வாழ்ந்து பார்த்த தருணம்…205

முதல் புள்ளி…

கலிகாலம் இந்தச் சொற்றொடர் அல்லது இந்தப் பதம் பல காலமாக மக்களிடையே பல்வேறு வடிவங்களில் பற்றிப் பரவியிருக்கிறது. கலிகாலமாய் இந்தக் காலம் மாறிவிட்டதற்கு நாம் கண்டிப்பாக காரணமேயில்லை என ஒவ்வொரு மனிதனும் முழுமையாய் நம்பிக் கொண்டிருக்கிறான். அதனையேச் சுற்றத்தாரிடமும் பரப்பிக் கொண்டும் இருக்கிறான். ஆனால் கலிகாலம் என்பது உண்மையில் என்ன. அதன் அடிப்படையில் உலகம் அழிந்துவிடுமா என்கிற விவாதம் தனியாகப் போய்க் கொண்டே இருக்கிறது. அந்த விவாதம் என்கிற தீயில் நன்றாக பெட்ரோலை ஊற்றி எறிய விட்டு காசுப் பார்க்கவென்றே ஒரு தனிக் கூட்டம் வேறு அதனை 2012 போன்ற ஆங்கில ஹாலிவுட் திரைப்படங்களாக எடுத்து பீதியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த உலகத்தின் அழிவு என்பது 2012 போன்ற ஆங்கில ஹாலிவுட் திரைப்படத்தில் காட்டப்படுவது போல் ஒரே நாளில் உடனடியாக நிகழ்ந்து விடுமா என இன்று இந்தச் சமூகத்தை நோக்கிக் கேட்டால். அதில் பெரும்பாலானவர்களின் பதில் அதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதாகத் தான் இருக்கும். உண்மையில் அப்படி ஒரே நாளில் உலகம் அழிவது சாத்தியமா எனக் கேட்டால் வாய்ப்பேயில்ல ராசா. ஆனால் இந்த பூமியை அழிக்கும் மனிதனின் முதல் புள்ளி தொடங்கிவிட்டதா என்றுக் கேட்டால். கண்டிப்பாக என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதனை எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் இந்த பூமியின் அழிவினைப் பற்றி வந்து கொண்டிருக்கிறதே அதன் அடிப்படையிலா எனக் கேட்டால். கண்டிப்பாக இல்லை. அதனைத் தாண்டி சில நிகழ்வுகள் நம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த மோசமான நிகழ்வுகள் நம் கடைக் கோடி கிராமம் வரை இன்று எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அதனை நம்மால் நின்று நிதானமாக கவனிக்க முடியவில்லை அல்லது கவனிக்கத் தேவையில்லை என்கிற மனநிலையில் நாம் சுற்றிக் கொண்டிருக்கிறோம். காரணம், இந்த உலகம் கொஞ்சம், கொஞ்சமாக நம் போன்ற மனிதர்களின் பேராசை என்கிற அலட்சியத்தால் எல்லாம் அழியாது. அது ஒரே நாளில் அழியும் என்கிற ஆழமான அலட்சியமான நம்பிக்கை தான். அந்த அலட்சியம் கலந்த நம்பிக்கை தான் நம்மை நம் கண் முன்னே நடக்கும் பல மாற்றங்களை கவனிக்க திராணியற்றவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது.

அப்படி என்ன பெரிய புடுங்கின மாற்றத்தை நீ பார்த்துவிட்டாய் என நீங்கள் கேட்கலாம். சில மாதத்துக்கு முன்னால் குல தெய்வ வழிபாட்டுக்காக, தமிழகத்தின் தென்பகுதியில் என் குடும்ப குல தெய்வக் கோவில் அமைந்திருக்கும் ஒரு சின்ன கிராமத்திற்கு சென்றிருந்தேன். கிராமத்தில் இருக்கும் என்னுடைய நெருங்கிய உறவினர் வீட்டில் தான் தங்கியிருந்தேன். அந்த கிராமத்தில் என்ன ஒரு புதியதான மாற்றம் என்றால், சமீப வருடங்களில் அங்கே நீங்கள் அதிகாலை எழுந்து கொள்ள அலாரம் எல்லாம் வைக்கத் தேவையேயில்லை. அதற்குப் பதிலாக அதிகாலையிலேயே மயிலின் அகவோசை உங்களை தூங்கவே விடாமல் எழுப்பிவிடும். இப்படி இந்தக் கிராமத்தில் நடப்பது எல்லாம் சமீபத்திய வருடங்களில் தான். அதிகாலையைத் தாண்டியதும் சில மயில்கள் மட்டுமே நம் கண்களில்படும் மற்றவைகள் காணாமல் போகும். அது எங்கே போகிறது என யோசித்துக் கொண்டிருக்கையில். அந்த வீட்டின் அருகில் இருக்கும் என் குடும்பத்துக்கு நெருக்கமான உறவினரான தாத்தா ஒருவர் என்னை வா எனக் கூட்டிப் போய் அவரின் தோட்டத்தைக் காண்பித்தார். அது வாழை மற்றும் சில பழங்கள் விளைவிக்கப்படும் தோட்டம். அங்கே நான் கண்டது, அந்த தோட்டத்தின் மறைவான இடங்களில் எல்லாம் மயில்கள் உலாத்திக் கொண்டிருந்தன. அதே நேரம் தோட்டத்தில் பயிரப்பட்டிருப்பவைகளை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தன. அந்தத் தாத்தா என்ன பண்ணுனாலும் அடுத்த அரைமணி நேரத்தில் தோட்டம் நாசக் காடாகிவிடும் என்ன பண்ணுறதுன்னு தெரியல தம்பி என்றார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். அதன்பின் சில மாதங்கள் கழித்து என்னுடைய அலுவல் ரீதியான பயணத்தில், சேலத்தில் இருந்து சில கீலோமீட்டர்கள் தள்ளி மிக சின்ன கிராமத்தின் எல்லையில் இருக்கும் ஒரு விவசாய குடும்பத்தினைக் காணச் சென்றிருந்தேன். அந்தக் குடும்பத்தில் இருந்த ஒருவரிடம் பேசிவிட்டு, அவர் பயிர்கள் மற்றும் நெல் விளைவித்திருக்கும் வயலின் வரப்பு எல்லையில் நடந்து கொண்டிருக்கையில், அங்கே மயிலின் நடமாட்டத்தினைக் கண்டு அவரிடம் கேட்ட போது, அது உள்ள இறங்குச்சுன்னா நெல் மொத்தத்தையும் காலி பண்ணிடும் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே. ஒரு நிமிஷம் இருங்க தம்பி நான் போய் விரட்டி விட்டு வந்திடுறேன் என்று அங்கிருந்த வயதான தாய் ஒருவர் நெல் விளைவிக்கப்பட்டிருக்கும் நிலத்தை நோக்கி ஓடினார்.

