RF எனும் சிங்கம்…
ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் உலகத்தில் எக்காலத்திற்கும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியப் பெயர். தான் யார். தன்னுடைய பலம் என்ன. தன்னுடைய பலவீனம் என்ன என்று முழுதாய் உணர்ந்த ஒருவன். தான் சார்ந்த துறையில் எப்படிப்பட்டவனாக வலம் வருவான் என்பதற்கு நிகழ்காலத்தில் வாழ்ந்து காட்டி கொண்டிருக்கும் மிகச் சிறந்த உதாரணம் ரோஜர் ஃபெடரர். மேலே சொன்ன எதுவும் மிகைப்படுத்துதல் இல்லை. அவரைப் பின் தொடர்பவர்களுக்கு தெரியும். அது எவ்வளவு தூரம் உண்மை என்பது. அவர் களத்தில் தோற்கும் நிலை வந்தால் கூட எதிராளிக்கு கண்டிப்பாய் மரணபயத்தை காட்டிவிடுவார். அதுதான் ரோஜர் ஃபெடரர். அதே தன் எதிரில் ஆடும் நபரின் ஆட்டத்திறன் அருமையாக இருக்கும் பட்சத்தில், அந்த நபர் எவராக இருப்பினும் ஃபெடரர் பாராட்ட தயங்கியதே இல்லை. இப்பொழுது அவரை பற்றி பேச மிக முக்கிய காரணம் நடந்து முடிந்த விம்பிள்டன் போட்டி தான்.
இந்த போட்டியை முழுவதுமாக பார்த்தேன். ரோஜர் ஃபெடரரின் வெறித்தனமான ரசிகன் என்பதால், அவரின் ஒவ்வோரு அசைவும் மிகப்பெரும் உத்வேகத்தை அளிக்கும் வல்லமையுடையது. ஒருப் போட்டியை எப்படிப் பார்க்கிறோம் என்பதே ஒரு அற்புதமான மனநிலை. அதுவும் ரோஜர் ஃபெடரர் ஆடும் ஆட்டமென்றால். கண்டிப்பாய் அவரின் உடல்மொழி. ஆடிக்கொண்டிருக்கும் போது அவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை கவனித்துக்கொண்டே இருப்பேன். அது ஒரு அட்டகாசமான கற்றல். அதுவும் சமகாலத்தில் ஒரு வெற்றியாளனாய் இருக்கும் ஒருவனிடன் கற்க ஆயிரம் இருக்கின்றன. அதில் நாம் கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் அவ்வளவே. முன்பெல்லாம் ரோஜர் ஃபெடரரின் ஆட்டத்தை பார்க்கும் போது எல்லாம் உணர்வுகளை வெளிப்படுத்தியபடி கத்திக்கொண்டும் தாவிக்கொண்டும் இருப்பேன். இப்பொழுது அப்படியில்லை. அந்த குணமே ஃபெடரரிடம் இருந்து கற்றது தான்.
ரோஜர் ஃபெடரர் ஆட வந்த புதிதில் மிகவும் உணர்ச்சி வசப்படுவராக இருந்தார். களத்திலேயே தன்னுடையே உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் வெளிப்படுத்தி விடுவார். தன்னுடைய டென்னிஸ் மட்டையைக்கூட உடைத்தெறிந்துவிடுவார். அவர் மீதும், அவரின் திறமை மீதும் அக்கறை கொண்ட யார் சொல்லியும் கேட்கவில்லை. இதனாலேயே அவரின் விளையாட்டு வாழ்க்கை மிகப்பெரும் ஏற்றத்தாழ்வோடே சென்றது. ஒரு முறை இறுதி சுற்று வரை வந்தார் என்றால், அடுத்த முறை முதல் சுற்றைக்கூடத் தாண்டமாட்டார். இப்படிப் போய் கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையில் தீடிரென ஒரு சம்பவம் நடந்தது. தான் மிகவும் மதிக்கும் ஒரு நபரை ஃபெடரர் இழந்தார். ஆம் அவருக்கு அவரின் போக்கிலேயே போய் பயிற்சியளித்த, ஃபெடரரின் கோபத்தை எப்போழுதுமே விமிர்ச்சிக்காத, அவரின் பயிற்சியாளர் பீட்டர் கார்டரின் இறப்பு ஃபெடரரை மொத்தமாக மாற்றியது. அதுவரை எவ்வித இரங்கல் நிகழ்ச்சிக்கு சென்றிராத அவர். முதல்முறையாக பீட்டரின் இரங்கலில் கலந்துகொண்டார். அவரின் மறைவு தான் ரோஜர் ஃபெடரரை தன்னை அறியும் ஒருவனாக மாற்றியது.
