வாழ்ந்து பார்த்த தருணம்…215

அமைதியின் தொடக்கப் புள்ளி…

இது வரை வாசித்த ஏதாவது ஒரு அலசலில் இதனைப் பற்றி யாராவது எழுதி இருக்கிறார்களா எனத் தேடினேன். இது வரை என் கண்களில் மாட்டவில்லை அல்லது தெரியவில்லை. ஆனாலும் இப்படி நடக்கத் தான் பெரும்பாலும் வாய்ப்பிருக்கிறது என ஏனோ முன்னரே நமக்கெல்லாம் தெரிந்து விட்டது. இருந்தும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் தான் எல்லோருமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் நாம் நினைத்தது தான் நடந்திருக்கிறது. அன்று ஒண்ணே கால் லட்சம் பேரின் அமைதிக்கான முதல் புள்ளியை எங்கேயோ ஏற்கனவே யாரோ சொல்லிப் பார்த்திருக்கிறோமே என யோசித்துக் கொண்டே இருந்தேன். இரண்டு மூன்று நாட்களாக ஞாபகம் வராமல் அதன் பின்னால் தான் ஞாபகம் வந்தது. அதன் பின் அவர் சொன்னதைப் போய் பார்த்தால், அவர் சொன்னது தான் சரி என ஆணித்தரமாகத் தோன்றியது. சொன்னது யார் எனக் கேட்டால் மகேந்திர சிங் தோனி. எங்கே என்ன சொன்னார் என்பதை அப்புறம் பார்க்கலாம். கிரிக்கெட் பார்ப்பதை விட்டு நெடு நாட்கள் ஆகின்றன. இடையிடையில் காதில் விழும் தகவல்களை வைத்துப் பார்க்க வேண்டும் எனத் தோன்றினால். நடந்து முடிந்த ஆட்டத்தின் ஹைலைட்சை மட்டும் அடுத்த நாள் இணையத்தில் போய் பார்ப்பதோடு சரி. அதனைத் தாண்டி முழுவதுமாக உட்கார்ந்து மொத்த ஆட்டத்தையும் பார்ப்பதில்லை. இந்த உலகக் கோப்பை தொடங்கி இந்தியா ஆடிய முதல் சில போட்டிகளுக்குப் பின். குறிப்பாக நாம் லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பின். நமக்குத் தான் கோப்பை என்கிற ஒரு மிதமான நம்பிக்கை எல்லோரிடத்திலும் பரவத் தொடங்கியது. அதனைப் போலவே கிட்டத்தட்ட நாம் ஆடிய அனைத்து ஆட்டங்களையுமே நமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஜெயித்துக் கொண்டே வந்தோம். இதெல்லாம் ஒரு பக்கம் கப்பு நமக்குத் தான் பிகிலு என்கிற நம்பிக்கையை வலுவாக்கிக் கொண்டே வந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆட்டமும் முடிந்ததும், அது யார் யாருக்கு எதிராக ஆடிய ஆட்டமாக இருந்தாலும். அதன் முடிவை இணையத்தில் போய் பார்த்துவிட்டு, மறக்காமல் புள்ளி அட்டவணையையும் பார்த்து விட்டே அந்த இணையப் பக்கத்தை மூடுவேன்.

ஆனால் ஒவ்வொரு முறை புள்ளி அட்டவணையைப் பார்க்கும் போதெல்லாம். இந்தியாவுடன் சேர்த்து மற்றொரு நாட்டையும் நான் கவனித்தே வந்தேன். அப்படி நான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும்பான்மையானவர்களும், அந்த நாட்டை கவனித்தே வந்தார்கள் என்பது தான் ஒத்துக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை. அந்த நாடு சந்தேகமே இல்லாமல் ஆஸ்திரேலியா. இந்த உலகப் கோப்பை தொடங்கி சில போட்டிகள் முடிந்திருக்கையில் கூட நாம் ஆஸ்திரேலியாவை கவனித்தாலும், அவர்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கத்தில் அடுத்தடுத்து வந்த இரண்டு தோல்விகள். அதில் ஒன்று இந்தியாவுடன் தோற்றது. அதனால் ஆஸ்திரேலியா தொடக்கத்திலேயே புள்ளிப் பட்டியலில் கிழே போய்விட்டது, அப்பொழுது எல்லோருடைய மனநிலையும் என்னையும் சேர்த்தே சொல்கிறேன். ஆஸ்திரேலியா லீக் சுற்றைத் தாண்டி அரையிறுதிக்கே வராது என்கிற எண்ணம் வலுவாக இருந்தது. அதனால் தான் மூன்றாம் ஆட்டத்தில் இருந்து ஆஸ்திரேலியா வெற்றி பெற ஆரம்பித்த போது கூட யாரும் அதனுடைய வெற்றியை பெரியதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இதெல்லாம் ஆப்கன் அணியை ஆஸ்திரேலியா எதிர் கொள்வதற்கு முன்பு வரை தான். அதன் பின் மீண்டும் புள்ளிப் பட்டியலைப் பார்க்க ஆரம்பிக்க. ஆஸ்திரேலியா ஆப்கன் அணியை ஜெயித்தால் கிட்டத்தட்ட அரையிறுதி உறுதி என்கிற நிலையில், ஆட்டமும் ஆப்கன் அணிக்கு சாதகமாக மாறிய போது ஒட்டு மொத்த இந்திய ரசிகனும் ஆப்கன் அணி தான் ஜெயிக்கும். ஜெயிக்க வேண்டும் என விரும்பினான். நான் உட்பட. ஆனால் ஒரே ஒரு நபரால் அந்த ஆட்டமே ஆட்டம் கண்டு ஆப்கன் கைகளில் இருந்து ஆஸ்திரேலியா கைக்கு வெற்றி போனது. கிட்டத்தட்ட தொடக்கத்தில் அதாவது இந்த உலகக் கிண்ணத் தொடக்கத்தில் ஓரக் கண்ணால் புள்ளி அட்டவணையில் ஆஸ்திரேலியாவை பார்த்துக் கொண்டே வந்தோம் இல்லையா, அதை இப்பொழுது முழுக் கண்களால் பார்க்க ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட லீக் சுற்றுகள் முடியப் போகும் நேரத்தில் ஆஸ்திரேலியாவை எந்த ஆட்டத்தில் நாம் எதிர் கொள்ளப் போகிறோம் என்கிற கேள்விக்கு அரையிறுதியில் இல்லை என்கிற விடை வந்தது. சரி தப்பித்தோம் என்று எல்லோருக்கும் நிம்மதி.

