வாழ்ந்து பார்த்த தருணம்…71

சுவை எனும் ருசியின் மையப்புள்ளி எங்குள்ளது…

இன்று காலை இணையத்தில் பவா அவர்களின் காணொளி ஒன்றின் தலைப்பு கண்ணில் பட்டது. பங்குகறியும் பின்னிரவுகளும் என்பது தான் அந்த காணொளியின் தலைப்பு. அதைப் பார்த்தவுடன் எண்ணங்கள் பின்னோக்கிய அலையடித்தலின் வழியே, வாழ்வின் மிக சில முக்கியமான நாட்களில் என் நாவினுள் ஊடேறிய ருசியான சுவையொன்று நாவின் நுனியை தொட்டுச் சென்றது. என்னுடைய திரைத்துறை பிரவேசம் தொடங்குவதற்கு முன்பாக, உணவுத் துறையில் நீண்டகாலங்கள் பணியாற்றி கொண்டிருந்தேன். அப்படியான காலங்களில் தமிழ்நாட்டின் மிக முக்கியமான நகரம் ஒன்றில், மிகப் பிரபலமான உணவகத்தில் பணியாற்றி கொண்டிருந்த சமயம். அது எந்த ஊர், எந்த உணவகம் என்பதெல்லாம் இந்த கட்டுரை சொல்லவரும் விஷயத்திற்கு சம்பந்தம் இல்லாதது. அதுவும் போக நிறையவே என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் அதனுள் சொல்ல வேண்டி வரும் என்பதால், ஊரின், உணவகத்தின் பெயரை தவிர்க்கிறேன். சரி நேரடியாக விஷயத்திற்குள். அந்த உணவகத்தில் பணிக்கு சேர்ந்த சொற்ப காலத்திலேயே என்னை அந்த உணவகத்தின் காசாளராக ஆக்கிவிட்டார்கள். பொதுவாக உணவகத்தின் மற்ற வேலைகளை விட காசாளருக்கு கூடுதல் மரியாதை உண்டு. அதே சமயம் கொஞ்சம் அதிக கவனத்துடன் கையாள வேண்டிய வேலையும் கூட. உணவுக்கான பணத்தை செலுத்தும் இடத்தில் அமர்ந்திருக்கையில் சின்னதாக கவனம் பிசக்கினாலும், அன்றைக்கு இரவு கணக்கை சரிபார்த்து ஒப்படைக்கையில் மூளை கழண்டு விடும். ஒரு சுபநாளில் அப்படியான முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அந்த உணவகத்தின் காசாளர் பணிக்கு இரண்டு பணி நேரங்கள் உண்டு. எனக்கு எப்பொழுதுமே முதல் பணி நேரம் தான் ஒதுக்கப்படும்.

