வாழ்ந்து பார்த்த தருணம்…68

உளவாளியின் வழியே உருவாக்கப்படும் உளவியல் பிம்பம்… 05

இது ஒரு தொடர் கட்டுரையின் ஐந்தாம் பகுதி. ஆதலால் முதல் நான்கு கட்டுரையை படிக்காதவர்கள் படித்துவிடுங்கள். இனி ஸ்கைபால் (Skyfall) திரைப்படத்தில் இருந்தே தொடங்கலாம். பாண்ட் திரைப்படங்களை பொறுத்தவரை பெண்களை பாண்ட் கதாபாத்திரம் எப்படி நடத்தும் எனச் சொல்லியிருந்தேன். அதைப் படித்தவர்களுக்கு குறிப்பாக பாண்ட் படங்களை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு, அந்த பாண்டுக்கே உத்தரவு கொடுக்கும் தலைமையிடத்தில் இருப்பதும் ஒரு பெண் தானே எனத் தோன்றலாம். சரி அந்தக் கதாபாத்திரம் பெண் தான். பாண்டுக்கு உத்தரவிடும் அந்த தலைமை பெண் அதிகாரியின் பெயர் எம், எம் கதாபாத்திர வடிவமைப்பை கவனித்தால் பெயர் அளவுக்கு தான் அவருடைய பாத்திரம் பாண்டுக்கே உத்தரவிடும் இடத்தில் இருக்கும். ஆனால் தனக்கு உயரதிகாரியாய் இருப்பவரிடம் இருந்து வரும் எந்த உத்தரவையும் மீறுவது தான் பாண்டின் பாணி. (Skyfall) திரைப்படத்தில் கூட அந்த எம் கதாபாத்திரத்தின் தவறான முடிவால் தான் பாண்ட் பாத்திரம் சாகும் தருவாய்க்குப் போகும் என்பதாக தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படி பலவகைகளில் அந்த எம் கதாபாத்திரத்தின் உத்தரவை கடைப்பிடிப்பதை விட, அதனை மீறி நடந்துவிட்டு, சர்வ அலட்சியமாக, தன்னுடைய உயர் அதிகாரியின் முன் வந்து நிற்பது தான் பாண்ட் கதாபாத்திரத்தின் பாணி. அதே போல் யாரையும், எதற்கும், எப்பொழுதும் மதிக்காத, எந்த நாட்டிற்கும் போய், பின்விளைகளை பற்றி சற்றும் யோசிக்காமல் தனக்கு தோன்றியதை செய்து விட்டு வரும் கதாபாத்திரம் தான் ஜேம்ஸ்பாண்ட். அப்படி பல்வேறு நாடுகளில் பல விஷயங்களை செய்துவிட்டு பாண்ட் வந்து நிற்பது லண்டன் தலைமயகத்தின் மாடியில். அவர் நிற்கும் பின்னனியில் இங்கிலாந்து நாட்டின் தேசிய கொடி அப்படியே காற்றில் அசைந்தபடி இருக்கும். இதன் பின்னனியில் இருந்து யோசித்தால், பாண்ட் இங்கிலாந்தின் பிரஜை என்பதை தாண்டி பாண்ட் தான் இங்கிலாந்தே. நாங்கள் எந்த நாட்டிற்குள்ளும் சென்று நினைத்ததை செய்வோம். எல்லாம் நன்மைகே என்பதாக நீங்கள் எடுத்துகொள்ள வேண்டும் என்பதை தான் நேரடியாகவே நமக்கு உணர்த்துகிறார்கள். நாமும் மறுபடியும் வெள்ளைகாரன் சொன்ன சரியாதான் இருக்கும் என தலையாட்டிவிடுவோம்.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இப்பொழுது வல்லரசு விஷயத்திற்கு வருவோம். ராம்போ 3 ஒரு வகையில் சில்வஸ்டர் ஸ்டோலனின் பிம்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம். இந்தத் திரைப்படத்தின் வழியே ஒரு நாயக பிம்பம் என்ன செய்தாலும் அதனை அப்படியே நம்புவதற்கு பார்வையாளர்களை முழுமையாக பழக்கப்படுத்தியிருந்தார்கள் எனச் சொல்லலாம், முந்தைய கட்டுரைகளில் இந்த படத்தினை ஏன் வன்முறையின் ருசி என குறிப்பிட்டிருந்தேன் என்றால், இந்தத் திரைப்படம் வெளிவந்த சமயம் அது வரை வெளிவந்த திரைப்படங்களில் உச்சப்பட்ச வன்முறை காட்சிகள் இடம்பெற்ற திரைப்படம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திரைப்படம் தான் ராம்போ 3. இது ஒரு பக்கம் என்றால் ராம்போ கதாபாத்திரம் இந்தத் திரைப்படத்தில் யாருடன் இணைந்து எதிரிகளை அழிக்கும் தெரியுமா, ஆப்கானிஸ்தானின் முஜாஹிதின் தீவிரவாதிகளுடன் இணைந்து ரஷ்ய ராணுவத்தை எதிர்ப்பான் ராம்போ. கடந்து காலங்களில் இந்த தீவிரவாத கும்பலை பற்றி அமெரிக்கா என்ன சொன்னது என இணையத்தில் தேடி படித்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் விட படத்தின் இடம்பெற்ற வன்முறைகாட்சிகள், அதுவும் படத்தின் இறுதி காட்சியில் தன்னை துரத்தி வரும் மிகப் பெரிய ராணுவ வானுர்தியை சர்வசாதாரணமாக தன்னிடம் மாட்டும் ராணுவ டாங்கியை வைத்து தூள் தூளாக்கி விடுவார் ராம்போ. இது போன்ற ஒரு சகாச சண்டை காட்சியை நம்முடைய நாயகர்கள் திரையில் செய்திருந்தால், அந்த நாயகன் சிக்ஸ்பேக் வைத்த சிங்கமாகவே இருந்தாலும், திரையில் அந்தக் காட்சியை பார்த்துவிட்டு, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என சர்வசாதாரணமாக ஒற்றைவரியில் நக்கலாக சொல்லிவிட்டு கடந்து போய்க் கொண்டே இருப்போம். பிதாமகன் திரைப்படத்தில் வரும் வசனத்தை போல் அமெரிக்காரனோட உருட்டு அப்படி.

