வாழ்ந்து பார்த்த தருணம்…177

இது கனவு தேசமல்ல…

முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறேன், நான் வேறெந்த மொழிக்கும் எதிராவன் இல்லை.
இதனை முதலிலேயே சொல்ல என்னக் காரணம் என்பது, இந்தக் கட்டுரையின் முடிவில் தெரியும். இரண்டொரு நாட்களுக்கு முன்னதாகவே எழுத வேண்டிய கட்டுரை இது. ஆனால் அலுவல் பணி சம்பந்தமாய் தொடர்ச்சியான பயணத்தின் காரணமாக தாமதமாகிவிட்டது. சரி இப்பொழுது நேரடியாக விஷயத்திற்குள். கொரானா காலகட்டங்களுக்கு பின் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் இயல்பு நிலைக்குத் திரும்பி, தனது வழக்கமான பணிகளைத் தொடர ஆரம்பித்திருக்கின்றன. அதன் காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு புகைப்பட வகுப்புகளுக்கு பயிற்சியளிக்க செல்ல ஆரம்பித்து விட்டேன், இதற்கு நடுவில், கடந்த இரண்டு மாதங்களாக ஒரு சில கல்லூரிகளிலும் மற்றும் ஒரு சில பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு எழுதுதல் சம்பந்தமாக ஒரு சின்னப் போட்டி, அதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் ஒரு நான்கு வரிகள் மட்டும் எழுத வேண்டும். அவர்களுக்கு இரண்டு விதமான மொழிகளில் எழுதலாம் என வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதில் ஒன்று தமிழ் மற்றொன்று ஆங்கிலம். இந்தப் போட்டிகளை ஒருங்கிணைப்பதில் என்னுடைய பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது. அப்பொழுது கவனித்தவைகள் தான் இனிச் சொல்லப் போவது. அடுத்து சொல்லப் போகும் அனைத்து விஷயங்களும் பள்ளிகள், கல்லூரிகள் இரண்டுக்குமே பொருந்தும், எழுத்துப் போட்டியில் பங்கேற்க வந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் பேரில், எழுதலாம் என முடிவெடுத்தவர்கள் ஒரு அறுபத்தி ஐந்து சதவீதம் பேர். அதிலும் தமிழில் எழுதலாம் என முடிவெடுத்தவர்கள் ஒரு பதினைந்திலிருந்து இருபது சதவீதம் பேர். இதில் பேராசிரியர்களும், ஆசிரியர்களும் அடக்கம். அதிலும் கொஞ்சம் கவனிக்கத்தக்க  வகையில் எழுதியவர்கள் ஒரு மூன்றிலிருந்து நான்கு சதவீதம் பேர். அதிலும் தமிழைப் பிழையில்லாமல் எழுதியவர்கள் ஒரு சதவீதத்திற்கும் கீழ் தான். இன்றைய வளரும் இளம் தலைமுறையினரிடம் தாய் மொழியான தமிழ் மொழி படும் பாடு இது தான்.

இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், அதிகமான பேர் ஆங்கில மொழியில் தான் எழுதினார்கள் என்பதைத் தாண்டி, தமிழ் மொழியில் தனக்கு முறையாக எழுதப் படிக்கத் தெரியவில்லை என்பதைப் பற்றி ஒரு சிறிய அளவு வருத்தமோ, கவலையோ இவர்களுக்கு இல்லை. அதில் ஆங்கிலத்தில் எழுதியவர்களும் கவனிக்கத் தக்க அளவு எழுதினார்களா என்றால் அதுவும் இல்லை. அதையும் தேடிப் பொறுக்கித் தான் எடுக்க வேண்டும். இப்படியான நிலையில், ஒரு வேளை இந்தத் தலைமுறை இளைஞர்கள் பாடப் புத்தகத்தைத் தாண்டி வாசிக்க வேண்டும் என முடிவெடுப்பவர்கள் எத்தனை சதவீதம் பேர்?. கண்டிப்பாக, அதன் சதவீதமும் மிகக் குறைவாகத் தான் இருக்கும். அப்படிக் குறைவான சதவீதம் பேரும் எதனை வாசிப்பார்கள். கண்டிப்பாக தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களை அல்ல, வணிக எழுத்து என்று எடுத்துக் கொண்டாலும் கூட கண்ணை மூடிக் கொண்டு ஹாரிபார்ட்டர் என்பது போன்ற இடத்தில் இருந்து தான் தொடங்குவார்கள். அதில் எள்ளவும் சந்தேகமே வேண்டாம். அப்படி வணிக எழுத்துக்களை வாசிப்பவர்களும் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் வாசிப்பு பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், அதிலும் கண்டிப்பாக தமிழ் இருக்காது. ஆக இன்றைய தலைமுறையினரிடம் பாடத்தைத் தாண்டி வாசிக்கும் பழக்கத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கிறது. சரி வாசிப்பவர்களை விடுங்கள். வாசிப்பைத் தாண்டி இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிகமாக ஊடுருவியிருப்பது இணைய வழி ஒடிடித் தளங்கள் தான். அதில் உள்ள பல்வேறு வெப் சீரியஸ்களை பார்க்கும் பழக்கம் இவர்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. அதிலும் ஆங்கிலம் தான் இவர்களின் முதல் தேர்வாக இருக்கிறது. இப்படி இவர்கள் பார்ப்பது, படிப்பது, கேட்பது என அனைத்திலுமே ஆங்கிலம் தான் பிரதானம். இவர்கள் பார்க்கும், படிக்கும், கேட்கும் விஷயங்களின் வழியே இவர்கள் யோசிக்கும் விஷயங்கள் எல்லாமே, உணவு உட்பட, இந்த மண்ணின் சூழலுக்கும், தன்மைக்கும் மிக எதிரானதாக இருக்கிறது. அவர்கள், பார்க்கும், கேட்கும் வாசிக்கும் விஷயங்களை, தாங்கள் வாழும் சூழலோடு பொருத்திப் பார்க்கையில் அவை எதுவுமே அவர்களுக்கு உவப்பானதாக இல்லை. இங்கிருந்து தான் முதல் முரண் ஆரம்பிக்கிறது. இன்றைய இளைய  தலைமுறை பார்த்து, கேட்டு, வாசித்து அறிந்துகொள்ளும் விஷயங்கள் அனைத்திலும் நம் மண், மரபு, கலாச்சாரம் கடந்து வந்த பாதை என எதுவுமே இல்லை. அப்புறம் எப்படி அவர்களுக்கு இந்த மண்ணின் மீதும், மரபின் மீதும் மரியாதை இருக்கும் வாய்ப்பேயில்லை. பொதுவாக எந்த ஒரு மனிதனிடமும் போய் அவனுடைய தாயைக் காண்பித்து இவள் உன்னுடைய தாய் இல்லை என்று சொல்லவே முடியாது, காரணம், தாயின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை என்பது கற்பனையளவில் கூட கேள்வி கேட்கும் இடத்தில் இல்லை.

