வேதாளத்தின் கேள்வி…
கடந்த சில நாட்களுக்கு முன் காலையில் வீட்டில் என்னுடைய மனைவிக்கு ஒரு அலைப்பேசி அழைப்பு, எதிர்முனையில் பேசியவர் என் மகள் தற்பொழுது வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தைப் பற்றி விசாரித்து கொண்டிருந்தார். என் மகள் இப்பொழுது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். 8வயது ஆகிறது. என் மகள் 8வயதில் பாடத்தை தாண்டிய வாசிப்பைத் தொடங்கியிருக்கிறாள். அப்படியானால் நான் எப்பொழுது வாசிப்பைத் தொடங்கினேன் என யோசிக்கத் தொடங்கினேன். இதற்கு முன்னரும் ஒரு முறை நான் வாசிப்பை எப்பொழுது தொடங்கினேன் என்று எழுதியிருந்தாலும், அதில் சில விஷயங்களை குறிப்பிட மறந்துவிட்டேன். உண்மையில் என் வாசிப்பு தொடங்கியது, நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்பதாக நினைவில் இருக்கிறது. அப்பொழுதைய நாட்களில் தினமலர் பத்திரிக்கையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் வெளி வரும் சிறுவர் மலருக்கு அன்று மிகப் பெரும் ரசிகனாக இருந்தேன். அன்றைய காலகட்டத்தில், சிறுவர் மலரில், படக்கதை தொடராக வெளிவந்த விநாயகரின் பிறப்பு வரலாற்றை வாசித்தது இன்றும் நினைவடுக்குகளில் பசுமையாய் படிந்திருக்கிறது. பார்வதி தேவி தன் உடலில் இருந்து வெளிப்படும் ஒருவிதமான துகளினை வைத்து, ஒரு சிறுவனை உருவாக்கி உயிர் கொடுக்கிறார், அதன் பின் அந்த சிறுவனையே காவலுக்கு வைத்துவிட்டு, நான் நீராட செல்கிறேன், யார் வந்தாலும் உள்ளே விடாதே எனச் சொல்லிச் செல்கிறார். அந்த சமயம் பார்த்து சிவபெருமான் அங்கே வர என்னனென்ன களேபரங்கள் அங்கே அரங்கேறுகிறது என்பதையும், அதன் முடிவில் விநாயகர் எப்படி உருவானார் என்ற அந்தப் படக்கதை விவரித்துக் கொண்டே போகும். இதனை ஒவ்வொரு வாரமும் மிகச் சிறந்த ஓவியங்களுடன் அற்புதமான படக்கதையாக சிறுவர் மலரில் வாசிக்கும் போதெல்லாம் மனம் அப்படி குதுகலத்துடன் உற்சாகமாய் துள்ளும். அன்றிலிருந்து தான் என்னுடைய வாசிப்பின் ருசி தொடங்கியது. இன்று இதனை வாசித்துக் கொண்டிருக்கும் யாருக்காவது மேலே சொல்லியுள்ள விநாயகர் கதையை மதத்தின் பின்னனியில் வைத்து யோசிக்கும் மனநிலை தோன்றுகிறது என்றால், உங்களிடம் சொல்ல ஒன்று இருக்கிறது. இன்று மனிதனால் பின்பற்றப்படும் பலதரப்பட்ட கடவுள் நம்பிக்கைகளுக்குப் பின்னாலும் ஆயிரமாயிரம் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தக் கதைகள் அனைத்தும் இந்த இயற்கையையும், பிரபஞ்சத்தையும் மனிதன் என்கிற அந்த மகத்தான சல்லிப்பயல் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என உருவாக்கப்பட்ட சூட்சமக் கதைகளே. அதனை நீங்கள் வணங்கும் கடவுளின், மதத்தின் பெயரால் மறுக்கிறீர்கள் எனில், கண்டிப்பாக இழப்பு அந்த கதைகளுக்கு அல்ல.
