வாழ்ந்து பார்த்த தருணம்…191

சாமானியன்…

விஷ்ணுபுரம் விருதினை ஒட்டி, சாருவின் எழுத்தினைப் பற்றி பல்வேறு எழுத்தாளுமைகள் தங்களின் கோணத்தை தொடர்ந்து ஜெயமோகனின் தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சாரு அவர்கள் தன்னுடைய இணையப் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கும் அந்தக் கட்டுரைகளை ஓரளவுத் தவறாமல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் தான் இந்தக் கட்டுரையும். சாருவின் கடவுளும் நானும், தொழுகையின் அரசியல், அ-காலம் மற்றும் பல வருடங்களாக அவரின் இணைய எழுத்துகளை வாசித்த, ராஸலீலா, ஜீரோ டிகிரி, நான் தான் ஒளரங்ஸேப் போன்றவற்றை வாசித்துக் கொண்டிருக்கும், ஒரு சாமான்ய வாசகனின் எண்ண ஓட்டங்களில் தொகுப்பே, இந்தக் கட்டுரை. இந்தக கட்டுரையின் மூலக் கருத்துக்கூட, சாருவைப் பற்றி பல்வேறு ஆளுமைகள் எழுதியுள்ளதை வாசித்த பாதிப்பிலிருந்தே எழுதப்பட்டிருக்கிறது. இப்படித் தான் கடந்த வாரம் டிசம்பர் இரண்டாம் தேதி அய்யனார் விஸ்வநாத் ஜெயமோகனின் தளத்தில் சாருவைப் பற்றி எழுதியிருந்த வாழ்வும் கலையும் என்கிற கட்டுரையைச் சாரு தன் இணையப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனை வாசித்து முடிக்கையில், அந்த கட்டுரைக்குள் இருந்த மிக முக்கியமான வார்த்தை ஒன்று என்னுள் ஆத்மார்த்தமாய் நுழைந்து ஒரு வித நிறைவைக் கொடுத்தது, ஒரு வகையில் அந்த வார்த்தைக்குள் என்னுடைய வாழ்வியலும் இருந்தது. அதனால் அந்த வார்த்தையை என்னால் இயல்பாக கடந்து போக முடியாமல் மீண்டும், மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன், அந்த வார்த்தை இது தான் “சாருவின் கதையுலகம் சாமானியர்களை தேவையற்ற குற்றவுணர்விலிருந்து மீட்கவும் தவறவில்லை.” பலமுறை எனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும் போதெல்லாம், இந்த வார்த்தைளின் சாரத்தை வெவ்வெறு வார்த்தை வடிவங்களில் சொல்லியிருக்கிறேன். பொதுவாக மனித மனம் இயல்பிலேயே மண்டைக்குள் நித்தம், நித்தம் ஓராயிரம் கேள்விகளோடே சுற்றிக் கொண்டேயிருக்கும். அதுவும், குழந்தைப் பருவத்திலிருந்து பருவ வயதை அடைந்து, அதன் அடுத்த கட்டத்தை நோக்கி வாழ்வு நகர்கையில், அந்த இடைப்பட்ட காலத்தில் மனதுக்குள் எழும் கேள்விகளுக்கான பதில்களை எல்லாம் சரியான நபர்களிடம் கேட்டு பெறவோ அல்லது அது சம்பந்தமாக ஆரோக்கியமாக உரையாடுவதற்கான களமோ, இந்தச் சமூகத்தில் மிக, மிகக் குறைவு அல்லது இல்லவே இல்லை எனும் சூழலில், அந்த வயதில் அப்படியான கேள்விகளை தூக்கிக் கொண்டு பயணிக்கும் ஒருவன், அந்த கேள்விகளுக்கான விடைகளை எங்கே தேட ஆரம்பிக்கிறான் என்கிற புள்ளியில் தான் அவனுடைய வாழ்வின் போக்கே மாறிவிடுகிறது. இதனை இந்த வாழ்வியல் போக்கில் பல நிலைகளில் பல்வேறு சந்தர்ப்பத்தில் பார்த்தும், சந்தித்தும், கடந்தும் வந்து கொண்டிருக்கிறேன். அதனைத் தான் அய்யனார் விஸ்வநாத் அந்தக் கட்டுரையிலும் குறிப்பிட்டு இருக்கிறார். இருபதுகளின் மத்தியில் இருக்கும் இளைஞர்களிடம் சாருவின் புத்தகத்தை வாசிக்கக் கொடுத்த பிறகு, அவர்களிடையே ஏற்பட்ட மாற்றத்தையும், அதில் சொல்லியிருந்தார். இன்றைக்கும் குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சி என்கிற ஒன்று நம்முடைய வாழ்வுக்குள் நுழைந்த பிறகு, மனதுக்குள் தோன்றும் கேள்விகளுக்கான விடைகளை அங்கே தேடலாம் என்கிற மனநிலை இன்று உருவாகியிருக்கிறது. ஆனால் அதன் வழி பெறப்படும் பதில்கள் தான் ஆபத்தானவையாகவும், நாரசமாகவும் இருக்கின்றன.

