தலைவன் வேற ரகம்…
போன பதிவ பார்த்துட்டு நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்து ஒரு கமெண்ட் வந்தது. இது உங்க ஸ்டைல் இல்லையே அப்படின்னு. அட்லிய பத்தி எழுதும் போது இலக்கியதரத்தோட எழுத முடியுமா என்ன. அதத் தாண்டி இடை இடையில் இப்படியும் எழுதி பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதனால ஆட்டத்த அட்லி கிட்ட இருந்தே ஆரம்பிக்கலாம்னு ஆரம்பிச்சாச்சு. இனிமேல் அப்பப்ப இப்படியும் வரும். சரி ஸ்ரைட்டா மேட்டருக்குள்ள போவோமா. பொதுவா நம்ம ஆளுங்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை ஒண்ணு இருக்கு. அதாவது ஹாலிவுட்ல ரகம், ரகமா சூப்பர் ஹீரோவ அலமாரியில அடுக்கி வச்சிருக்கானுக. ஆனா நம்ம அலமாரில ஒண்ணு கூட இல்லைன்னு ரொம்ப பீலிங் நம்ம ஆளுங்களுக்கு நிறைய இருக்கு. ஆனா நம்ம கிட்ட அவிங்கில விட அட்டகாசமான சூப்பர் ஹீரோ ஒருத்தர் இருக்கார். ஆனா நாம தான் சூப்பர் ஹீரோவுக்கு எப்படி பவர் வந்துச்சுன்னு லாஜிக் பேசிட்டு திரிவோம். ஹாலிவுட்காரன் வந்து, எங்க சூப்பர் ஹீரோவுக்கு எப்படி பவர் வந்துச்சுன்னு தெரியுமா அப்படின்னு, அறிவியல்பூர்வமா ஒண்ணு சொல்றேன்னு சொன்னதும், உடனே நமக்குள்ள இருக்க மொத்த அறிவியல் அறிவும் நட்டுகினு நின்னு, ஆகா வெள்ளக்காரன் சொன்னா வெங்காயமா தான்யா இருக்கும்னு சொல்லி, அவன் என்ன சொன்னாலும் வாய பொளந்து பார்க்க ஆரம்பிச்சிருவோம். ஏன்னா நம்ம டிசைன் அப்படி. ஆனா நம்மகிட்ட இருக்க சூப்பர் ஹீரோ இருக்காரே அவருக்கு எந்த பவரும் தேவையே இல்ல. அவரே ஒரு பவர் தான். யாருய்யா அவருன்னு நீங்க கேக்குறது கேக்குது. மொத்த இந்தியாவுக்கு இவர் ஒருத்தர் தான் சூப்பர் ஹீரோ. இவர் ஒருத்தரே போதும். இவர் பக்கத்துல ஒரு பய நிக்க முடியாது. அவரு தான் எங்களோட வேற ரகமான ஒரே தலைவன் பாலைய்யா. ஜெய் பாலைய்யா. சிங்கம் சூர்யா அடிச்சா ஒன்ட்ர டன் வெயிட்டுன்னா. எங்க ஆள் அடிச்சா ஒன்பது டன் வெயிட்டு. அடிக்கிற அடியில இன்னோவாவே இத்துக்கிட்டு போயிரும், இந்த பிரபஞ்சமே பின் வாங்கும். ஹாலிவுட் சூப்பர் ஹீரோ எல்லாத்துக்கும் வயசு ஆக, ஆக பவர் குறையும், நம்ம ஆள் வேற ரகம். அதனால அப்படியே உல்ட்டாவா வயசு ஆக, ஆக சும்மா பவர் கூடிகினே போகுது. அப்படிப்பட்ட ஆளுகிட்ட போய் உங்களுக்கு எப்படி பவர் வந்ததுன்னு கேக்கிறது எல்லாம் நம்மளோட போதாமையத் தான் காட்டுது. போதாமையா அப்படின்னா, ஐய்யையோ உளறிட்டனா. அடேய் ஒரு ஃப்லோல போகும் போது ஏன் இப்படி. எழுதுறத புரியுற மாதிரி எழுது. பிரிஞ்சிதா. பீ கேர் புல். நான் என்ன சொன்னேன். இப்ப எதுக்குடா பாலையா. காரணம் இருக்குல. அது என்னமோ தெரியல பாலையாகாரு சமீபமா பவர் ஏறுன பிறகு, அதுவும் மியூசிக் டைரக்டர் தமனோட சேர்ந்த பிறகு, வேறு ஒரு ஆளா புதுப் பவரோட மாறிட்டாப்ல. எனக்கே ஒரு சந்தேகம் ஒரு வேளை தமனும், பாலையாவும் போன ஜென்மத்துல ஒண்ணா மண்ணா சுத்திகிட்டு இருந்திருப்பாங்களோன்னு டவுட்டா இருக்கு. காரணம். பாலைய்யாகாருக்கு மட்டும் தமன் போட்ற மியூசிக் கொஞ்சம் ஸ்பெஷல்லாவே இருக்கு அதனால தான்.
