வாழ்ந்து பார்த்த தருணம்…60

வார்த்தைகளை கடத்தாதீர்கள், கடந்து போங்கள்…

இந்த வாரத்தில் ஒரு நாள், ஒரு சம்பவம், என்னுடைய நண்பர்கள் வட்டத்துக்குள் இருக்கும் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன், சுற்றிலும் மற்ற நண்பர்களும் இருந்தார்கள், பேச்சு போய்க்கொண்டிருக்கும் போதே என்னுடன் பேசிக்கொண்டிருந்த நண்பர், சடாரென உனக்கு எல்லாம் அதுக்கு தகுதியே இல்ல என்ற பொருள் படியும்படியான ஒரு சொல்லாடலை சொல்லிவிட்டு பேச்சை தொடர்ந்தார், இதனை கேட்டவுடன் எனக்கு சட்டென ஒரு மாதிரி ஆகிவிட்டது, பின்னர் இரண்டொரு வார்த்தைகளை தொடர்ந்து பேசிவிட்டு, அங்கிருந்து நகர்ந்துவிட்டேன், கொஞ்ச நேரத்துக்கு மனதுக்குள் நண்பர் சொன்ன அந்த வார்த்தையும் அதனால் ஏற்பட்ட அசூயையான மனநிலையும் இருந்துகொண்டே இருந்தது, அதன் தொடர்ச்சியாய் மனதிற்குள் அவர் சொன்ன வார்த்தையை யாரிடமெல்லாம், எப்படியெல்லாம் சொல்ல வேண்டும் என்ற பட்டியல் உடனடியாக தயாராகி விட்டது, இப்படியான மனநிலையில் இருந்து இயல்பான மனநிலைக்கு மனதை கொண்டு வர சிறிது நேரம் எடுத்தது, அதுவரை கண்டிப்பாய் யாரிடமும் பேசக்கூடாது என அமைதியாய் இருந்துவிட்டேன், அப்படி அமைதியாய் யாரிடமும் பேசாமல் இருக்கவே கொஞ்சம் போராட வேண்டியிருந்தது, ஆனால் யாரிடம் பேசினாலும் அவர் சொன்ன வார்தைகளை மேற்கோள் காட்டி என்பக்கம் இருக்கும் சாதகங்களை முன்னிறுத்தி தான் பேசுவேன் என தெளிவாக தெரிந்ததால் நாம் பேசவே கூடாது என்பதில் உறுதியாக இருந்துவிட்டேன்.

அசூயையான மனநிலையில் இருந்து இயல்புக்கு வந்த பிறகு யோசித்துப்பார்த்தால், பேசிக்கொண்டிருந்த நண்பர் சொன்ன வார்த்தைகளுக்கு ஏன் இவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்தேன், அப்படியானால் நண்பர் சொன்ன வார்த்தைகளுக்குள் என்னை பொருத்திப்பார்த்திருக்கிறேன் என்பது தெரிந்தது, அப்படி பொருத்தி பார்ப்பது எந்த வகையிலும் என்னை உயர்த்தாது என தெரிந்தது, இந்த தெளிவு வந்தவுடன், உண்மையில் நண்பர் சொன்ன வார்த்தைகள் அவர் ஏதோ ஒரு கோபத்தில் வெளிப்படுத்திய வெளிப்பாடு மட்டுமே என்பது தெளிவாய் புரிந்தது, அதனால் அதை தாண்டி அதை பற்றி இவ்வளவு யோசிக்க தேவையில்லை என தோன்றியது, அதை விட மிக முக்கியமான விஷயம் அவர் சொன்ன வார்த்தைகளை மற்றவர்களிடத்தில் சென்று சொல்ல ஆரம்பிக்கிறேன் என வைத்துக்கொண்டால், கண்டிப்பாக அவர் பேசிய வார்த்தைகளை அப்படியே சொல்லமாட்டேன், அந்த வார்தைகள் கண்டிப்பாய் வேறு ஒன்றாய் மாறும், அதற்குள் எனக்கு சாதகமான விஷயங்களையும் சேர்த்து, இவ்வளவு விஷயங்கள் எனக்கு சாதகமாக இருக்கையில், அவர் இப்படி என்னை சொல்லிவிட்டார் என பெரிய வியாக்கியானத்தோடு தான் என் தரப்பு விளக்கம் இருக்கும், இப்படியான விளக்கத்தோடு எத்தனை பேரிடம் சொல்வேன் என்பதற்கு கணக்கெல்லாம் கிடையாது, அவர் சொன்ன வார்த்தைகளை எத்தனை நாள் சுமந்து திரிகிறேனோ அத்தனை நாளும் மேலே சொன்ன என்தரப்பு வியாக்கியானம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

