வாழ்ந்து பார்த்த தருணம்…213

கொஞ்சம் கவனமாய் விளையாடலாமா…

கவனம் என்பது ஒரு வகையான சுவாரஸ்யமான விளையாட்டைப் போல. அதற்குள் நுழைந்து ஆட ஆரம்பிக்கும் போது அதன் சுவாரஸ்யம் நம்மை கவனிக்க வைக்கும். நாம் பல நேரங்களில் பலரிடத்தில் கவனமாப் பேசு, கவனமா விளையாடு, கவனமாப் படி என்கிற பல கவனங்களை கவனமாக சொல்லியிருப்போம். நம் காதுகளும் ஏதோ ஒரு வகையில் அதனைக் கவனமாகக் கேட்டுக் கொண்டும் இருக்கும். ஆனால் மற்றவர்களுக்குச் சொல்லும் முன் நாம் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் நம்மை நாமே கவனிக்கிறோம் என யோசித்துப் பார்த்ததுண்டா. அப்படி நம்மை நாமே கவனிக்கும் நேரத்தை இங்கே நம்மிடமிருந்து நமக்கே தெரியாமல் பிடுங்கி வருடங்கள் பல கடந்து விட்டன. அப்படியான நம்மைப் பற்றிய நம்முடைய கவனத்தை நம்மிடம் இருந்து ஒழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கிய இரண்டு முக்கியமான விஷயங்கள். ஒன்று அலைப்பேசி மற்றொன்று தொலைக்காட்சி. இன்றைய காலகட்டத்தில் இந்த இரண்டில் இருந்தும் விடுபடுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்கிற மோசமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இயேசுநாதர் சொன்னார் இல்லையா, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதை விட கஷ்டமானது செல்வந்தர்கள் இறைக்கு கீழ்படிவது என்று. அதனைப் போல் கிட்டத்தட்ட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது கூட எளிது. ஆனால் நம்மிடமிருக்கும் அலைப்பேசியின் மீதான நமது கவனத்தை திசை திருப்புவது என்பது மிக, மிகக் கடினம். ஆனால் அதனை இப்பொழுது ஒரு விளையாட்டைப் போல் செய்யப் பழக ஆரம்பித்திருக்கிறேன். பல நேரங்களில் கவனித்தால் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் அல்லது சும்மா இருக்கலாம் என உட்காரும் போது எல்லாம் அப்படி சும்மா இருக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே தேவை இருக்கிறதோ, இல்லையோ கைகள் தானாக அலைப்பேசியை தடவ ஆரம்பித்து விடுகின்றன.

இப்படிச் செய்வதை பலமுறை கவனித்த பிறகு, அலைப்பேசியை கவனமாகத் தள்ளி வைத்து விட்டு என்னுடைய எண்ணைத்தையும், செயலையும் கவனிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடங்களுக்குள் ஒரு ஆறேழு முறை என் கரங்கள் இயல்பாகவே அலைப்பேசியை நோக்கி நகர்வதை ஒரு அன்னிச்சை செயலைப் போல் பழகியிருக்கின்றன என்பது அப்பட்டமாய் தெரிந்தது. முதலில் இதனை நிறுத்த வேண்டும் எனத் தோன்றியது. கிட்டத்தட்ட இன்றைக்கு மிகப் பெரும்பாலான சமூகத்தின் மனநிலையும் அப்படித் தான் ஆகிவிட்டது. பல நேரங்களில் மிக, மிக முக்கியமான உரையாடல்கள் கவனமற்று ஒன்றுமில்லாமல் போவதற்கான காரணங்களில் மிக, மிக முக்கியமானது நம்முடைய இந்த அன்னிச்சை செயல் தான். கிட்டதட்ட அலைப்பேசி என்கிற ஒன்று நாம் கவனமாக செய்யும் எந்த ஒரு செயலில் இருந்தும் நம்முடைய கவனத்தை மிக மோசமாக சிதறடித்து விடுகின்றன. இது எப்பொழுதிலிருந்து இவ்வளவு மோசமானது என யோசித்தால். எப்பொழுது ஒரு நோய்க் கிருமி வந்து நம்மை எல்லாம் இரண்டு வருடங்கள் வீட்டுக்குள் முடக்கியதோ, அப்பொழுதிலிருந்து தான். அந்த நோய் கிருமியை விட அதிக வீரியத்தோடு இந்தப் பழக்கம் நம்மிடையே பற்றிப் பரவி இருக்கிறது. முதலில் அந்த நோய்க் கிருமியைப் பார்த்து பயத்தில் இருந்த நாம். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பயத்தில் இருந்து நம் கவனத்தை விலக்கி வைப்பதற்காக நாம் தேர்ந்தெடுத்த யுக்தி தான் அலைப்பேசி. மிகச் சரியாகச் சொல்வதானால் அந்த அலைப்பேசியின் வழியே நாம் காணும் இணையம். ஆனால் இன்று அந்த யுக்தியே பல பேரின் கவனத்தை, நேரத்தை இரக்கமே இல்லாமல் காவு வாங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்படும் எண்ணம் மற்றும் செயல் மாற்றங்களை நம்மால் உற்று ஊன்றி கவனிக்க முடிந்தால் கண்டிப்பாக உள்ளுக்குள் நடுக்கமே வரும். மிகச் சமீபத்திய உதாரணம். அது ஒரு பெரிய மருத்துவமனையின் உள்ளே இருக்கும் மருந்துக் கடை. அதில் மருந்தினை வாங்க வந்திருந்த ஒருவர் அந்த மருந்துக் கடையில் பணியில் இருக்கும் ஒரு பணியாளரிடம். மருத்துவர் தான் எழுதி கொடுத்த குறிப்பில் இந்த மருந்தினை இந்த நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என எழுதியிருக்கிறார். ஆனால் நீங்கள் மருத்தினை வைத்துக் கொடுத்த காகிதப் பையில் நேரத்தை மாற்றிவிட்டீர்கள், நான் அந்த மருத்தினைப் பற்றி கூகிள் பண்ணிப் பார்த்தேன். அதுல இப்படி வருது அப்படின்னார். அவரிடம் நீங்கள் பார்த்த மருத்துவரிடம் கேட்டுத் தான் மாற்றினோம் என்று பணியாளர் சொன்ன போது கூட அவர் அதனைக் காது கொடுத்து கவனமாகக் கேட்கவில்லை. உடனே அந்தப் பணியாளர் அவர் கண்முன்னே குறிப்பிட்ட மருத்துவருக்கு அலைப்பேசியில் அழைத்துப் பேசி, எதனால் நேரத்தை மாற்றினோம் என்று சொன்ன பிறகு தான் அவர் சரி என வாங்கிச் சென்றார். எல்லாம் அலைப்பேசிக்குள்ளிருக்கும் கூகிள் ஆண்டவரே சரணம் என்றாகி விட்டது.

