வாழ்ந்து பார்த்த தருணம்…178

உன்மத்த உரைகல்…

முன்னெச்சரிக்கை
முதல் எச்சரிக்கை இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க சாருவைப் பற்றியது. அதனால் சாருவைப் பிடிக்காது எனச் சொல்கிறவர்கள் தயவுசெய்து இதனைப் புறக்கணித்தல் நலம். இரண்டாவது எச்சரிக்கை, இந்தக் கட்டுரை மிக, மிக நீளமானது. தங்களின் நேரத்தை வாசித்து வீணாக்க விரும்பாத விற்பனர்கள், உங்களின் நேரத்தை காத்து, அடைகாத்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்கள் தொடரலாம்…

சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டவுடன், அவருக்கு வாழ்த்து அனுப்பிய பின் அது பற்றிய என்னுடைய எண்ணங்களை பகிர வேண்டும் எனத் தோன்றிக் கொண்டே இருந்தது. ஆனால் உடனடியாக எதுவும் எழுத வேண்டாம் என யோசித்தேன், காரணம், நான் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய ஆள், அதுவும் சாரு விஷயத்தில் அது இன்னமும் மோசம், அதனால் உடனடியாக எழுதுவது கண்டிப்பாக வெறுமனே வெறும் உணர்ச்சிக் குவியலாக மட்டுமே இருக்கும். மற்றபடி உருப்படியாக இருக்காது எனத் தோன்றியபடியால், சாருவை பற்றி எழுதப்படும், அதுவும் அவரே தன் இணைய பக்கத்திலும், முகநூலிலும் பகிரும் கட்டுரைகளை வாசித்துக் கொண்டே இருந்தேனே ஒழிய, எனக்குத் தோன்றியதை எழுதாமல் தள்ளி வைத்துக் கொண்டே இருந்தேன். காரணம், ஒரு விஷயத்தை எழுத வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், அது எனது எண்ணத்தின் வழியாக ஒரு வடிவத்துக்குள், அதுவும், எனக்குத் திருப்தியாக அமைய வேண்டும் என எதிர்பார்ப்பேன். அப்படி ஒரு முழுமைக்காக எழுத வேண்டிய விஷயங்களை பத்து இருபது முறைகளுக்கு மேல் ஏனும், எனக்குத் திருப்தி வரும் வரை மனதுக்குள் எழுதிப் பார்த்தபடியே இருப்பேன். அந்த முழுமைக்காக எழுதுவதை தள்ளி வைத்துவிட்டு, சாரு பதிவேற்றும் கட்டுரைகள் மற்றும் முகநூலில் விஷ்ணுபுரம் விருதுக்காக சாருவை திட்டி, நக்கலடித்து பகிரப்படும் கட்டுரைகள் மற்றும் காணொளிகளை பார்த்தபடியே இருந்தேன். இப்படி போய்க் கொண்டிருக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருக்கையில், அலைப்பேசியில் அராத்துவின் விசித்திர வீரியன் கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். வாசித்துக் கொண்டிருக்கும் போதே இடையிடையே உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தேன். நான் இப்படி பல்வேறு உணர்வுகளோடு அலைப்பேசியில் எதையோ வாசித்துக் கொண்டிருப்பதை, அன்றைக்கு என் வீட்டுக்கு வந்திருந்த என்னுடைய தங்கை கவனித்தபடி இருந்துவிட்டு, அப்படி என்னத்தடா வாசிக்கிற எனக் கேட்டாள், இரு உனக்கும் அனுப்புறேன் வாசித்துவிட்டு சொல்லு எனச் சொல்லி, அவளுக்கும் வாட்ஸப்பில் அந்தக் கட்டுரையைப் பகிர்ந்தேன், சாருவை பற்றி அராத்து எழுதியிருந்ததை தங்கைக்கு பகிர்ந்திருக்கிறேன் குறீயீடு.