இப்படியான அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாகவே நம் மண்ணுக்கான மொழியை தாய் மொழி என்று சொல்கிறோம். ஏன் தந்தை மொழி, தாத்தா மொழி, சித்தப்பா மொழி எனச் சொல்லலாமே, சொல்ல முடியாது அல்லவா, அதே போல் தான் தாய் மொழியும். ஆனால் நாம் இன்று நம் தாய் மொழி சார்ந்து என்ன விதமான விழுமியங்களை இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்று கேட்டால் ஒன்றுமேயில்லை என்பது தான் பச்சையான முகத்தில் அறையும் பதில். இன்றைக்கு மிகப் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் தமிழில் பேசுவது கண்ணியக் குறைவான விஷயம், அதனை ஒரு வகையில் இன்றைய பெற்றொரும் ஆதரிக்கிறார்கள் என்பது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை, இப்படியான இன்றைய இளைய தலைமுறை பார்த்தல், கேட்டல், வாசித்தல் எல்லாவற்றின் வழியேயும் அவர்கள் கனவு காணும் தேசம் இது இல்லை என்பதில் தெளிவாய் இருக்கிறார்கள். அவர்கள் கனவு காணும் தேசமெல்லாம் இந்தியாவிற்கு வெளியே இருக்கிறது. தாய் மொழியின் வழியே எந்த ஒரு புத்தகத்தையும் வாசித்திராத, இந்த மண்ணின், மரபின் பின்புலம் அறியாத, இப்படியான இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த ஆங்கில புலவர்கள் தான் யூ நோ அமெரிக்கா அண்ட் ஐரோப்பா, ஆஸ்திரேலியா என பீற்றிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் அறிந்த வகையில் அந்தந்த தேசத்தில் “எல்லாமே” மிக ஒழுங்காய், சரியாய் இருக்கிறது. இங்கு எதுவுமே சரியில்லை. இப்படியான நிலையில் இவர்களின் தேசப்பற்று என்பது சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டுமே வந்து போகும் புல்லரிப்புகளில் ஒன்று. மற்றபடி அது சொரிந்து முடித்தவுடன் காணாமல் போய் விடும், இவர்களுக்கு என்றைக்குத் தன் தாய் மொழியின் மீதான அலட்சியம் காணாமல் போகிறதோ அன்றைக்கு தான் வாழும் நிலத்தின் மீது கவனம் குவியும், என்று அந்த கவனம் குவிகிறதோ அன்றைக்கு இந்த தேசத்தின் மீது மரியாதை வரும், அது வரை………… மற்றபடி எப்பொழுதும் போல் சுதந்திர தின நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி.

பின் குறிப்பு :
மேலே சொல்லியுள்ள லட்சணத்தில், தேசிய கொடி வேறு வீட்டுக்கு வீடு ஏற்றச் சொல்லி பிரச்சாரம் தூள் பறக்கிறது, அதே போல் விற்பனையும் அனல் பறக்கிறது, சுதந்திர தினம் எல்லாம் முடிந்த பிறகு விற்பனையான தேசியக் கொடிகளின் நிலை என்னவாக இருக்கும் என நினைத்தால் தான் சின்னதாக அடி வயிறு கலங்குகிறது…….

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916