காலாற நடக்க காரணம் தேவையே இல்லை…
நடந்து சென்று ஒரு இடத்தினை அடைவது என்பது மனித வாழ்வின் ஒரு முக்கியமான பகுதி. ஆனால் சமீப காலங்களில் அது வெறும் சம்பிரதாயமாக மாறிக் கொண்டே வருகிறது. கோவிலுக்கு மாலை போட்டுக் கொண்டு நடப்பது என்பதை தவிர. பெரும்பாலான நேரங்களில் நடப்பது என்பது குறைந்து கொண்டே வருகிறது. இல்லாவிட்டால் சர்க்கரை நோய் போன்று ஏதாவது ஒரு நோயாளியாகவோ அல்லது உடல் பருமன் பிரச்சனைk காரணமாகவோ தான் நடக்க வேண்டும் என்ற எண்ணம் வேர் ஊன்றி விட்டது. தொடர்ச்சியாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பலருடன் பேசுகையில் அல்லது பயணிக்கையில் குறைந்த அளவிலான தூரத்தை கூட நடந்து சென்று கடக்க கூட ரொம்பவே யோசிக்கிறார்கள். என்னது அவ்வளவு தூரம் நடக்கணுமா என்ற வார்த்தையை பல சந்தர்ப்பங்களில் காதுகளில் கேட்க முடிகிறது. நடப்பது என்பது இயல்பிலே இருக்க வேண்டியது என்பது போய். அதனை மிகப்பெரும் விஷயமாக மாற்றி நடைப்பயிற்சி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம். இவையெல்லாம் போக, நடையே பயிற்சி என்று ஆன பிறகு, அதனைப் பயிற்சியாக மாற்றியவர்கள் சும்மா இருப்பார்களா. அந்த நடைப்பயிற்சிக்கு பின்னால் இருக்கும் வணிகத்தை சொன்னால் தலைசுற்றி விடும். எந்த ஒரு விளையாட்டு பொருள் விற்பனை செய்யும் கடையிலும், நடைப்பயிற்சிக்கான உபகரணங்கள் என்று எதையெல்லாம் விற்பனை செய்கிறார்கள் எனக் கேட்டுப்பாருங்கள். பெரிய பட்டியலே உங்கள் முன்னால் வரும்.
இன்றைக்கு எல்லாவற்றையும் வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்த பிறகும், சும்மா இருக்கிறோமா என்றால் இல்லை. நம்முடைய வீட்டிலிருந்து கூப்பிடும் தூரத்தில் எல்லாமே கிடைக்க வேண்டும் அல்லது இருக்க வேண்டும் என்ற எண்ணம் மோலோங்கி விட்டது. நம் வீட்டில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதெல்லாம் கவனப்படுத்துதல் அற்றுப்போய். குறிப்பாக சமயலறையில் இருக்கும் பொருட்கள் கூட எது இருக்கிறது, எது இல்லை என்பதின் மீது கவனமில்லாமல், சமைக்கும் நேரங்களில் தேவையான பொருளை தேடிக் கொண்டோ அல்லது அது இல்லாமல் எப்படி சமாளிப்பது என்று கற்றுக் கொண்டாகிவிட்டது. அதையும் தாண்டி, தேடும் பொருள் இல்லாமல் சமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால். சமையலை நிறுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் கடை இருக்க வேண்டும் என்பது தான் இன்றைக்கு சமையல் செய்பவர்களின் மனநிலை. இப்படி கைக்கு எட்டும் தூரத்தில் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிய பிறகு, நடந்து சென்று வாங்குவதெல்லாம் யோசிக்கவே முடியாத ஒன்றாகி விடுகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்களிடம் கேட்டால், நடக்குறதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பார்கள். அதே போல் குழந்தைகளையும் நடையாக எங்காவது அழைத்து செல்வதும் குறைந்து விட்டது. கேட்டால் பாவம் குழந்தைக்கு கால் வலிக்கும் என்பார்கள். முன்னர் பள்ளி செல்லும் காலங்களில் தினசரி மூன்று கிலோமீட்டராவது நடந்து போக வேண்டும் என்ற நிலையில் கூட. ஒவ்வொரு நாளும் அந்த நடை அப்படியொரு கொண்டாட்டமானதாக இருக்கும். ஆனால் இன்று வீட்டின் வாசலிலேயே பள்ளியின் பேருந்து வந்துடுமா என கூசாமல் கேட்கிறோம்.
