வாழ்ந்து பார்த்த தருணம்…03

பரம்படித்தல்

சில நாட்கள் முன்னர் என் நண்பருடன், அவரின் வயலுக்கு சென்றிருந்தேன். கிட்டதட்ட மூன்றரை ஏக்கர் நிலம், நான்கைந்து குண்டுகளாக (ஒரு குண்டு என்பது ஒரு சதுர வரப்பிற்க்குள் இருக்கும் பகுதி) பிரித்து தண்ணீர் பாய்ச்சி ஒரு முறை மட்டும் உழுதுவிடப்பட்டிருந்தது. அடுத்து பரம்படிக்கணும் என சொன்னார். அப்படின்னா என நான் கேட்டேன். எனக்கான விவாசய அறிவு அவ்வளவுதான். அருகில், ஒரு நிலத்தில் பரம்படித்தல் முடியும் தருவாயில் இருந்தது. அது தான் பார்த்து கொள்ளுங்கள் எனக் காண்பித்தார். பார்த்தவுடன் உங்கள் நிலத்தில் பரம்படிக்கும் போது மறக்காமல் கூப்பிடுங்கள் எனச் சொல்லிவிட்டு வந்தேன். இருந்தும் மறந்துவிட்டார். கூப்பிட்டு உரிமையுடன் திட்டினேன். திட்டை வாங்கி ரெண்டு நாள் கழித்து, இன்று காலை அவரிடமிருந்து அழைப்பு. என் சொந்தகாரரின் நிலத்தில் பரம்படித்து கொண்டிருக்கிறார்கள். உடனடியாக வந்தால் பார்க்கலாம் என கூப்பிட்டார். அடுத்த 20நிமிடத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு பறந்தேன். பரம்படிக்கும் நிலத்தில் இறங்கினால், அந்த நிலத்தின் சகதிக்குள் கால்கள் சும்மா சரட்டென முட்டி வரை உள்ளே போனது. உள்ளே இறங்கி பரம்படிக்கும் அந்த மனிதரின் லாவகத்தை கவனித்துக்கொண்டே புகைப்படமெடுக்க ஆரம்பித்தேன். சில நேரம் அவர் என்னிடம் தம்பி மாட்ட நிப்பாடணுமா என கேட்டார். இல்லங்கய்யா நீங்க பாட்டுக்கு அடிச்சு ஓட்டிக்கிட்டே இருங்க, அத எனக்காக நிறுத்த வேணாம். அது போக்குல போகட்டும் நான் பார்த்து எடுத்துகிறேன் என சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே சரி தம்பி என அவர் வேலையை தொடர ஆரம்பித்தார்.

புகைப்படம் எடுத்து முடித்து, பக்கத்து, பக்கத்து குண்டில் தண்ணீர் பாய்ச்சப்படுவதை புகைப்படமெடுக்க போய் திரும்பி பார்த்தால், பரம்படித்தல் முடிந்து மாட்டை ஏறக் கட்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது தான் கவனித்தேன் கிட்டதட்ட அவரின் உடை முழுவதும் ஒரே சகதி. அப்பொழுது தான் நான் போட்டு வந்திருந்த சார்ட்சயும், சட்டையையும் கவனித்தால் அதிலும் சகதி தெறித்திருந்தது. நானும் கவனிக்கவேயில்லை, உழுதவரின் உடையில் சகதி இருந்தாலும், அதிலும் அற்புதமான ஒரு அழகு இருருந்ததை சொல்லி தான் ஆகவேண்டும். அது உழைப்பின் அழகு. யோசித்துப் பார்த்தேன், ஒரு உயர்தரப் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவனை அழைத்து வந்து அவரைக் காட்டினால், கண்டிப்பாக அவர் அருகில் செல்லவே மாட்டான். ஒரே டேற்ட்டியா (dirty) இருக்கார் என சொல்லிவிடுவான். ஏன் என்றால் மண் என்பது dirty என இன்றைய குழந்தைகளிடம் சொல்லி வைத்திருக்கிறோம். நம் வீட்டில் நடுவில் சாஷ்டங்கமாக பதித்து வைத்திருக்கிறோமே தொ(ல்)லைகாட்சி பெட்டி, அதில் ஓடிக்கொண்டிருக்கும் பெரும்பாலான விளம்பரங்களும் அதையே கூவிக்கொண்டிருக்கின்றன. நாமும் நம் பங்குக்கு அவர்களை தப்பி தவறி கூட மண்ணில் இறங்கவிடுவதே இல்லை. அப்படியே இறங்கினாலும், ஒரு கொலை குற்றவாளி கூட அப்படி மோசமாக நடத்தபடமாட்டான், அதை விட மோசமாக மண்ணில் இறங்கிய குழந்தையை உண்டு இல்லையென ஆக்கிவிடுவோம், அப்புறம் எப்படி அவர்கள் நிலத்தில் இறங்கி வேலை செய்யும் சகதியோடு இருக்கும் ஒருவரை மரியாதையாக பார்ப்பார்கள் சொல்லுங்கள்.

கடந்து 10, 15 வருடங்களில், மண் என்பது கிருமி தொற்றும் ஒரு மோசமான இடமென கேவலமான, மட்டமான ஒரு செய்தியை எல்லாருடைய மூளைக்குள்ளும், குறிப்பாக குழந்தைகளில் மூளைக்குள் செலுத்தியாயிற்று. மண்ணுக்கும் மனித்தனுக்குமான அற்புதமான தொடர்ப்பை பிரிக்க, இதை விட மட்டமான அயோக்கியதனம் வேறு எதுவும் இருக்க முடியாது. மண்ணில் விளையாடினால் 5 சதவீதம் ஒவ்வாமை வர வாய்ப்பிருக்கிறது (புரிந்து கொள்ளுங்கள் நோய் அல்ல) என வைத்துக்கொண்டாலும், அந்த மண்ணை அப்படி மோசமாக்கியதும் நாம் தான் என்பதை மறக்க வேண்டாம். அந்த சகதி அவ்விவசாயின் உடையில் கறையாக படியாவிட்டால், உங்கள் தட்டில் ஒரு பருக்கை சோறும் விழாது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு புரிய வையுங்கள். இல்லாவிட்டால், நாளைய வரலாறு நம்மை ஒரு போதும் மன்னிக்காது. மண் என்பது வணங்கப்படவேண்டியது வெறுக்க படவேண்டியது அல்ல. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
+91 9171925916