வாழ்ந்து பார்த்த தருணம்…05

குழந்தைகளும் & உருவாக்குதலும்

24ம்தேதி புகைப்படபயிற்சியின் அடுத்தநாள், 25ம் தேதி நல்லசோறு ராஜமுருகன் அவர்களின் அதே தோட்டத்தில் குழந்தைகளுக்கான ஒன்றுகூடல். நான் 24ம் தேதி வந்தவன் அங்கே தங்கிவிட்டேன். அடுத்த நாள் இருக்கும் நேரத்தைப் பொறுத்து, போன மாத தொடர்ச்சியாக அவர்களுக்கும் புகைப்பட பயிற்சியளிக்கத் திட்டம். அதே சமயத்தில் போன மாதமே சொல்லி பயிற்சியளிக்கமுடியாமல் விட்டு போன பொம்மை பயிற்சியும் இருந்தது. அதை கற்றுக்கொடுக்க நண்பர் செல்வம் அதிகாலையே மதுரையிலிருந்து கிளம்பி வந்து சேர்ந்தார். குழந்தைகளும் வர ஆரம்பித்தார்கள்.
இன்றைய குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப எளிமையாக கற்றுத்தேர்ந்து விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சொல்லி கொடுக்குமளவுக்கு யாருக்கும் பொறுமையில்லை அவர்களின் பெற்றோர் உட்பட. காரணம், இன்றைய குழந்தைகள் நிறைய கேள்விகள் கேட்கிறார்கள். பதில் தெரியாவிட்டால், தெரியவில்லை என ஒத்துக்கொள்ள மனம் வரமாட்டேன் என்கிறது. எரிந்து விழுகிறோம். ஒரு கட்டத்தில் அவர்கள் கேட்பதையே நிறுத்திவிடுகிறார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உலகத்துக்குள் சென்று, குழந்தைகளுக்கு பிடித்தமானவர்களாக மாறி, அவர்களுடன் உரையாடுவது, அவர்களைப் புரிந்து கொள்வது தனிக்கலை. அதை தனது லாவகமான செய்கை மற்றும் பேச்சின் மூலம் அவர்களில் ஒருவராக மாறி கற்றுக்கொடுப்பத்தில் விற்பனர் நண்பர் செல்வம்.

குழந்தைகள் உலகத்தில் மிக முக்கியமான ஒரு பொருள் பொம்மை. அதை எப்படிச் செய்ய வேண்டும் எனக் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்பதே, அவர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டியது. காலுறையில் பொம்மை செய்வது எப்படி என்பதே, இன்றைய பயிற்சி. அதுமட்டுமல்ல நீங்கள் பார்க்கும் வீணாக இருக்கிறது என நினைக்கும் எந்த பொருளிலும் பொம்மை செய்யலாம் என்பதன் அடிப்படையே, இந்தப் பயிற்சி எனச் சொல்லிவிட்டார். குறிப்பாக பொம்மை செய்ய வேண்டும் என வீட்டில் போய் பணம் கண்டிப்பாக கேட்கக் கூடாது என்பதையும் தெளிவாக அறிவுறுத்திவிட்டார்.

காலுறையில் பொம்மை செய்தல் ஆரம்பமானது. செல்வம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலே குழந்தைகள் சரியாக புரிந்துகொண்டு, அவர் சொல்லி கொடுத்தமுறையுடன் சேர்த்து தங்களுடைய கற்பனைதிறனை இணைத்து விதம் விதமான வண்ணத்தில், அலங்காரத்தில் பொம்மைகள் உருவாக ஆரம்பித்தது. நானும் அவர்களுடன் இணைந்து பொம்மை செய்து கொண்டும், புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தேன். பல்வேறு விதமான வடிவங்களில், அந்த தோட்டத்தில் உள்ள பொருட்களையும் பயன்படுத்தி கலக்கலான பொம்மைகள் உருவாகி கொண்டிருந்தது. ராஜமுருகன் அவர் பங்குக்கு, தோட்டத்தில் இருக்கும் பல விதமான பொருட்களை எடுத்துவந்து, இதை இப்படிப் பயன்படுத்தலாம் எனச் சொல்ல, எல்லாவற்றையும் சேர்த்து குழந்தைகள் பொம்மைகளை அழகாக உருவாக்கி கலக்கி எடுத்துவிட்டார்கள்.

மதியம் உணவிற்கு பின், குழந்தைகளின் வேண்டுகோளின் படி, சிறிய அறநெறி நாடகம் செல்வம் அவர்களின் உருவாக்கத்தில், குழந்தைகள் தங்களுக்குள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நடித்துக் காண்பித்தார்கள். ஒரு குழுவில் குழந்தைகளோடு, குழந்தையாக செல்வம் அவர்களும் நடிக்க குதுகலத்திற்கு குறைவில்லை. இதுபோன்றதொரு குழந்தைகளின் ஒன்று கூடலை ஏற்பாடு செய்து, மாதாமாதம் நடத்தும் நல்லசோறு ராஜமுருகனின் முயற்சி கண்டிப்பாக குழந்தைகளுக்கு மிகப்பெரும் பலம். ராஜமுருகனின் தொடர்ச்சியான இந்த முயற்சியை பயனுள்ள வகையில் மாற்றுவது பெற்றோர்களின் கடமை. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதோடு தங்கள் கடமை முடிந்தது என்றில்லாமல், இது போன்றதொரு நிகழ்வுக்கு அழைத்து வருவதை தவிர்க்காமல் செய்யுங்கள். குழந்தைகளின் மாற்றத்தை கண்டிப்பாக உணர்வீர்கள். இந்த ஒன்று கூடல் கண்டிப்பாக அவர்களுக்கான அழகான உலகம். மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
+91 9171925916