பீட்டர் கார்டரின் இறப்புக்கு பின் ரோஜர் ஃபெடரர் களத்தில் அமைதிகாக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தான், அவர் தன்னுடைய பலகீனங்கள் ஒவ்வொன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிக்கொண்டே வந்தார். அதன் பிறகு அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வெற்றி மேல் வெற்றி. அதன்பின் 302 வாரங்கள் ஏடிபி தரவரிசையில் முதலிடம். அதில் 237வாரங்களுக்கு தொடர்ச்சியாக முதலிடம். இதுவரை 20 கிராண்ட் சிலாம் பட்டங்கள். இப்படி ரோஜர் ஃபெடரரின் சாதனைகளை அடுக்கினால் பக்கங்கள் போதாது. அதைத் தாண்டி களத்திற்கு வெளியேயும் மனிதம் என்பதன் அர்த்தம் தெரிந்த , புரிந்த மனிதர் அவர். அதற்கு மிகச்சிறந்த உதாரண சம்பவம் ஒன்று உண்டு. 17வயதில் கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரை சந்திக்க வேண்டுமென கடிதம் எழுதியபோது. அவர் என்ன செய்தார் என்பதை இணையத்தில் தேடிப்படியுங்கள். கண்கள் கலங்கிவிடும். இன்னொரு முறை விம்பிள்டன் இறுதி போட்டி நாடலுடன், ரோஜர் ஃபெடரர் களத்தில் மோதுகிறார். அனல் பறந்த அன்றையப் போட்டியில் இறுதியாக ஃபெடரர் வெற்றி பெறுகிறார். அன்று கோப்பையைக் கையில் ஏந்தியபடி ஃபெடரர் பேசிய வார்த்தைகள். டென்னிஸ் போட்டியின் இறுதி முடிவு கண்டிப்பாக வெற்றி, தோல்வி என்ற இரண்டுக்குள் தான் என்பது சரிதான். ஆனால் அதே சமயம், சமநிலையில் முடியும் வாய்ப்பு இருக்குமானால் கண்டிப்பாக நாடலுடன் இந்த கோப்பையை பகிர்ந்துகொள்வேன். காரணம், நான் கோப்பையை வாங்கிவிட்டேன் என்பதற்காக நாடலை விட நான் சிறந்தவன் இல்லை. எனக்கு எந்த வகையிலும் குறைந்தவரில்லை நாடல் என்றார் ஃபெடரர். அது தான், அது தான் ஃபெடரர். சகவீரனின் திறமையை அதுவும், எவ்வித மேடைபூச்சும் இல்லாமல் ஆழ்மனத்தில் இருந்து அதுவும் வெற்றிபெற்ற மேடையிலேயே பாராட்டி அங்கரிக்க ஒரு தனித்த மனம் வேண்டும். அது ஃபெடரருக்கு வாய்த்திருக்கிறது.
கடைசியாக நடந்துமுடிந்த விம்பிள்டன் இறுதுப்போட்டியில் ஃபெடரர் அடைந்தது தோல்வியே அல்ல. கோப்பை யாருக்கு என தீர்மானிக்கும் 5வதுதான கடைசி செட் விளையாடும் போது. டைப்ரேக்கர் என்ற விஷயத்தை ஏன் கொண்டு வந்தார்கள் எனத் தெரியவில்லை. கண்டிப்பாக என்னளவில் இறுதி செட்டில் 12ம் செட்டுக்கு மேல் டைப்ரேக்கர் என்பதை கண்டிப்பாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு முன் 2018ல் அரையிறுதி போட்டியில் கேவின் ஆண்டர்சன் & ஜான் ஸ்னர் மோதிய போட்டி இறுதி செட் 26-24 வரை சென்று முடிந்தது. ஆனால் ஏன் இதனை யோசிக்காமல், அதுவும் இறுதி போட்டியில், இறுதி செட்டில் 12 செட்களுக்கு மேல் சென்றால் டைப்ரேக்கர் என்று மாற்றினார்கள் எனத் தெரியவில்லை. மிகப்பெரிய முட்டாள்த்தனமாக தோன்றுகிறது. இறுதி செட்டில், இந்த டைப்ரேக்கர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக போட்டியின் முடிவு 100% மாறியிருக்கும். கிரிகெட்டில் தான் அப்படியென்றால், டென்னிஸிலும் போங்கடித்துவிட்டார்கள். கேட்டால் ஜென்டில்மேன்ஸ் கேமாம், என்னாங்கடா உங்க ஜென்டில்மேன்ஸ் கேம். ஃபெடரரின் ரசிகனாக மட்டுமல்லாமல், டென்னிஸின் ரசிகனாகவும் இறுதி செட்டில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மாற்றம் சரியான வெற்றியாளனை தீர்மானிக்காது என்பது திண்ணம். நன்றி. மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916