என்னுடைய பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் அல்லது அதன் நடுவில் வாசிப்பு என்கிற ஒன்று வருகிறது. அப்படியான வாசிப்பின் ஒரு கட்டத்தில் சாருவை அடைகிறேன். அங்கே தான் குற்றவுணர்வோடு சுற்றிக் கொண்டிருந்த என்னை, அய்யனார் விஸ்வநாத் சொல்லியிருப்பதைப் போல் “சாருவின் கதையுலகம் சாமானியர்களை தேவையற்ற குற்றவுணர்விலிருந்து மீட்கவும் தவறவில்லை.” என்கிற வார்த்தையின் முழுமை என்னை அடைகிறது. இந்த ஒற்றை வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் பயணம் மிக, மிக நுட்பமானது. வாசிக்கும் போது, இது வெறும் ஒற்றை வார்த்தையாகத் தோன்றலாம். அது அப்படியல்ல, இங்கே இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும், பல்வேறு பொது ஒழுக்க, கலாச்சார, பொருளாதார விழுமியங்களை எல்லாம் மனதுக்குள் ஏற்றி, சதா சர்வகாலமும் அதனுள் உழன்று, மிக, மிக மோசமாக தன்னை தானே ஒடுக்கிக் கொள்ளும் மனநிலையில் இருக்கும் ஒருவனை, அதிலிருந்து மீட்டுக் கொண்டு வருவது எல்லாம் எப்படியான பயணம் என்பதை அதனை உணர்ந்து கடந்து வந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சில விஷயங்களை என்ன விளக்கினாலும் புரியாது என்பார்கள். அதனை நீங்கள் அனுபவித்து கடந்து வந்தால் மட்டுமே உணரமுடியும், புரிந்துகொள்ள முடியும். அதே நேரம் குற்றவுணர்விலிருந்து மீட்பு என்பது ஒரு சாமானியனின் மனதிற்குள் எப்பேர்ப்பட்ட மாற்றத்தை, நம்பிக்கையை, பிடிப்பை ஏற்படுத்தும் என்பதையும் இங்கே வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படியான தெளிவான மனநிலையை நோக்கி ஒருவன் நகர்வதை, சிந்திப்பதை அவனை சுற்றியிருக்கும் சமூகமும், பொது சமூகமும் செய்யவே விடாது. ஆனாலும் வாசிப்பின் வழியே அந்தக் குற்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திப்பதன் ருசியை கண்டு கொண்டவன். அதனை விடவே மாட்டான். அந்த ருசியை மிகச் சரியாக தன் எழுத்தின் வழியே என் போன்ற சாமான்யனுக்கும் கடத்தியவர் சாரு. பொதுவாக ஒரு செயலின் விளைவு நேரடியாக தெரியலாம் அல்லது தெரியாமலும் போகலாம். ஆனால் அதன் மறைமுக விளைவு நுட்பமாக நமக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதனை கூர்ந்து நிதானமாக கவனித்தால் மட்டுமே புலப்படும். அப்படியான மறைமுகமான விளைவுகளை, வாழ்வியல் தெளிவுகளை, ஒரு சின்ன சிற்றலையைப் போல் எனக்குள் தழும்பிக் கொண்டே இருக்கும்படியான நிலையை தன் எழுத்துக்களின் வழியே நிகழ்த்திக் கொண்டிருப்பவர் சாரு. அது அதோடு நிற்காமல், அந்தச் சிற்றலை எனக்குள் எற்படுத்தும் மாற்றதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் தன் எழுத்தின் வழியே கொடுத்துக் கொண்டிருக்கும் ஆசான் சாரு.

