வாழ்ந்து பார்த்த தருணம்…201

கழுவிலேறும் பயம்…

பயமா இருக்கு இந்த வார்த்தை என் காதுகளில் விழும் போது எல்லாம் எதற்காக பயம். அது எந்தப் புள்ளியில் இருந்து உருவாகிறது என பல நூறு முறை யோசித்திருக்கிறேன். என்னிடம் சொல்லப்பட்ட பயங்களின் தன்மைகளில் பல வகையானவைகள் இருந்தாலும். ஒரே ஒரு பயம் மட்டும், மிகப் பெரும்பாலான நபர்களை அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஏன் அவர்களுடைய சாவின் விளிம்பு வரை கூட துரத்துவதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எது அப்படியான பயத்தை அவர்களுக்குள் ஏற்படுத்துகிறது? என்கிற கேள்விக்கு. ஒரே ஒரு பதில் தான் மிஞ்சுகிறது. அந்த பதில், நம்பிக்கையற்றத் தன்மை. யார் மீது நம்பிக்கையற்ற தன்மை என அடுத்தக் கேள்வியைக் கேட்டால். அவர்கள் மீதே அவர்களுக்கு என்பது தான் முகத்தில் அறையும் நிஜமான பதில். இதனை ஏற்றுக் கொண்டவர்கள் தான், “தன்“நம்பிக்கைகாக என்ன செய்ய வேண்டும் என யோசித்து, அதனை நோக்கி நகர்ந்து குறைந்தபட்சமாவது அந்த பயத்தில் இருந்து விடுபட்டு விடுகிறார்கள். இதில் நமது நம்பிக்கையற்ற தன்மையால் தான் இந்த பயமே என உணராதவர்கள், அந்த பயத்தோடே போராடுகிறார்களேத் தவிர, தன் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எதுவுமே செய்வதில்லை. இப்படி எதுவுமே செய்யாமல் இருப்பவர்களின் பிரச்சனை என்னவெனில், தன் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை, அப்படியே தூக்கி மற்றவர்களின் மீது வைத்துவிட்டு. நான் என்ன நம்புறத விட ஒரு படி மேல உன்ன நம்புறேன் என தெளிவாக வசனம் பேசிவிடுகிறார்கள். இதனால் இப்படி மற்றவர்களின் நம்பிக்கையையும் சேர்த்து சுமக்கும் நிலைக்குத் தள்ளப்படும் ஒரு மனிதன் (இங்கு மனிதன் என்கிற பதம் பாலின பாகுபாடு இன்றி ஆண், பெண் என்பதையும் தாண்டி எல்லாவிதமான மனிதர்களையும் உள்ளடக்கியே குறிப்பிட்டிருக்கிறேன்) தன்மீது இருந்த நம்பிக்கையையும் இழந்து. தான் கண்டைந்த “தன்“நம்பிக்கையையும் இழந்து. மீண்டும் பயத்துக்குள் விழுந்து புரள ஆரம்பித்து விடுகிறான். இதனால் தன் மீது நம்பிக்கை இல்லாமல் பயத்தோடு சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு வகையான திருப்தி. இவ்வளவு நாளா நாம மட்டும் தான் பயந்துகிட்டு இருந்தோம். இப்பக் கூட ஒரு கை சேர்ந்திருச்சு, இனி ரெண்டு பேரும் சேர்ந்து பயத்தின் கழுவில் ஏறி உட்கார்ந்து கொண்டு உருப்படாம போய், தன்னம்பிக்கையோடு ஓடும் மூன்றாவது நபரை எப்படி பயத்தின் கழுவில் ஏற்றி அவரையும் உருப்படாம ஆக்கலாம் என யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இங்கு பெரும்பான்மை சமூகத்தின் மனநிலை மேலே சொன்னபடி தான் ஒரு சக்கரத்தைப் போல் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இங்கே ஒரு மனிதனுக்கு நம்பிக்கையை கொடுப்பதை விட, மிக எளிதாக நம்பிக்கையற்ற தன்மையை கொடுத்துவிட முடிகிறது. காரணம், மிக எளிமையானது, ஒரு வகையில் எதிலும் நம்பிக்கையற்ற தன்மையோடு சுற்றிக் கொண்டிருக்கும் எவரிடமும், எதிலுமே ஆழமான தெளிவு இருப்பதில்லை. அதே நேரம் அப்படியான தெளிவைப் பெற எவ்விதமான மெனக்கெடலிலும் இறங்குவதும் இல்லை. ஒரு முறை நம்பிக்கையைப் பற்றி பேச வேண்டிய கூட்டத்தில் என்னிடம், எது தன்னம்பிக்கையை வளர்க்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்ட பொழுது. நான் சொன்ன பதில், தெரியாத விஷயத்த முதலில் முழுமனதோடு எனக்கு இதனைப் பற்றி தெரியாது என்று ஒத்துக் கொள்கிற மனநிலை தான் ஒருவனை தன்னம்பிக்கை உடையவனாக மாற்றும் எனச் சொன்னேன். அப்படித் தெரியாது என ஒத்துக் கொள்வதில் தான் இங்கு பெரும்பாலான நேரங்களில் மனித மனங்களின் பிரச்சனையே. காரணம், தெரியாது என ஒத்துக் கொள்வதினுள் தான் ஒவ்வொரு தனிமனிதனுடைய ஈகோவும் ஒளிந்திருக்கிறது. எனக்குத் தெரியாது நீ சொல்லு கேட்டுக்கிறேன் என்று சொல்லிவிட்டால், என் இமேஜ் என்ன ஆவது என்கிற திமிர் இருக்கிறது இல்லையா. அதனை ஒழிக்க முடியாதவரை உள்ளுக்குள் எலியாகவும், வெளியில் புலியாகவும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியது தான். அந்தப் புலி, எலி தான் என்பது எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்படும் என்கிற பயம், அந்த புலிக்குள் ஒளிந்திருக்கும் எலிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். தனக்குத் தெரியாத அல்லது எந்த வகையிலும் தனக்கு அனுபவமே இல்லாத ஒன்றினைப் பற்றி தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள அதில் நிபுணத்துவமாக இருக்கும் ஒருவரிடம் சரணடைதல் என்பது ஒரு ஆழமான பண்பு. அது ஒன்றும் அடிமை மனநிலை அல்ல. அது எப்படியெனில் ஒரு முறை அராத்து சாருவைப் பற்றி, அவரின் கோபத்தைப் பற்றி எழுதியிருந்தது இங்கே நினைவுக் கூறத்தக்கது. உன் அறிவுக் கண்ண திறந்துவிட்டவன் உன்ன ஒரு அறை விட்டால் கூட என்ன, மூடிகிட்டு அவன் சொல்றத கேக்குறதுல உங்களுக்கு என்னடா பிரச்சனை எனக் கேட்டிருந்தார். சத்தியமான உண்மை அது. ஆனால் இங்கு என்ன விட எல்லாம் தெரிஞ்சவன் எவனும் இல்லை என்கிற மனநிலை வரும் பொழுது என்ன விளங்கும் சொல்லுங்கள்.

