வாழ்ந்து பார்த்த தருணம்…56

விதை விதைத்ததும் பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ…

ஆனா எனக்கு சாப்பிடணுமே. என்ன பண்ணுறது. சூப்பர்ஸ்டாரின் பேச்சு அப்படித்தான் இருக்கிறது. மேலே தலைப்பாக நான் குறிப்பிடுள்ள வசனம், தேவர்மகன் படத்தில் மிக, மிக முக்கியமான காட்சியில், கமலுக்கும் சிவாஜிக்கும் இடையில் நடக்கும் உரையாடலுக்கு இடையில் பேசப்படும் ஒரு வசனம். நிகழ்காலத்தில் யோசித்துப்பார்த்தால் அதே காட்சி அப்படியே கமலுக்கும் சூப்பர்ஸ்டாருக்கும் நடந்தால் எப்படியிருக்கும் எனத் தோன்றியது. அட்டகாச நகை முரணாக ஒரு வகையில் சூப்பர்ஸ்டாரின் நிஜபெயரும் சிவாஜி. (https://www.youtube.com/watch?v=h8kfABvuJBk) காட்சிக்கான காணொளியின் இணைய சொடுக்கையும் மேலே கொடுத்திருக்கிறேன். சிவாஜி இடத்தில் அசல் பெயருடைய சூப்பர்ஸ்டார் சிவாஜியை பொருத்திக் கேட்டுப்பாருங்கள். உண்மையில் தேவர் மகன் திரைப்படத்தில் மருத்துவமனைக்கு போய்விட்டு வந்தபிறகு கமல் என்ன மனநிலையில் இருந்து பேசுவாரோ, அதே மனநிலையில் தான் சூப்பர்ஸ்டார் பேசியிருக்கிறார். இந்த அசல் சிவாஜிக்கு எதிரில் எந்த நடிகர் திலக சிவாஜியும் இருந்து நடைமுறை யதார்தத்தை புரியவைக்க முடியவில்லை என்பது தான் கள யதார்த்தம்.

ஒரு குறிப்பட்ட வேலைக்குள் இருந்துகொண்டு, சோதனையான முன்னெடுப்புக்கள் இல்லாமல், பரிட்சாத்திரமாய், வித்தியாசமாய் எதனையுமே யோசித்து செயல்படுத்தாமல், அப்படி யோசித்து செயல்படுத்தும் விஷயங்கள் ஒன்றிரண்டு தோற்றுவிட்டால் உடனடியாக பயந்துபோய், நமக்கு இது மட்டுமே சரியாக வரும் என ஆணித்தரமாக முடிவு செய்து, அந்த பாதையில் மட்டுமே பெரியதாக புது மாதிரி எதையும் யோசிக்காமல், அடிகிடி படாமல், மிக மிக பாதுப்பாக பயணித்து, அதில் கிடைக்கும் வெற்றியை மட்டுமே சுவைத்து, அந்த வெற்றியின் வழியாகவே உச்சத்தை அடைந்த பிறகு, அந்த உச்சப்பட்ச வெற்றியை தக்கவைக்க படாதபாடு படும் ஒருவருக்கு. கண்டிப்பாக கள யதார்த்தம் புரியவாய்ப்பேயில்லை. அவரிடம் போய் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், அதுவும் நாட்டின் ஒரு கோடியில் இருந்து கொண்டு, மொத்த நாட்டுக்கே நாங்கள் வேறு மாதிரி என பல உதாரணங்களை எடுத்துக் கொடுத்து கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தின் தலையெழுத்தை உங்களால் களத்தில் இறங்கி மாற்ற முடியுமா எனக் கேட்டால். அவர் என்னத்த சொல்லுவார் சொல்லுங்கள். தேவர்மகனில் வரும் திரைப்பட வசனம் போல், இவங்க வர்றதுக்குள்ள நான் செத்துடுவேன் போலிருக்கே என்ற பதில் தான் வரும், வேறு ஏதாவது பதிலை எதிர்பார்த்து காத்திருந்தவர்களை நினைத்து எனக்கு பரிதாபம் தான் வருகிறது, அவர்களும் ஒரு வகையில் களயதார்தத்தை புரிந்துகொள்ளாத சூப்பர்ஸ்டார்களே. அல்லது கள யதார்த்தம் புரிந்தும் கண்டிப்பாக ஏதாவது அதிசயம் நடக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் காத்திருந்த இழவுகாத்த கிளிகள்.

ஒரே வேலைக்குள் இருக்கும் அடிப்படை வடிவங்கள் எதனையும் மாற்றாமல், மேலே உள்ள பூச்சு வேலைகளில் மட்டும் சில பல நிறங்களை மட்டும் மாற்றி, மாற்றி அதன் வழியாக பெரும்பாலும் வெற்றியை சுவைத்த பிறகு. அதுவும் ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல 40 வருடங்களாக அப்படியான வெற்றியை சுவைத்த ஒருவருக்கு. கனவுலகுக்கும் நிஜத்துக்குமான வித்தியாசம் தெரியாமல் போக நூறு சதவீதம் வாய்ப்பிருக்கிறது. அந்த இடத்தில் இருந்து பார்த்தால் சூப்பர்ஸ்டாரின் இன்றைய நிலை மிகச்சரியே. ஒருவகையில் இதனை மிக, மிக கவனிக்கத்தக்க விஷயமாக மாற்றி. அதுவும் கண்டிப்பாக மிகப்பெரும் மாற்று சக்தி இவர் தான் என அனைவரையும் ஒரு வகையில் நம்பவைத்ததில் ஊடகங்கள் பங்கு மிக, மிக பெரியது. பாவம் அவர்களும் என்ன செய்வார்கள், நாளுக்கு நாள் போட்டி அதிகமாகி கொண்டு போகும் தங்கள் துறையில். மக்களை முட்டாளாக வைத்திருப்பதில் யார் முன்னனியில் இருக்கிறார்கள் என்பதில் கடும் போட்டியே தினம் தினம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரும் வரப்பிரசாதம் தான் சூப்பர்ஸ்டார். அவரும் சலிக்காமல் வீதியில் நின்று வியாக்கியானம் கொடுக்க. அந்த வியாக்கியானங்களை எல்லாம் அவர் சூப்பர்ஸ்டாராக பேசுகிறாரா. அல்லது அசல் சிவாஜியாக பேசுகிறாரா என தாங்களும் யோசிக்காமல். தங்கள் ஊடகங்களில் வழியே இதனை பார்க்கும் மக்களையும் யோசிக்கவிடாமல். இந்த விளையாட்டை மிக, மிக சிறப்பாய் விளையாடிய ஊடகங்களையும். அதனை அப்படியே நம்பிய பெரும் கூட்டத்தையும் நினைத்தால். என்னத்த சொல்ல என்று தான் தோன்றுகிறது. கண்டிப்பாக சூப்பர்ஸ்டார் இவ்வளவு சொன்ன பிறகும் ஊடகங்கள் இதனை வைத்து இன்னும் எவ்வளவு நாளைக்கு கும்மியடிக்க போகிறார்கள் எனத் தெரியவில்லை. அதன் பிறகாவது விடுவார்களா என்றால். அதனையும் உறுதியாக சொல்ல முடியாது. மீண்டும் அரசியல் பிரவேசம் என ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. மகிழ்ச்சி…

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916