சில இட்லிகளும் ஓர் பின்னிரவும்…
முடிந்த செப்டம்பர் இருபத்தி மூன்றாம் தேதியிலிருந்து அக்டோபர் மூன்றாம் தேதி வரை பத்து நாட்கள் புத்தகக் கண்காட்சி நடந்து முடிந்தது. தொடக்க நாட்களில் என் மனதிற்குள்ளாகவே என்னுடைய மன சமாதானத்திற்காக, எல்லாவிதமான புத்தகங்களும் வர மூன்று நாட்கள் ஆகும், அதனால் மூன்று நாட்கள் கழிந்த பிறகு போகலாம் என நினைத்திருந்தேன். ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது. அடுத்தடுத்த நாட்களில் கடுமையான பணிச்சுமை, சூழல் காரணமாக அந்தப் பக்கமே போக முடியவில்லை, கடைசி இரண்டு நாட்கள் நினைத்தாலும் போக முடியாது என்கிற அளவுக்கான பணிகள் கண்முன்னே இருந்தன. அதனால் புத்தகக் கண்காட்சி முடிவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக போக வேண்டும் என யோசித்து அதுவும் மாலை தாமதமாகத் தான் போக முடிந்தது. அப்படிப் போகப் போகும் கடைசி நேரத்தில் என் தங்கையிடம் கேட்டேன் நீ வருகிறாயா என, அதற்கு இரண்டு காரணங்கள், கடைசி நேர திட்டமிடலினால் வேறு வழித் தெரியவில்லை, எனக்கும் குறிப்பிட்ட சில புத்தகங்களை கண்டிப்பாக வாங்க வேண்டியிருந்தது. போகும் வழியில் கூப்பிடும் தூரத்தில் அவள் மட்டுமே இருந்தாள், நான் கூப்பிட்டால் மறுக்க வாய்ப்பேயில்லை எனத் தெரியும். கூப்பிட்டுக் கொண்டு போனேன் என்பதை விட இழுத்துக் கொண்டு போனேன் என்பது தான் மிகச் சரி. கண்காட்சி நடக்கும் இடத்திற்குள் நுழைந்து, வாகனத்தை எல்லாம் நிறுத்திவிட்டு, பிரதான அரங்கின் நுழைவாயிலுக்குள் நுழையும் நேரத்தில் ஒரு அலைப்பேசி அழைப்பு, எடுத்தால், அடுத்த நாள் நிகழும் ஒரு முக்கியமான நிகழ்வுக்காக இன்றே முடித்தாக வேண்டிய ஒரு முக்கியமான பணியில் தொழிநுட்பச் சிக்கல் என்ன செய்யலாம் எனக் கேட்டுத் தான் அந்த அலைப்பேசி அழைப்பு. இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என நினைத்துக் கொண்டு, அரங்கின் நுழைவு வாசலில் நின்று கொண்டே, அந்தச் சிக்கலை களைவதற்காக, ஒவ்வொரு நபர்களாக என்னுடைய அலைப்பேசியில் அழைத்து அங்கும், இங்கும் நடந்தபடி பேசிக் கொண்டே இருக்கிறேன். பேசிக் கொண்டே இருந்தேனே ஒழிய, அந்தச் சிக்கல் தீர்ந்தபாடில்லை. என்னால் இழுத்து வரப்பட்ட தங்கை என்னையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் பசி தெரிந்தது. அப்படியே பேசிக் கொண்டிருந்த என் அருகில் வந்து ஒரு காபி சாப்பிட்டு உள்ளே போகலாமா எனக் கேட்டாள். சிக்கலை தீர்க்க முடியாத கோபம் உள்ளிருந்தாலும் சரி போகலாம் எனச் சொல்லிவிட்டு, அலைப்பேசியில் பேசிக் கொண்டே முன்னால் இருக்கும் கடையை நோக்கி வேகமாக நடந்து போனேன். பின்னால் தங்கை வருகிறாளா என்று கூட கவனிக்கவில்லை.