அரையிறுதியில் நாம் நியூசியுடன் ஆடிய ஆட்டத்திற்கு இணையாக, இன்னும் சொல்லப் போனால் அதற்கு ஒரு படி மேலாகவே மற்றொரு அரையிறுதியான தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஆட்டத்தை இந்தியாவின் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகனும் கவனித்தான் என்பதே மறுக்க முடியாத உண்மை. அதில் 99% சதவீதம் பேரின் ஆசையும் தென்னாப்பிரிக்கா எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. அதற்குத் தென்னாப்பிரிக்காவுக்கு ஏன் ஆதரவளிக்கிறோம் என்கிற பெயரில் பல சப்பை கட்டுகள், உருட்டுகள் எல்லாம் உருட்டப்பட்டன. ஆனால் ஏற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான உண்மை என்னவெனில் ஆஸ்திரேலியா ஜெயித்தால் இறுதிப் போட்டியில் நாம் வெல்வது கிட்டத்தட்ட கனவு தான் என நாம் எல்லோருமே ஆழமாக நம்பினோம். காரணம் இதற்கு முன்னால் உள்ள வரலாறு அப்படி. சரி இப்பொழுது முதல் பத்தியில் மகேந்திர சிங் தோனி ஒன்று சொன்னார் என்று சொன்னேன் இல்லையா. அது என்னவெனப் பார்த்து விடலாம். மகேந்திர சிங் தோனி அன் டோல்ட் ஸ்டோரி என்கிற தோனியின் வாழ்வை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்று எப்பொழுதும் மறக்க முடியாதது. அந்தத் திரைப்படத்தில் தோனி ஒரு மிக முக்கியமான கிரிக்கெட் போட்டியில் தன் வாழ்வில் முதன் முதலாக யுவராஜ் சிங்கை சந்திக்கும் காட்சி ஒன்றிருக்கும். முடிந்தால் போய் மீண்டும் எடுத்துப் பாருங்கள். அந்தப் போட்டியில் தோனியின் அணி யுவராஜ் சிங்கின் அணியிடம் மிக மோசமாக தோற்றுப் போகும். அப்படி ஒரு மோசமான தோல்விக்குப் பின் அதனை தன் நண்பர்களிடம் விவரிக்கும் தோனி, நாங்க எங்க மேட்ச தோத்தோம் தெரியுமா. கிரிக்கெட் கிரவுண்ட்ல இல்லடா. ராத்திரி பேஸ்கட் பால் கிரவுண்ட்லயே தோத்துட்டோம் எனச் சொல்வார். மிக, மிக முக்கியமாக தோல்வியை உளவியல் ரீதியாக அணுகும் காட்சி அது. தோனியின் நண்பர்களுக்கு அவர் சொன்னது புரியாமல் இருக்க, மீண்டும் அதனைப் பற்றி பேசாமல் தோனி பேச்சை மாற்றி விடுவார். கிட்டத்தட்ட தன் கிரிக்கெட் வாழ்வு முழுவதும் யுவராஜின் வழியே அன்று கிடைத்த உளவியல் பாடத்தை களத்தில் மிகச் சரியாக நிகழ்த்திக் கொண்டே இருந்தார் தோனி. ஆனால் என்ன உருட்டு உருட்டினாலும் அந்த உளவியல் சூட்சமத்திற்குள் தான் நாம் மீண்டும், மீண்டும் மாட்டிக் கொண்டே இருக்கிறோம். அதனால் தான் வரிசையாக பத்து தொடர் வெற்றிகளுக்குப் பிறகும் நம்மால் களத்தில் நம்பிக்கையுடன் நிற்க முடியவில்லை. நாம் நம் மீது வைத்திருந்த நம்பிக்கையின் லட்சணத்தை உணர்ந்த காரணத்தால் தான், ஒன்னே கால் லட்சம் பேரையும் அமைதிப்படுத்துவேன் என தில்லாக கம்மின்ஸால் சொல்ல முடிந்தது. எல்லாமே சரியா இருக்கு ஆனா ஏதோ ஒண்ணு குறையுது எனச் சொல்வோம் இல்லையா. அது போலத் தான். ரோகித்திடம் எல்லாம் இருந்து எதோ ஒன்று குறைகிறதே என யோசித்தால், அது தான் மேலே சொன்னது உளவியல் ரீதியான நம்பிக்கை. அது தோனியிடம் எப்பொழுதும் கடைசி பந்து வரை களத்தில் இருந்தது. இருந்து கொண்டும் இருக்கிறது. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்குs
9171925916

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *