வாழ்ந்து பார்த்த தருணம்…44

ஒரு கோப்பை தேநீரும், ஒரு குளிர் கால காலைக் காற்றும்…

முதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன், இப்பொழுது சொல்லப்போகும் விஷயம் கண்டிப்பாக ஆண், பெண் மற்றும் இன்னபிற என எந்த ஒரு பாலின பாகுபாடுமற்ற பொதுவான மனிதனுக்கானது. இதைப் படித்த பின் நீங்கள் உங்களையே ஒரு குறிப்பிட்ட பாலின வட்டத்திற்குள் குறுக்கினால், அது உங்களின் மனநிலையே தவிர, அதைத் தவிர வேறேதும் இருக்க முடியாது. சரி இப்பொழுது தொடங்கலாம். ஒரு அற்புதமான ஞாயிறு. கண்டிப்பாக வார நாட்களில் இருக்கும் வேலைகள் இன்று இல்லை என உங்களுக்குத் தெரியும். காலை சீக்கிரம் எழ வேண்டாம் என்ற மனநிலையில் படுக்கப்போகிறீர்கள். ஆனால், சீக்கிரம் எழக்கூடாது என்ற உங்களின் மனநிலையை மீறி அதிகாலை 4:30 மணிக்கு எல்லாம் எழுந்துவிட்டீர்கள். தூக்கம் சுத்தமாய் வடிந்து விட்டது உங்களுக்குத் தெளிவாய் தெரிகிறது. மெதுவாக நடந்து வந்து வீட்டின் முன் வாசல் கதவை திறக்கிறீர்கள். இரவுக்கான தளர்வான உடையுடன் நிற்கும் உங்களின் மீது குளிர்ந்த காற்றுப் பட்டு வருடுகிறது. தளர்வான உடையின் காரணமாக காற்றுப்பட்டவுடன் உங்களின் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்து அடங்குகிறது. உங்கள் கைகள் இயல்பாக குறுக்காக கட்டிக்கொள்கின்றன. அந்தக் குளிரை அற்புதமாக அனுபவிக்கிறீர்கள். அந்தத் தருணத்தில் மனதிற்குள் இப்பொழுது இந்த குளிருக்கு இதமாக ஒரு தேநீர் அருந்தினால் எப்படியிருக்கும் என தோன்றுகிறது.

உங்களின் மனதில் அந்த எண்ணம் தோன்றிய வேகத்தில், உங்களின் நாவில் தேநீர் சுவைப் பரவுவதை கவனிக்கிறீர்கள். உங்கள் மனம் மேலும் இன்னும் வேகமாக தேநீருக்காக ஏங்க, உடனடியாக வீட்டினுள் சென்று நீங்களே மிக, மிக ரசனையாக, சத்தம் அதிகம் எழாமல், வீட்டில் மற்றவர்களின் தூக்கத்தை கெடுத்திரா வண்ணம், ஒரு அட்டகாசமான தேநீரை தயாரிக்கிறீர்கள். கிட்டதட்ட 4:55க்குள் நீங்களே தயாரித்த மிதமான சூட்டுடன் கூடிய சுவையான தேநீருடன், அந்த குளிர் காற்று வீசும் வீட்டின் முன் வாசலில் தயாராக நிற்கிறீர்கள். அதே நேரம் உங்களுக்கு தெளிவாய்த் தெரியும் இன்னும் நாற்பந்தைந்து நிமிடத்துக்கு கண்டிப்பாக வீட்டில் உள்ளவர்கள் யாரும் எழப்போவதில்லை என்பது. இப்பொழுது வானத்தை அண்ணாந்து பார்த்தபடியோ அல்லது உங்கள் முன்னால் இன்னும் சில மணி நேரங்களில் பரப்பரப்பாகப் போகிற வீதிகளின் தற்போதைய அமைதியை ரசித்தபடியோ, ஏகாந்தமாய் வீசும் குளிர் காற்றை உங்களின் உடல் மீது பரவிட்டபடியே, ஒவ்வொரு சொட்டு தேநீரின் உறிஞ்சலையும் அதன் மிதமான சூட்டையும், உங்களின் உடல்முழுவதும் படரவிட்டபடி அந்த அற்புதமான, அமைதியான, குளிர்காற்று வீசும் காலையை உங்களால் ரசிக்க முடிந்தால். நீங்கள் உங்கள் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.

