வாழ்ந்து பார்த்த தருணம்…198

மட்டற்ற மனதின் கீழ்மை…

சில வாரங்களுக்கு முன்பு ஒரு முகநூல் பகிர்தல் மனுஷிடம் இருந்து. மதுரையில் இருக்கும் மிகப் பிரபலமான முடித் திருத்தகத்தில் உள்ள சேவைக் குறைபாடு பற்றி எழுதி ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். பொதுவாக இது போன்ற மிகப் பிரபலமான நிறுவனங்களின் மீது ஒரு நடுத்தர வெகுஜன மனநிலை என்பது இங்கே போய் என்றைக்காவது முடித்திருத்த மாட்டோமா என்பது தான். நானும் சில முறை அங்கே போய் இருக்கிறேன் என்பதால் அவர்களின் சேவைக் கட்டணம் எப்படியிருக்கும் என்பதும் தெரியும். அதன்பின் அவர்களின் சேவை மீது ஏற்பட்ட அதிருப்தியாலும் என்னுடைய பொருளாதார சூழ்நிலையாலும், அங்கே இப்பொழுது போவதில்லை. இதெல்லாம் ஒரு புறம் என்றாலும், மேலே சொன்ன வெகு ஜன மனநிலை என்னவோ எனக்குள் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு எப்பொழுதாவது எட்டிப் பார்க்கத் தான் செய்யும். மனுஷின் அந்த பதிவைப் பார்த்ததும் அப்படியான மனநிலை மீண்டும் மனதுக்குள் தாண்டவமாடியது. ஓ இவர் இங்கே போய் முடி வெட்டுற அளவுக்கு சம்பாதிக்கிறாரா, அவ்ளோ பெரிய ஆளா இவரு, இதுல குறை வேற சொல்லுறாரு என்கிற மனநிலை மனதுக்குள் தோன்றிக் கொண்டே இருக்க, அப்படியான மனநிலையில் இருந்து வெளிவர சிறிது நேரம் ஆனது. அதன்பின் தான், நாம் எவ்வளவு கேவலமாய் யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தது, அதன்பின் மனதினுள் மிக, மிக சங்கடமாக உணர ஆரம்பித்தேன். நாமும் அதே கடைக்கு போய் இருக்கிறோம் தானே, அப்படி இருக்கையில் நமக்குள் ஏன் இப்படி ஒரு எண்ணம் என்கிற ஆழமான கேள்வி எனக்குள் எழுந்து அடங்கியது. என்ன தான் எழுதினாலும், வாசித்தாலும், அதனைத் தாண்டி, ஒரு சராசரி மனநிலையில் இருந்து வெளி வர இன்னுமே நிறைய பயிற்சி தேவைப்படுகிறது என்பது மனதுக்குள் உரைத்தது. அப்படியான பயிற்சி என்பது உண்மையில் என்னைக் கேட்டால், இப்படியாக மனதுக்குள் தோன்றும் கீழ்மையான எண்ணங்களை எவ்விதமான ஜல்சாப்புகளும் சொல்லாமல், ஆமாம் எனக்குள் தோன்றியது மிகக் கீழ்மையான எண்ணம் தான் என்பதை எனக்கு நானே ஏற்றுக் கொள்வது. அதன்பின் அதனை இது போன்ற பொதுவெளியில் அப்பட்டமாய் எழுதுவது.

