வாழ்ந்து பார்த்த தருணம்…54

வைக்கோல் என்ன வெறும் மாட்டுதீவனமா?…

புகைப்படக்கலையை தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு சென்று கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறேன். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது. விவசாயம் சார்ந்து பேச்சு திரும்பியது. அப்பொழுது வைக்கோல் என்றால் எத்தனை பேருக்கு தெரியும் எனக் கேட்ட போது. பெரும்பாலும் அது மாடு சாப்பிடுறது சார் என்ற பதில் தான் அதிகமாக வந்தது. சரியென இன்றைய இளைய தலைமுறையை வளர்தெடுக்கும் பெற்றோரிடம் என்ன இப்படி பதில் சொல்கிறார்கள் என வினவினால். சார் இதையெல்லாம் தெரிஞ்சு இவங்க என்ன பண்ணப்போறாங்க. இவங்க போக போற கலெக்டர் வேலைக்கு இதெல்லாம் எதுக்கு என்ற எதிர்கேள்வி தான் வந்தது. வளரும் தலைமுறை தான் அப்படியென்றால். அவர்களை வளர்தெடுக்கும் தலைமுறையின் புரிதலும் இப்படி இருக்கிறதே என்ற அசூயை தான் மிஞ்சியது. இன்றைய நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் இதை மட்டும் தெரிந்துகொண்டால் போதுமானது. அப்படி தெரிந்து கொள்ளும் விஷயங்களும் அவர்கள் பணம் ஈட்ட போதுமான அளவில் இருந்தால் நலம் என்ற மனநிலையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற மோசமான வழி நடத்தல் எங்கு போய் முடியும் என்ற தெளிவு, கண்டிப்பாக வளர்ந்து வருபவர்களுக்கும் இல்லை. வளர்தெடுப்பவர்களுக்கும் இல்லை.

இதைச் சொல்ல மிக, மிக முக்கியமான காரணம் இருக்கிறது. இதைப் படிப்பவர்கள் அது யாராக இருந்தாலும், வைக்கோலை பற்றி தெரிந்து என்ன ஆகப் போகிறது. அதைத் தெரிந்து கொள்வதின் வழியே என்ன பெரியதாக அறிவு வளர்ந்துவிடும் என்று யாரெல்லாம் யோசிக்கிறீர்களோ. அப்படி யோசிக்கும் அத்தனை பேருக்காகவும் நான் பரிதாபப்படுகிறேன். வைக்கோல் என்பது ஒரே ஒரு உதாரணம் மட்டுமே. வைக்கோல் மட்டுமில்லை. இன்றைய வளரும் தலைமுறை இப்படியான தெரிந்துகொள்ளாமல் விடும் விஷயங்கள் மிக, மிக அதிகம். இப்படிப்பட்ட தேவையில்லை என்று ஒதுக்கும் தகவல்களால் என்ன நடக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். காரணம் இன்றைய வளரும் தலைமுறையின் முளைக்குள் தான் வாழ, தனக்கு யாரும் தேவையில்லை. தான் மட்டுமே போதும் என்ற மனநிலை மெல்ல, மெல்ல ஆழமாக வேர் ஊன்றி பரவ ஆரம்பித்துவிட்டது, முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இந்த பூமியில் மனிதனின் வாழ்வியல் பங்கு என்பது மிக, மிக சின்னஞ் சிறிய பகுதி மட்டுமே. மனிதன் அல்லாத மற்ற உயிர்களின் வாழ்தல் என்ற கட்டமைப்பின் மீது தான் மனிதனின் வாழ்வியல் ஆன்மாவே அடங்கியிருக்கிறது. அப்படியான புரிதலில் இருந்து நோக்கினால். நெல் தானியமாக இந்த பூமியில் விழுவதில் இருந்து, அது அறுவடைக்கு தயாராகி வைக்கோலாக மாறுகிற வரை எத்தனை, எத்தனை உயிர்களின் உழைப்பும், இந்த இயற்கை அன்னையில் அளப்பரிய பங்கும், அர்ப்பணிப்பும் இருக்கிறது என்பதும். அதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எத்தனை விதமான மாற்றங்களுடன் வெளி வருகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

இவையெல்லாம் எனக்கு தெரிந்து என்ன ஆகப் போகிறது என்ற மனநிலை தான். இன்றைக்கு இருக்கும் பல்வேறு சமூக பிரச்சனைகளில் இருந்து பல்வேறு பொது பிரச்சனைகளுக்கு ஆணிவேராக இருக்கிறது. இது போன்ற விஷயங்களை புறக்கணிக்கும் ஒருவன். கண்டிப்பாக நல்ல மனிதனாக வர வாய்ப்பேயில்லை. அப்படியான ஒருவன் தான் காலை எழுந்ததில் இருந்து, இரவு தூங்கப்போகும் வரை தான் உயிர்வாழ தேவையான அனைத்தும், தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளத் தவறுகிறான். இந்த மனித சமூகம் வளர்ச்சி என்ற பெயரில் கெடுத்து குட்டிசுவறாக்கி வைத்திருக்கும் காற்றைக் கூட சுத்தமாக்கி, தான் வாழும் பூமிக்கே திரும்பத் தரும் மரத்தின் தயவால் தான் மூச்சுக்காற்று கூட சுவாசிக்க தக்கதாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல். நான் கலெக்டராக ஆகப் போகிறனா அல்லது பொறியாளராக ஆகப்போகிறேனா என்று வளரும் தலைமுறையும், வளர்க்கும் தலைமுறையும் கேட்கும் பொழுது, இவர்களிடம் இந்த சமூகம் என்ன எதிர்பார்க்க முடியும். இப்படிப்பட்ட அறிவு கொழுந்துகளாக வளரும் இன்றைய அறிவுச் சூழலில். அப்படி வளரும் தலைமுறை, இந்த பூமியை எப்படி நேசிக்கும். இந்த மண்ணை எப்படி நேசிக்கும். சக உயிரை எப்படி நேசிக்கும். சக மனிதனை எப்படி நேசிக்கும். வாய்ப்பேயில்லை. யார் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன என்ற மனநிலையில் தான் வளரும். பணம் ஈட்ட போதுமான படிப்பு இருந்தால் போதும் என்ற மனநிலையை ஊட்டிவிட்டு, ஊட்டிவிட்டு வளர்க்கப்படும் தலைமுறையால். ஒரு நாள் பணம் மட்டுமே இந்த உலகத்தில் இருக்கப் போகிறது. அன்றைக்கு மனிதன் என்ற உயிரினம் மட்டுமே இந்த பூமியில் இருப்பான். அப்படியான சுழல் வருகையில் கண்டிப்பாக எல்லா மதங்களிலும் தவறாமல் குறிப்பிடப்படும் நரகம் எது என்பதை கண்கூடாக பார்க்கலாம். அது வரை வளரும் தலைமுறையும், வளர்க்கும் தலைமுறையும் சொல்வது போல் வைக்கோல் பற்றி தெரிந்துகொண்டு என்ன ஆகப்போகிறது. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916