இப்படி தன் பயத்தினால் நம்பிக்கையற்ற தன்மையோடு உலவிக் கொண்டிருக்கும் நபர்களால் ஏற்படும் மற்றுமொரு மிக, மிக முக்கியமான பிரச்சனை. தங்களிடம் தங்களால் ஏற்படுத்த முடியாத நம்பிக்கையை மற்றவர்களின் தலையில் ஏற்றி வைத்துவிட்டு, அப்படி வைக்கப்பட்ட நம்பிக்கையையும் முழுவதுமாக வைக்க இயலாமல், அதனையும் சோதித்துக் கொண்டே, கேள்வி கேட்டுக் கொண்டே இருந்து, தாங்கள் நம்பிக்கை வைத்த நபரையும் கதற வைத்துக் கொண்டே இருப்பது. தங்களால் தங்களுக்குள்ளும் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்த முடியாமல். தாங்கள் நம்பிக்கை வைத்த நபரையும் முழுவதுமாக நம்பிக்கையோடு அணுக முடியாமல் இருப்பவர்களின் மனநிலையை எதன் அடிப்படையில் அணுகுவது அல்லது புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. சரி இதனைச் சரி செய்து பயமற்ற தன்மையோடு இருக்க என்ன தான் செய்ய வேண்டும் எனக் கேட்டால், எதையாவது ஆழமாகக் கற்றுக் கொள்ளுங்கள் எனச் சொல்வேன். ஆனால் ஒன்று. அது கலை சார்ந்து இருத்தல் மிக, மிக அவசியம். மற்றொன்று அப்படி நீங்கள் கற்றுக் கொள்வது உங்களை சிறிதளவேனும் மேம்படுத்துவதாக இருத்தல் அதைவிட முக்கியம். அப்படிக் கற்றுக் கொள்வதின் வழியே அவர்களால் பொருளீட்ட முடிந்தால் அது ஒரு குறைந்த பட்ச நம்பிக்கையையாவது அவர்கள் மீது அவர்களுக்கே ஏற்படுத்தும். அப்படித் தான் இப்படியானவர்களின் மனநிலையை கொஞ்சத்துக்கு, கொஞ்சமாவது சரி செய்ய முடியும் என நம்புகிறேன். ஆனால், இப்படி நம்பிக்கையற்ற மனநிலையில் சுற்றிக் கொண்டிருப்பவர்களின் இயல்பான மனநிலையானது, தொடர்ந்து ஆழ்ந்து கற்றுக் கொள்ளும் நிதானத்தையோ, பொறுமையையோ அல்லது கவனத்தையோ அவர்கள் கற்றுக் கொள்ளும் கலையின் மீது குவிக்கவிடாது என்பது தான் அவர்கள் முன் இருக்கும் மிகப் பெரிய சவால். இந்தச் சவால்களை எல்லாம் கடந்து ஒருவர் கலை சார்ந்து ஏதேனும் ஒன்றை தொடர்ந்து ஆழ்ந்து கவனமாகக் கற்றுக் கொண்டு, பயிற்சி செய்து கொண்டே இருக்கும் பட்சத்தில், அந்தப் பயிற்சியின் வழியே அவருக்குள் ஏற்படும் நம்பிக்கை கொடுக்கும் தைரியம், அவரைக் கண்டிப்பாக பயம் என்கிற கழுவில் ஏற்ற விடாது. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916