வாழ்ந்து பார்த்த தருணம்…206

கருப்பன் குசும்புக்காரன்…

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஷாருக்கான் நடித்து அட்லீ இயக்கியுள்ள ஜாவன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. ஷாருக்கான் அட்லீ இணைந்து படம் செய்யப் போகிறார்கள் என்றதுமே, அது எந்தப் படத்தின் உல்ட்டாவாக இருக்கும் என்கிற மில்லியன் டாலர் கேள்வி எல்லோருக்கும் மனதுக்குள் ஓட ஆரம்பித்துவிட்டது. காரணம் நம்ம தலைவன் அட்லீயின் பழைய வரலாறும், அலும்பும் அப்படி. கொஞ்சம் கூட கூச்ச நாச்சமெல்லாம் இல்லாமல் அலட்சியமாக பழைய படங்களில் இருந்து உருவி அட்டகாசமாக சீனைப் போட்டுக் கல்லா பொட்டியை ரொப்பி விடுவதில் கில்லாடி. அட்லீக்கு மிகப் பெரிய பலமே இங்கிருக்கும் 2கே கிட்ஸ் யாரும் 80, 90 களில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட்டான எந்தப் படத்தையும் பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் அதிலிருந்து உருவி எளிதாக ஏமாற்றிவிடலாம். அந்த வரிசையில் தலைவனின் முதல் படம் ராஜா ராணி மெளனராகம் படத்தின் சிறப்பான உல்ட்டா. 2கே கிட்ஸ் சிலாகித்து சீட்டி அடித்ததில் படம் பீய்த்து கொண்டு போனது. எனக்கு என்னவோ ராஜா ராணி பீய்த்துக் கொண்டு ஓடியதை பார்த்துத் தான், ஆகா இது நாம சொந்தமா யோசிக்காம அடுத்தவனோட கதைய, அதுவும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான கதைய, அப்படியே நோகாம எடுத்து நோன்பு கும்பிட சரியான பாதையா இருக்கே என யோசித்தவருக்கு, அடுத்த வாய்ப்பாக வந்து விழுந்த விக்கெட் தான் விஜய். ஆச்சா. விஜயை கவுத்தியாச்சு என்ன பண்ணலாம் சிந்தித்தவருக்கு. விஜய்க்கு வாழ்வு கொடுத்த விஜயகாந்த் படத்தையே உல்டா பண்ணினால் என்ன என முடிவானதும், ஒரு சின்ன யோசனை முதலில் நாம் ஆட்டய போட்டது மணிரத்தினம் படத்த. அந்த நன்றிய மறக்காம, அவர் தயாரிச்ச படத்தயே ஆட்டய போடலாம் என சிந்தித்தவருக்கு மாட்டியது சத்திரியன். விஜயண்ணாவையும் நல்ல ஆக்சன் போலிஸ் படம் பண்ணி கவுத்திரலாம் என கணக்குப் போட்டு சத்திரியனை தெறிக்க விட்ட படம் தான் தெறி. ஆச்சா. மீண்டும் வேறு எங்கயும் போனால் எனக்கு சரியா வராது. அதனால் நான் விஜயண்ணாவுக்காக படம் பண்ண வந்தவன் கனவுல கூட விஜயண்ணா தான் வாரார் என பிட்டப் போட்டு, மீண்டும் விஜயண்ணாவ கவுத்த மீண்டும் விஜயண்ணாவும் அவுட். இம்முறை கொஞ்சம் பிரம்மாண்டமா வித்தியாசமா பண்ணலாம் என தேடியவருக்கு 80, 90களில் யார் வித்தியாசமா யோசிச்சிருக்கா எனத் தேட. இம்முறை மாட்டியது உலக நாயகனின் அபூர்வ சகோதரர்கள். விஜயண்ணாவ முட்டி போட வைக்க முடியாது. அப்ப ஜீம் பூம் பா என வித்த காட்ட வைக்கலாம். குள்ள கமலுக்கு பதிலாக மேஜிக் விஜய். அட செம்மல்ல. கமல் படத்தை எடுத்து மெர்ஸலா இருக்குல என அவரிடமே காட்ட. அவர் நேக்காக அபூர்வ சகோதர்கள் பின்னனியில் ஆசிர்வாதம் பண்ணி அசிங்கப்படுத்த. நம்மால் அதற்கெல்லாம் அசரவே இல்லை. மீண்டும் அதே விக்கெட் விஜயண்ணா. இந்த தடவ தமிழ்நாட்ட தாண்டி போகலாம் என சிந்தித்த போது மாட்டியது தான் சக்தே இந்தியா. விஜயண்ணாவ தமிழ்நாட்டோட ஷாருக்கானாக மாற்றி பிகிலாக பறக்கவிட்டார். சரி அடுத்து, தனது கடைசி படத்துக்காக தமிழ்நாட்டை தாண்டியவருக்கு, தான் உல்டா செய்த படத்தின் நாயகனே மாட்டுவார் என எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் மாட்டினார்.