ராம்போ போன்ற ஒற்றை நாயக பிம்பத்தினை வெற்றிகரமாக கட்டமைப்பதின் வழியாக, கிட்டதட்ட அந்தத் திரைப்படம் வெளியாகும் அனைத்து நாடுகளிலும் இந்தத் திரைப்படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்குள்ளும், மிக, மிக ஆழமாக அமெரிக்கா என்ற நாடு நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும் அதே நேரம், அப்படி செய்யக்கூடிய தகுதியும், அதற்கூரிய வலுவான கட்டமைப்புகளும் அமெரிக்காவிடம் மட்டுமே இருக்கின்றன என்பதை எவ்வித கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலைக்கு எல்லா நாட்டு பார்வையாளர்களையும் இட்டு சென்றுவிட்டார்கள். இதையெல்லாம் விட மிக முக்கியமான விஷயம். ராம்போ போன்ற வன்முறையை கொண்டாடும் திரைப்படங்களில் வழியே, பார்வையாளனின் ஆழ்மனதில் வன்முறையை விரும்பும் மனநிலையை உண்டாக்கி விட்டார்கள். நன்றாக கவனித்துப் பாருங்கள் நாம் தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும் நேரங்களில் உலக செய்திகளில், அமெரிக்கா என்ற நாடு வேறு ஏதாவது நாட்டின் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கும் செய்திகளை கேட்டவுடன், நம் மனதிற்குள் என்னத் தோன்றும் என யோசித்திருக்கிறீர்களா?. அமெரிக்காவை எதிர்க்கும் நாடு கண்டிப்பாக வெற்றியடையாது என நாம் நம் மனதுக்குள் நம்பும் அதே நேரத்தில், போர் முனையில் தாக்குதலில் ஈடுப்பட்டிருக்கும் அமெரிக்கா ராணுவத்தின் வான்வழி தாக்குதல்களை, நாம் பார்த்துக்கொண்டிருக்கும் செய்திகளில் கணொளியாய் காட்டுகையில், நாம் அதனை ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சியை பார்ப்பது போல் சுவாரஸ்யமாய் பார்த்துக்கொண்டிருப்போம். யோசித்துப் பார்த்தால் அந்தக் காட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியல்ல. அங்கே அந்தத் தாக்குதலில் எத்தனை, எத்தனை மனித உயிர்கள் சிதைந்து போய்கொண்டிருக்கும். ஆனால் நமக்கு அவையெல்லாம் கொஞ்சம் கூட உரைக்கவே உரைக்காது. அமெரிக்காவும் போர்முனையில் கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் கொன்று குவித்து கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் இருந்து வரும் செய்திகளில் நாங்கள் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் தொடுத்தோம் என கூசாமல் சொல்வார்கள். நாமும் அமெரிக்காரன் சொன்னால் சரியாக தான் இருக்கும் என மண்டையை ஆட்டி கேட்டுக்கொண்டே இருப்போம். போரெல்லாம் முடிந்து எத்தனை குழந்தைகள், எத்தனை பெண்கள் இந்த போரினால் இறந்தார்கள், எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்கிற உண்மையான அறிக்கை வருகையில், நாம் அடுத்த நாடு அடுத்த தாக்குதல் செய்திகளில் முழ்கி போயிருப்போம். இன்னும் பயணிக்கலாம். மகிழ்ச்சி.