அடுத்ததாக அனீஷ் கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையில் ஒரு வார்த்தை வருகிறது. ராஸலீலாவை பற்றி, அவர்களது வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி ஒன்றை அவர்கள் முன்பு வைத்தாலே போதும். சட்டென்று புரிந்து கொள்வார்கள். ராஸலீலா அத்தகைய ஒரு கண்ணாடி எனச் சொல்லிச் செல்கிறார். ராஸலீலா பற்றி அனீஷ் சொல்லியுள்ள வார்த்தைகள் சத்தியம். அதே கட்டுரையில் சொல்லியிருப்பது போல், பல நேரங்களில் ஒரு மனிதன் எதிர்வினை ஆற்றவே முடியாது என்கிற சூழ்நிலை உருவாகும் பொழுது அல்லது அது திட்டமிட்டே உருவாக்கப்படும் பொழுது, அந்தச் சூழல் கொடுக்கும் மன அழுத்தம் இருக்கிறது இல்லையா, அது நம்மை பைத்தியமாக்கி விடும். ஆனால் அப்படியான சூழலை வாசிப்பின் வழியே, எழுத்தின் வழியே கடப்பதை போலான சிறந்த எதிர்வினை வேறொன்று இருக்கவே முடியாது. அதனைச் செய்து கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், செய்யச் சொல்லிக் கொடுப்பதும் ஆசான் சாரு தான். சில பேர் சொல்வார்கள், இது மட்டும் என் வாழ்க்கையில் நடக்கலைன்னா நான் பைத்தியமாகி இருப்பேன் என்று. அப்படி என் வாழ்வில் பைத்தியக்காரன் ஆகாமல், குற்றவுணர்வோடு சுற்றாமல் இருக்க, சாருவின் எழுத்தினை நான் கண்டடைந்த தருணமும் மிக, மிக முக்கியமான காரணம். ஒரு வகையில் சாருவே அனிஷ் கிருஷ்ணன் கட்டுரையை பகிர்ந்து எழுதியிருப்பதில் அதனைச் சொல்லியிருக்கிறார். இதனை எல்லாம் தாண்டி, ஒருவன் தட்டையான இந்த பொதுச் சமூகச் சிந்தனையில் இருந்து மாறுபட்டு, தன்னுடைய பார்வையை விரிவடையச் செய்யும் பொழுது, அவனை இந்தச் சமூகம் வச்சு செய்யும். ஆனால், அதனை ஆராத்து பாணியில் சொல்வதென்றால், நொட்டாங்கையில் டீல் செய்யும் மன தைரியத்தையும், தெளிவையும் தன் எழுத்தின் வழியே கொடுத்துக் கொண்டிருப்பவர் சாரு. நான் சாருவின் எழுத்தை ரசிக்கிறேன், சிலாக்கிறேன் தொடர்ந்து அவரின் எழுத்தைப் பற்றி என்னுடைய கருத்துக்களை எழுதுகிறேன் என்பதற்காகவே போகிற போக்கிலும், முகத்திற்கு நேராகவும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கத்தி சொருகும் ஆத்மாக்களை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம், ஒரு நிமிடம் அவர்களின் முகத்தைப் பார்த்து என் மனதிற்குள்ளாகவே நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட என யோசித்துவிட்டு நகரப் பழகியிருக்கிறேன். கோட்டைச் சாமி தலைகீழாத்தான் குதிப்பான் எனச் சொல்பவர்களுக்கு, நொட்டங்கை டீலிங்கே சரி, மற்றபடி விஷ்ணுபுரம் விருது பெறும் ஆசான் சாருவுக்கு இந்தச் சாமான்ய வாசகனின் இதயப்பூர்வமான வாழ்த்துகளோடு மகிழ்வும், நன்றியும்…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916