வாழ்ந்து பார்த்த தருணம்…29

விவசாயிக்கு ஏது ஞாயிறு…

திடீரென முழிப்பு தட்டியது. உடலில் வியர்வை பிசுபிசுப்பு ஒரு வித அசூயையாய் இருக்க, எழுந்து கழிவறைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தால், மணி காலை சரியாக காலை நான்கு ஐம்பத்தி ஐந்து. திரும்ப போய் தூங்கினால் வேலைக்கு ஆகாது என தெரிந்து விட்டது. இரவில் என்ன தான் மின் விசிறி சுழன்றாலும், அதன் வழியே உடலில் படும் காற்றும் சூடாக தான் இருக்கிறது. வியர்வையினால் அடிக்கடி தூக்கம் களைந்து கொண்டே இருக்கிறது. இதனால் காலையில் சீக்கிரம் எழுந்தால் கூட திரும்ப தூங்க வேண்டுமென்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இன்று அப்படி அல்லாமல் யோசிக்காமல் எழுந்து கதவை திறந்து வெளியில் வந்துவிட்டேன். சின்னதாக குளிர்ச்சி வெளியில் தெரிந்தாலும் காற்றே இல்லை. வீட்டின் வெளியே இருக்கும் மரங்களின் இலைகள் அசையாமல், அப்படியே எதையோ யோசித்தபடியே இருந்தன. வெளியே இறங்கி தெருவுக்கு வந்தால், சற்றே தள்ளி எதிர்வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து பேட்ட திரைப்படத்திலிருந்து எத்தன சந்தோசம் பாடல் கசிந்து காற்றில் பரவியபடியே இருந்தது.

அந்தப் பாடலை கேட்ட போது தான் கவனித்தேன். கூடவே ஒரு சிறுவனின் குரலும் அந்த பாடலோடு ஒத்திசைத்து பாடியபடியே இருந்தது. நல்ல ரசனையான குரல். குரலில் நல்ல உற்சாகம். அப்போழுது தான் பார்த்தேன், அந்த வீட்டிலிருந்த அனைவரும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்கள். எதோ விஷேச வீட்டுக்கா இல்லை சுற்றுலாவுக்கா எனத் தெரியவில்லை. பாடல் பாடிய பையனின் குரலில் பயணிக்க போகும் உற்சாகம் தெறித்தது. ஒரு ஐந்து பத்துக்கு வண்டியில் அனைவரும் ஏற, வண்டி கிளம்பிவிட்டது. அப்படியே தெருவில் நின்று கொண்டு, கார் அந்தத் தெருவைக் கடந்து வளைந்து திரும்புவதை வரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய வீட்டினுள்ளே உறக்கத்தில் இருந்த மனைவியும், மகளும் இன்னும் எழுந்திருக்கவில்லை. எனக்கு எழுப்பவும் மனசில்லை. அமைதியாக வீட்டின் உள்ளே சென்று மூங்கில் நாற்காலியை எடுத்து கதவின் வெளிபுறமிருக்கும் இடத்தில் கிடத்திவிட்டு, நேற்று முழுமையாக எழுதி முடிக்காத, மத்தகம் நாவலைப் பற்றிய கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். காலை கதிரவனின் ஒளி வெளிவர தொடங்கியது.

கட்டுரையை முடித்து பதிவெற்றி விட்டுப் பார்த்தேன். மணி ஆறு பத்து. இது வீட்டின் மாடியிலிருக்கும் நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பும் நேரம். இந்த நேரம் தான் வீட்டை சுற்றியிருக்கும் மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது சரியாக இருக்கும். தண்ணீர் வரும் குழாயைச் செடிகளுக்கு திருப்பி விட்டுவிட்டு, மீண்டும் தெருவில் நின்று வேடிக்கை. அப்பொழுது மற்றொரு எதிர்வீட்டில் இருந்து நண்பனின் அப்பா இன்று சீக்கிரமாக கிளம்பி விட்டிருந்தார். குளித்து முடித்து விட்டு பளிச்சென வெள்ளை வேஷ்டி சட்டையில் டிராக்டரை எடுக்க ஆயத்தமானார். நான் நின்று கொண்டு இருப்பதை பார்த்தவர், ஒரு சின்னப் புன்முறுவலுடன், இன்னைக்குத் தோட்டத்துல தேங்காய் அறுப்பு இருக்கு அதான் கிளம்பிட்டேன் என்றார். டிராக்டரை எடுத்தார். அருகில் கொஞ்சம் தள்ளி, அதன் பின்புறம் இழுத்துச் செல்ல வேண்டிய பாரம் ஏற்றி செல்லக் கூடிய இழுவை வண்டி தனியாக நின்று கொண்டிருந்தது. அதன் அருகே டிராக்டரை ஓட்டிச் சென்று என்னை அழைத்தார். நான் இருவண்டியையும் இணைக்கும் அச்சாணியை கையில் எடுத்துக்கொண்டு, அவர் டிராக்டரை பாரம் சுமக்கும் வண்டிக்கு அருகில் கொண்டு வந்ததும், சிறு திணறலுக்கு பிறகு மாட்டிவிட்டேன். அவர் நன்றி சொல்லித் தோப்புக்கு டிராக்டருடன் கிளம்பிவிட்டார்.

அவர் ஒரு விவசாயி. நெல் போன்ற மழைப் பார்த்து செய்யக்கூடிய மானாவாரி பயிரிடலும் செய்கிறார். தென்னந்தோப்பும் உண்டு. அந்த தென்னந்தோப்பில் தான் இன்று காய் அறுப்பு செய்ய ஆட்கள் வருகிறார்கள் என காலையிலேயே கிளம்பிவிட்டார். அவர் போன திசையைப் பார்த்துக்கொண்டிருந்த போது தான் ஒரு விஷயம் ஞாபகத்தில் உறைத்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை. ஞாயிற்றுக்கிழமை என்பதே இங்கே விடுமுறை நாளாக பெரும்பாலானவர்களின் மனதில் நிறுவப்பட்டுவிட்டது. ஆனால் விவசாயிக்கு ஏது கிழமை. நான் அவரிடம் இன்று ஞாயிற்றுகிழமை ஆயிற்றே எனக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் கண்டிப்பாக கிழமையாவது மண்ணாங்கட்டியாவது, இங்க மரமேற ஆள்கிடைக்கிறதே கஷ்டம். இதுல ஞாயிற்றுகிழமையெல்லாம் பார்த்தால் பொழப்பு என்ன ஆகிறது கண்ணு என்று தான் சொல்லியிருப்பார். ஏனென்றால் எனக்கு அவரைத் தெரியும். தன்னுடைய உழைப்பையும், தன் மண்ணையும் நேசிப்பவனுக்கு, அந்த உழைப்பும் அந்த மண்ணும் தான் தாய்மடி. நாள் கிழமையெல்லாம் பார்க்காமல், அந்தத் தாய்மடிநோக்கி தான் ஓடியபடி இருப்பான். இன்று வேறு அன்னையர் தினம் இல்லையா, தாய்மடி தேடி ஒடும் அனைவருக்கும், இனிய அன்னயர் தின வாழ்த்துகள். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916