மதுரை புத்தகதிருவிழாவும், எஸ்ராவும் அதன்பின் நானும்…
மதுரை புத்தகத்திருவிழா முடிந்து இத்தனை நாட்கள் கழித்து தான் எழுதுவதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. இடையில் நிறைய வேலைகள். உடல் சுகவீனம் என எழுத இயலவில்லை. புத்தகத்திருவிழாவுக்கு செல்வதென முடிவான பிறகு, ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை எத்தனையை படித்துக் கிழித்திருக்கிறோம் என யோசித்தால். வாசிப்பதில் கண்டிப்பாக மோசமாக இல்லை தான் என்றாலும், படிக்க வேண்டிய புத்தகங்கள் இன்னும் மிச்சமிருக்கின்றன. சரி என மனதுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டு, சில தேர்ந்தெடுத்த புத்தகங்களை மட்டும் வாங்குவதென முடிவு செய்த பிறகு தான் செல்லவேண்டும் என்று எனக்கு நானே ஒரு வாக்குறுதியை அறிவித்தபடி. தேர்ந்தெடுத்த புத்தகங்கள் எத்தனை என்பதை முடிவு செய்தேன். மொத்தமாக ஐந்தே ஐந்து தான் வாங்குவதென முடிவு. அது தான் முடிவாகிவிட்டதே கிளம்பி போயாயிற்று.
சில விஷயங்களில் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் எப்படிப்பட்ட வாக்குறுதியும் அந்த விஷயத்துக்குள் நுழையும் வரை தான். அதன்பின் நடப்பதெல்லாம் நம் கையில் இல்லை. புத்தக கண்காட்சியிலும் அதே கதை தான். கண்காட்சியின் வாசல் வரை தான் அந்த உறுதியெல்லாம். உள்ளே நுழைந்தது தான் தாமதம். உறுதியா அப்படி ஒண்ண எடுத்தோமா என்ன? என்கிற மனநிலையில் தான் கண்காட்சிக்குள் சுற்ற ஆரம்பித்தேன். மிக முக்கியமாக நான் தேடிய இரண்டு புத்தகங்கள் வம்சி பதிப்பகத்தின் சிறகிசைத்த காலம் மற்றும் கண்ணதாசன் பதிப்பகத்தின் மிர்தாதின் புத்தகம் என இரண்டுமே கிடைத்ததில் மகிழ்ச்சி. ஏன் என்றால் புத்தகக் கண்காட்சிக்கு முன்னதாக இந்த இரண்டு புத்தகங்களையும் மதுரையில் இருக்கும் மிக முக்கியமான புத்தகக்கடைகளில் தேடிய போது, பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அதைத் தாண்டி மிக முக்கியமாக வாங்க நினைத்த புத்தகங்கள் தஸ்தாவஸ்கியின் சூதாடியும், குற்றமும் தண்டனையும் இரண்டும் நான் தேடிய குறிப்பிட்ட பதிப்பகத்தில் இல்லை.
அப்படியே ஒவ்வொரு பதிப்பகமாக ஏறி இறங்கி கொண்டிருக்கும் போது, தேசாந்திரி பதிப்பக கடையின் வாசலில் எஸ்.ரா அமர்ந்திருந்தார். உள்ளே சென்று ஒரு நான்கு புத்தகங்களை எடுத்து அதற்கான தொகையை செலுத்திய பிறகு அவரிடம் நீட்டினேன். கையெழுதிட்டுக் கொடுத்தார் கண்டிப்பாக வேறேந்த பிரலபலத்தின் கையெழுத்தை விடவும், ஒரு எழுத்தாளன் மற்றும் நாவலாசிரியனின் கையெழுத்து மிக, மிக உயர்வானது. பின்னர் அவரிடம் ஒரு ஐந்து நிமிட உரையாடல். சென்னையில் ஒரு திரைப்பட பணி சம்பந்தமாக என்னுடைய நண்பனுடன் அவருடைய வீட்டிற்கு சென்று அவரை சந்தித்ததை நினைவு படுத்தி பேசிய போது சந்தோசப்பட்டார். அவருடைய புத்தகமான எனது அருமை டால்ஸ்டாய் தான் இப்பொழுது வாசித்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் வாசித்தலின் உண்மையான ருசியை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எஸ்.ரா தான். ஒரு எழுத்தாளன் தன்னுடைய எழுத்தின் வழியே தன்னுடைய சமகாலத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களை தன்னுடைய வாசகனுக்கு அறிமுகப்படுத்துவதும், அதுவும்போக அந்த எழுத்தாளர்கள் எந்த வகையில் அவர்களின் எழுத்தின் வழியே தன்னை ஈர்க்கிறார்கள் என்பதையும் தன்னுடைய துணையெழுத்து புத்தகத்தில் மிகச்சிறப்பாய் தொகுத்திருந்தார் எஸ்.ரா. அந்த புத்தகத்தின் வழியே தான் எனக்கு நிறைய எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள், அதுவே எஸ்.ராவின் மீது எனக்கு மிகப்பெரும் மரியாதையை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள யாரும், என்னுடைய வாசித்தலை எந்த புத்தகத்திலிருந்து தொடங்குவது என எப்பொழுது கேட்டாலும், தயங்காமல் துணையெழுத்து புத்தகத்தை தான் பரிந்துரைப்பேன். பரிந்துரைத்தும் இருக்கிறேன். இன்று வாசித்தல் குறைந்து கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன் எழுத்தை படிக்கும் வாசகனுக்கு டால்ஸ்டாஸ், தஸ்தாயெவ்ஸ்கி, அன்டன் செகாவ் போன்ற ரஷ்யாவின் ஆகச்சிறந்த இலக்கிய மேதைகளை பற்றிய மிகச்சிறப்பான பதிவை தன் புத்தகத்தின் வழியே கடத்துவதை மிகச்சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார் எஸ்.ரா. இந்த சமூகத்தின் மனதை நீங்கள் படிக்க வேண்டுமானால் கண்டிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள மூன்று எழுத்தாளர்களையும் படிக்க வேண்டும் என்பது ஒரு வாசகனாக என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். மனித மனதின் ஆழத்தையும் அதனுள் பொதிந்திருக்கும் உளவியல் சிக்கல்களையும், அதனை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதனையும் மிக, மிக நுட்பமாக தங்களுடைய எழுத்துக்களில் படைத்த ஆகச்சிறந்த ரஷ்ய இலக்கிய மேதைகள் தான் டால்ஸ்டாஸ், தஸ்தாயெவ்ஸ்கி, அன்டன் செகாவ் போன்றோர். இப்படிப்பட்ட இலக்கியக்கங்களின் வழியே நுட்பமான வாசித்தல் என்பது கண்டிப்பாக நம்மை நாமே மிகச்சிறப்பாய் செதுக்கும் உழியை போன்றது. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916