இப்படியான நிலையில் சில காலம் கழித்து குடும்ப சூழல் காரணமாக வேறு ஒரு இடத்திற்கு குடும்பத்தோடு மாற வேண்டிய சூழல், ஐந்தாம் வகுப்பு வேறு ஒரு பள்ளியில் சேர்கிறேன். இந்த நிலையில் அன்று நாங்கள் மாறிய வீட்டின் முன்புறம் அந்த வீட்டின் பிரதான முன்புற இரும்புக் கதவின் இரண்டு பக்கமும் இரண்டு கடைகள் உண்டு. வீட்டிற்குள் வருகையில் இடது பக்கம் ஒரு மளிகைக் கடையும், வலது பக்கம் ஒரு இட்லிக் கடையும் இருக்கும். அந்த பகுதியிலேயே நாங்கள் குடியிருந்த வீட்டினுடைய உரிமையாளரின் வீடு தான் மிகப் பெரியது. அந்த பெரிய வீட்டின் பின்புறம் இருந்த ஒரு ஓட்டு வீட்டில் தான் நாங்கள் வாடகைக்கு குடியிருந்தோம். முன்னால் இரண்டு கடைகள் இருக்கும் எனச் சொன்னேன் இல்லையா. அதில் அந்த மளிகைக் கடையினை அண்ணன், தம்பி என இருவர் சேர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த மளிகைக்கடையில் பொட்டலம் மடிக்கக் கட்டுகட்டாக நிறைய நாளிதழ்கள், செய்திதாள்கள் என நிறைய வாங்குவார்கள். அப்படி அவர்கள் வாங்கும் நாளிதழ்களில், பல சமயங்களில் காமிக்ஸ் புத்தகங்களும் சேர்ந்து வரும். அப்படி வரும் காமிக்ஸ் புத்தகங்களை எப்படியாவது அவர்களிடம் நைசாகப் பேசி வாங்கி வந்து வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. இன்று யோசித்தாலும் அந்த காமிக்ஸ் வாசிப்பு ஒரு செம்மயான போதை. அப்படி அன்று வாசித்த காமிக்ஸ் கதாபாத்திரங்களில் என்னுடைய ஆழ்மனதினுள் பதிந்து விட்ட இரண்டு கதாபாத்திரங்கள் இன்றளவும் உயிர்ப்போடு என் நினைவுகளில் உலவிக் கொண்டே இருக்கின்றன, அதில் ஒன்று டெக்ஸ் வில்லர் மற்றொன்று இரும்புக்கை மாயாவி. இதில் டெக்ஸ் வில்லர் கதாபாத்திரத்தை வெண் திரையில் தோன்றிய ஒரு நபருடன் எளிதாக என்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது. இன்று வரை அந்த நபர் தான் எனக்கு டெக்ஸ் வில்லர். அந்த நபர் வேறு யாருமல்ல ஹாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான கிளிண்ட் ஈஸ்ட்வுட். இன்று வரை கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை எப்பொழுது வெண் திரையில் பார்த்தாலும் டெக்ஸ் வில்லர் கதாபாத்திரம் தான் என் மனதிற்குள் வந்து நிற்கும். இப்படி சில கதாபாத்திரங்கள் மனதினுள் தோன்றி மறைந்தாலும், அதனை எல்லாம் தாண்டி ஒரு மிக முக்கியமான கதாபாத்திரமும், அதன் உடல் மொழியும், அந்தக் கண்களில் தெறிக்கும் கம்பீரமும் என் மனதினுள் ஆழமாய் பதிந்து போய் இருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் வேறு யாருமல்ல வேதாளத்தை தன் தோளில் சுமந்த விக்கிரமாதித்தன். அந்த வயதில் விக்கிரமாதித்தன் கதாபாத்திரம் என்னுள் உருவாக்கிய தாக்கம் மிகப் பெரியது.
இன்று எதற்கு எடுத்தாலும் Goosebump Moment என்கிற ஒரு வார்த்தையைத் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள் இல்லையா. அதற்கெல்லாம் உண்மையான அர்த்தத்தை அன்றே வாசிப்பில் உணரவைத்த கதாபாத்திரம் தான் விக்ரமாதித்தன் கதாபாத்திரம். விக்ரமாதித்தன் தன் தோளில் சுமந்து நடக்கும் வேதாளம் சொல்லும் கதையின் இறுதியில், அந்த வேதாளத்தால் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்லாவிட்டால், உன் தலை வெடித்து சிதறி விடும் என்கிற வேதாளத்தின் நிபத்தனையை ஏற்று, கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராகும் விக்ரமாத்தித்தனின் அந்த தருணம் கொடுக்கும் சிலிர்ப்பான புல்லரிப்புக்கு இணையான ஒன்றினை, வேறெதுவும் அந்த வயதினில் எனக்குக் கொடுத்திருக்குமா எனக் கேட்டால், வாய்ப்பேயில்லை என்பது தான் பதில். அப்படி வேதாளம் ஒரு கதையின் முடிவில் கேட்கும் கேள்வி இன்றும் என் மனதிற்குள் சுற்றிக் கொண்டிருந்தது. அதனை மீண்டும் ஒரு முறை இணையத்தில் தேடிப் படித்தேன். அதே சிலிர்ப்பான மனநிலையுடன். என்னை தேடி வாசிக்க வைத்த வேதாளத்தால் கேட்கப்படும் அந்த கதையின் இறுதிக் கேள்வி என்னவெனில், கதையின் இறுதியில் ஒரு சின்ன நிகழ்வால் தலைகள் துண்டிக்கப்பட்டு இறந்து போகும் தன்னுடைய கணவனையும், நண்பனையும் உயிர்தெழ வைக்கும் வாய்ப்பில், மனைவி இருவரது தலைகளையும் மாற்றிப் பொருத்தி விடுகிறாள். இருவருக்கும் உயிர் வந்த பிறகு கணவனின் உடலில் நண்பனின் தலையும், நண்பனின் உடலில் கணவனின் தலையும் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். இந்த இக்கட்டான சூழலில் அந்த பெண் யாருடன் தனது இல்லற வாழ்வை தொடர வேண்டும்? ஏன்?. இது தான் வேதாளத்தின் கேள்வி. சரியான பதிலைச் சொல்லாவிட்டால் விக்ரமாதித்தன் தலை வெடித்து சிதறிவிடும் என்கிற சூழலில், விக்ரமாதித்தனின் பதிலை அந்த வயதில் வாசிக்கும் போது உணர்ந்த மனநிலையை, இன்று எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது.