மேலே சொன்ன அத்தனையையும் கண்டிப்பாக தினசரி இல்லாவிட்டாலும். வாரத்தில் சில நாட்களாவது செய்து கொண்டிருக்கிறேன். இதைப் படித்தவுடன் கேக்குறது நன்றாக இருக்கிறது. ஆனால் என்னால் செயல்படுத்த முடியாது என்று சொன்னால் உங்களிடம் என்னச் சொல்வது எனத் தெரியவில்லை. காரணம், மேலே சொன்ன எதுவும் கண்டிப்பாக சாத்தியமே அல்லாத விஷயங்கள் இல்லை. மிக, மிகச் சுலபமாக நம்மால் வாழ்ந்துப் பார்க்க கூடிய தருணங்களே. பெரும்பாலும் இப்படியான சந்தர்ப்பம் எல்லோருக்குமே வாய்த்திருக்கும். ஆனால், இந்த வாழ்வின் மீதான அசூயை, சலிப்பு இவற்றால் அதை மிக, மிக மோசமாக புறகணித்திருப்போம். ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்தால் இங்கு யாருக்குத் தான் பிரச்சனையில்லை. என்னையும் சேர்த்தே சொல்கிறேன். ஆனால், அந்தப் பிரச்சனைக்கும் இம்மாதிரியான அனுபவங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம் என யோசித்தால். உண்மையில் ஒன்றுமே இல்லை. இப்படிப்பட்ட அனுபவத்தை நீங்கள் பெறுவதனால், எந்த வகையில் உங்களின் மற்ற பிரச்சனைகள் மேலும் மோசமாகும் சொல்லுங்கள். உண்மையில் இப்படியான அனுபவத்தின் வழியே தான் உங்களின் மன அழுத்தத்துடன் கூடிய வாழ்வியலுக்கான விடை கிடைக்கும். இப்படியான பல தருணங்களை நமக்கு இந்த வாழ்வு கொடுத்துக்கொண்டே இருக்கிறது. நாம் தான் நின்று அனுபவிக்க தயாராக இல்லை.

உண்மையில் நீங்கள் ஒரே ஒரு முறை இப்படியான அனுவத்தை ஏற்படுத்தி அதனுள் சஞ்சரித்துப் பாருங்கள். உங்கள் மனம், உடல் இரண்டுமே இலகுவாவதை கண்டிப்பாய் உணர்வீர்கள். அப்படி ஒரு நாள் நீங்கள் தேநீர் கோப்பையுடன், குளிர்காற்றுக்கு இடையில் வந்து நிற்கும் போது. சர்வ நிச்சயமாக உங்களின் மனதினுள் கலவையான, கவலையான எண்ண அலைகள் ஓடத்தான் செய்யும். கண்டிப்பாக அப்படியான எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள் எனச் சொல்லமாட்டேன். அது எந்தளவு கடினமானது என்பதும் தெரியும். அந்த எண்ண அலைகள் தோன்றி ஓடிக்கொண்டிருக்கட்டும். ஆனால், அதை ஓரமாக ஓடவிட்டு, நீங்கள் கைகளில் ஏந்தியிருக்கும் தேநீரிலும், உங்களை தொட்டு செல்லும் குளிர் காற்றிலும், அந்த தேநீரை உறிஞ்சும் போது உங்களின் நாவில் பரவும் அதன் சுவையிலும், அது தரும் இதமான சூட்டிலும் கவனத்தை செலுத்துங்கள். அதுவும் அந்த கவனம் தேநீர் முடியும் வரைக்குமே போதுமானது. உங்களால் இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்தால். அதைத் தாண்டிய பல அற்புதமான தருணங்களையும் உங்களால் ஆழ்ந்து அனுபவிக்க முடியும். கடைசியாக ஒன்று மேலே சொன்ன அதே சூழ்நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதனுள் உங்களுக்கே உங்களுக்கான பிடித்தமான பாடலை உங்களின் அலைபெசியிலோ அல்லது வேறேதாவது தொழில்நுட்ப கருவியிலோ மிக, மிக சன்னமான ஒலியில் உங்களுக்கு மட்டுமே கேட்கும்படி ஒலிக்கவிட்டு, அந்தப் பாடலை நீங்களும் அதே சன்னமான குரலில் பாடியபடியே தேநீரை அருந்துகிறீர்கள். இது, இது தான் உங்கள் வாழ்வை நீங்கள் வாழும் தருணம். இப்படி ஒவ்வொரு நாளும் இந்த வாழ்வு கண்டிப்பாக பல அற்புதமான தருணங்களை நமக்கு பரிச்சளிக்கிறது. நாம் அனுபவிக்கத் தயாரா என்பது தான் நம்மை நோக்கி நாமே ஓராயிரம் முறை கேட்க வேண்டிய கேள்வி. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916