Cheers கதை…
விஷ்ணுபுரம் விருது விழா 18.12.2022 ஞாயிற்றுக் கிழமைக்கான இலக்கிய அமர்வில் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்றரை மணி வரை ஜெ.மோவின் ஒருங்கிணைப்பில் சாருவுடன் கலந்துரையாடல் முடிந்ததும். அதன் தாக்கத்திலிருந்து வெளிவரவே சிறிது நேரமானது. அதன்பின் அரங்கத்துக்கு வெளியே நண்பர் அருண் மற்றும் நண்பர் செல்வக்குமார் கணேஷன், நான் என மூவரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அருண் சாருவுக்கு இன்றைக்கு பிறந்தநாள். அதனைக் கொண்டாட ஒரு கேக் ஏற்பாடு செய்து வெட்டலாமா எனக் கேட்டார். அருண் சொன்னதற்கு செல்வக்குமார் கணேஷன் வெட்டலாம் எனச் சொல்ல. நான் உடனே அருணிடம், இவ்வளவு பரபரப்பிற்கிடையில், கேக் வெட்டுவது சாத்தியமா, அதற்கான நேரம் எப்படி அமையும், மொத்த நிகழ்வும் விஷ்ணுபுரம் வட்டத்தினரால் முன்னரே திட்டமிட்டபடி போய்க் கொண்டிருக்க, இது சரியாக வருமா எனக் கேட்டேன். கேட்டேனே ஒழிய, மனதுக்குள் அது மட்டும் சாத்தியமானால் செம்மையாக இருக்கும் எனத் தோன்றியது. அருணிடம் எதற்கும் அராத்திடம் போய் ஒரு வார்த்தை கேளுங்கள், அவர் ஒகே என்றால் கேக்கை வாங்கி விடலாம் எனச் சொன்னேன், அருணும் புயல் வேகத்தில் போய் கேட்டுவிட்டு வந்து, அராத்து ஒகே சொல்லிவிட்டார் என்றார். உடனடியாக நாங்கள் மூவரும் (செல்வக்குமார் கணேஷன், அருண், நான்) விருது விழா நடைபெறும் ராஜஸ்தானி சங் அரங்கத்திற்கு அருகில் ஏதேனும் கேக் கடைகள் இருக்கிறதா எனத் தேடிப் போனோம். ராஜஸ்தானி அரங்கத்திலிருந்து வெளியே வந்து வலதுபுறமாக திரும்பிப் போனால், ஒரு நான்கு முனைச் சாலை சந்திப்பொன்று இருக்கிறது, அங்கே நிறைய கடைகள் உண்டு என்பதால், அந்த பகுதிக்கு போகலாம் என மூவரும் போனோம். போகும் போதே கேக் எத்தனை கிலோ இருந்தால் சரியாக இருக்கும் என எங்களுக்குள் ஆலோசனைகள் ஓட, ஒரு இரண்டரை கிலோவிலிருந்து மூணு கிலோவாவது இருக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனால், என்னுடைய முன்னால் பணி அனுபவத்தை வைத்து பெரும்பாலான கடைகளில் அந்த அளவுக்கான கேக்கை செய்து வைத்திருக்க மாட்டார்கள், அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ தான் இருக்கும் எனச் சொன்னேன். இந்த உரையாடல் போய்க் கொண்டிருக்கும் போதே அங்கிருக்கும் அரோமா பேக்கரி ஒன்று கண்களில் சிக்கியது, அங்கே போய் கேட்டால், அரைக்கிலோவிற்கு மேல் கேக் இல்லை. அங்கிருந்தவர் உங்களுக்கு எவ்வளவு அளவில் வேண்டும் எனக் கேட்டுவிட்டு, நடந்து செல்லும் தூரத்தில் இருக்கும் தங்களின் மற்றொரு கிளைக்குப் போங்கள் அங்கே கிடைக்கும் என வழி சொன்னார்.
