அப்பா இங்க வாங்களேன் என அழைத்தாள், எங்கிருக்கிறாள் எனத் தேடிப் போய் பார்த்தால், வீட்டின் பால்கனியில் நின்று கொண்டிருந்தாள், என்னடா கண்ணு கூப்பிட்ட எனக் கேட்டால், அப்பா ஈக்கு ஆறு கால் இருக்குப்பா, நான் எண்ணி பார்த்தேன்பா என்றாள் முகத்தில் ஆச்சர்யப் புன்னகையுடன். தொடர்ந்து அவளே பேசினாள், நேத்து தான்பா கிளாஸுல மிஸ் சொல்லிக் கொடுத்தாங்க, அதனால தான் எண்ணிப் பார்த்தேன் என மீண்டும் ஒரு முறை ஈக்கு ஆறுகால்கள் என்பதை உறுதிப்படுத்தினாள். அது வரை நான் ஈக்களின் கால்களை எண்ணிப் பார்த்ததில்லை என யோசித்துக் கொண்டிருந்த அதே நேரம், அவளும் என்னிடம் நீங்க ஈயோட கால பார்த்திருக்கீங்களாப்பா எனக் கேட்டால். இல்லைடா கண்ணு என்று சொன்னேன். அதற்கு அந்த ஈ இன்னும் அங்க தான் நிக்குது என்றால். திரும்பிப் பார்த்தால் அங்கே இத்தனை உரையாடலுக்கு நடுவிலும் அமைதியாக அந்தப் பால்கனியின் கம்பிகளில் உட்கார்ந்திருந்தது ஈ. அதனைப் பார்த்ததும் நானும் என்னை அறியாமல் குனிந்து, ஈயின் கால்களை எண்ணிப் பார்த்தேன். ஆறு கால்கள் இருந்தன, உடனே மகளிடம் திரும்பி ஆமாடா கண்ணு ஆறு கால் சரியாத் தான் இருக்கு. அப்பா கூட இன்னிக்குத் தான் இவ்வளவு பக்கத்துல போய் பார்த்தேன் எனச் சொன்னேன். இதப போய் இன்னிக்கு மிஸ்கிட்ட சொல்லணும்பா என்றாள். சரிடா கண்ணு போய் சொல்லு என்று சொன்னேன். அவளும் சந்தோசமாக தலையை ஆட்டிவிட்டு பள்ளிக்கு கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தாள். மேலே சொன்ன அனைத்து உரையாடல்களும் போன வாரம் எனக்கும் என் மகளுக்கும் அன்றைய காலைப் பொழுதில் நடந்தவை. ஈ என்பது இன்றைய குழந்தைகளுக்கு ஆச்சர்யமான ஒன்றாக மாற முடியுமா என்றால், முடியும் எப்படி?

பொதுவாக என்னைப் பற்றி என் சுற்றத்தாரிடம் ஒரு விமர்சனம் உண்டு, என்னுடைய மகளிடம் அதிகமாக கண்டிப்பு காட்டுகிறேன், சுதந்திரமாக இருக்க விடுவதில்லை என்கிற விமர்சனம் தான் அது..இன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து கவனித்து வரும் விஷயம் ஒன்று இருக்கிறது. இன்றையப பெற்றோர்கள் எது கண்டிப்பு, எது சுதந்திரம் என்கிற விஷயத்தில் புரிந்தலற்ற தன்மையோடே அதனை அணுகுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை இன்றைய குழந்தைகளை அலைப்பேசி மற்றும் தொலைக்காட்சி இந்த இரண்டில் இருந்தும் விலக்கி வளர்த்தாலே போதுமானது எனச் சொல்வேன்..ஆனால் அதில் தான் இன்று கட்டற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. ஆனால் என்னுடைய வீட்டில் கடந்த சில வருடங்களாகவே தொலைக்காட்சி இல்லை. இப்பொழுது மூன்று மாதங்களுக்கு முன்னதாக வீட்டில் மூத்தவர்கள் இணைய வழி ஆன்மீக வகுப்புகளில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்டது, அதுவும் வாங்கியதிலிருந்து அந்தப் பெட்டிக்கு மின்சாரம் தவிர, வேறு எவ்விதமான இணைப்புகளும் கொடுக்கப்படவில்லை. அலைப்பேசி வழியாக இணைய வழி ஆன்மீக வகுப்புகள் இருக்கும் நேரங்களில் மட்டுமே தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கும். மற்ற நேரங்களில் அது ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாது. தொலைக்காட்சி வேண்டாம் என்பதை நடைமுறை படுத்த தொடங்கிய சமயங்களில் மிகப்பெரும் எதிர்ப்புகள் வந்தன..