பாலையாகாரும் தமனும் மொத்தல்ல சேர்ந்த படம் அகண்டா. அந்த படம் ரீலிஸ் ஆன நேரம் தெலுங்கு தேசம் பக்கம் போயிருந்தேன், அப்ப அங்கிருந்த நண்பர் ஒருத்தர். அகண்டாவ அகண்ட திரையில் பார்க்கலாம் வாங்கன்னார். அந்த நேரம் பார்த்து எனக்குள்ள இருந்த அறிவு ஜீவி எட்டிப் பார்க்க, உடனே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறமா நம்ம ஊருக்கு கிளம்பி வந்து பார்த்தா, அகண்டாவ பத்தி வந்த நீயூஸ் எல்லாம் அதகளமா இருக்க. ஐய்யையோ அகண்டாவ அகண்ட திரையில பாக்குற பாக்கியத்த இழந்த பாவி ஆகிட்டனேன்னு ரொம்ப பீல் ஆகிடுச்சு. அப்புறம் இன்னொரு நாள் ஒரு அட்டகாசமான மெலடிய தற்செயலா ஏதோ தெலுங்கு எப் எம்ல கேட்டேன். பாட்டு அட்டகாசமா இருந்துச்சு. என்ன படம்ன்னு கேட்டா அகண்டா அப்படின்னாங்கே. அப்படியே ஷாக் ஆகிட்டேன். இப்படி ஒரு ஸ்டன்னிங் மெலடி நம்ம தலைவனுக்கான்னு போய்ப் பாத்தா. அப்படியே தலைவன் பிங்க் கலர் டிரஸ்ல பீலிங்வுட்டாப்ல அட்டகாசம், பாட்டோட முதல் வரி Adigaa Adigaa அப்படின்னு ஆரம்பிக்கும் போய்ப் பாருங்க. Adigaa Adigaa பாட்ட கேக்கப் போறீங்களா, பாக்கப் போறீங்களா அப்படிங்கிறது உங்க சாய்ஸ். தலைவனோட பிங்க் கலர் பீலிங்க பார்க்கலைன்னா தெய்வ குத்தமாகிரும் சொல்லிட்டேன். அப்புறம் அதே அகண்டாவுல ஜெய் பாலையா சாங். தலைவன் பாலைய்யா பால கைல வச்சுக்கிட்டு சும்மா பறக்கவிட்றுப்பாப்ல. பாலையா பால பறக்கவிட்றத கண்டிப்பாக பார்த்து ஊய்யவும். அதே ஜெய் பாலைய்யா பாட்டு பாலைய்யாவோட கீதமா வரலாற்றுல நிலைச்சு நின்னுருச்சு. ஆச்சா. அகண்டா கொடுத்த அதிரிபுதிரி ஹிட்ட பார்த்துட்டு. குறிப்பா பாட்டும், பேக் ரவுண்டும் தியேட்டர்ல