மேலே சொல்லியுள்ள இரு நிகழ்வுக்கும் அழிவுக்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்களுக்கான விளக்கம் தான் இனிச் சொல்லப் போவது. பொதுவாக நாமெல்லாம் மயிலினை கடவுளின் வாகனமாக, அதனைத் தாண்டி தேசியப் பறவையாக அதன் அழகில் லயிப்பவர்களாக கண்டு பழகி இருக்கிறோம். இவை எல்லாமே மயில் அதன் எல்லைக்குள் இருக்கும் வரை தான். அது எப்பொழுது மனிதன் வாழும் பகுதிகளுக்குள் வர ஆரம்பித்து விட்டதோ, அப்பொழுதே எங்கேயோ இந்த இயற்கையின் உயிரியல் சமநிலையில் மனிதனாகிய நாம் மிக மோசமாக கை வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். எங்கேடா நாம் கை வைத்திருக்கிறோம் எனத் தேடிய போது வந்து விழுந்தன சில அதிர்ச்சியான தகவல்கள். இந்த பூமியில் உலவும் பல்வேறு உயிரினங்களின் சமநிலையைப் பேணுவதற்காக, இந்த இயற்கை மிகச் சரியான கணக்குகளை போட்டு வைத்திருக்கிறது. அதனைத் தான் உயிரினச் சமநிலை எனச் சொல்வார்கள். சின்ன உதாரணம் ஒரு புலி ஒன்று காட்டுக்குள் தன் வாழ்வை தக்க வைக்க, இத்தனை மான்கள் தேவை. அப்படி அத்தனை மான்கள் இருக்க வேண்டுமெனில், புல்வெளிகள் எவ்வளவு இருக்க வேண்டும். அந்த புல்வெளிகள் செழித்திருக்க, எவ்வளவு மழை பொழிய வேண்டும் என்று அந்த கணக்கின் சுழற்சி மீண்டும் புலியிடமே போய் நிற்கும். அதனால் தான் புலியை இயற்கையின் கன்னி எனச் சொல்வார்கள். அந்த சுழற்சி கணக்கைத் தான் ஒரு வகையில் உயிரியல் சமநிலை என்றும் சொல்வார்கள். முடிந்தால் அதனை இணையத்தில் தேடி வாசித்துப் பாருங்கள். அதன் அடிப்படையில் மயில்களின் எண்ணிக்கை எப்படி திடிரென அதிகமாகி இருக்கிறது. இந்த மனிதன் தன் சுயநலத்திற்காக எங்கே கைவைத்திருக்கிறான் எனத் தேடினால். அவன் கை வைத்திருப்பது குறுங்காடுகளை. முன்னரெல்லாம் கிராமத்திற்கு மற்றும் சிறு நகரங்களுக்கு வெளியே குறுங்காடுகள் உண்டு. அப்படியான காடுகளுக்குள் உலவிக் கொண்டிருந்த மிக முக்கியமான விலங்கு நரி. அந்த நரிகளின் பிரதான உணவே மயில்களின் முட்டைகள் தான். இப்பொழுது அத்தகைய காடுகளை அழித்துத் தான் மனிதன் மனைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறான். அந்தக் காடுகளுக்கு சுற்றித்திருந்த நரிகள் இன்று அழிந்துவிட்டன, அவைகள் உண்டு வாழ்ந்த உணவான மயில் முட்டைகளின் சமநிலை குழைந்து மயில்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்திருக்கிறது. அதாவது மனிதன் என்கிற ஒரு உயிரினம் தன் இனப்பெருக்கத்துக்காகவும், தன் இருப்பிடத் தேவைக்காவும் இந்த இயற்கையின் சமநிலையைப் பற்றி கிஞ்சிதும் கவலைப்படாமல் செய்து கொண்டிருக்கும் செயல்களுடைய பாதிப்பின் முதல் புள்ளியை மயில்கள் ஆரம்பித்து வைத்திருக்கின்றன. இந்த முதல் புள்ளியின் இறுதிப் புள்ளி எங்கு போய் முடியும் என்கிற கேள்விக்கான விடை, கண்டிப்பாக அந்த இயற்கையிடம் மட்டுமே இருக்கிறது. இயற்கை விடையளிக்கும் முன்னர் மனிதன் விழித்துக் கொண்டால் நலம். மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916