இதனைப் போல் பல உதாரணங்களை அன்றாடம் பார்க்கிறேன். அதனைத் தாண்டி அலைப்பேசி என்ற ஒன்று வந்த பிறகு எந்த ஒரு வழியையும் நினைவில் வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதில் ஆரம்பித்து. கவனத்தில் எடுக்க வேண்டிய பல விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல். எல்லாம் மேலே இருக்கவன் பார்த்துக்குவான் என்கிற திரைப்பட வசனத்தை போல் வாழப் பழகி இருக்கிறோம். எந்தச் சூழ்நிலையில் ஆவாரம் பூ திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிக்காக அந்த வசனம் எழுதப்பட்டதோ தெரியாது. உண்மையில் இன்று அது தான் நிதர்சனம் என ஆகிவிட்டது. அதே போல் மணி ஹீஸ்ட் இணையத் தொடரில் வரும் பேராசிரியர் கதாபாத்திரம் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் அவங்க நேரத்த திருடனும் என்பது. அப்படித் தான் நம்முடைய நேரமும் வகை தொகையில்லாமல் திருடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நமக்குத் தான் அது உரைப்பதே இல்லை. அதிலும் குறிப்பாக ரீல்ஸ் என்கிற ஒன்று வந்த பிறகு, அது நமது கவனத்தை முப்பது நொடிகளுக்கு மேல் ஒரு இடத்தில் அது குவிக்க விடுவதில்லை. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் எவ்வளவு ரீல்ஸை பார்க்கிறோம் என யோசித்துக் கொள்ளுங்கள். அதனாலே இயல்பாகவே நம்முடைய கவனத்தை நம்மால் ஒரு இடத்தில் முப்பது வினாடிகளுக்கு மேல் நிலை நிறுத்த முடியாமல் போகிறது. அதனைத் தாண்டி நாம் நம்முடைய கவனத்தை நிலை நிறுத்த வழிந்து எத்தனித்தால் சோர்வாக உணர ஆரம்பிக்கிறோம். அதனால் எதிலுமே முப்பது வினாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாமல் சுவாரஸ்யமற்றுப் போகிறோம். நம்முடைய வாழ்க்கை என்பது முப்பது வினாடிகளுக்குள் ஒளித்து வைக்கக் கூடியதா என்ன?. வாய்ப்பேயில்லை இல்லையா. ஆனாலும் எல்லாவிதமான பிரச்சனைக்கும் முப்பது வினாடிகளுக்குள் தீர்வு என ஆரம்பித்து எல்லாமே உடனடியாக என்கிற மனநிலையை நோக்கி நகர்ந்து, நகர்ந்து கவனம் என்றால் என்ன என்கிற நிலையின் விளிம்பில் கவனமற்று நின்று கொண்டு இருக்கிறோம். இந்த உலகில் எந்த ஒரு செயலும் அதன் முழுமைத் தன்மையை அடைய ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு. ஆனால் அந்தக் கால அளவுக்காக கவனமாகச் செயலினைச் செய்கிற அதே நேரம், அதன் முழுமைக்காக கவனமாகக் காத்திருக்கவும் வேண்டும். வேறு வழியே இல்லை. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்குs
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *