வாழ்ந்து பார்த்த தருணம்…69

பவா எனும் கதை சொல்லியின் வ(லி)ழி…

முன்னறிவிப்பு : இந்தக் கட்டுரை சற்றே நீளமான கட்டுரை. தங்களின் பொன் போன்ற நேரத்தை வீணடிக்க விரும்பாதவர்கள், இந்தக் கட்டுரையை வாசிப்பதை தவிர்த்துவிடுதல் நலம்.

இந்த கட்டுரையை மூன்று நாட்கள் முன்னதாக உலக புத்தக தினமான ஏப்ரல் இருபத்தி மூன்றாம் தேதியே எழுதி பதிவேற்ற வேண்டுமென யோசித்திருந்தேன். தொடர்ச்சியான சில பணி சுமைகள் காரணமாக எழுத முடியாமல் தாமதம் ஆகிவிட்டது. வேறு ஒரு தொடர் கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கையில், இடையில் வேறெதையும் எழுத வேண்டாம் என்று யோசித்திருந்தாலும். இது போன்ற முக்கியமான கட்டுரைகளை தவிர்க்க முடியவில்லை. பவா.செல்லத்துரை எழுத்தாளர் என்பதை தாண்டி, சமீபகாலங்களில் ஒரு நல்ல கதை சொல்லியாக மிகப் பெரிய அளவில் வெளியே பரவலாக அறியப்படுகிறார். இன்னொரு வகையில் திரைப்படத்தில் நடித்ததன் வழியே அவர் மீது விழும் சின்ன ஒளிகீற்றும் அவரின் மீதான கவனக்குவிதலை அதிகப்படுத்தி இருக்கிறது. யூடுபில் பதிவேற்றப்பட்டிருக்கும் அவர் பேசும் காணொளிகளும் தொடர்ச்சியாக பல்வேறு பொதுதளங்களில் பகிரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எழுத்தாளர் ஒருவரின் மீது தொடர்ச்சியாக இன்றைய தலைமுறையினர் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது கண்டிப்பாக மிகப்பெரும் நம்பிக்கை அளிக்கிறது, இன்றைய தலைமுறையினர் அவரை கவனிக்க ஆரம்பித்ததின் விளைவாக தான் கல்லூரிகளும் அவரின் கதை சொல்லும் நிகழ்வை மாணவர்களிடத்தில் நடத்துகின்றன. இப்படி சந்தோசப்பட பல விஷயங்கள் பவா செல்லதுரை அவர்களைச் சுற்றி இருந்தாலும். அவரின் இரண்டு கதையாடலை கேட்கையில் மனசுக்குள் ஒரு வித நெருடலுடன் கூடிய வலி கீறிச் சென்றதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அப்படி கேட்ட முதல் கதையாடல் ஜெயமோகனின் யானை டாக்டரைப் பற்றியது. வெளிக்காற்று உள்ளே வரட்டும் என்ற மாணவர்களுக்கான ஐந்து நாட்கள் பயிலரங்கில் அவர் சொல்லிய பல்வேறு கதைகளில் யானை டாக்டர் என்ற கதையாடலும் இணையத்தில் காணொளியாய் இருக்கிறது தேடிப்பாருங்கள். இந்தப் புள்ளியில் இருந்து இந்த கட்டுரையை தொடர்ந்து வாசிப்பவர்கள் கண்டிப்பாக எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் புத்தகத்தில் இருக்கும் யானை டாக்டர் என்ற நிஜ மனிதனின் கதையை தயவுகூர்ந்து படித்துவிட்டு இந்த வாசிப்பை தொடர்ந்தால் சொல்ல போகும் விஷயம் எளிதாக புரிந்துவிடும். ஏற்கனவே அறம் புத்தகத்தை வாசித்தவர்கள் இருந்தால் நலம். அந்த ஐந்து நாட்கள் நிகழ்வில் பவா அறம் புத்தகத்தில் இருந்த யானை டாக்டரின் கதையை தான் கதையாடலாகச் சொன்னார். அவர் சொன்னத்தில் எவ்வித பிழையுமில்லை. கிட்டத்தட்ட நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் ஓடுகிறது அந்த கதையாடல் காணொளி. எப்படி யோசித்தாலும் நாற்பத்தி ஐந்து நிமிட கதையாடலுக்குள் அடக்கிவிடக்கூடிய கதையல்ல அது. அதுவும் போக ரத்தமும் சதையுமாக சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த மிகச்சிறந்த வன உயிரியில் மருத்துவரை பற்றிய ஏராளமான தகவல்களை உள்ளடக்கிய மிக, மிக முக்கியமான நிஜமனிதரின் கதை. அந்தக் கதையை வாசிக்கையில் கதையின் போக்கில் பல இடங்களில் கண்டிப்பாக விழியோரத்தில் நீர் ஊற்றேடுப்பதை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாது. சின்னதாக ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால். அந்த கதையின் ஒரு முக்கியமான இடத்தில் ஒரு வனத்துறை அதிகாரிக்கும், யானை டாக்டருக்கும் நடக்கும் அரசின் அங்கிகாரத்தை பற்றிய உரையாடலும், அந்த உரையாடலில் யானை டாக்டரான டாக்டர் கே வைக்கும் வாதமும், அந்த வனத்துறை அதிகாரி வைக்கும் வாதமும் அவரவர் நிலையில் இருந்து மிக, மிகச் சரியானதாய் இருக்கும். அந்த உரையாடலின் வழியே வாசகனுக்கு கடத்தப்படும் விஷயங்கள் இருக்கிறது இல்லையா, அதற்குள் இந்த மனித வாழ்வின் மிக, மிக முக்கியமான பல நுட்பங்கள் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் யானை டாக்டர் சொல்வார் மனிதன் தான் உண்மையில் மிகப்பெரிய ஈனப்பயல் என்று, யானை டாக்டர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதை யானை டாக்டர் புத்தகத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். இப்படி பல அடுக்குகளோடு பயணிக்கும் இந்தக் கதையை வாசிக்கையில் ஏற்படும் ஒரு அதிர்வு இருக்கிறது இல்லையா. அதனைக் கண்டிப்பாக கதையாடலின் போது கொண்டு வரவே முடியாது என்பதை, அறம் புத்தகத்தை வாசித்தவன் என்ற முறையில் ஒரு வாசகனாக மிக, மிகத் தெளிவாக விளங்கியது. அதனால் தான் பவா அந்த கதையாடலின் இடையே மிக முக்கியமான கட்டங்களை விவரிக்கையில் எல்லாம் அத நீங்க வாசிக்கணும் என்று பார்வையாளர்களை நோக்கி சொல்லும் அதே நேரத்தில், இந்த கதைய நான் கொஞ்சம் சுருக்கி தான் சொல்கிறேன் என்பதையும் சொல்லிவிடுகிறார்.

அடுத்த கதையாடல் அதே அறம் புத்தகத்தில் இருக்கும் முதல் கதையான அறம் கதையை பவா சொல்லியிருக்கிறார். இந்த கதையாடல் காணொளியின் நீளம் மொத்தமே பதினெழு நிமிடங்களுக்குள் அடங்கிவிடுகிறது. இணையத்தில் அறம் கதையின் கணொளி இருக்கிறது தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இந்தப் புள்ளியில் இருந்து இந்த கட்டுரையை தொடர்ந்து வாசிப்பவர்கள் கண்டிப்பாக எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் புத்தகத்தில் இருக்கும் முதல் கதையான அறம் கதையை படித்துவிட்டு இதனை வாசித்தல் நலம். அதேபோல் இன்னுமொரு விஷயத்தையும் நினைவுப்படுத்துகிறேன். அறம் புத்தகத்தில் இருக்கும் அனைத்து கதைகளுமே உண்மை மனிதர்களின் கதை. அந்தக் கதையாடலின் தொடக்கதிலேயே பவா மிகத் தெளிவாக, அறம் புத்தகம் நம் வாழ்வில் பலமுறை மீள் வாசிப்பு செய்ய வேண்டிய புத்தகம் என்று சொல்லிவிடுகிறார். இதுவரை பனிரெண்டாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆகியிருக்கும் புத்தகம் அது. அறம் கதை, தமிழின் ஒரு மிக முக்கிய எழுத்தாளரின் பதின்ம வயதில் நடக்கும் சம்பவத்தை, அந்த எழுத்தாளர் அவரை சந்திக்க சென்ற ஜெயமோகனிடம் சொன்னது. அந்தக் கதையில் தன்னுடைய பதின்ம வயதில் வறுமையின் உச்சத்தில் இருக்கையில், பதிப்பாளர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சொல்ல அதனை ஜெ.