வாழ்ந்து பார்த்த தருணம்…53

நீரின் ஓ(இ)சைக்கு நடுவே மணந்த அப்பத்தாவின் வெஞ்ஜனம்…

சில மாதங்களுக்கு முன்னர். ஒரு வார இறுதி நாளான ஞாயிறு காலை. என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். என்னுடைய மகள் நண்பரின் வீட்டிலிருக்கும் பிள்ளைகளுடன் விளையாடி கொண்டிருந்தாள். நண்பர் அவங்க விளையாடட்டும், எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கிறது. என்னுடன் வரமுடியுமா என அழைத்தார். சரியென நானும் அவருடன் கிளம்பினேன். இப்பொழுது நாங்கள் வசிக்குமிடம் மதுரைக்கு கொஞ்சம் வெளியில் இருக்கும் ஒரு கிராமம். அந்த கிராமத்திலிருந்து அருகில் இருக்கும் வேறோரு கிராமத்துக்கு தான் நண்பருடன் சென்றேன். நான் இருக்கும் கிராமத்திலிருந்து நாங்கள் போகும் கிராமத்திற்கு ஒரு குறுக்கு வழி இருக்கிறது. அந்த தடத்தில் பேருந்து வசதியெல்லாம் கிடையாது. எப்பொழுதாவது சிற்றுந்து வேண்டுமானால் செல்லும். அவ்வளவே, அதனால் கொஞ்சம் அமைதியான நெருக்கடியற்ற சாலை. அன்று ஞாயிறு வேறு அதனால் நிசப்தமாகவே இருந்தது. எங்களின் இருவரின் இரு சக்கர வாகன ஓசையைத் தவிர பெரிய சத்தம் ஏதுமில்லை. அப்பொழுது தான் கொஞ்சம் கூர்ந்து கவனித்தேன். நாங்கள் போன வழியெங்கும் நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டபடியே இருந்தது. நாங்கள் இருக்கும் கிராமத்தை சுற்றிலும் வயல்வெளி அதிகம். அதுவும் அது பாசன சமயம் என்பதால். பாசனத்துக்காக திறந்தவிடப்படும் தண்ணீர் வாய்க்காலில் ஓடிக்கொண்டிருக்கும்.

நாங்கள் போன கிராமத்தின் வழியே தான், நாங்கள் குடியிருக்கும் கிராமத்துக்குகான பாசனத்துக்கு வாய்க்காலின் வழியே தண்ணீர் வந்து கொண்டிருக்கும். அப்படி வரும் நீரின் ஓசை தான் நான் கேட்டது. நீருக்கு என்று ஒரு தனித்த ஓ(இ)சை இருக்கிறது. மிக கவனித்துk கேட்டால். அது ஒரு அற்புதமான தாள லயத்தில் சின்ன வளைவுகளில் நடனமாடியபடியே ஓடிக்கொண்டிருக்கும் நீரினுள் இருந்து வெளிப்படும் ஓ(இ)சையை கேட்க முடியும். இந்த உலகில் நீரை பிடிக்காத, நீரின் சுவையறியாதவர் யாருமில்லை. குழந்தை பருவத்திலிருந்தே நீரின் மீதான மனிதனின் காதல் தொடங்கிவிடுகிறது. அது எப்படி என யோசிக்கையில். ஒரு வேளை, தாயின் கருவறையிலிருந்து பிரசவிக்கும் வரைக்குமான பத்து மாத பயணத்தில். மனிதன் நீர்க்கூடத்தினுள் மிதந்தபடியே தான் இருக்கிறான். அதனால் தான் பிறந்த குழந்தையிலிருந்தே நீரின் மீதான காதலை மனிதன் தொடங்கிவிடுகிறான் என எனக்கு தோன்றுவதுண்டு. இருக்கலாம். அப்படிப்பட்ட நீரை ரசிக்க. அதனைப் பற்றி தெரிந்து கொள்ள. வாழ்வில் பல்வேறு இடங்களுக்கு பயணப்படும் போது தான், தமிழின் ஆர்பரிப்பு என்ற ஒரு அற்புதமான வார்த்தையின் அர்த்தம் விளங்கியது. அந்த வார்த்தைக்கான உண்மையான அர்த்தத்தை கொடுப்பது கண்டிப்பாக நீர் தான். கடலின் ஆர்ப்பரிப்பை, அதன் பிரம்மாண்டத்தை தாண்டிய ஒரு ஓசை இந்த உலகத்தில் இல்லை என்பேன். அதே போல் சிலிர்ப்பு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையும் நீரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். கொட்டும் அருவிக்கு அருகில் போய் நிற்கும் போது ஒரு உணர்வு வருமே அது தான்.