மேலே சொன்னது போல் நடந்தால் எப்படியிருக்கும் என சிந்திக்கையில், அவர் சொன்ன வார்த்தைகளை மற்றவர்களிடம் சொல்வதனால் எனக்கு என்ன பயன் என யோசித்தால் ஒன்றுமே இல்லை, வெறும் சுயசொரிதல், சுய ஆறுதல் மட்டுமே, அதை தாண்டி இதை செய்வதனால் எங்கள் இரண்டு பேருக்குள் மட்டுமே நடந்து முடிந்துபோன ஒரு உரையாடலை, மீண்டும் மீண்டும் உயிர்பித்து, என்னுடைய தரப்பு நியாயங்களை சொல்கிறேன் என்ற பெயரில், நண்பரின் மீதான பிம்பத்தை மிக மோசமாக சிதைப்பதின் வழியே என்னுடைய பிம்பத்தை நியாயவானாக கட்டமைப்பேன் என்பது தான் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை, இந்த நியாயாவான் பிம்பம் எத்தனை நாளைக்கு தாங்கும் என்றால் ஒன்றுமேயில்லை கண்டிப்பாக தாங்கவே தாங்காது, இதையெல்லாம் கொஞ்சம் அறிவுப்பூர்வமாக சிந்தித்து, அந்த உரையாடலின் வார்த்தைகளை மற்றவர்களுக்கு கடத்தாமல் கடந்துவந்துவிட்டேன், அவ்வளவே. ஒரே ஒரு மிக முக்கியமான விஷயத்துக்கு தவிர்க்காமல் கண்டிப்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன், அந்த நன்றி இப்படியான தெளிவான சிந்தனையை எனக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கும் என்னுடைய புத்தங்களுக்கும், தொடர்ச்சியான எனது எழுத்துக்கும், என்னுடைய உளவியல்ரீதியான புகைப்பட பயிற்சி வகுப்புகளுக்கும் மற்றும் என்னுடைய வாழ்வியல் பயிற்சி வகுப்பின் வழியே சந்திக்கும் மக்களுக்கும் மிகப்பெரும் நன்றி. பெரும்பாலான நேரங்களில் நாம் நம்மை நோக்கி வரும் வார்த்தைகளில் இருக்கும் உண்மையான அக்கரையோடு சொல்லப்படும் வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை கடந்து வந்து விட்டாலே இலகுவான அற்புதமான மனநிலையை தக்கவைக்க முடியும், ஆனால் தேவையற்ற உதாசீனப்படுத்த வேண்டிய வார்த்தைகளை நம்முடைய பேச்சின் வழியே மற்றவர்களுக்கு கடத்த ஆரம்பிக்கும் புள்ளியில் தான் நம்முடைய மனம், உடல் இரண்டுமே மிக மோசமாய் சிதைந்து போக ஆரம்பிக்கிறது, தயவுசெய்து உங்களை நோக்கி வரும் தேவையற்ற வார்த்தைகளை உதாசீனப்படுத்திவிட்டு கடந்துபோக பயிற்சி செய்யுங்கள், ஒரு போதும் வார்த்தைகளை கடத்த பழகாதீர்கள்… மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916