இந்த கேள்வி அன்று கொடுத்த சிலிர்ப்பை இன்றும் உணர்ந்து கொண்டே இருக்கிறேன். அதே உணர்வோடு தான் இதனையும் எழுதுகிறேன். அந்த பெண்ணுக்கு இல்லற வாழ்வு யாருடன்? ஏன் என்கிற பதிலை நீங்களே இணையத்தில் தேடி வாசித்துக் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொரு கதையின் முடிவிலும் அட்டகாசமான வேதாளத்தின் கேள்விகள் உண்டு. அதே போல் விக்ரமாதித்தன் கதாபாத்திரத்தினைச் சுமந்து வரும் புத்தகத்தின் அட்டைப்படத்தில் வரையப்பட்டிருக்கும் அந்த ஓவியமும் மிக அட்டகாசமாயிருக்கும், கையில் மிக நீண்ட வாளுடன், வேதாளத்தை தன் தோளில் அலட்சியமாக சுமந்தபடி, தன் தலையை மட்டும் திருப்பி விக்கிரமாதித்தன் நம்மை நோக்கி பார்க்கும் அந்த ஓவியத்தில் தெறிக்கும் கம்பீரம் இருக்கிறது இல்லையா, அதற்கு இணையானதொரு கம்பீரத்தை இது வரை வேறெதிலும் பார்க்கவில்லை. இவ்வளவையும் தாண்டி இது போன்றதொரு சிலிர்க்க வைக்கும், சிந்திக்க வைக்கும், ரசிக்க வைக்கும், ஆச்சர்யப்பட வைக்கும் கதாபாத்திரங்களை சுமந்து வரும் புத்தகங்கள், இன்றைய தலைமுறை குழந்தைகளின் கைகளுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை என்கிற வலியான பதில் தான் வந்து விழுகிறது. இதனை எல்லாம் நாம் எங்கே தவறவிட்டோம் என்கிற கேள்வி மட்டுமே மிச்சமிருக்கிறது. முன்னர் எல்லாம் பெரும்பாலான வீடுகளின் முன் அறை மேஜையிலோ, அறையின் மூளையிலோ ஏதாவது நாளிதழோ, வார இதழோ, மாத இதழோ நம் கண்களுக்கு காணக் கிடைக்கும். இன்று அந்த இடத்தில் தொலைக்காட்சியும், அலைப்பேசியும். அதையும் தாண்டி இன்று முன்னெடுக்கப்படும் புத்தக கண்காட்சிகளில் கூட குழந்தைகளுக்கான புத்தகங்களை தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. நம் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளோடு அங்கேயும் போய் ஆங்கில புத்தங்களையும், அப்பளங்களையும் கபளிகரம் செய்துவிட்டு, ஏதோ சுற்றுலாவுக்கு வந்ததைப் போல் சுற்றிக் கொண்டு வருகிறார்களே தவிர வேறெதையும் செய்வதில்லை. இன்றும் குழந்தைகளுக்கு கவனிப்பாரற்று விடப்பட்ட மரங்களில் கண்களுக்கு புலப்படாமல் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் வேதாளத்தால் சொல்லப்பட வேண்டிய கதைகளும், கேட்கப்பட கேள்விகளும் மிச்சமிருக்கின்றன, ஆனால் அந்த வேதாளத்தை தோளில் சுமந்து சென்று அது சொல்லும் கதைளையும், அந்த கதையின் இறுதியில் வேதாளம் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளையும் தலை வெடிக்காமல் கேட்டுச் சொல்லத் தான் ஆளில்லை.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916