சாருவைப் பற்றி விஷ்ணுபுரம் விருதுக்கு பின்னாக நான் வாசித்த கட்டுரைகளில் மிக முக்கியமானதாக எனக்குத் தோன்றிய கட்டுரைகள் மூன்று. அதில் இரண்டு கட்டுரைகள் அராத்துடையது மற்றொன்று காயத்ரியுடையது. மொத்தமாக மூன்று கட்டுரைகளில் இருந்தும் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை ஒட்டி எனக்கும் சில கருத்துக்கள் இருப்பதால், அதனைச் சொல்லிவிடலாம் என்பதற்காகத் தான் இந்தக் கட்டுரை. முதலில் காயத்ரி கட்டுரையின் பின்னனியில் இருந்து. சாருவை நீங்கள் வாசித்துப் புரிந்து உள்வாங்க வேண்டுமெனில் எனச் சாருவே சொல்லியிருக்கிறார் என ஒரு நீண்ட எழுத்தாளர்களில் பட்டியல் ஒன்றினைத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அப்படி அவர் குறிப்பிட்டுள்ள எந்த எழுத்தாளர்களையும் நான் வாசித்ததில்லை. அந்தப் பக்கம் தலைவைத்தும் படுத்ததில்லை. காரணம் ஒன்று அவர் குறிப்பிட்டுள்ள அனைத்து எழுத்தாளர்களும் இந்தியாவுக்கு வெளியே அதுவும் பெரும்பாலும் பிரெஞ்சு எழுத்தாளர்கள். கண்டிப்பாக வாய்ப்பேயில்லை, இரண்டாவது ஆங்கில மொழிபெயர்ப்பிலாவது வாசிக்கலாம் என்றாலும், அதற்கும் வழியில்லை. காரணம் என்னுடைய ஆங்கிலப் புலமையின் லட்சணம் அப்படியானது. இருந்தாலும் இவர்களை எல்லாம் வாசித்தால் தான் சாருவின் எழுத்தை புரிந்து கொள்ள முடியுமா எனக் கேட்டால், என்னளவில் கண்டிப்பாக இல்லை என்பது தான் என்னுடைய நேரடியான பதில். சாருவைப் புரிந்து கொள்ள எனக்கு ஒரே ஒருவர் மட்டுமே போதுமானதாக இருந்தார். அவர் பெயர் ஓஷோ. சாருவிடமே பல முறை அவரை ஓஷோவோடு ஒப்பிட்டுக் கேள்வி கேட்டிருக்கிறார்கள், அப்படி ஒரு முறை தன் இணையப் பக்கத்தில் சாரு எழுதியிருந்த ஒருக் கட்டுரையில், என்னை ஓஷோவோடு ஒப்பிடுகிறார்கள், ஆனால், எனக்கோ ஒஷோவைப் பார்த்தால் என் நிழலைப் போலத் தான் தோன்றுகிறார் எனக் குறிப்பிடிருந்ததாக ஞாபகம். சாரு அப்படித் தான் குறிப்பிட்டிருந்தாரா என்பது முழுமையாக நினைவில் இல்லை. ஆனால் என்னளவில் சாருவை எளிதில் புரிந்து கொள்ள, உள்வாங்க சாருவை வாசிப்பதற்கு முன், நான் வாசித்திருந்த ஓஷோவின் புத்தகங்களே போதுமானதாக இருந்தது. அதில் இரண்டு புத்தகங்கள் முக்கியமானவை ஒன்று காமத்திலிருந்து கடவுளுக்கு மற்றொன்று ஓஷோ மிகவும் தவறாகக் கருதப்படும் மனிதர்.

என்னுடைய வாசிப்பின் தொடக்க நாட்களில் எனக்கு ஓஷோவை அறிமுகப் படுத்தியவன் ஒரு முக்கியமான நண்பன், அவன் பெயர் வீரக்குமார். என்னளவில் ஒரு காலகட்டம் வரை என்னுடைய எல்லாவற்றையும் பேசக் கூடிய நண்பன் அவன் மட்டுமே. எல்லாவற்றையும் என்பது மிக, மிக முக்கியமானது. அவனுடன் ஓஷோ சம்பந்தமாக மிக வெளிப்படையாக பேசிய பல விஷயங்கள் தான் பின்னாட்களில் சாருவை வாசிக்கையில் எளிதில் புரிந்துகொள்ள எனக்கு ஏதுவாக இருந்தது. இதனை எல்லாம் தாண்டி, பொதுவாக எண்ணங்களால் ஆனவன் தான் மனிதன் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில், ஒரு மனிதனுக்கு தோன்றும் எல்லாவிதமான எண்ணங்களைப் பற்றியும் பொது வெளியில் பேசும் தைரியம் எல்லோருக்கும் இருக்கிறதா எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஆனாலும் எண்ணங்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றன, அதனைத் தடுக்கவும் முடியவில்லை எனும் போது, அப்படித் தோன்றும் எண்ணங்களின் வழியே உணரும் சந்தேகங்களை எங்கே, யாரிடம், எப்படிக் கேட்பது என்கிற கேள்வி இங்கே மிக, மிக முக்கியமானது என்றால், அதைவிட முக்கியமானது அந்த எண்ணங்கள் யாவும் சரியானவையா என்கிற ஒருவிதமான பயம் கலந்த மன அழுத்தும் மிக, மிக மோசமானது. ஆக ஒரு மனிதனுக்கு தோன்றும் எண்ணங்களின் கலவைகளே அவனை கலவரப்படுத்தும் நிலையில். அதெல்லாம் ஒன்றுமில்லை எல்லோருக்குமே இப்படியான எண்ணங்கள் தோன்றுவது உண்டு. அது ஒன்றும் மோசமான குற்றமில்லை. அந்த எண்ணங்களை நீ எப்படிக் கையாள்கிறாய் என்பதில் தான் எல்லாம் இருக்கிறது என்கிற மிக, மிக முக்கியமான மனநிலைக்கு என்னை போன்றவர்களை நகர்த்தியவர் சாரு. அவரின் எழுத்துக்களை வாசித்த பிறகே பல நேரங்களில் கொந்தளிப்பான மனநிலையில் இருந்து சமநிலைக்கு வந்திருக்கிறேன், இத்தனைக்கும் முன்னரெல்லாம் அவரின் புத்தகங்களை அதிகமாக வாசித்தது இல்லை, அவரின் இணையப் பக்க எழுத்துக்கள் தான் என்னை பல நேரங்களில் இந்த வாழ்வின் மீதான மிகச் சிறப்பானதொரு புரிதலை ஏற்படுத்தி சமநிலையில் வைத்திருந்த்திருக்கிறது. அந்தச் சமநிலை இல்லையெனில் என்னையே நான் குற்றவாளியாகப் பார்க்கும் மனநிலைக்கு எப்பொழுதோ போயிருப்பேன். ஆனால் சாரு என்னையே என்னை நேசிக்கக் கற்றுக் கொடுத்தார், கொடுத்துக் கொண்டும் இருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட மிக, மிக முக்கியமானதாக நான் கருதுவது எனக்கென ஒரு பிம்பம் என்கிற ஒன்றினை உருவாக்கி, அந்த பிம்பத்திற்காக இந்த சமூகத்தின் முன் நடிக்காமல் உண்மையாக இருப்பதில் இருக்கும் ருசியை மிக அழமாக உணர்த்தியிருக்கிறார்.

