நான் ஏன் மிஷ்கினை நேசிக்கிறேன் அல்லது விரும்புகிறேன் அல்லது காதலிக்கிறேன்… 1
சமீபத்திய வழக்கப்படி புதியதாய் வெளியாகப் போகும் தமிழ் திரைப்படங்களில், அது வெளிவரப்போகும் சில நாட்களுக்கு முன்பாக, அந்த திரைப்படத்திலிருந்து ஒரு சின்ன காட்சித் தொகுப்பை முன்னோட்டமாக வெளியிட்டு, அந்தக் காட்சி தொகுப்பின் வழியே திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி பார்வையாளர்களை திரையரங்கு நோக்கி வர வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படியான காட்சியை நம்பி திரையரங்கு போனால். நம்பிப் போன திரைப்படம். நம்பியதை காப்பாற்றுமா என்பது அவரவர் விதி. இப்படியான சமீபத்திய சூழலுக்கு நடுவில், மிஷ்கின் இயக்கத்தில் வரும் 24ம் தேதி சைக்கோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்தத் திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாய் கவர்ந்திருக்கின்றன. இந்த நிலையில் இன்றைக்கு படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகியிருந்தது. மிக ஆவலாய் அதனை சென்று பார்த்தால், சைக்கோ படத்தின் அதன் உருவாக்குதலே காணோளியாக முன்னோட்டத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். கண்டிப்பாய் அந்த உருவாக்குதல் முன்னோட்டமே திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது எனச் சொல்லலாம்.
கண்டிப்பாக தமிழ் திரையுலகின் மிக, மிக முக்கியமான கவனிக்கத்தக்க இயக்குநர் என்றால் அது மிஷ்கின் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஒரு முறை என்னுடைய நண்பன் ஒருவன் சொன்னான். அது மிஷ்கின் திரைப்படம் வெளியான சமயம். எந்தத் திரைப்படம் என்பது நினைவில் சரியாய் இல்லை. அந்த சமயத்தில் நண்பன் முகநூலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் இப்படி எழுந்தியிருந்திருக்கிறார். தன்னுடைய சக ஆண் நண்பனுடன் ஆள் ஆரவமற்ற சென்னையின் இரவு சாலையில் மிஷ்கினின் திரைப்படத்தை பார்த்துவிட்டு, அந்த திரைப்படம் பற்றிய ஒரு அட்டகாசமான விவாதத்தோடு நடந்து செல்ல வேண்டும் என எழுதியிருந்ததாக சொன்னான். அவன் அதை படித்து விட்டு என்னிடம் சொன்ன போது. இந்த காட்சியே மிஷ்கின் திரைப்படத்தை பார்ப்பது போல் இருப்பதாக சொன்னேன். மிஷ்கினின் திரைப்படங்கள் கொடுக்கும் தாக்கம் அப்படியானது. இன்றைய நிலையில் தன்னுடைய அனைத்து திரைப்படங்களிலும் கண்டிப்பாக மனிதம் பற்றி குறிப்பிடும் வெகு சில இயக்குநர்களில் மிஷ்கின் முதன்மையானவர். அவர் தன்னுடைய திரைப்படங்களில் பேசும் மனிதம். வெறும் காட்சி மொழி மட்டுமல்ல. அது மனத்துக்குள் ஏற்படுத்தும் ரசவாத மாற்றம் மிக முக்கியமானது. மிக முக்கியமான உதாரணம் ஒன்று. துப்பறிவாளன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், தன்னுடைய குட்டி நாயை இழந்த அந்தச் சிறுவன், வினையிடம் சென்று என்னோட நாய ஏன் கொன்னீங்க என கேட்பதும், அதற்கு வினய் மன்னிப்புக் கோரும் காட்சியும், அந்த காட்சியில் வினய் பேசும் வசனங்களும் மிக, மிக நுட்பமானது மட்டுமல்ல தனித்துவமானதும் கூட. கண்டிப்பாக மிஷ்கின் போன்ற இயக்குநர்களால் மட்டுமே அப்படியான நுட்பமான காட்சியமைப்பின் வழியே மனிதத்தை அழுத்தமாக பேச முடியும்.
இளையராஜா. இன்றைய இயக்குநர்களில், கண்டிப்பாக இளையராஜாவின் இசைஞானத்தை மிகச்சரியாய் உள்வாங்கிய ஒரு இயக்குநர் என்றால் அது மிஷ்கின் தான். அதனால் வெளியாகியிருக்கும் அந்த முன்னோட்ட காட்சியின் இறுதியில் இசைத்தாயின் தாலாட்டில் சைக்கோ என திரையில் எழுதி பின்னனியில் அவரால் நடந்து வரமுடிகிறது. இசை என்பது ஒரு திரைப்படத்தின் ஆன்மா போன்றது. அதனை மிகச் சரியாய், ஆழமாய் உள்வாங்கி, புரிந்து திரையில் வெளிப்படுத்துவதில் மிஷ்கினுக்கு இணை அவரே. அதனால் தான் அவரின் ஒவ்வொரு திரைப்படங்களின் காட்சியும். அது வெளிப்படுத்தும் விஷயங்களும் தனித்துவமாய் இருக்கின்றன. என்னுடன் திரைப்படத்துறையில் பணிபுரிந்த நண்பர்கள் அவரை பற்றிய தங்களின் கருத்துகளை கூறுகையில் பைத்தியம். அதுவும் போக கொரிய படங்களின் பாதிப்பில் திரைப்படம் எடுப்பவர். புத்தர் இல்லாமல் அவரால் காட்சி யோசிக்க முடியாது என்பன போன்ற பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய புரிதல் என்பதே வேறு. அவர் தான் கடந்து வந்த எழுத்துகளின் வழியே தான் தன்னுடைய படைப்பை உருவாக்குகிறார். இன்றைக்கு எழுத்தை கண்மூடித்தனமாக நேசிக்க ஆரம்பிக்கும் யாரும். தன்னுடைய எல்லைகளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிவிட மாட்டார்கள். இந்த உலகமே நமக்கானது என்ற எண்ணம் இயல்பாய் வந்துவிடும். அந்தப் புள்ளியில் இருந்து பார்த்தால். ஒரு குறிப்பிட்ட நிலத்துக்கான கதை, அந்த நிலத்திற்குள்ளான கலாச்சாரத்திற்கான கதை என எழுத வரவே வராது. கண்டிப்பாய் தன்னை பாதித்த படைப்பின் அல்லது எழுத்தின் தாக்கம் இல்லாமல் குறிப்பிட்ட குறுகிய வட்டத்திற்குள் இருந்து யோசித்தல் என்பதே மிஷ்கினை போன்றவர்களுக்கு இயலாத காரியம். அந்தப் புரிதலுடன் அவருடைய திரைப்படங்களை அணுகுகையில் அவரது திரைமொழியின் வழியே வெளிப்படும் மனிதமும், அறமும் மிக நுட்பமானது. அதனை பரிபூரணமாய் நேசிக்கிறேன்.
இந்த ஒரே கட்டுரைக்குள் நான் நேசிக்கும் மிஷ்கினை மொத்தமாக அடக்கிடமுடியாது. மிஷ்கினை பற்றி பேச, அவரின் திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி பேச இன்னும் நிறைய்யயய இருக்கிறது. இன்னமும் பல்வேறு விஷயங்கள் பகிரப்பட வேண்டும் என எண்ணம் இருப்பதால். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டிப்பாக இதனைத் தொடரலாம் என தீர்மானித்திருக்கிறேன். மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916