நமக்குத் தான் நடக்க விருப்பமில்லை. குழந்தைகளை அதை செய்யவிடுகிறோமா என்றால் இல்லை. அப்படியே அந்த குழந்தை நடந்துவிட்டு வந்து கால் வலிக்கிறது என்று சொன்னால். உடனே இதுக்குத்தான் மொதல்லயே சொன்னேன் என வியாக்கியனம் சொல்ல ஆரம்பித்துவிடுகிறோம். அதே அந்த குழந்தையிடம் முதல்ல அப்படித்தான் வலிக்கும் போக, போகச் சரியாகிவிடும் என்று சொல்ல ஏனோ மனம் வருவதில்லை. நம்முடைய அம்மாவெல்லாம் அப்படிச் சொல்லித் தான் வளர்த்தார்கள் என்பதை மறந்து வெகுநாட்கள் ஆகிறது. எங்கோ நடக்கும் சில தவறான சம்பவங்களை செய்திகளிலே பார்த்து, பார்த்து. பொத்திப், பொத்தி வளர்க்கிறோம் என்ற பெயரில் நாமும் வீட்டை விட்டு எங்கும் போகாமல், அவர்களையும் வீட்டுக்குள்ளேயே முடக்கத் தயாராக இருக்கிறோம். குழந்தைகள் தனியாக நடக்கவிடுவதை பாதுகாப்பு இல்லை என நினைக்கிறீர்களா. தயவு செய்து குறிப்பாக அம்மாக்கள் தினசரி சிறிது நேரமேனும் ஒதுக்கி இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் மற்றும் அலைபேசி காணொளிகளை தூக்கிகிடாசி விட்டு பள்ளி விட்டு வந்த குழந்தைகள் அசுவாசமானதும். சிறிது நேரம் கழித்து உங்கள் குழந்தைகளுடன் காலாற நடந்து போங்கள். முதலில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் சுவாசிக்கும் காற்றே உங்களை புத்துணர்வு ஆக்கிவிடும். இன்று ஒவ்வொரு குழந்தையிடமும், அம்மாவிடமும், அப்பாவிடமும் பேச நிறைய இருக்கிறது. வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் வரை கண்டிப்பாக ஒருவரை ஒருவர் புரிந்து, நேரம் ஒதுக்கி பேச போவதே இல்லை. அதனால் தான் சொல்கிறேன் முதலில் வீட்டை விட்டு உங்கள் குழந்தைகளுடன் வெளியே வாருங்கள். உங்கள் தெருவையாவது தாண்டி சிறிது நேரமேனும் குழந்தைகளை கூட்டிக் கொண்டு நடங்கள். அப்பொழுது அவர்களுடன் பேசுகையில் நடந்து கொண்டே பேசுவதின் சுகம் என்னவென விளங்கும். கடைசியாக ஒரு சின்ன உதாரணம். சில மாதங்களுக்கு முன் தமிழில் 96 என்ற ஒரு திரைப்படம் வெளியானது. அதில் திரைப்படத்தின் பிரதான நாயகன் நாயகி இருவரும். ஓர் இரவில் சென்னையின் பரபரப்பற்ற சாலைகளில் நடந்துபடியே பேசிக்கொண்டே செல்வார்கள். அப்படியே பின்னனியில் பாடல் ஒலிக்கும். உண்மையில், அந்தக் காட்சியை திரையரங்கில் பார்க்கையில், பார்த்த அத்தனைபேருக்கும் அப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் அந்த எண்ணத்தை அங்கே விட்டு விட்டு வந்துவிடுவது தான் மிகப்பெரும் பலகீனம்.
அப்படியான ஒரு நடையை உங்களை குழந்தைகளை கூட்டிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்து பாருங்கள். அந்த இரவு கண்டிப்பாக மறக்கமுடியாத இரவாக இருக்கப்போவது உறுதி. அப்படியான மறக்க முடியாத அருமையான இரவுகள் உங்களுக்காகவும், உங்களின் குழந்தைகளுக்காகவும் காத்திருக்கின்றன. நீங்கள் நேரம் ஒதுக்கத் தயாரா என்பது தான் உங்களை நோக்கி நீங்கள் ஓராயிரம் முறை கேட்கவேண்டிய கேள்வி. இங்கே குழந்தைகள் என குறிப்பிடுவது குழந்தைகளை மட்டுமல்ல. மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916