உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 02
இது ஒரு தொடர் கட்டுரை. என்னுடைய இணையப் பக்கத்தில் இதற்கு முன்னர் பதிவேற்றி இருக்கும் முதல் கட்டுரையை வாசிக்காதவர்கள் வாசித்து விடுங்கள். ஸ்கைஃபால் (Skyfall) திரைப்படத்தை பொறுத்த அளவில் இந்த படத்தின் பிரதான பாண்ட் கதாபாத்திரத்திற்கு எதிர் கதாபாத்திரம் திரையில் அறிமுகமாகும் இடம் மிக முக்கியமானது. பாண்ட் திரைப்பட வரிசையிலேயே மையக் கதாபாத்திரத்தின் எதிர் கதாபாத்திரத்தை திரையில் மிக சிறப்பாய் அறிமுகப்படுத்திய திரைப்படம் என ஸ்கைஃபால் (Skyfall)யை சொல்லலாம். அதுவும் ஒரே சட்டக கோணத்தில் (Single Shot), எவ்வித மாற்று கோணத்திற்கும் படத்தொகுப்பின் வழியே காட்சி மாறாமல், ஒரே ஒரு சின்ன முன் நகர்வோடு அட்டகாசமாய் எடுக்கப்பட்டிருக்கும் காட்சி அது. அதுவும் அந்த எதிர் கதாபாத்திரம் பேசும் வசனம் அதகளமாய் இருக்கும். சரி இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். பாண்ட் திரைப்படங்களின் ஆதி எங்கியிருந்து தொடங்கியது எனப் பார்த்தால் 1962ல் டாக்டர் நோவில் தொடங்கியது. இப்பொழுது உள்ளது போல் ஆங்கில படங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் ஒரே சமயத்தில் எல்லாம் வெளியாகும் சூழல் அந்த காலகட்டத்தில் இல்லை. பின்னர் அந்த நிலை கொஞ்சம், கொஞ்சமாக மாறி பாண்ட் கதாபாத்திரத்தை ரோஜர் மூர் ஏற்று நடித்தற்கு அப்புறம், பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உருவானார்கள் எனச் சொல்லலாம். அப்புறம், இந்த வல்லரசு என்பதை கட்டமைப்பதிலும் சரி, யார் வல்லரசு என்ற போட்டியிலும் சரி, தன்னுடைய முதல் அடியை அமெரிக்கா ஹாலிவுட்டின் வழியாய் மிகச்சிறப்பாய் எடுத்து வைத்தது. இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வல்லரசு என்பது எதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டால் எல்லோரது மனதிலும் ஆழமாய் வேர் ஊன்றி நிற்கும் என்பதை முடிவு செய்வது, அந்த முடிவின் அடிப்படையில் திரையில் பிரதான நாயாக கதாபாத்திரத்தை உருவாக்கி உலவவிட்டால் அந்த கதாபாத்திரம் எளிதாய் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும். இந்தப் புள்ளியில் தான் ஆட்டம் ஆரம்பம் ஆனது.
ஒரு வகையில் யோசித்தால் அப்பொழுதைய காலகட்டத்தில் பாண்ட் கதாபாத்திரம் கொஞ்சம் உயர்வகுப்பு பார்வையாளர்களுக்கானது, அதுவும் போக பாண்ட் கதாபாத்திரம் என்பது இங்கிலாந்து நாட்டின் பிரஜை. என்னதான் சொந்தக்கார நாடு என்றாலும், நம் நாட்டை அமெரிக்காவை முன்னிறுத்தி, அதுவும் உலகின் மூலை முடுகெல்லாம் கடைக்கோடி வரை ஆழமாய் ஊடுருவி பரவ வேண்டுமானால், நாயகன் புத்திசாலியாய் இருந்தால் மட்டும் வேலைக்கு ஆகாது. தனி ஒருவனாக எதையும் எதிர்த்து அடித்து துவசம் செய்யும் பலமானவனாக காட்டப்பட வேண்டிய அதே சமயம், எந்த கேள்வியும் கேட்காமல் பார்வையாளன் சகல துவாரங்களையும் முடிக் கொண்டு வாயைப் பிளந்து பார்க்க வேண்டும். அப்படி பார்வையாளனின் எண்ணத்தில் ஊடுருவி ஒரு முறை வெற்றிகரமாக அந்த நாயக பிம்பத்தை மிகச் சிறப்பாய் கட்டமைத்து விதைத்து விட்டால், அந்த நாயக பிம்பத்தின் வழியே அவன் செய்யும் அனைத்தையும் எந்த நாட்டின் பார்வையாளனையும் ஏற்றுக்கொள்ள வைத்துவிட முடியும். அப்பொழுது தான் வல்லரசு என்ற பதம் எடுபடும். இன்று வரை வல்லரசு என்ற பதம் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது என யோசித்துப் பாருங்கள். அந்தப் பதம் கண்டிப்பாக ஒரு நாட்டின் இருக்கும் வளங்களை பொறுத்தது அல்ல. நூறுக்கு நூறுக்கு சதவீதம் வல்லரசு என்பது அந்தந்த நாட்டின் ராணுவத்தின் பலத்தை பொறுத்தது தான். ராணுவம் என்பது என்ன எதையாவது (உரு)ஆக்கவா உருவாக்கப்பட்டது. அழிக்க, அழிக்க, அழிக்க மட்டுமே, தன்னுடைய நாட்டிலிருந்தபடியே மற்றோரு நாட்டை புல், பூண்டு கூட இல்லாமல் எவ்வளவு நேரத்தில் அழித்தொழிக்க முடியும் என்பதைப் பொறுத்தும், தொழில்நுட்பரீதியில் எவ்வளவுக்கு, எவ்வளவு முன்னோடியான அழிக்கும் ஆயுதங்களை வைத்திருக்கிறது என்பதே வல்லரசு என்பதற்கான தகுதி. அப்படியிருக்கையில் உருவாக்கப்படும் நாயக பிம்பம் என்பது பூஜபல பராக்கிரமசாலியாக மட்டும் இல்லாமல், அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்றபடி தொழில்நுட்பரீதியில் முன்னோடியாக உருவாக்கப்படும் ஆயுதங்களை கையாளபவனாகவும் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஆங்கிலப்பட நாயகர்களை யோசித்து பாருங்கள், எந்தப் புள்ளியில் இருந்து ஆட்டம் ஆரம்பித்து விளையாடப்படுகிறது எனப் புரிந்துவிடும்.