அந்த நேரம், மனம் இரண்டு விதமாக வேலை செய்து கொண்டிருந்தது. ஒன்று சீக்கிரம் இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும், இரண்டு குறைவான நேரமே இருக்கிறது அதனால் ஏற்கனவே யோசித்து வைத்துள்ள முக்கியமானப் புத்தகங்களை அரங்குகள் அடைக்கும் நேரத்திற்குள் கண்டிப்பாக போய் வாங்கி விட வேண்டும் என மனம் இரண்டையுமே யோசித்துக் கொண்டிருந்தது. அதே நேரம் சிக்கல் தீர்வதற்கான வழி தெரிந்து சிக்கல் சரியானது. அதற்குள் வடை, காபி வரவழைத்து சாப்பிட்டு, குடித்து முடித்திருந்தோம். சாப்பிடுவதையும், குடிப்பதையும் அவள் சரியாகத் தான் செய்தாள். நான் பேசிக் கொண்டே இருந்ததில் ஏதோ சாப்பிட்டுக் கொண்டே குடித்தேன் அவ்வளவே. இதெல்லாம் முடியவே நேரமாகி விட்டபடியால். தங்கையை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு அரங்கிற்குள் ஓடினேன். உள்ளே நுழைந்ததும் எங்கிருந்து தொடங்குவது என்கிற குழப்பத்திலிருந்து ஒரு முடிவுக்கு வந்து, இருவரும் நடக்கத் தொடங்கினோம். ஒவ்வொரு அரங்கிற்குள்ளும் உள்ளே நுழைந்து நான் யோசித்து வைத்துள்ள புத்தகங்கள் அங்கு இருக்கிறதா எனத் தேடத் தொடங்குவேன். என்னுடன் வந்த என் தங்கை அப்படியில்லை, ஒவ்வொரு அரங்கிற்குள் நுழையும் போதும் அங்கிருக்கும் ஒவ்வொரு புத்தகத்தையுமே பொறுமையாய் பார்த்துக் கொண்டிருப்பாள். என்னுடைய தேடல் ஒவ்வொரு அரங்கிற்குள்ளும் முடிந்ததும், அவள் என்னப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், எந்த புத்தகத்தை கைகளில் எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறாள் என்றெல்லாம் யோசிக்காமல். இங்க இல்ல வா, அடுத்த அரங்கிற்கு போகலாம் என அவள் பார்த்து, வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களை அவள் கைகளில் இருந்து பிடுங்கி அங்கே வைத்து விட்டு, அடுத்த அரங்கிற்கு இழுத்துக் கொண்டு ஓடுவேன், அவள் எதுவும் பேசாமல் என் இழுப்புக்கு வந்து விடுவாள். இப்படி இழுத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கையில். ஒரு குறிப்பிட்ட அரங்கில் நான் தேடி வந்த சில புத்தகங்கள் இருந்தன. வாங்கி அவளிடம் நீட்டினேன் கொடுத்ததை வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டால். வரும் போதே அவளுடைய அலுவலகத்தில், என்னுடைய முதுகு சுமையான மடிக்கணினியை அங்கேயே வைத்துவிட்டபடியால், இரண்டு பேர் கையிலும் எந்த பையும் இல்லை. வாங்கிய புத்தகங்களை அவளிடம் கொடுத்து விட்டு மீண்டும் ஓட்டம், தேடல். அரங்குகளை அடைக்க இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந்தது. யோசித்திருந்த எல்லாவற்றையும் வாங்கா விட்டாலும் பரவாயில்லை, குறிப்பிட்ட சில புத்தகங்களை வாங்கியே தீர வேண்டும் என ஓடிக் கொண்டிருந்தேன். எல்லாம் முடிந்து அரங்குகள் அடைக்க ஆரம்பித்த பிறகு தான் இருவரும் வெளியே வந்தோம். அப்பாடா நினைச்சத வாங்கிவிட்டேன் என சொல்லிக் கொண்டே தங்கையை நோக்கி திரும்பினேன். அவள் கைகளில் சுமையை வைத்தபடி பசிக்குதுடா என்றாள், அப்பொழுது தான் கவனித்தேன், அவளுக்காக ஒரு புத்தகம் கூட வாங்கவில்லை, ஒரு புத்தகத்தை கூட அவளை சரியாகப் பார்க்க, வாசிக்க விடவில்லை. இவ்வளவு நடந்தும் அதைப் பற்றி அவள் ஒரு வார்த்தை பேசவில்லை. அதே நேரம், அன்று என்னுடன் வேறு யாராவது வந்திருந்தால் நீ எப்படியோ வாங்கிட்டு வா என என்னை புத்தக அரங்கிலேயே விட்டுவிட்டு போய் இருப்பார்கள். ஆனால் இதையெல்லாம் யோசித்து மணியைப் பார்த்தால் இரவு மணி வேறு ஒன்பதரைக்கு மேல் ஆகியிருந்தது. அவளிடம் சுமையை வாங்கிவிட்டு, வா சாப்பிடப் போகலாம் எனச் சொல்லிவிட்டு நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை நோக்கி நடந்தோம்.
வாகனத்தில் வரும் போதே பின்னிரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு ரோட்டோர கடையில் வண்டியை நிறுத்தினேன். அவளிடம் உன்னை படுத்தி எடுத்துடேன்ல என்றேன். அவளுக்கு இருந்த பசியில். அடேய் நீ பொங்கினது போதும் எனக்கு பசி உயிர் போகுது மொத தோசைய சொல்லு என்றால், வண்டிக்கடைக்காரரிடம் தோசையை போடச் சொல்லி விட்டு, அந்த தள்ளு வண்டி கடைக்குப் பின்னால் அடைக்கப்பட்டிருந்த பிரபலமான கடையின் வாசற் படிக்கட்டுகளில் தோசையின் வருகைக்காக போய் காத்திருக்க ஆரம்பித்தோம். தங்கையிடம் பசிக்குதுன்னு சொன்னேல்ல முதல்ல இட்லி சாப்பிடுறயா எனக் கேட்டேன். அவள் தோசை தக்காளி சட்னியின் உயிர் ரசிகை, அதனால் அந்த பசியிலும் என்னுடைய பரிந்துரையை அவள் நிராகரித்து விட்டாள். நான் மட்டும் இட்லியைக் கொடுங்கள் என வாங்கிக் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். இட்லியை சாப்பிட்டுக் கொண்டே அவளிடம் மன்னிச்சிடு கண்ணா என்றேன். ஆனால் அவள் அதை சட்டை செய்யவே இல்லை. அவள் பார்வை முழுவதும் தோசை கல்லின் மீதே இருந்தது. கல்லில் இருந்து எடுக்கப்பட்ட சூடான மொறு மொறுப்பான தோசை தக்காளிச் சட்னியுடன் அவளின் கரங்களுக்கு வந்ததும், அதனைப் பிட்டு இரண்டு வாய்கள் சாப்பிட்டு விட்டு இப்ப சொல்றா என்றாள். இல்ல ஒரு புத்தகமும் உனக்குன்னு வாங்கல, உன்னையும் உருப்படியா எதையும் பார்க்கவிடல என்றேன், அதான் நீ வாங்கியிருகேல்ல என்றாள், நான் எதுவும் பேசவில்லை. தோசை நல்லாயிருக்கா இன்னும் ஒன்று சொல்லவா என்றேன். சரி சொல்லு, ஆனா அத முழுசா சாப்பிட முடியலைன்னா மீதிய நீ தான் சாப்பிடணும் என்றாள், சரி சாப்பிடுறேன் எனச் சொல்லிவிட்டு, அந்த தள்ளுவண்டியில் தோசை ஊற்றிக் கொண்டிருந்த அக்காவிடம் இன்னொரு தோசை எனச் சொல்லிவிட்டு, அந்த அக்காவிடம் பேச்சுக் கொடுத்தேன், எத்தனை மணி வரைக்கும் அக்கா இந்த கடை இருக்கும் எனக் கேட்டேன், ராத்திரி எட்டு மணிக்கு வருவேன் தம்பி, நைட்டு இரண்டு மணி வரைக்கும் இருக்கும். ஒரு வேளை சீக்கிரம் வித்துப் போச்சுன்னா சீக்கிரமே வீட்டுக்குப் போயிருவோம், இல்லைன்னா இரவு இரண்டு மணி வரைக்கும் இருக்கும் என்றார். என்னடா இரண்டு மணி வரைக்கும் கடை இருந்தா இவங்க எப்ப தூங்குவாங்க எனச் சொல்லிக் கொண்டே தங்கை தனது இரண்டாவது தோசையை தக்காளி சட்னியுடன் தன் தட்டில் வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள். அதன்பின், வாங்கப்பட்ட புத்தகங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். முடிவில், மீதமிருந்தால் நீ தான் சாப்பிட வேண்டும் என்கிற தங்கையின் நிபந்தனையை ஏற்று அவள் தட்டில் பரிமாறப்பட்ட இரண்டாவது தோசை என் தட்டிற்கு வரவே இல்லை. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916