விளம்பரத்தின் வழியே பேன் பார்த்தல்…
சமீபத்தில் வீட்டில் உள்ளவர்கள் தொலைக்காட்சி பெட்டியில் பார்த்துகொண்டிருந்த நிகழ்ச்சிக்கு இடையில் வரும் ஒரு விளம்பரத்தை நான் அந்த அறையை கடக்கும் போது பார்த்தேன். அதில் மூன்று தலைமுறை பெண்கள் ஒருவர் மற்றொருவருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள், இதற்கு மேல் விளக்கப்போவதில்லை. அந்த விளம்பரம் உங்களின் கைபேசியின் செயலி வழியே உத்தரவிடும் உணவை உங்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு நிறுவனத்தின் விளம்பரம். முதல் விஷயம் வெளியில் தயாரிக்கப்படும் உணவின் தரம் என்பது 100% தரத்துடன் சமரசமற்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. இந்த லட்சணத்தில் இது போன்ற விளம்பரங்கள் நீங்கள் வீட்டில் சமைக்கவே வேண்டாம் என்ற மனநிலையை, நம்முடைய மூளைக்குள் மதிநுட்பமாக செலுத்துவதில், விதம் விதமாக யோசித்து விளம்பரப்படுத்துகிறார்கள்.
அது எந்த அளவு மதிநுட்பமாக யோசிக்கிறார்கள் என்றால், அந்த விளம்பரத்தில் பயன்படுத்தும் ஒரு சொல்லாடல் நாம் பல காலமாக பயன்படுத்தி வரும் நேர்மறை சிந்தனையுடன் கூடிய ஒரு அற்புதமான சொல்லாடல். அந்த சொல்லாடலை எடுத்துக்கொண்டு, அதில் எந்த வார்த்தை நேர்மறை சிந்தனையுடன் இருக்கிறதோ அதை மட்டும் மிகச்சரியாக கத்தரித்துவிட்டு. அவர்களுக்கு ஏற்றார் போல் மாற்றியிருக்கிறார்கள். நாம் நம் அம்மாவிடமோ இல்லை மற்ற பாசத்திற்குரிய சொந்தத்திடமோ பயன்படுத்தும் சொல்லாடல், அம்மா உங்க கையால புளியோதரை சமைத்து சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு என்பதை தான், இந்த விளம்பர நிறுவனம் அந்த சொல்லாடலை எடுத்துக்கொண்டு சமைத்து என்ற வார்த்தையை மட்டும் நறுக்கி எரிந்துவிட்டு உங்க கையால சாப்பிட்டு எத்தன நாள் ஆச்சு என்று மாற்றிவிட்டார்கள்.
நாமும் அதன் பின்னால் இருக்கும் இன்னொரு மோசமான பக்கத்தை கிஞ்சிதும் யோசிக்காமல் வக்கனையாக அலைபேசி செயலியின் வழியே உணவு உத்தரவைக் கொடுத்துவிடுகிறோம். அதுவும் நாம் எந்தளவு ஏமாறுவோம் என அவர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது. அதனால் தான் இந்த மாதம் சமைக்கா மாதம் என்ற புது யோசனையை உங்களின் மூளைக்குள் செலுத்தி, நீங்கள் எங்கள் செயலியின் வழியே உத்தரவிடும் உணவிற்கு 50% தள்ளுபடி தருகிறோம் என விளம்பரம் செய்ய அவர்களால் முடிகிறது. அவர்களின் சொல்படியே கேட்டு நடப்போம். இனி சமைக்க வேண்டாம். வெளியில் இருந்து பெறும் உணவை சாப்பிட்டு விட்டு உடலை தப்பிதவறி கூட வளைக்காமல், நெளிக்காமல் இருந்துவிட்டு, காசிருப்பவர்கள் மட்டும், அதுவும் குளிர்சாதன வசதியுள்ள உடற்பயிற்சி கூடம் செல்லலாம், மற்றவர்கள் சகலவியாதிகளையும் உடலில் வாங்கிய பிறகு, தெருவில் இறங்கி நடந்து, உருண்டு, ஓடி பின்னர் பல வண்ணகலவைகளான மாத்திரைகளை முழுங்கிக் கொண்டே, மற்றவர்களுக்கு என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்ற அறிவுரைகளை வாரி வழங்கலாம். ஏனென்றால் நாம் அறிவாளிகள் நம்மை யாரும் ஏமாற்றமுடியாது. பேஸ், பேஸ் ரொம்ப நல்லாயிருக்கு இந்த பேன் பாக்குறது…
பின்குறிப்பு :
போகிற வேகத்தை பார்த்தால் நாளைய தலைமுறை வீடுகளில் சமையலறையே தேவையில்லை என்ற விளம்பரம் கூட வரும், அதையும் சரி என தலையாட்டி ஒத்துக்கொள்வோம் என நினைக்கிறேன். அப்படி மாறிவிட்டால் நம் சாப்பிடும் சோற்றில் உப்பின் அளவை யார் முடிவுசெய்வார்கள்… இப்பொழுது இன்னுமொரு சொல்லாடல் ஞாபகம் வருகிறது. நீ சோத்துல உப்பு போட்டு தான் சாப்பிடுறீயா, உனக்கு சுரணையின்னு ஒண்ணு இருக்கா… அதுதான் தெரியவில்லை…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916