கடைசியாக புகைப்பட விளக்கம் :

இந்த கட்டுரைக்கு பகிர்ந்திருக்கும் புகைப்படம், ஒரு பள்ளியில் புகைப்பட பயிற்சி கொடுக்கையில் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தில் இருப்பது காகித்தால் செய்யப்பட்ட எழுதுகோல் வைக்கப் பயன்படும் ரொம்பவும் சின்ன காகித பெட்டி. ஆங்கிலத்தில் Paper made Pencil Stand. வகுப்பறையில் சுவரில் மாட்டி இருந்ததை தான் என் அலைபேசியின் ஒளிப்பதிவு கருவியின் வழியே புகைப்படமெடுத்து இருக்கிறேன். மேலே சொல்லியிருப்பதை எல்லாம் யோசிக்காமல் சட்டென இந்த புகைப்படத்தை பார்கையில் ஒரு சின்ன பிரமாண்டம் தென்படுகிறது இல்லையா. ஒரு புகைப்பட கலைஞனின் கண்கள் பார்க்கும் ஒரு சின்ன கோணத்தின் மாறுபாட்டிலேயே, சின்ன காகித பெட்டியை பார்வையாளனின் கண்களுக்கு வேறு ஒன்றாக காட்ட முடியுமென்றால், திரைப்படத்தின் வழியே எவ்வளவு தூரம் இல்லாத ஒன்றை இருக்கிறதாக காட்டமுடியும் என யோசியுங்கள். படம் பார்க்கும் பார்வையாளனும் அப்படி காட்டப்படுவதை அப்படியே முழுசாக நம்பினால் பூனையை புலியாக்கி விட முடியும். இந்தப் புள்ளியில் இருந்து தான் அமெரிக்காவின் வல்லரசு பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் காலம் ஒன்று இருக்கிறது இல்லையா. அதற்கு எல்லாமும் தெரியும். அந்த காலத்தின் பிடியில் கண்ணுக்கே தெரியாத ஒரு நுண்ணுயிரி இவ்வளவு நாள் நம்முன் கட்டமைப்பட்ட அமெரிக்கா வல்லரசு புலியா, அல்லது பூனையா என்பதை காட்டி கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916