மோ தன்னுடைய எழுத்தின் வழியே கதையாக வடித்திருக்கிறார். அறம் கதையை வாசிக்கையில் அதில் சொல்லப்பட்டுள்ள எழுத்தாளர் யார் என்பதே தெரியாமல் தான் அதனை வாசித்தேன். ஆனால் பவாவின் கதையாடலின் போக்கில் ஒரு கட்டத்தில் அந்த எழுத்தாளரின் பெயர் வெளிப்பட்டுவிட்டது. அறம் கதையும் வாசகனை வெகுவாக உலுக்கக்கூடியது. கண்டிப்பாக இந்தக் கதையும் எழுத்தை வெகு ஆழமாக வாசிக்கும் ஒரு வாசகனால் எளிதாக கடந்து போக முடியாதபடி மிக, மிக நுட்பமான எழுத்து நடையில் எழுதப்பட்ட கதை. பவா தன்னுடைய அறம் கதை சொல்லலின் இடையே கதையின் ஒரு மிக முக்கிய கட்டத்தை விவரிக்கையில், இங்கே நிறைய பேர் குழுமியிருக்கிறீர்கள் அதனால் கதையின் இந்த பகுதியை சொல்லமுடியாது நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள் எனச் சொல்லிவிடுகிறார். கண்டிப்பாக இந்த கதையும் பதினெழு நிமிடங்களுக்கு சொல்லி முடிக்கக்கூடிய கதையல்ல. ஆனால் வேறு வழியில்லை என்ற நிலையில் தான் பவா இந்த கதையை பதினெழு நிமிடங்களுக்குள் சொல்லி முடித்திருக்கிறார். பவா கதைசொல்லில் எந்த பிரச்சனையுமில்லை, ஆனால் அதனை கேட்டுக்கொண்டிருக்கும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள் இல்லையா அங்கே தான் பிரச்சனை. இன்றைய தலைமுறையில், சமூகத்தில் வாசிப்பு என்பது அற்று அரிதாகி போன நிலையில், அவர்களின் கவனத்தை வாசிப்பின் மீது திருப்ப வேண்டும் என்ற நோக்கம் பவாவின் ஒவ்வொரு சொல்லிலும் தெறிக்கிறது. அதனைத் தாண்டி தன்னுடைய கதைச் சொல்லும் நிகழ்வில் பங்கெடுக்க வரும் பார்வையாளர்களை எப்படியாவது புத்தக வாசிப்பினை முன்னெடுக்க செய்ய வேண்டும் என்பதில் மெனகெட்டுக்கொண்டே இருக்கிறார். அதுவும் போக தன்னுடைய எல்லா கதையாடலின் இடையிலும் எதாவது ஒரு இடத்தில் இந்த இடத்தை வாசியுங்கள் என ஒருவித வலியுடனே சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் எனக்குகென்னவோ அவரின் கதையாடலை கேட்டு முடித்தவுடனேயே பார்வையாளர்கள் அந்த புத்தகத்தை வாசித்துவிட்ட ஒரு வித சுயதிருப்தி மனநிலைக்கு சென்றுவிடுகிறார்கள் எனத் தோன்றுகிறது. இதையெல்லாம் தாண்டி அறம் புத்தகத்தினை முழுமையாய் வாசித்தவன் என்ற முறையில் அறம் மற்றும் யானை டாக்டர் என்ற இரு பவாவின் கதையாடல்களிலுமே புத்தகத்தில் இருந்து வெளிப்பட்டது, வெறும் பத்து சதவீதம் தான் என்பேன். கதையாடல் என்று வந்துவிட்டால் அவ்வளவு தான் முடியும். பவாவும் யானை டாக்டர் கதையாடலின் முடிவில் இந்தக் கதையை நான் முழுசா சொல்லல, ஜெயமோகன் எழுதுனது கொஞ்சம், நான் சேர்த்துகிட்டது கொஞ்சம் அப்படிதான் சொன்னேன். இன்னொரு முறை இந்த கதையை சொல்ல நேர்ந்தால் அது வேறு ஒரு வடிவத்தில் தான் வெளிப்படும் எனத் தெளிவாக சொல்லிவிட்டார். பவா செல்லத்துரையின் இந்த வார்த்தைகளுக்கு பின்னால் உள்ள உள்ளார்ந்த அர்த்தம் அந்த புத்தகத்தை முழுசா உள்வாங்கனும்னா அதை வாங்கி தயவுசெஞ்சு படிங்க என்பது தான். இன்னும் நிறையவே எழுத தோன்றுகிறது. நீளம் கருதி தவிர்க்கிறேன். கடைசியாக பவாவின் கதைச் சொல்லலை மட்டும் கேட்டுவிட்டு, அந்தப் புத்தகத்தை படித்த திருப்தியோடு இதுவே போதும் புத்தகமெல்லாம் வாங்கி படிக்க தேவையில்லை என்று யாரெனும் எண்ணினால். அது கண்டிப்பாக பவா செல்லத்துரை என்ற கதைசொல்லிக்கு மட்டுமல்ல. அவர் கதையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் எல்லா எழுத்தாளர்களுக்கும் சேர்த்தே நீங்கள் இழைக்கும் மிகப்பெரும் துரோகம். துரோகம் கொஞ்சம் கடுமையான வார்த்தை தான். ஆனால் ஒரு புத்தகத்தை நேசித்து வாசிக்கும் வாசிப்பாளனாக இதனை சொல்லித்தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916