ஆனால் இன்று அதற்கான விளைவு கண்கூடாகத் தெரிகிறது, அதில் முதல் விஷயம் என் மகள் தான் பார்க்கும் எதையும் காகிதம் கொண்டோ அல்லது வீட்டிருந்து தூக்கிப் போட்ட சின்ன அட்டைப் பெட்டிகளை கொண்டோ எதை எதையெல்லாமோ வைத்து உருவாக்கி வீடு முழுவதும் அடுக்கி வைத்திருக்கிறாள். அதில் என்னுடைய அலைப்பேசியில் இருந்து மடிக்கணியில் இருந்து எதுவுமே தப்பவில்லை. எல்லாமே அட்டை வடிவிலோ அல்லது காதிக வடிவிலோ மகளின் உலகத்துக்குள் வந்துவிடுகிறது. கடந்த வாரம் என்னுடைய புத்தக அலமாரியையும் மிகச் சின்னதாக அட்டகாசமாக உருவாக்கிவிட்டால். கவனிக்கும் போதெல்லாம் அவளுடைய கைகளில் கத்திரிக்கோல், காகிதங்கள், பசைகள், அட்டைகள், வண்ணமடிக்க பயன்படுத்தும் எழுதுகோல்கள் என ஒரு உலகம் தினம், தினம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த உருவாக்குதல் என்கிற தன்மையைத் தான் அலைப்பேசியும், தொலைக்காட்சியும் குழந்தைகளிடம் இருந்து தொடர்ந்து அழித்துக் கொண்டே இருக்கின்றன. அது போக மேலே சொன்ன இரண்டும் முக்கியமாக மற்றொன்றையும் குழந்தைகளிடம் இருந்து அழிக்கிறது. அது என்ன?

அது அறிவுப்பூர்வமான தேடலுடன் கூடிய கேள்விகள். எங்கள் வீட்டின் பிரதான அறையில் ஒரு புத்தக அலமாரி ஒன்று இருக்கிறது. அதில் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்கள் அடுக்கியிருக்கும். இப்பொழுது 7 வயதிலிருந்து 8வயதை நோக்கி அவள் நகர்ந்து கொண்டிருக்கிறாள். அவளின் முன்னால் தான் வீட்டில் உள்ளவர்களின் வாசிப்பும் இருக்கிறது, எழுதுவதும் இருக்கிறது என்பதால், இயல்பாகவே இந்த இரண்டிலும் அவளுக்கு ஆர்வம் குவிய ஆரம்பித்து விட்டது. அது எந்த அளவுக்கு என்றால், இரண்டு உதாரணங்கள் சொன்னால் எளிதில் புரிந்துவிடும். ஒரு நாள் புத்தக அலமாரியில் இருக்கும் ராபின் ஷர்மாவினுடைய தன் பொக்கிஷத்தை விற்ற துறவி என்கிற தலைப்பை சத்தமாக வாசித்து விட்டு பொக்கிஷம்னா என்னப்பா என்று கேட்டால், அதனை விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தேன். இன்னொரு நாள் சாருவினுடைய கலகம், காதல், இசை என்கிற தலைப்பை வாசித்து விட்டு கலகம்னா என்னப்பா என வினவினாள், அதற்கும் விளக்கம் சொல்லப்பட்டது. இந்த இரண்டைத் தாண்டி இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இன்னொரு பக்கம் தன் பாட்டி வீட்டில் இருந்து சிறுவர் மலரை எடுத்து வரச் சொல்லி அதனையும் வாசித்து அர்த்தம் புரியாவிடில் உடனே கேள்வி கேட்டு புரிந்து கொண்ட பிறகே அடுத்த வார்த்தைக்கு நகர்கிறாள். தொலைக்காட்சிப் பார்க்கக் கூடாது, அலைப்பேசிக் பார்க்கக் கூடாது போன்றவை குழந்தைகளின் சுதந்திரத்தை கெடுக்கிறது என்று என்னை நோக்கி சொல்லப்படும் எதனையும் காதுகளில் ஏற்றுக் கொள்வதே இல்லை. காரணம் அப்படியான விமர்சனத்திற்கு காது கொடுத்திருந்தால் ஈக்கு ஆறுகால்கள் என்பதை என்னால் கவனித்து இருக்க முடியாது. இன்றைய குழந்தைகளிடம் ஈ என்கிற உயிரின் மீது இருக்கும் பிம்பமே வேறு. அன்றைக்கு கால்களை எண்ணக் கொடுத்த அந்த ஈ என்னுடைய கேமராவில் பதிவாகும் வரை அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது இன்னும் ஆச்சர்யம். ஒருவேளை கிளாஸ் மிஸ் அன்றைக்கு ஈ பற்றி பாடம் எடுத்தது அதற்கு தெரிந்திருக்குமோ, அதனை அன்றைக்கே அந்த ஈயிடமே கேட்டிருக்கலாமோ…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916