அடுத்தாக அராத்துவின் எழுத்தில் சாருவை பற்றி குறிப்பிட்டதில், மிக முக்கியமாக, மற்றவர்களை எக்காரணத்தை கொண்டும் தொந்தரவு செய்யவே விரும்பாத அவரின் எளிமை. அவர் எழுத்தின் வழியே வெளியே அறியப்படும் சாருவே வேறு. நான் திரைத்துறையில் இருந்த காலத்தில் இருந்து, இன்று வரை அவரைப் பற்றி அடிக்கப்படும் கேலிக்கள் அத்தனையும் கேட்டே வந்திருக்கிறேன். அப்படிக் கேலி பேசுபவர்களை பார்க்கையில் அவர்களின் மீது எனக்குப் பரிதாபமே மிஞ்சும். அதுவும் சாரு நண்பர் என என் பெயரை குறிப்பிட்ட பிறகு என் முகத்துக்கு நேராகவே நக்கல் அடித்தவர்கள் உண்டு. இவை அத்தனையையும் என் புறங்கையால் அலட்சியனாகத் தள்ளிவிடுவேன். இவையெல்லாவற்றிக்கும் மேலாக சாருவின் எளிமையை தனிப்பட்ட முறையில் உணர்ந்தவன் என்கிற வகையில் அராத்து எழுதியிருந்த இரண்டு கட்டுரைகளையும் வாசிக்கும் போது என்னையும் அவரின் எழுத்துக்கு ஊடாகவே பொருத்தியேப் பயணித்தேன். அந்தப் பயணம் மிக அட்டகாசமாய் இருந்தது. இப்பொழுது எனக்கு நடந்ததைப் பார்க்கலாம். நான் எழுத ஆரம்பித்து 100 கட்டுரைகளைத் தாண்டிய பிறகு அடுத்து ஒரு 10 கட்டுரைகளாவது என் இசை ரசனையைப் பற்றி எழுத வேண்டும் என முடிவெடுத்து. சர்வதேச அளவில் நடைபெறும் குரல் தேர்வு போட்டிகளின் காணொளிகளில் இருந்து என் மனதுக்கு பிடித்தமான இசை கோர்வையினைக் கேட்டு அதனைப் பற்றி ஒரு பத்து கட்டுரைகள் எழுதியிருந்தேன். அது முடிந்து சில நாட்கள் கழித்து சாரு தனக்கு பிடித்தமான ஒரு இசைக் கோர்வையினை பற்றி எழுதி, அதனைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனை வாசிக்கும் போது தான் கவனித்தேன், அதே இசை கோர்வையினை பற்றி நானும் ஏதோ எழுதியிருந்தேன். எனக்கு உடனே ஒரு நப்பாசை, என்னுடைய கட்டுரையை அவருக்கு அனுப்பினால் நலம், அதனை அவர் வாசித்துவிட்டால் இன்னும் நலம், இதை எல்லாம் தாண்டி ஒரு வேளை அவர் வாசித்துவிட்டு அவரின் கருத்தை சொல்லிவிட்டால், இந்த ஜென்மத்திற்கு அதுவே போதும் என பலவகைகளிலும் யோசித்து என் கட்டுரைக்கான முகநூல் பக்கத்தின் இணைய சொடுக்கினை எடுத்து, மிக பெரும் தயக்கத்தோடும், பயத்தோடும், அவர் பகிர்ந்திருந்த முகநூல் பக்கத்தின் பின்னூட்டத்தில் போய் அனுப்பிவிட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், அதன் பின் அனுப்பியதே மறந்துவிட்டேன், காரணம் மேலே சொல்லியுள்ள எதுவும் நடந்தால் நலம் என யோசித்தேனே தவிர, நடக்கும் என நம்பவெல்லாம் இல்லை. ஆனால் நடந்த கதையே வேறு. நான் அனுப்பிய அன்று மாலையிலோ, அடுத்த நாள் காலையிலோ என்னுடைய முகநூல் பக்கத்து குறுஞ்செய்தி பெட்டியில் என்னை அழைக்க முடியுமா, என் நம்பர் என சாருவின் அலைப்பேசி எண் அதில் இருந்தது. இதனை எழுதும் போது கூட அவர் அனுப்பியிருந்ததை ஒரு முறை எடுத்துப் பார்த்துவிட்டே இதனை எழுதுகிறேன், முதலில் அந்தச் செய்தியை பார்க்கும் போது என்ன மனநிலையில் என் கண்களில் நீர் வழிந்ததோ, அதே போல் தான் இப்பொழுது பார்க்கும் போதும் நீர் கண்களுக்குள் தழும்புகிறது.

