வாழ்ந்து பார்த்த தருணம்…19

விரல்களின் வழியே வழியும் ஆன்மா…

இசை என்பதன் அர்த்தத்தை இந்த ப்ரபஞ்சம் எனக்கு புரியவைத்து கொண்டிருக்கிறது. சில மாதங்கள் முன்பு கரூரில் நண்பனின் இசை பள்ளியில் நடைபெற்ற ஒரு நாள் இசைப் பயிலரங்கில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வந்திருந்த திரு.வாங்கல் மணிகண்டன் அவர்களைப் பற்றி எழுதியிருந்தேன். மீண்டுமொரு முறை என் எழுத்தின் வாயிலாக அவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றேன். சென்னையில் இருக்கும் ஒரு முக்கியமான சர்வதேசப் பள்ளியில் குழந்தைகளுக்குப் புகைப்படபயிற்சி அளிக்கப் போயிருந்த சமயம் மணிகண்டன் அவர்களிடம் கேட்டு அவரைப் பார்க்க சென்றேன். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் ஸ்டீபன் தேவசி அவர்களின் இசை பள்ளிக்கு சென்று வாங்கல் மணிகண்டன் அவர்களை சந்தித்து, அந்த கல்லூரியைப் பார்த்து முடித்தவுடன், வாருங்கள் என் இல்லம் அருகில் தான். அங்கு சென்று பேசலாம் என அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றார். அவரது வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் முதலில் என் கண்ணில் பட்டது, உள்நுழைந்தவுடன் இருக்கும் பிரதான அறையின் மையத்தில் இருந்த கருப்பு நிறத்திலான அற்புதமான பியானோ தான். கோவிலுக்குள் நுழைந்தவுடன் நேரடியாக விக்ரகத்தை ஒருவன் பார்த்தால் எப்படி சற்றே தடுமாறி பின்னர் நிலைகொள்வானோ அப்படி ஒரு நிலை எனக்கு. எத்தனையோ முறை பியானோவின் இசையை கேட்டு லயித்து மயங்கியிருக்கிறேன். யானியின் இசை கோர்ப்பின் காணொளியை காணும் போதெல்லாம் சிலிர்த்து கண்களில் நீர் வழியேப் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேன்.

அப்படி லயித்து காணொளி வாயிலாக தொலைக்காட்சியிலோ, கைபேசி வாயிலாக இணையத்திலோ பார்த்த ஒரு மகத்தான பிரம்மாண்டமான இசை கருவியை நேரில் பார்க்கும் போது ஏற்படும் மனநிலையை விளக்க முடியாது. இசையை தன் மூச்சாகவே சதா சர்வகாலமும் சுவாசித்து கொண்டிருக்கும் ஒருவரின் வீடு அவரின் இசையைப் போலவே மிக அற்புதமாக இருந்தது. நான் அவரிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போதே, ஒரு நிமிடம் என எழுந்து சென்றவர். அந்த கருப்பு பியானோவின் மேலிருக்கும் ஒரு துணியை எடுத்து அதன் மீதிருந்த சிறு தூசியை துடைத்தார், வாசிக்கதான் போகிறாரா என எனக்கு உள்ளுக்குள் ஒரு பிரம்மிப்பு ஓடிக்கொண்டே இருந்தது. எதோ இசை குறிப்பை தேடியவர் வெங்கடேஷ் வாங்க உட்காருங்க என அருகில் அழைத்து, பியானோவில் தன் விரல்களை தவழவிட்டார் வாவ் இளையாராஜவின் என்ன சத்தம் இந்த நேரம் பாடல் பிராவாகம் எடுத்து பியானோவின் வழியே வழிந்து அந்த அறையை நிரப்ப ஆரம்பித்தது.

மணிகண்டன் அவர்கள் பியானோவைத் தான் வாசிக்க போகிறார் என்று என் புத்திக்கு உறைத்த வேகத்தில் சாடரென என் கைபேசியின் வழியே அதனை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டேன். அந்த கணம் என் வாழ்வில் முதன் முறையாக ஒரு பியோனோவை ஒரு இசையின் நுணுக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கற்றுகொடுக்கும் ஆசான் ஒருவர் வாசிக்க நான் அருகில் இருந்து கேட்கிறேன். அந்த கணம் விவரிக்க முடியாதது. அதிலும் அந்த பாடலின் இடையே பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையில் ஒரு இடத்தில் saxophoneனின் வழியே இசைக்கப்பட்ட கோர்வை ஒன்று வரும், அதனை பியானோவில் கேட்கும் போது சிலிர்த்தது. என் அறிவுக்கு தெரிந்த வரையில் ஒரு இசை கருவியிலிருந்து வெளிப்படும் இசையை மற்றோரு கருவியிலிருந்து வெளிப்படுத்தும் போது அதை ஒத்த சமநிலையில் கொண்டுவருவது கடினம். அதுவும் போக, அப்படி மாற்றி கேட்கும் போது ஒரு சின்ன அசூயை இருக்கும். ஆனால் அப்படி ஒரு சின்ன பிசிறு கூட எட்டிப்பார்க்க வேண்டுமே வாய்ப்பேயில்லை. அதுவும் அந்த பாடலை முடிக்கும் போது Finishing Touch ஒன்று கொடுத்தார் பாருங்கள் சான்ஸேயில்லை… இதை எழுதும் ஒவ்வொரு நொடியும் அந்த பியானோவின் இசை என் காதுகளில் ரிங்காரமிட்டபடி இருக்கிறது. ஆகப்பெரும் நன்றி, நன்றி, நன்றி திரு.வாங்கல் மணிகண்டன் அவர்களுக்கு…..

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916