எங்களுக்கு இருந்த இன்னொரு பிரச்சனை, அப்படியே மூன்று கிலோவில் கேக் செய்யச் சொன்னாலும், அது எவ்வளவு நேரத்தில் தயாராகும் என்பது தெரியாது, நாங்கள் கடையைத் தேடிச் சுற்றிக் கொண்டிருக்கும் போது மாலை 3:45. அடுத்ததாக 4:45 லிருந்து 5 மணிக்குள் ஆவணப்படம் தொடங்கிவிடும். அது முடிந்து விருது விழா தொடங்கும் நேரத்திற்குள் கேக் தயாராக வேண்டும். அப்படி அது தயாராகிவிடுமா என்கிற மில்லியன் டாலர் சந்தேகத்தோடே மூன்று பேரும் அருகில் இருந்த அரோமா கீரின் டீரி என்கிற அந்த பெரிய கடைக்குள் போனோம். அங்கிருக்கும் கேக் வகைகளைப் பார்த்து என்ன சுவையில் கேக்கைத் தயார் செய்யச் சொல்வது என யோசித்து, சாக்லேட் சொல்லலாம் என முடிவெடுத்தோம். அந்த சுவையில் இருக்கும் சிறிய கேக் துண்டை வாங்கி மூவரும் சுவைத்துப் பார்த்தால், மூவருக்கும் சுவை ஒகே. சரி எனக் கடையில் இருந்தவர்களிடம் எவ்வளவு நேரத்தில் தயார் செய்து கொடுப்பீர்கள் எனக் கேட்டால், உங்களுக்கு எவ்வளவு நேரத்தில் வேண்டும் என்று அங்கிருந்து எதிர் கேள்வி வந்தது. 5:30மணிக்குள் வேண்டும் எனச் சொன்னோம். சரி, கொடுத்திடலாம் என அவர்கள் உறுதியாகச் சொன்னதும், கேக்கை செய்துவிடுங்கள் என கேக்குக்கான தொகையை கட்டிவிட்டோம். அப்பொழுது செல்வக்குமார் கணேஷன் மொத்த தொகையையும் நானே கொடுத்துவிடுகிறேன் எனச் சொன்னார். இல்லை, மூவருமாக பகிர்ந்து கொள்ளலாம் எனச் சொல்லித் தொகையைக் கொடுத்துவிட்டோம். அடுத்ததாக கேக்கின் மீது என்ன எழுதலாம் என விவாதம் ஓடி, செல்வக்குமார் கணேஷன் அலைப்பேசியில் நண்பர்களை அழைத்துப் பேசினார், ஆனாலும் குழப்பமாக இருக்க, டக்கென்று அருண் சியர்ஸ் சாரு என்று எழுதலாம் எனச் சொன்னவுடன், உடனடியாக மூவருக்கும் அது பிடித்துவிட, சரி அப்படியே எழுதுங்கள் எனச் சொல்லிவிட்டோம். அதன் பின் வெறுமனே சியர்ஸ் சாரு என எழுதினால் நன்றாக இருக்காது என யோசித்து, கேக்கின் மேல் ஒயின் கிளாஸில் ஒரு அரை கிளாஸ் ஒயின் இருப்பது போல் வரைந்து, அதன் அருகே சியர்ஸ் சாரு என எழுதிவிடுங்கள் எனச் சொன்னோம். இப்பொழுது மற்றொரு பிரச்சனை, வரைவது ஒயின் கிளாஸை போல் இருக்க வேண்டுமே என யோசித்தால், வெள்ளி இரவு கூட்டத்தில் சாரு ஒயின் அருந்திய கிளாஸ் ஒன்றின் அண்மை புகைப்படத்தை என்னுடன் வந்த தங்கை என் அலைபேசியில் எடுத்திருந்தது நினைவுக்கு வந்தது. கேக் செய்வபவரிடம் அதனை எடுத்துக் காட்டி இதனைப் போல் தான் அந்த