சரி மாட்டிவிட்டார். ஷாருக்கானுக்காக என்ன செய்யலாம் என நம்ம ஆள் மூளையை கசக்க. அழகான அல்வா ஒன்று மாட்டியது. எல்லோரும் இணைய வெளியில் கண்டுபிடித்து கதறிக் கொண்டிருப்பது போல் விஜயகாந்த் நாயகனாக ரெட்டை வேடங்களில் நடித்த பேரரசு படத்தின் உல்டாவா ஜவான் என்பதற்கான பதிலை பின்னால் பார்க்கலாம். அவ்வளவு ஏன் பேரரசு படத்தின் தயாரிப்பாளரே இணைய வெளியில் கதறுபவர்களைப் பார்த்து, அதனை முழுமையாக நம்பி பேரரசு படத்தினை ரீ ரீலிஸ் செய்து அட்லீயை அசிங்கப்படுத்தப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன, ஆனால் உல்டா செய்வதில் நம்ம ஆள் ரேஞ்சே வேறயாச்சே. அது எப்படி பேரரசு படமாக இருக்க முடியும் என்கிற பட்சி மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. சுந்தரகாண்டம் படத்தில் தான் படித்து வளர்ந்த பள்ளிக்கே பாக்கியராஜ் வாத்தியாராக வரும் பொழுது, தான் படிக்கும் போது வாத்தியாரை என்னவெல்லாம் செய்தோம் என யோசித்து, தான் உட்காரும் இருக்கையை எல்லாம் சோதித்துப் பார்ப்பார். அப்பொழுது அங்குள்ள மாணவன் ஒருவன். எங்க ரேஞ்சே வேற சார் என்பான். அதே தான் நம்ம ஆள் அட்லீக்கும். அவர் ரேஞ்சே வேற லெவல். ஜாவன் டிரைலர் ரீலிஸ் ஆனதும் அதைப் பார்த்த ஒரு 2கே கிட்ஸின் கமெண்ட். மொத்த டிரைலரைப் பார்த்தும் கதையை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் செம்மயான டிரைலர் எனப் போட்டிருந்தார். இது தான் தலைவன் அட்லீக்கும் வேண்டும். ஏன்னா எங்க தலைவனோட உருட்டு அப்படி. ஆனால் டிரைலரைப் பார்த்ததும் இத எங்கயோ பார்த்திருக்கமே என கொஞ்சம் யோசித்தால், இது அதுல்ல என மூளைக்குள் ஒரு பட்சி அலறியது கேட்டது. சும்மா சொல்லக் கூடாது தலைவன் அட்லீ இந்த முறை உல்டா பண்ண கொஞ்சம் அதிகமாகவே யோசித்திருப்பது தெரிகிறது. சரி அப்படி எந்த படத்தை தான்யா உல்டா பண்ணியிருக்கான் என சொல்லித் தொலை எனக் கேட்டால். அது ஒரு கைதியின் டைரிக்குள் ஒளிந்திருக்கிறது. இன்னும் புரியாதவர்களுக்காக, 80துகளில் பாரதிராஜாவிடம் இருந்து பிரிந்து பாக்கியராஜ் தனியாக வெற்றிகரமாக இயக்குநராக மாறிய பிறகு, ஒரு இக்கட்டான சூழலில் தனது குருவுக்காக எழுதிக் கொடுத்த கதை தான் ஒரு கைதியின் டைரி. பாக்கியராஜ் கதை, வசனம் எழுதி பாரதிராஜா இயக்கி இரட்டை வேடங்களில் கமல் நடித்து அதிபுதிரி ஹிட்டான படம் தான் ஒரு கைதியின் டைரி. வெளியான ஆண்டு 1985. படத்தின் கதையை பார்ப்பதற்கு முன்னால், இந்த படத்திற்கு பின்னால் இன்னுமொரு சுவாராஸ்யமான பின்னனி இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் பாக்கியராஜ் கதைக்கென்று ஹிந்தியில் பெரிய மார்கெட் உண்டு, அதன் காரணமாக குருநாதருக்காக எழுதிக் கொடுத்த கதையை அமிதாப்பை வைத்து பாக்கியராஜ் அவர்களே ஹிந்தியில் இயக்கினார். படத்தின் பெயர் ஆக்ரி ராஸ்தா. ஹிந்தியிலும் படம் மரண ஹிட். தமிழில் எடுக்கப்பட்ட படத்தின் கிளைமேக்சுக்கும், ஹிந்தியில் எடுக்கப்பட்ட ஆக்ரி ராஸ்தா படத்தின் கிளைமேக்சுக்கும் வித்தியாசம் உண்டு. அது ஒரு தனிக் கதை. அதனைப் பற்றி இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள் சரியா.