சரி இப்படி பொதுவெளியில் எழுதுவதால் அப்படியான கீழ்மையான எண்ணத்தில் இருந்து விடுபட முடியுமா எனக் கேட்டால். கண்டிப்பாக முடியும் என்பது தான் என்னுடைய பதில். காரணம் எழுதியது கண்டிப்பாக அப்படியே அப்பட்டமாக பொதுவெளியில் இருக்கிறது இல்லையா. அதனை ஒரு வகையில் நானும் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்கிறேன். ஒரு வகையில் இந்த எழுத்து என் கீழ்மையான எண்ண ஓட்டத்திற்கு நேரடியான சாட்சி. ஏற்கனவே நமக்கு நாமே சாட்சியாய் இருத்தலைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அப்படி ஒரு சாட்சி தான் என்னுடைய இந்த எழுத்தும். ஒரு வகையில் இந்த எழுத்து என்னுடைய கீழ்மையை எனக்கே மீண்டும், மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். ஒரு சராசரி மனநிலையில் இருந்து யோசித்தால், கண்டிப்பாக என்னுடைய கீழ்மையான எண்ணத்திற்கு மிகச் சரியான, சிறப்பான எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான ஒரு காரணத்தை வெகு எளிதாக என்னால் நிறுவி விட முடியும். ஆனால் அப்படி செய்வதின் வழியாக என் கீழ்மையை நானே ஏற்றுக் கொள்கிறேன். அப்படியெனில் என்னுடைய எண்ணத்தில் எப்படி மாற்றம் வரும் சாத்தியமே இல்லை இல்லையா. இன்னொரு வகையில் ஒரு சராசரியான மனநிலையில் இருந்து கொண்டு, என்னுடைய கீழ்மை சரி என்பதற்கான காரணத்தை ஏன் நிறுவ முயல்கிறேன் என யோசித்தால். காரணம் வெகு எளிமையானது ஏனெனில் நான் ரொம்ப நல்லவன், யோக்கிமானவன் என்கிற பிம்பத்தை மற்றவர்களிடம் நிறுவுவதற்கு முன்பாக, எனக்கே என்னை திருப்திப்படுத்த அது தேவைப்படுகிறது. ஒரு வகையில் சகலவிதமான குறைகளும் உள்ளடக்கிய ஒரு சாதாரண மனிதன் தான் நீ என்பதை எனக்குள்ளாக உணர்ந்து, அதன் வழி இந்த பிம்பத்தில் இருந்து விடுபடலே மிகப் பெரும் பயிற்சி தான். காரணம், இப்படியான பிம்பத்தை தூக்கிக் கொண்டு அலையும் மனிதர்கள், தான் நம்பும் தன்னுடைய அந்த பிம்பத்திற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பதை பார்த்து விக்கித்துப் போயிருக்கிறேன்.

இப்படித் தான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு முறை எனக்கு நெருக்கமான தங்கையுடன் ஒரு உரையாடல் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது சில நாட்களுக்கு முன்பு என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லி, அந்த நேரத்தில் நான் எவ்வளவு யோக்கியனாய் நடந்து கொண்டேன் தெரியுமா என அவரிடம் பீற்றிக் கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் கேட்டு முடித்தவுடன் அவர் என்னிடம், யோக்கியன்னா என்ன வெங்கடேஷ் சொல்லுங்க எனக் கேட்டார். எனக்கு கொஞ்சம் நேரம் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. மீண்டும் அவர் நீங்க சொல்கிற யோக்கியன் என்பதற்கான ”Definition” என்ன எனக் கேட்டார். என்னால் இது தான் என எதையும் வரையறுத்து சொல்ல முடியவில்லை அல்லது சொல்லத் தெரியவில்லை. இங்கே யோக்கியன் என்பதற்கான வரையறையை யார் முடிவு செய்வது என்கிற கேள்வி எனக்குள் ஆழமாய் இறங்கிய தருணம் அது. அதன்பின் என்னுடைய தங்கை பேச ஆரம்பித்தார், பேச ஆரம்பித்தார் என்பதை விட என்னை நார் நாராக கிழிக்க ஆரம்பித்தார் என்பதே சரி. நான் அவரிடம் விவரித்த அந்த நிகழ்வில் என்னை யோக்கியனாய் எண்ணிக் கொண்டு எந்த அளவு கீழ்த்தரமாய் நடந்திருக்கிறேன் என்பதை சொல்லி வச்சு செய்தார். அவர் சொல்வதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தேன். அன்றைக்கு அவர் கேட்ட கேள்வியின் வழியே எனக்கு உணர்த்தப்பட்ட, நான் உணர்ந்து கொண்ட பாடம் அதிகம். அன்றிலிருந்து இன்று வரை எனக்குள் யோக்கியன்னா என்ன என்கிற அந்த கேள்வி, பல சந்தர்ப்பங்களில் எனக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தக் கேள்வியில் இருந்து யோசித்தால் மனுஷின் பதிவிற்கு நான் யோசித்த கீழ்மை என்பது எப்படியானது. பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஒன்றே ஒன்று மட்டும் மனதினுள் தோன்றியது, இப்படியான கீழ்மைகளிலிருந்து விடுபட இன்னும் நீண்ட தூரம் எனக்கு நானே சாட்சியாய் பயணிக்க வேண்டியிருக்கிறது. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916