கிளாஸின் வடிவம் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, எழுத்துக்களை பிழையில்லாமல் எழுதிக் கொள்ளுங்கள் எனச் சொன்னவுடன், அங்கிருக்கும் பொறுப்பாளர் ஒருவர் காகிதத்தில் Cheers Charu என எழுதிக் கொண்டே சாரு நிவேதிதாவா எனக் கேட்டார். சாருவை உங்களுக்குத் தெரியுமா என கேட்டதும் ம் தெரியுமே எனச் சொன்னார். அவரிடமே கேக்கை ராஜஸ்தானி சங் அரங்கத்திற்கு அனுப்ப முடியுமா எனக் கேட்டோம் நீங்க போங்க அனுப்பிடுறேன் என்று சொல்லிவிட்டார். கடையின் பொறுப்பாளர் சாருவின் பெயரைச் சொன்னதும் கேக் அமர்களமாக நேரத்திற்கு வந்துவிடும் என தெரிந்துவிட்டது. செல்வக்குமார் கணேஷன் மற்றும் என்னுடய அலைப்பேசி எண்களை அவரிடம் கொடுத்துவிட்டு அரங்கத்திற்கு வந்துவிட்டோம்.
சரியாக ஆவணப்படம் முடியும் தருவாயில் என்னுடைய அலைப்பேசி அடித்தது. ஒரு 10 நிமிடத்தில் கொண்டு வாருங்கள் எனச் சொல்லி இணைப்பை துண்டித்தேன். சரி ஆவணப்படம் முடிந்து 5 நிமிடத்தில் அதே எண்ணுக்கு அழைத்தேன். பார்த்தால், அருண் கைகளில் கேக் பெட்டியோடு அரங்குக்குள் வந்து கொண்டிருந்தார், இதற்குள் சாருவுக்கு விருது வழங்கும் மேடை தயாராகிவிட்டது. செல்வேந்திரன் பேச ஆரம்பித்திருந்தார். கேக் வந்த பெட்டி வலுவான பிரவுன் டேப்பால் சுற்றப்பட்டிருக்க, அதனைப் பிரித்தெடுக்க கைகளில் ஆயுதம் எதுவும் இல்லை. கொஞ்சம் கவனமின்றி டேப்பை அகற்றினாலும் கேக் கதை கந்தலாகிவிடும் எனத் தெரிந்தது. அருணிடம் சரி நான் அதனைப் பிரிக்கிறேன், நீங்கள் மேடையில் பேசி ஒரு 5 நிமிடம் மட்டும் அனுமதி வாங்குங்கள், அதற்குள் இதனைப் பிரித்து மேடைக்கு கொண்டு போய்விடலாம் எனச் சொன்னேன், அருண் போய்விட்டார். பெட்டியைப் பிரித்தவுடன் கேக்கின் மேல் வரையப்பட்டிருந்த ஒயின் கிளாஸினைப் பார்த்து மனம் துள்ளியது, காரணம், நாங்கள் சொன்னதைத் தாண்டி அசத்தலாக அதனை வடிவமைத்து இருந்தார்கள், உடனடியாக செல்வக்குமார் கணேஷன் கேக்கை தன் அலைபேசியில் புகைப்படம் எடுத்துவிட்டிருந்தார். அதற்குள் மேடைக்குப் போன அருண் வந்து ஒகே சொல்லிட்டாங்க எனச் சொன்னார். இதனை எல்லாம் தாண்டி, இப்படி ஒரு கேக்கை விஷ்ணுபுரம் மேடையில் வைத்து வெட்டுவது யாருக்கேணும் சங்கடத்தை கொடுத்திடக் கூடாது என மனத்துக்குள் வேண்டுதல் வேறு ஓடிக் கொண்டே இருந்தது. அந்த நேரம் செல்வக்குமார் கணேஷன் எங்களின் இருவரின் மனநிலையை உணர்ந்தவராய், மேடைக்குப் போய் பதற்றமில்லாமல் கேக்கை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி வெட்டச் சொல்லுங்கள். கண்டிப்பாக பதட்டப்படாதீர்கள் எனச் சொன்னார், அருண் கேக்கை எடுத்துக் கொண்டு மேடைக்குப் போக, சாருவின் முன் கேக் வைக்கப்பட்டவுடன், என் கைகளில் இருந்த மெழுவர்த்தியை ஏற்ற கேக்கின் மீது வைத்தால் பதற்றத்தில் என் கைகள் நடுங்கியது அப்பட்டமாய் தெரிந்தது. அதே நடுக்கத்தோடு தீப்பெட்டியைப் பற்ற வைத்துவிட்டு, கைகளில் இருந்து கேக் வெட்டும் மரக் கத்தியை சாருவிடம் கொடுத்தேன். என் கைகளில் உணர்ந்த நடுக்கத்தை நிறுத்தவே முடியவில்லை. அதே நேரம் அருண் போட்டோ எடுங்க, எடுங்க என்றார், என் பைகளுக்குள் துலாவினால் பதற்றத்தில் அலைப்பேசியை உட்கார்ந்து இருந்த இருக்கையிலேயே வைத்துவிட்டு வந்திருந்தேன். இனி போய் எடுக்க வாய்ப்பேயில்லை. அருணிடம் நீங்கள் புகைப்படம் எடுங்கள் எனச் சொல்லிவிட்டேன். அதற்குள் மேடையை ஒருங்கிணைத்த செல்வேந்திரன் நேரத்தை ஞாபகப்படுத்த, கேக் வெட்டிய நிகழ்வை முடித்துவிட்டு வேக, வேகமாக கேக்கை எடுத்துக் கொண்டு மேடையை விட்டு கீழ் இறங்கினால், சிறிது மட்டுமே வெட்டப்பட்டிருந்த கேக்கை என்ன செய்வதெனத் எங்கள் இருவருக்குமே தெரியவில்லை. காரணம், அரங்குக்குள் பெரும் கூட்டமிருந்தது, கண்டிப்பாக எல்லோருக்கும் கேக்கைப் பகிர்ந்தளிக்க முடியாது, என்ன செய்வது என யோசித்து, கீழ் தளத்தில் வாசகர்களுக்கான இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் போய் கேக்கை வைத்துவிட்டு, அங்கிருந்த ஏற்பாட்டாளர்களிடம் முடிந்த வரை உணவருந்த வரும் வாசகர்களுக்கு இந்த கேக்கை பகிர்ந்து கொடுத்திடுங்கள் எனச் சொல்லிவிட்டோம். இதற்கிடையில் கேக்கை வடிவமைத்தவர் அலைப்பேசியில் அழைத்து சாருவுக்காகத்தான் ஸ்பெஷல்லா பண்ணினோம் அத அவர்கிட்ட சொல்லிடுங்க சார் என்றார். நிகழ்வெல்லாம் முடிந்து சாரு மேடையை விட்டு இறங்கி, புகைப்பட களேபரங்கள் முடிந்த பிறகு, செல்வக்குமார் கணேஷன் எடுத்தனுப்பியிருந்த புகைப்படங்களைக் காட்டி, கேக்கை வடிவமைத்தவர் சொன்னதை சொன்னவுடன், சாரு, அருமையா இருக்குன்னு நான் சொன்னேன்னு சொல்லிருங்க என்றார். சாரு அரங்கில் இருந்து கிளம்பும் வரை எங்குமே நகர மனம் இல்லாததால், இறுதி வரை கீழ் தளத்திற்கு போகவே இல்லை. மகிழ்ச்சி…
கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள சாரு கேக் வெட்டும் புகைப்படத்தை எடுத்தது நண்பர் சுதர்ஷன்.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916