தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் எனும் ஈரவெங்காயம்…
பிறந்ததும் மதுரை தான். பிறந்ததில் இருந்து வசித்து வருவதும் மதுரையில் தான். இடையில் சில ஆண்டுகள் தமிழ் திரைப்படத்துறையிலும், அப்புறம் விளம்பர படத்துறையிலும் பணிபுரிந்த காலகட்டங்களில் மட்டுமே மதுரையில் இல்லை. இப்பொழுது கடந்து ஒரு வருடத்திற்கும் மேலாக குடும்பத்தினருடன் மதுரையில் தான் இருக்கிறேன். மதுரையில் தான் பணியும் புரிகிறேன். இவ்வளவு தூரம் மதுரையில் வசிப்பதை பற்றி வியாக்கியானம் கூற மிக முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. இந்த பதிவே அதன் அடிப்படையில் தான். நேற்றைக்கு வீட்டில் ஒருவருக்கு உடலில் சிறு காயம் அதனால் மருத்துவமனை வரை செல்ல வேண்டி இருந்தது. அதனால் போகப் போகும் மருத்துவமனைக்கு முன்கூட்டியே அலைபேசி வழியே அழைத்து மருத்துவர் எத்தனை மணிக்கு வருவார் என விசாரித்தால். பத்து மணிக்கு மேல் வருவார் அதன் பின் வாருங்கள் எனச் சொல்லிவிட்டார்கள். பத்து மணிக்கு மேல் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு பத்து முப்பது மணிக்கெல்லாம் போய் ஆயிற்று. மருத்துவர் இப்பொழுது வந்துவிடுவார் எனச் சொல்லிச் சொல்லி கிட்டத்தட்ட இரண்டே கால் மணி நேர காத்திருப்புக்கு பின் மருத்துவர் வந்தார். ஆனால் விஷயம் அந்த இரண்டே கால் மணி நேர காத்திருப்பு அல்ல. அந்த காத்திருப்பு கூட ஒரு வகையில் சரிதான். ஆனால்…
அது ஒரு தனியார் மருத்துவமனை. இந்த இரண்டே கால் மணி நேரமும், அந்த மருத்துவமனையின் வரவேற்பறையில் தான் காத்திருக்க வைக்கப்பட்டோம். அந்த வரவேற்பறையில் பார்வையாளர்களுக்காக ஒரு தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. போய் அமர்ந்ததில் இருந்து தமிழின் ஒரு முன்னனி செய்தி தொலைக்காட்சியின் செய்திகள் தான் ஓடிக் கொண்டே இருந்தது. இப்பொழுது பரப்பரப்புக்கு பஞ்சமில்லாத செய்தி ஓடிக் கொண்டிருக்கிறதே. நின்றால், நடந்தால் உட்கார்ந்தால் என எல்லா செய்திகளும் அதனைச் சுற்றித் தான். எந்தெந்த நாட்டில், எவ்வளவு பேருக்கு இப்படி. அந்த இவ்வளவு பேரில் இத்தனை பேர் இப்படி, என சகலமும் இது தான். அப்படியேச் சுற்றி வளைத்து, செய்தியில் மதுரையை பற்றியும் வந்தது. ஆனால் அது எப்படியான செய்தியாக வந்தது என்பது தான் விஷயமே. அந்தச் செய்தியின் தலைப்பே அட்டகாசம். தூங்கா நகரமான மதுரை முடங்கியது என்பது தான் அந்தத் தலைப்பே. அந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் நானும், என்னுடைய மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். மேலே மதுரையில் தான் குடும்பத்துடன் வசிக்கிறேன் என்று மிகப்பெரிய வியாக்கியானம் கொடுக்கக் காரணம் இந்தச் செய்தி தான். மனத்துக்குள் ஒரு கேள்வி அடேய் மதுரை எப்படா முடங்கியது நாங்களும் மதுரைகாரங்க தாண்டா என்று எழும்பிய கூக்குரலை மனத்திற்குள்ளேயே அடக்கிவிட்டு. மதுரையில் இருந்து பேசும் செய்தியாளர் எங்கிருந்து பேசுகிறார் என உற்றுக் கவனித்தால். அவர் நின்றுப் பேசிக்கொண்டிருந்த இடம் மதுரை மாட்டுத்தாவணியில் இருக்கும், வெளியூர் செல்லும் பயணிகளுக்கான தனியார் பேருந்து நிலையத்தில் உள்ளே இருந்து பேசிக்கொண்டிருந்தார். வருடத்தின் எல்லா நாளிலும் பகலில் போய் பார்த்தால், மதுரை மட்டுமில்லை, பெருநகரமான சென்னையிலேயே கோயம்பேடு தனியார் பேருந்து நிலைத்தில் கூட ஒரு கூட்டமும் இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் இந்த நிமிடம் வரை மதுரையும் முடங்கவில்லை. மதுரை மக்களும் முடங்கவில்லை என்பது தான் என்னுடைய பதில்.
இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் உண்மையில் மக்களிடம் எதை கட்டமைக்க விரும்புகிறார்கள் என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஆக இந்தச் செய்தி ஊடகங்களில் ஆகோர பசிக்கு மக்கள் கொத்து கொத்தாக இரையாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதை விட கேவலமான சிறந்த உதாரணம் தேவையேயில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் ஏழு கோடி பேரில் மதுரை பக்கம் வந்து செல்லாத எத்தனையோ பேர் இந்த செய்தியை பார்த்துக்கொண்டிருப்பார்கள் இல்லையா. அவர்கள் இந்த செய்தியை எவ்வாறு உள்வாங்குவார்கள் என யோசித்தால். தலைசுற்றுகிறது. நம் நாட்டில் அதுவும் நம் மாநிலத்தில் இருக்கும் ஒரு சின்ன ஊரை பற்றிய செய்தியில் கூட கொஞ்சம் கூட அடிப்படை அறம் இல்லாமல், அந்தச் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி சிறிதளவு கூட யோசிக்காமல், வெற்று பரபரப்புக்காக இப்படி கேவலத்திலும், கேவலமாக மக்களின் மனதில் பயத்தை, அச்சத்தை ஒரு தொலைக்காட்சி செய்தி ஊடகத்தின் வழியே உருவாக்க முடியும் என்றால். இன்றைய இக்கட்டான சூழலில் மற்ற மாநில மக்களின் உண்மை நிலவரம் பற்றிய தகவல்களையும், நம் நாட்டின் உண்மை நிலவரம் பற்றிய தகவல்களையும், உலகின் மற்ற நாடுகளின் உண்மை நிலவரம் பற்றிய தகவல்களையும் இப்படி நம்மை நோக்கி வரும் எல்லா தகவல்களையும், நாம் உண்மையில் எதன் அடிப்படையில் நம்புகிறோம். தயவுசெய்து சிறிதளவேனும் சுய அறிவோடு யோசியுங்கள். இன்றைய சுழலில் குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனை கோடி மக்களின் வீட்டில், எத்தனை கோடி மக்களால் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள். தாங்கள் பார்த்த செய்தியை மற்றவர்களிடத்தில் எப்படியெல்லாம் பகிர்வார்கள் என சிந்தித்துப் பாருங்கள். சத்தியமாய் இன்றைய நிலையில் பயப்பட வேண்டிய விஷயம் வெளியில் இருந்து வரத் தேவையே இல்லை. உள்ளே இருக்கும் இது போன்ற ஈர வெங்காய செய்தி ஊடகங்களை புறக்கணித்தாலே போதும். மகிழ்ச்சி…
பின்குறிப்பு : எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லை. அதனை பரணில் தூக்கி வீசி பல மாதங்கள் ஆகிறது…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்