கோணம்…
நான் அந்தக் கோணத்துல அல்லது கண்ணோட்டத்துல அதப் பார்க்கல, செய்யல, புரிஞ்சிக்கல என பலவிதமானச் சொற்கள் பலமுறை நம் காதுகளில், பல்வேறு தருணங்களில் விழுந்திருக்கும். பொதுவாக இங்கே எல்லோருக்கும் அவர் அவர்களுக்கான கோணம் ஒன்று இருக்கிறது. அந்தக் கோணத்தில் அல்லது கண்ணோட்டதில் இருந்து தான் பல விஷயங்களைப் பார்க்க, புரிந்துகொள்ள, உள்வாங்கிக் கொள்ளப் பழகி இருக்கிறோம். அப்படியானக் கோணத்தை இதனை இப்படித் தான் பார்க்க வேண்டும் அல்லது அணுக வேண்டும் என்கிற கண்ணோட்டத்தை நமக்குள் உருவாக்கியது யார் எனப் பார்த்தால். மிகப் பெரும்பாலும் நாம் கடந்து வந்த சமூகமும், அந்தச் சமூகத்தின் உள்ளிருந்து பல்வேறு தருணங்களில் வெளிப்படும் வார்த்தைகளும் தான். விருமாண்டி திரைப்படத்தில் கூட ஒரு நிகழ்வை இருவேறு கோணங்களில் வெளிப்படுத்தும் இரு வேறு மனிதர்களைப் சுற்றித் தான் அந்தக் கதை முழுவதும் நகரும். அதில் யாருடைய கோணம் சரியானது என்பதை நோக்கித் தான் மொத்த திரைப்படமும் விவாதிக்கும் அல்லது கேள்விகளை எழுப்பும். உண்மையில் நடைமுறை வாழ்வில் நம்முடைய கோணத்தையோ, கண்ணோட்டத்தையோ பல நேரங்களில் மறு ஆய்வு செய்கிறோமா அல்லது கேள்விக்கு உட்படுத்துகிறோமா எனக் கேட்டால் பெரும்பாலும் இல்லை என்கிற பதில் தான் வரும். ஏன் என்றால் நம்முடைய கோணம் தான் சரி என அதனை விவாதத்திற்கு உட்படுத்தத் தயாராக இல்லாத ஒரு இடத்தில் போய் வலுவாக நின்று விடுகிறோம். காரணம் அதற்குள் நமக்கு நாமே உருவாக்கி வைத்துள்ள பிம்பம் ஒளிந்திருக்கிறது. அந்த நான் என்கிற பிம்பம் கண்டிப்பாக நம்முடைய கண்ணோட்டத்தை மறு ஆய்வு செய்ய விடாது. ஆனால் அப்படி என்னோட கோணம் மட்டுமே சரியானது என வலுவாக நின்று கொண்டிருக்கும் மனநிலைக்கு செருப்படி விழும் நிகழ்வுகள் போகிற போக்கில் எனக்கு பலமுறை நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன. அந்த மாதிரியான செருப்படி நிகழ்வுகள் மிகப் பெரும்பாலும் வாசித்தலின் போது தான் மிகச் சரியாக விழுகிறது. ஒரு வகையில் அப்படியான அடி நம்முடைய திமிரை நமக்கே காட்டிக் கொடுக்கும் இல்லையா. அதனாலேயே அடிவாங்கினாலும் பரவாயில்லை வாசிக்க வேண்டும் அதற்குள் ஆழமாகச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெற்று விடுகிறது.