உண்மையில் நான் எழுத ஆரம்பித்து சரியாக கணக்கிட்டால் மூன்று வருடங்கள் கூட முழுமையாக முடியவில்லை. எதோ எனக்குத் தோன்றியதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்கையில் நான் என்றும் பிரமிப்போடு அண்ணாந்து பார்க்கும் சாரு போன்ற மிகப் பெரும் எழுத்தாளுமை என்னை அழைக்க முடியுமா என யோசித்துக் கொண்டிருந்த அதே நேரம் தன்னுடைய அலைப்பேசி எண்ணை சாரு எனக்கு அனுப்பியதெல்லாம் கனவா நினைவா என காலையிலிருந்து யோசித்து, யோசித்து ஒரு நிலைக்கு வரவே எனக்கு மாலை ஆகிவிட்டது. ஆம் காலை அவர் பகிர்ந்திருந்த எண்ணுக்கு மாலை தான் அழைத்தேன், அதுவும் மிகப் பெரும் தயக்கத்தோடு, அதுவும் அவரின் முகநூல் பக்கத்து குறுசெய்தி பெட்டிக்கு தகவல் அனுப்பி மீண்டும் ஒரு முறை உறுதி செய்த பிறகே அழைத்தேன். நான் பேசிய முதல் வார்த்தையே, சார் உணர்ச்சிவசத்துல ஏதாவது உளறிட்டேன்னா மன்னிச்சிடுங்க சார் என்றேன், அவர் மென்மையாக சிரித்துவிட்டு அதெல்லாம் ஒன்றுமில்லை வெங்கட் எனச் சொல்லிவிட்டு, மிக எளிமையாக பேச ஆரம்பித்தார். யோசித்துப் பார்த்தால் அவர் எழுத்திற்கு முன் நானெல்லாம் கொசு கூட கிடையாது, தூசு. அப்படியிருக்கையில் அன்று அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்வில் மறக்கவே முடியாதவை. அந்த இசைக் கோர்வை கட்டுரையை பற்றி நல்லா எழுதியிருக்கீங்க வெங்கட் எனச் சொல்லிவிட்டு, அதிலுள்ள நிறை குறைகளைச் சொன்னார், உண்மையை சொல்ல வேண்டுமெனில் குறையே சொல்லவில்லை, முழுவதுமாக பாராட்ட மட்டுமே செய்தார். உண்மையில் எனக்கு அந்த நேரம் எழுத்தின் மீதான பொறுப்பு உணர்வு மிக அதிகமாகியது. அதன் பின் கொஞ்சம் ஒற்றுப் பிழை இருக்கு அத மட்டும் சரி பண்ணுங்க என்றார், நான் பரிதாபமாக முழித்தபடி, அவரிடமே ஒற்றுப் பிழைன்னா என்ன சார் எனக் கேட்டேன். இதே இடத்தில் வேறு ஏதாவது ஒருவராக இருந்தால் என்ன நடந்திருக்கும் என இப்பொழுதும் யோசிக்கிறேன். ஆனால் சாரு ஒற்றுப் பிழைகளைப் பற்றி ஒரு சின்ன விளக்கத்தைக் கொடுத்தோடு நிற்கவில்லை, யூடுபில் ஒரு காணொளியை காணும் படிச் சொன்னார், அவர் சொல்லியது என் மண்டைக்குள் ஏறவில்லை, அதனால், என்ன சார், எப்படி போட்டு தேடச் சொன்னீங்க என மீண்டும் ஒரு முறைக் கேட்டேன், இவனுக்கு நாம சொன்னது மண்டக்குள்ள ஏறவில்லை என அவருக்குத் தெரிந்துவிட்டது. இல்ல நானே உங்களுக்கு வாட்ஸப்புல அனுப்புறேன் என்றார். சரி என சாருவிடம் பேசிவிட்டு அலைப்பேசியை வைத்துவிட்டேன். ஆனால், அதன்பின் நடந்தது தான் உச்சம்.

எளிமை என்பது சொல் அல்ல செயல். அதனை என் வாழ்நாளில் இதனை விடச் சிறப்பாக வேறு யாராலும் உணர்த்த முடியுமா எனத் தெரியவில்லை. சாருவிடம் பேசிய அடுத்த நாள் எனக்கு அது நிகழ்ந்தது. முந்தய நாள் தான் ஒற்றுப் பிழைப்பற்றி பேசியிருந்தார், அதோடு ஒற்றுப் பிழையில்லாமல் எப்படி எழுத வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் காணொளி ஒன்றினையும் சாருவே தேடி எடுத்து பகிர்கிறேன் எனச் சொல்லியும் இருந்தார், இதனையெல்லாம் தாண்டி அடுத்த நாள் எனக்கொரு மின்னஞ்சல் சாருவிடம் இருந்து வந்திருந்தது. அந்த மின்னஞ்சலில் இருந்து சில வார்த்தைகள். சில ஒற்றுப் பிழைகளைக் குறிப்பிட்டிருக்கிறேன், நான் லிங்க்கை அனுப்புகிறேன். இருந்தாலும் உங்களுக்கு சில குறிப்புகள் கீழே:ஒற்று சேர்த்ததை கறுப்பாக மாற்றி அடிக்கோடும் போட்டிருக்கிறேன். இரண்டு பத்திகளுக்கு மட்டுமே செய்திருக்கிறேன். பிழைகளைப் பார்த்து ஒன்றும் நினைக்க வேண்டாம். இவ்வளவையும் சொல்லிவிட்டு நாயகன் திரைப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சியினைப் பற்றி என் முக நூல் பகிர்ந்திருந்த கட்டுரை ஒன்றின் இரண்டு பத்திகளை எடுத்து அவரே பிழைத் திருத்தம் செய்து அனுப்பியிருந்தார். சரியாகச் சொல்வதானால் என்னுடைய 109வது கட்டுரை அது. அவர் பிழைத்திருத்தம் செய்திருந்ததைத் தாண்டி, அவர் எழுதியிருந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் மேலே குறிப்பிடவில்லை. சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். இதனை எழுதும் போது கூட அந்த மின்னஞ்சலை தேடி வாசிக்கையில் உணர்ச்சி வசப்படாமல் என்னால் வாசிக்க இயவில்லை. இதைவிட எளிமையாகவெல்லாம் இருக்க முடியுமா சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. சாருவின் கண்களில் என் எழுத்துப் பட்டால் போதுமானது என்று யோசித்த ஒருவனுக்கு இதைவிட வேறு ஏதேனும் வேண்டுமா என்ன, விஷயம் இத்தோடு நிற்கவில்லை. சாரு என்னிடம் பேசியதிலிருந்து முகநூலில் எழுதி பதிவேற்றுவதை உடனடியாக அவருக்கும் அனுப்பி விடுவதை வழக்கமாக வைத்திருந்தேன், அப்படி போய்க் கொண்டிருக்கையில் தீடிரென ஒரு நாள் என்னுடைய அலைப்பேசியின் வாட்ஸப்பிற்கு சம்பந்தமில்லாத எண்களில் இருந்தெல்லாம் அப்பொழுது எழுதி பதிவேற்றியிருந்த கட்டுரையைப் பற்றி பாராட்டி குறுஞ்செய்தி வந்தபடியிருந்தது. அப்படி வந்த ஒரு குறுஞ்செய்தியில், உங்களின் கட்டுரையை சாருவின் இணையதளத்தில் வாசித்தேன் என குறிப்பிட்டிருந்தது, அதுவரை அதனை நான் கவனிக்கவில்லை. உடனே கையில் இருந்த அலைப்பேசியில் சாருவின் இணையதளத்திற்கு போனால் என்னுடைய கட்டுரையை பகிர்ந்ததோடு நிற்காமல், நண்பர் ந. வெங்கடசுப்ரமணியன் முகநூலில் தொடர்ந்து இது போல் எழுதுகிறார். என என்னைப் பற்றியும், எழுத்தைப் பற்றியும் சாரு எழுதியிருந்ததை பார்த்தவுடன் அழுதபடியே அப்பொழுது நான் உணர்ந்த மனநிலையைச் சொல்ல ஒரு பதிவு எழுதியதெல்லாம் நினைவுகளில் நின்று கொண்டே இருக்கிறது. உண்மையில் அன்று தான் எனக்கு உன்மத்ததின் உண்மையான அர்த்தம் விளங்கியது. பிறிதொரு முறை ஒற்றுப் பிழை விடுவதைப் பற்றி இனிமேல் யாருமே ஒற்று போடாதீங்க என கோபமாக எழுதியிருந்தார், அப்பொழுது அதன் பின்னூட்டத்தில் என்னுடைய எழுத்தில் உள்ள பிழைகளை பற்றி கேட்ட பொழுது 90சதவீதம் குறைந்துவிட்டது வெங்கட் எனச் சொல்லியிருந்தார். என்னுடைய எழுத்துக்களை சாரு வாசிக்கிறார் என்கிற பொறுப்பே உயிர்ப்போடு என்னை மிகச் சிறப்பாக பிழையின்றி எழுத்தத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் சாரு சொல்லியவற்றை எல்லாம் கேட்டு நடக்கிறேனா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்னதில் முக்கியமானது தொடர்ந்து எழுது என்பது ஆனால் அதனைச் செய்வதில்லை. இதோ இந்த கட்டுரைக்கும் கடந்த கட்டுரைக்குமான இடைவெளியே அதற்கு சாட்சி.

கடைசியாக
சாரு யாரையாவது திட்டி எழுதும் போதெல்லாம் எனக்கு உள்ளுக்குள் பகிரென்றிருக்கும், வினீத்தை பற்றி எழுதிய போதெல்லாம் எனக்கு அடி வயிறு கலங்கியது என்னவோ, மறுக்க முடியாத உண்மை. ஆனால், அந்த பயம் என்னுடைய புரிதலற்ற தன்மையினால் வந்தது என போகப் போக விளங்கியவுடன். சாரு என்னை எதைக் கொண்டு அடித்தாலும், திட்டினாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் என ஆழமாக மனதுக்குள் பதிந்துவிட்டது. காரணம் மிக, மிக எளிமையானது சாரு திட்டுகிறார் என்றால் கண்டிப்பாக அதன் பின்னால் என்னுடைய தவறு ஏதேனும் இருக்கும். அதனை நாம் உணராமல் இருக்கலாம் அல்லது உணர்ந்தே கூட இருக்கலாம். அதனால் அதனை உணர்ந்து கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் தானே ஒழியே வேறு எதுவும் இல்லை. அதனால் தான் ஆராத்து சொல்வதைப் போல் உங்கள் புத்தியைத் திறந்த ஒருவன், நேரில் சந்திக்கையில் ஒரு அறை கொடுத்தால் தான் என்ன, வாங்கிக் கொள்ள வேண்டியது தானே? என்று எழுதியிருந்தார். ஆமாம் வாங்கிக் கொள்வதில் தப்பேயில்லை என்பது என்னுடைய பதில். சாரு என்னிடம் சொன்னதைக் கேட்ட அதே சமயம், கேட்காமல் விட்ட விஷயங்களும் நிறைய உண்டு. அவர் என்னிடம் சொன்னதில் இன்னுமொரு முக்கியமான விஷயம், நேரம் இருக்கும் போது அழையுங்கள் வெங்கட் எனச் சொல்லியிருந்தார். இதுவரை ஒரு முறை கூட அவரை அழைத்துப் பேசியதில்லை. காரணம் மிக, மிக எளிமையானது, சாருவிடம் அவரின் நேரத்தை வீணாக்காமல் என்ன பேச வேண்டும் என்கிற தெளிவு ரொம்ப நாட்களாக என்னிடமில்லை. அதன் காரணமாகவே எக்காரணத்தை கொண்டும் அவர் நேரத்தை திருடும் உரிமை எனக்கு இல்லை என முடிவு செய்து பேசவில்லை. ராஸலீலாவெல்லாம் வாசிக்க ஆரம்பித்த பிறகு, அந்த மனநிலை இன்னும் அதிகமாகிய அதே நேரம், ஒரு வேளை சாருவிடம் நேரில் பேசக் கூடிய வாய்ப்புக் கிடைத்தால் என்ன பேசலாம் என்கிற தெளிவும் யோசித்து, யோசித்து ஓரளவுக்கு வந்திருப்பதாக நம்புகிறேன். அப்படி நான் பேச நினைக்கும் விஷயங்கள் கண்டிப்பாக அவரின் நேரத்தை வீணடிக்கும் ஒன்றாக ஆகிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறேன். இம்மாதம் கூட முடிந்த 17ம் (செப்டம்பர் 17) தேதி பாண்டிச்சேரியில் வாசகர் சந்திப்பினை சாரு ஏற்பாடு செய்திருந்தார். கண்டிப்பாக போய்விட வேண்டும் என நினைத்தேன், இரண்டு விஷங்கள் காலை வாரிவிட்டன, முதலில் நான் இருக்கும் என்னுடைய பணிச்சூழல். இரண்டாவது பொருளாதாரம் சார்ந்த திட்டமிடலிலும் கொஞ்சம் இடித்தது. இந்த இரண்டு காரணங்களால் போக முடியவில்லை. அடுத்த முறை கண்டிப்பாகப் போக வேண்டும், பார்க்கலாம். இந்தக் கட்டுரையில் சாருவை பற்றி சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லிவிட்டேனா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. இதுவே மிக நீளமாகிவிட்டபடியால் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் பேசலாம். அதுவும் போக அடுத்தக் கட்டுரையும் சாருவின் புத்தகத்தை பற்றியதே. தலைப்பு ஆட்டத்தில் விதி. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916