இப்பொழுது ஒரு கைதியின் டைரி கதைக்கு வருவோம். கதைப்படி படத்தின் முதல் நாயகன் அப்பா ஒரு முக்கியமான அரசியல் இயக்கத்தின் மீது பற்று கொண்ட தொண்டன். அந்த அரசியல் கட்சியின் தலைவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவன். இந்த நிலையில் ஒரு நாள் தன் குழந்தைக்கு பெயர் வைக்க மனைவியுடன் தன் கட்சியின் தலைவனைப் பார்க்கப் போகிறான் நாயகன். அங்கே கட்சியின் தலைவன் தொண்டனின் மனைவி மீது சபலப்பட்டு, நாயகனை ஏமாற்றி ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, அவனின் மனைவியை கற்பழிக்க, அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அதனை அறிந்த நாயகன் கட்சி தலைவரை கொல்லப் போக அது முடியாமல் சிறையிலடைக்கப்படுகிறான். இதனால் தன் மகனை நண்பனிடம் கொடுத்து அவனை பொறுக்கியாக, ரெளடியாக வளர்த்து வை. நான் ஜெயிலில் இருந்து வந்ததும், அவனை வைத்தே, அந்த கட்சித் தலைவனையும், அவனுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் பழிவாங்குகிறேன் எனச் சொல்கிறான். 22 வருடத்துக்குப் பின் வெளியே வந்த நாயகன், மகனைத் தேடி நண்பனிடம் வர. அங்கே அதிர்ச்சி, ரெளடியாக வளர வேண்டிய மகன், இன்று ஒரு உயர் போலீஸ் அதிகாரி. ஒரு வகையில் பழிவாங்கத் துடிக்கும் அப்பனுக்கு மகனும் எதிரி, அரசியல்வாதியும் எதிரி. அதன் பின் நாயகன் என்ன செய்தான். நாயகனின் மகனான மற்றொரு நாயகனுக்கு உண்மை தெரிந்ததா. அவன் என்ன செய்தான். கட்சித் தலைவன் என்ன ஆனான் என்பது தான் கதை. அப்பன், மகன் என இரண்டு வேடங்களிலும் கமல். கட்சித் தலைவராக மலேசியா வாசுதேவன். அப்பாவுக்கு ஜோடி ராதா. மகனுக்கு ஜோடி ரேவதி. கமலின் நண்பனாக ஜனகராஜ். ஒகே வா. இப்பொழுது அப்படியே ஜவான் டிரைலருக்கு வருவோம். இங்கே இரண்டு நாயகர்கள் ஒன்று அப்பன். மற்றொருவன் மகன் ஆச்சா. அப்பன் வயதானவன். அவனுக்கு டிரைலரிலேயே பிளாஸ் பேக் இருப்பது தெரிகிறது. ஆனால் மகன் அதே போலீஸ் அதிகாரி தான் ஒகேவா. அப்பனுக்கு ஜோடி தீபிகா படுகோன். மகனுக்கு நயன்தாரா. அரசியல் கட்சி என்பதற்கு பதில் ராணுவம் ஒகேவா. கட்சி தலைவருக்கு தொண்டனின் மனைவி மீது கண் என்பதை ராணுவப் பின்னனியில் வெப்பன் டீலிங் என மாற்றமாகிவிட்டது. கட்சி தலைவருக்கு பதில் வெப்பன் டீலிங் ஏஜெண்ட்  முன்னால் ராணுவ அதிகாரி விஜய் சேதுபதி. வெப்பன் டீலிங்கிற்கு ஒத்துவராத இளமையான அப்பன் ஷாருக்கானின் குடும்பத்தை இளமையான விஜய் சேதுபதி அழிக்க. ஜெயிலுக்குப் போகும் அப்பன் ஷாருக்கான், வயதாகி வெளியே வந்து, தன்னைப் போலவே வயதான விஜய் சேதுபதியை பழிவாங்கத் துடிக்க, இப்பொழுது மகன் போலிஸ் ஷாருக்கான் அதனை எப்படி முறியடிக்கிறார். அவருக்கு அப்பனின் பிளாஸ் பேக் தெரிந்ததா. வெப்பன் டீலர் விஜய் சேதுபதி என்ன ஆகப் போகிறார் என்கிற மிகச் சிறப்பான உல்ட்டாவைக் காண செப்டம்பர் 7ம் தேதி வரை காத்திருந்து தான் ஆக வேண்டும்.1985ல் அப்பன், மகன், அரசியல்வாதிக்குப் பதிலாக, 2023ல் அப்பன், மகன், வெப்பன் டீலர் நல்லா இருக்குல இந்த உல்ட்டா. ஒரு கைதியின் டைரிக்குள் ஒளிந்திருப்பது ஆக்கி ராஸ்தாவான ஜவான். அட்லீ குசும்புக்காரன்யா நீ…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916