கடந்த சில நாட்களாக நேரம் கிடைக்கும் போது எல்லாம், அம்பை கதைகள் (1972 – 2014) என்கிற கதை தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கிறேன். 75 கதைகள் அடங்கிய 1000 பக்கத்திற்கு மேல் இருக்கும் புத்தகம் அது. அதில் வரும் ஒரு கதையினை வாசித்த போது செம்மயான செருப்படி ஒன்று விழுந்தது. அந்தத் தொகுதியில் மும்பைக் கடற்கரையில் சவாரிக்காக அழைத்து வரப்படும் ஒட்டகத்தை பற்றிய கதை ஒன்று இருக்கிறது. அந்தக் கதையின் ஓரிடத்தில் ஒட்டகத்தைப் பற்றி ஒரு உவமைக்காக சொல்லப்பட்டுள்ள வரிகளை அப்படியே இங்கே தருகிறேன். தன் காமத்தை தைரியமாக வெளிப்படுத்தியதால் ஒரு காவிய நாயகனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகைப்போல் நின்று கொண்டிருந்தது. இந்த வரிகளை வாசித்தவுடன் அப்படியே சிறிது நேரம் அந்த வரிகளைத் தாண்டி போக முடியாமல் நின்று விட்டேன். காரணம் அந்த வரிகளுக்குள் ஒளிந்திருக்கும் நாம் என்றுமே பார்க்காத அல்லது பார்க்க விரும்பாத கோணம் ஒன்று இருக்கிறது இல்லையா அது தான். எனக்குள் சூர்ப்பனகையைப் பற்றிய கோணம் அது வரை என்னவாக இருந்ததோ, அதனை ஒரே வரியில் அடித்து நொறுக்கிவிட்டது மேலே சொல்லியுள்ள வரிகள். அந்த வரிகளை வாசிக்கும் போது இந்தக் கோணத்துல நாம ஏன் யோசிக்கணும் என அதனையும் புறக்கணித்து விட்டு நம்முடைய கோணத்தை மாற்றாமலும் கடந்து போகலாம். ஆனால் வாசிப்பு என்பது அது இல்லையே. நானும் மும்பை கடற்கரைக்குச் சென்றிருக்க்கிறேன் அங்கே ஒட்டகங்களைப் பார்த்திருக்கிறேன் என்பதால். இந்தக் கதைக்குள் என்னால் எளிதாக பயணிக்க முடிந்தது. அதனைத் தாண்டி இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ள அந்த உவமைக்குள் ஒளிந்திருக்கும் உண்மை முகத்தில் அறைந்தது.
இப்படித் தானே பல நேரங்களில் பல நிகழ்வுகளை மேலோட்டமாகவே பார்த்துவிட்டு, உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் உண்மையான கோணத்தை பார்க்காமலோ அல்லது பார்க்க விரும்பாமலோ கடந்து வந்துவிடுகிறோம். ஏன் அப்படிக் கடந்து வருகிறோம் எனக் கேட்டால் அந்த உண்மைகள் நம்முடைய விருப்பத்திற்கு தகுந்தார் போல் இல்லை என்பது தான் நேர்மையான பதில். இங்கே எதுவுமே நமக்கு உறுத்தக் கூடாது. நம்மை கேள்விக்கு உட்படுத்தக் கூடாது. நம்முடைய கோணத்தை மாற்றக் கூடாது என இன்னும் இன்னும் ஓராயிரம் கூடாதுகள் நம் மனதுக்குள் அலையடித்தபடியே இருக்கின்றன. ஆனால் ஒரு வகையில் வாசிப்பு என்பது நமக்குள்ளிருந்து நம்மையே கேள்வி கேட்கும், நம்முடைய கோணத்தை, நாம் நம்பும் நம்முடைய பிம்பத்தை கிழித்து தொங்கவிடும், நம்முடைய விருப்பதிற்குள்ளிருக்கும் போலித்தனத்தை உரித்துக் காட்டும் என்பதால் தானோ என்னவோ வாசிப்பு என்றாலே காத தூரம் ஓடுகிறோம். மேலே சொல்லியுள்ள வரிகளில் முக்கியமானது காவிய நாயகன் என்பது, நாமும் ஒரு வகையில் நம்மை காவிய நாயகர்களாக நம்பிக் கொண்டிருக்கிறோம் இல்லையா. அப்படிப்பட்ட காவிய நாயகனையே கேள்வி கேட்டால் எப்படி. காவிய நாயகன் என்றால் என்ன செய்தாலும் சரி என்கிற கோணத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் போது வலிக்கத் தான் செய்யும் என்ன செய்வது. எனக்கு எதுவுமே வலிக்கவேக் கூடாது என்றால் நம்மை நம் அம்மா பெற்றிருக்கவே மாட்டார் இல்லையா. ஒரு வகையில் இந்த வலி தான், அந்த வலியில் இருந்து உருவாகும் கேள்வி தான் நம்மை பக்குவப்படுத்தும் என ஆழமாக நம்புகிறேன். அதனால் தான் சொல்கிறேன். காவிய நாயகனாக கேள்விக்கு உட்படாத இடத்தில் இருப்பதை விட, தொடர்ந்து கேள்வியின் வழி(லி)யே என்னை செம்மைப்படுத்தும் இயல்பான மனிதனாக இருப்பதே மேல். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்குs
9171925916