தெறிச்சத்த பார்த்த பாலைய்யாகாரு, யோசிக்காம அடுத்த படத்துலயும் தமனயே கூப்பிட்டாப்ல. என் தலைவன் பாலைய்யாவுக்கு அகண்டால இருந்த ஒரே பிரச்சன டபுள் ஆக்ட் பண்ணியும், ஒருத்தன சாமியாரா மாத்தி ஹீரோயின் இல்லாம ஆக்கிட்டானுக. அடுத்த படத்துல இத சரி பண்ணியே ஆகணும்னு முடிவு பண்ண. அடுத்த படமான வீர சிம்ம ரெட்டிலயும் டபுள் ஆக்ட். தக்காளி சாமியாராவது, மாமியாராவது புக் பண்றா ரெண்டு ஹீரோயின அப்படின்னு பிடிச்சதுல, மாட்டுனது ஹனியும், சுருதியும். முதல்ல சுவை அப்புறம் ராகம். அமர்களமா இருக்குல. ஏன்னா தலைவன் ரகம் அப்படி. தலைவன் சுவையோட ராகமா ரகம், ரகமா ஆட்டத்தப் போட கதையாவது மண்ணாவது தலைவன் ஆட்டத்துக்காகவே படம் மரண ஹிட். இந்தப் படத்துலயும் சும்மா சொல்லக் கூடாது பாட்டெல்லாம் மரண ஹிட். உலகத்துலயே பொண்டாட்டியோட போய் ஐட்டம் சாங் ஆடுன ஒரே சூப்பர் ஹீரோ நம்ம தலைவன் பாலைய்யா தான். படத்துல பாவா, பாவான்னு ஒரு ஐட்டம் சாங். சும்மா சொல்லக்கூடாது ரசினிகாந்த் என்ன ரசினிகாந்த் பாவா பாட்டுல நம்ம தலைவன் சிகரெட்ட வாயில தூக்கிப்போட்டு டான்ஸ் செட்ப்ப போட்ற சீன் ஒண்ணு இருக்கு. தலைவன் அத்தோட நிக்கல. வாயில சிகரெட்ட வச்சு ஊதிகிட்டே மைக்கேல் ஜாக்ஸனோட மூன் வாக் ஒண்ணு போடுவாப்ல பாருங்க. வைடா குளோஸ்ப்ப காலுக்கு. செத்தாண்டா சேகரு. அதே பாட்டுல தலைவன் தள்ளு வண்டியில மல்லாக்க படுத்துகிட்டு மரணமா போட்ட ஸ்டேப்பு எல்லாம் மறக்காம மறுபடியும் போடச் சொல்லி சும்மா தியேட்டர் தெறிச்சது. சூப்பர் ஹீரோன்னா இப்படி இருக்கணும். அத விட்டுட்டு உலகத்த காப்பத்துறேன், உலோகத்த காப்பத்துறேன்னு. சும்மா ஜல்லியடிச்சுகிட்டு. ஆச்சா.