சரி, அதற்கு சரியான ஆளாக ஹாலிவுட் தேர்ந்தெடுத்தது யாரை எனப் பார்த்தால். அப்படியான கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட முதன் முதலாக என்று கூட சொல்லலாம், ஏற்று நடித்தவர் சில்வஸ்டர் ஸ்டோலன் தான். அப்படியான கட்டமைப்பில் உருவான முதல்படம் ராக்கி. மிகத் தெளிவாக முதல் சில படங்களில் நாயகன் கதாபாத்திரத்திற்கு ஆயுதம் எல்லாம் கொடுக்கப்படவில்லை. முதலில் நாயகனை எதனையும் துவசம் செய்யும் பலசாலியாக உடல் அளவில் மிகப்பெரும் பலம்மிக்கவனாக கட்டமைக்க வேண்டும். அதற்கு அப்பொழுதைய காலகட்டதிற்கு ஏற்றார் போல் குத்துச்சண்டை களம் தேர்ந்தெடுக்கப்பட்டது, 1976, 1979, 1982 என வரிசையாக மூன்று பாகங்கள். மூன்று பாகங்களிலும் குத்துச்சண்டை தான் பிரதானக் களம். ராக்கி திரைப்படத்தில் எந்தெந்த இடத்தில் எல்லாம் வல்லரசு என்ற பிம்பத்தை கட்டமைக்க முடியும் என்று பலவிதங்களில் யோசித்ததில், குத்துச்சண்டை நடைபெறும் களத்தின் தரைதளத்தில் இருந்து, குத்துச் சண்டையிடும் பிரதான நாயகனின் கால்சட்டை, கையுறை என பார்வையாளன் மனதில் எளிதில் போய் படியும் இடத்தில் எல்லாம், அமெரிக்காவின் கொடியோ அல்லது குறைந்த பட்சம் அந்த கொடியில் இருக்கும் நட்சத்திர உருவமோ இல்லாமல் இருக்காது. அன்றைய சூழலில் உலமெங்கிலும் இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாக விட்டாலும், இந்தியா போன்ற நாடுகளில் திரையரங்கில் தாமதமாக வெளியாகும் அதே நேரம், கண்டிப்பாக ஒளிநாடாவாகவும் (Video cassette) வெளியாகிவிடும். அன்றைய காலகட்டத்தில் திரைப்படத்தின் ஒளிநாடாக்கள் வாடகைக்கு கிடைக்கும். அப்படி ஒளிநாடாக்களை வாடகைக்கு எடுத்து படம் பார்த்த நம்முடைய மக்களை பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன. ஆங்கில திரைப்படத்தை பார்த்துவிட்டு சிலாகித்து பேச, பேச பட்டிதொட்டியெங்கும் மட்டுமல்லாமல், முதலிலேயே சொன்னது போல் கடைகோடி வரை போய்ச் சேர்ந்துவிட்டது. இன்றைக்கு வரை குத்துச்சண்டை களத்தை பின்னனியாக கொண்டு வெளியாகும் திரைப்படங்கள், தமிழில் வெளியாகும் திரைப்படங்கள் உட்பட, அதுவும் அந்தக் குத்துச்சண்டை களம் வல்லரசு நாடுகளுக்கு எதிராக எடுக்கப்படும் திரைப்படமாக இருந்தாலும் சரி, ராக்கி என்ற படத்தின் தாக்கம் இல்லாமல் எடுக்கப்படுவதில்லை என்பது தான் இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டிய மிகப் பெரிய நகைமுரண். அந்த அளவு அந்தக் கதாபாத்திர கட்டமைப்பு நம்முளைக்குள் நங்கூரமிட்டு உட்கார்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட மனநிலையில் இருந்து கொண்டு நம்முடைய மண்ணையும், நம்முடைய வளத்தையும், நம்முடைய கலாச்சாரத்தையும் பற்றி படிக்காமல், அப்படியே படித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாமல் சுய அறிவற்று ஆயிரம் தான் சொல்லு அமெரிக்காகாரன் மாதிரி வருமா என சுரணையே இல்லாமல் சொல்லாமல் என்ன செய்வோம். மகிழ்ச்சி
கடைசியாக :
இப்படியாக பலம் மிக்கவனாக நாயகனை கட்டமைத்த பிறகு, அடுத்தது ஆயுத்தத்தை கையில் எடுக்க வேண்டியது தானே, கண்டிப்பாக அடுத்து அது தான் தொடர்வோம்… மகிழ்ச்சி
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916