குற்றால ஐந்தருவி ஆர்ப்பரித்து, பாறைக்களுக்கு இடையில் வளைந்து, நெளிந்து, விழுந்து கொண்டிருக்கும். ஒரு அட்டகாசமான குளிர்கால இரவில். நேரம் சரியாக இரவு 11:30மணிக்கு அப்படி விழும் அருவிக்கு அருகில் போய் நின்றிருக்கிறீர்களா, நான் நின்றிருக்கிறேன். அப்படி நிற்கும் போது, மேலிருந்து விழும் நீரின் துவளைகள் அப்படியே காற்றில் மிதந்து வந்து நம் உடலில் படும் பாருங்கள். அப்பொழுது உடல் ஒரு நிமிடம் குலுங்கி அடங்கும். அதன் பெயர் தான் சிலிர்ப்பு. சிறு நடுக்கத்துடனும், சிலிரிப்புடனும் ஆர்ப்பரித்து விழும் அருவியில் ஓ(இ)சையை கேட்டபடியே நிற்பது பெரும் சுகம். அப்படி நின்று கொண்டிருக்கும் சிறிது நேரத்தில் உடல் அந்த குளிருக்கு தயாராக, அப்படியே ஓடிப்போய் அருவியின் இடையில் போய் நின்றால், உடல் நடுக்கத்துடனே அந்த நீரை உள்வாங்கும் அந்த நிமிடத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. அப்படியே நனைந்தபடி நம் முகத்தில் பட்டு வழியும் நீரை அருந்தும் போது. அந்த நீரின் சுவையில் நீங்கள் கரைந்து போவீர்கள். இப்படி வாழ்வின் பல்வேறு தருணங்களில் நீர் மனிதனின் வாழ்வில் மட்டுமில்லை அவனுடைய உடலின் மிக, மிக முக்கியமான தவிர்க்கவே முடியாத அங்கமாக கடைசி வரை பயணிக்கிறது. இப்படி நீரினை பற்றிய பல்வேறு எண்ணங்களை அசை போட்டபடி இருசக்கர வாகனத்தில் போய்கொண்டிருந்த போது. கூடவே பயணித்துக்கொண்டிருந்த நண்பர், போகும் வழியில் ஒரு இடத்தில் கம்பங்கூழ் நன்றாக இருக்கும் என வாகனத்தை நிறுத்தினார். ஆனால் நாங்கள் போன நேரம் காலை 11மணிக்கு மேல் ஆகிவிட்டதால் கூழ் தீர்ந்துவிட்டது. நண்பர் ஏமாற்றத்துடன் வேறு என்ன இருக்கிறது என அந்த ரோட்டோர கடைக்காரரிடம் கேட்க. கூழுக்கு தொட்டுக்க கொண்டு வந்த கத்திரிக்காய் வெஞ்ஜனம் இருக்கிறது என்றார். சரி அதையாவது குடுங்க என அதனை கொஞ்சம் உள்ளங்கையில் வாங்கி சுவைத்துவிட்டு, அப்படியே அதன் சுவையில் மயங்கி கண்களை மூடி லயித்தபடியே அந்த கடைக்காரரிடம் சொன்னார். அப்படி எங்க அப்பத்தா பழைய சோறுக்கு வைக்கிற வெஞ்ஜனம் மாதிரியே இருக்கு. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916