தெலுங்குல கூட ஒரு ஹீரோ சூப்பர் ஹீரோ ஆகணும்மா, பாகுபலி மாதிரி ஒரு பாண்டஸி உலகத்த உருவாக்கியே ஆகணும். அங்க தான் நீங்க ஒரு மலையில இருந்து இன்னொரு மலைக்கு பறக்குறது, பனமரத்த ஒத்த கையால தூக்கி அடிக்கிறது. தேர ஒத்த ஆள இழுக்கிறது. சிவன் சிலைய அலேக்கா தூக்குறதுன்னு இப்படி பற்பல வித்தைகள சூப்பர் ஹீரோங்கிற பேர்ல சாகசம் எல்லாம் பண்ண முடியும். அப்ப தான் நாங்க நம்புவோம்ன்னு நிப்பாங்கே. ஆனா எங்க தலைவனுக்கு அந்தக் கதையெல்லாம் இல்ல. அவர் இப்ப இருக்குற உலகமே பாண்டசியானது தான். தனியாவெல்லாம் செய்ய வேண்டியதே இல்ல. இருக்க இடத்தில இருந்துகிட்டே எல்லாத்தையும் லெப்ட் கையால டீல் பண்ணுவாப்ல நம்ம ஆள். அப்படி அடுத்ததா தமனோட சேர்ந்து 2023க்கு பாலையாகாரு களமிறங்கப் போற படம் தான் பகவந்த் கேசரி. கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி தலைவன் பிறந்த நாள் அன்னிக்கு படத்தோட டீசர் ரீலிஸ் ஆச்சு. காதையும், மூளையையும் கனெக்ட் பண்ணி தலைவன் கொடுத்த பஞ்ச் டயலாக்கோட இணையத்தையே சும்மா தெறிக்க விட்டது தலைவனோட டீசர். வழக்கம் போல் பேக் ரவுண்ட் ஸ்கோரில் நம்ம தமன் நின்னு விளையாட்டிருந்தார். ஆச்சா. இப்படியே போயிகிட்டு இருந்தப்ப ஒரு மூணு நாளைக்கு முன்னாடி. தலைவனோட படத்துல இருந்து முதல் சிங்கில் ரீலிஸ் ஆச்சு. அதுவும் எப்படி Ganesh Anthem அப்படிங்கிற பெயர்ல. பாட்டைக் கேட்டதும் தெரிஞ்ச்சிருச்சு. தியேட்டரே சும்மா தெறிக்கப் போகுதுன்னு. முழுப்பாட்டோ வீடியோவும் வரலாட்டியும். தலைவனோட ஸ்டேப் அங்கங்க வருது. அதுல பாருங்க பாட்டோட 1:59 நிமிசத்துல கையில குச்சியோட தலைவன் ஒரு ஸ்டேப்ப போட்டுட்டு, அத முடிக்கிறப்ப ஒரு ரியாக்ஷன் ஒண்ணு கொடுக்குறாப்புல, சும்மா சொல்லக் கூடாது வேற லெவல். அதுவும் இந்தப் படம் நம்ம விஜயண்ணாவோட லியோ ரீலிஸ் ஆகுறப்ப ஆந்திராவுல அதுக்கு ஆப்பு வைக்க அங்க ரீலிஸ் ஆகுது. பாட்ட கேட்ட பிறகு தான் சொல்லுறேன். அண்ணே தனியா வர்ற பாட்ட விட, நம்ம பாலையாகாரு பாட்டு அதகளம். மார்க் மை வேர்ட்ஸ். எழுதி வச்சுக்கோங்க, இந்த விநாயகர் சதுர்த்திக்கு மொத்தமா ஆந்திரா, தெலுங்கு தேசம் என ரெண்டுமே தலைவனோட பாட்டுக்குத் தான் மரணமா ஆட்டம் போடப் போகுது. ஆந்திரா, தெலுங்கு ரெண்டுலயும் விநாயகர் சிலை வைக்கப்போற எல்லா இடத்துலயும் இந்தப் பாட்டு தான் நின்னு விளையாடப் போகுது. நீங்க மட்டும் தான் எல்லாம் ஒரே ஒரேன்னு அலும்பு பண்ணுவீங்களா, நாங்களும் பண்ணுவோம்ல இப்ப சொல்லுறோம் மொத்த இந்தியாவுக்கும் ஒரே தலைவன், ஒரே சூப்பர் ஹீரோ எங்க தலைவன் பாலைய்யாகாரு மட்டும் தான் ஆமா. ஜெய் பாலைய்யா.
பின் குறிப்பும், கடைசிக் குறிப்பும்
சபையோருக்கு ஒரு பணிவான வேண்டுகோள். தயவு செய்து இத படிச்சிட்டு, வன்மத்தோட எழுதியிருக்கீங்க அப்படின்னு எல்லாம் கமெண்ட் போட்டு காயப்படுத்தி கசிந்துருக வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு அமைகிறேன். நன்றி. வணக்கம்…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916