முதல் பணி நேரத்தின் தொடக்கம் அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு உணவகம் திறப்பதில் இருந்து ஆரம்பிக்கும். அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு உணவகம் திறக்கும் நேரம் என்றால், ஐந்து பதினைந்துக்கு எல்லாம் உணவகத்துக்குள் இருக்க வேண்டும். அந்த உணவகத்துக்கும் தங்கியுள்ள இடத்திற்குமான தூரம் என்பது பதினைந்து நிமிட நடையில் வந்துவிடக் கூடிய தூரம் தான். தங்கியுள்ள இடத்தில் இருந்து கொஞ்சம் வேகமாக நடந்தால் உணவகத்தை பத்து நிமிடத்தில் அடைந்து விடலாம். காசாளாராக பணியை ஏற்றுக் கொண்ட சமயம் மார்கழி மாதம். நல்ல குளிர் நேரம், ஐந்து பதினைந்துக்கு உணவகத்துக்குள் இருக்க வேண்டுமானால். அதிகாலை மூன்று நாற்பத்தி ஐந்திலில்லிருந்து நான்கு மணிக்குள் எழுந்தால் தான் சரியான நேரத்துக்கு வரமுடியும். அதிகாலை குளிரில் எழுந்து கிளம்புவது ஒரு சவாலான விஷயம் என்றால், அதைவிட இன்னொரு சவாலான விஷயமும் இருந்தது. அதே உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிடும் உணவுக்கான ரசிதை வழங்கும் பணியில் இருக்கும் நண்பனும் கிளம்புவான். அவனுக்கும், எனக்கும் ஒரே பணி நேரம் தான். நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருப்பதோ ஒரே ஒரு குளியலறை மட்டுமே. குளியலுக்கான இன்னொரு இடமும் உண்டு. ஆனால் அது மொட்டைமாடியின் திறந்த வெளியில் இருக்கும். அதிகாலை குளிர் பின்னியெடுக்கும் என்பதால் யார் முதலில் எழுந்து அந்த குளியலறைக்குள் நுழைவது என்பதில் தினமும் மிகப்பெரும் போட்டியே இருக்கும். யார் முதலில் எழுகிறோமா அவர்கள் சிறு சத்தம் கூட வராமல் மூன்று அறைகளை தாண்டி அந்த குளியலறையை அடைய வேண்டும். மூன்று அறைக்குள்ளும் நிறைய பேர் உறங்கிக் கொண்டிருப்பார்கள். இருட்டில் யார் கால்களையாவது தப்பித் தவறி மிதித்துவிட்டாலோ, இல்லை, வேறெதன் மீதாவது கால்களை வைத்துவிட்டாலோ முடிந்தது கதை. இதனால் ஒவ்வொரு நாளும் காலை எழுந்து கிளம்புவது ஒரு அட்டகாசமான சாகசம் தான். அப்படியான சாகசங்களை கடந்து வீறுநடை போட்டு உணவகத்தை அதிகாலை ஐந்து பதினைந்து மணிக்குள் இருவரும் அடைந்து விடுவோம்.

பொதுவாக அதிகாலையிலேயே முழிப்பவர்களுக்கு வெகு சிக்கிரமே பசி என்கிற பட்டாம் பூச்சி வயிற்றினுள் பறக்க ஆரம்பித்துவிடும். என் கதையும் அப்படியே. அதிகாலை அந்த மார்கழி குளிரில் சாகசங்களை கடந்து குளித்து முடித்து உடலினுள் படர்ந்துள்ள சிறு நடுக்கத்துடனே உணவகத்தினுள் நுழைகையில், அந்த அதிகாலையிலேயே சுடச், சுடத் தயாரிக்கப்பட்ட பொங்கலின் மணமும், அப்படியே வாடிக்கையாளர்கள் கேட்டவுடன் கொடுக்கத் தயாராக இருக்கும் அட்டகாசமான காபி டிக்காசன் மற்றும் சூடான பாலின் வாசமும் கலந்து காற்றினுள் பரவும் ஒரு தெய்வீக மணம் ஒன்று, நாசிகளின் வழியே அப்படியே உடம்பின் நரம்பிற்குள் ஊடுருவி பயணிக்கும் பாருங்கள் வாய்ப்பேயில்லை. ஏற்கனவே வயிற்றினுள் பறந்து கொண்டிருக்கும் பட்டாம்பூச்சியை அது பன்மடங்காக பெறுக்கி விடும். அந்த அற்புத மணத்தை உள்வாங்கியபடியே, காசாளருக்கான மேடையைச் சுத்தப்படுத்தி, அங்கிருக்கும் அகல் விளக்கை ஏற்றிவிட்டு, காசாளருக்கான இருக்கையில் அமர்ந்தால், உணவகத்தின் கதவுகள் திறக்கப்படும். கதவை மேல் நோக்கி திறந்தவுடன் அன்றைக்கான வியாபாரம் சிறப்பாக இருக்க வேண்டுமென மனதினுள் குளிரின் நடுக்கதோடு வேண்டி மேடையை தொட்டு வணங்கி திரும்பி உணவகத்தினுள் பார்வையைச் செலுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு உணவு பணிமாறும் பணியில் இருக்கும் நண்பர் ஒருவர், அவருடைய உணவு பரிமாறும் தட்டில் ஒரே ஒரு சின்ன எவர்சில்வர் டம்ளரை ஏந்தியபடி என்னை நோக்கி வருவார். கிட்டதட்ட என் கண்களுக்கு அவர் ஆண் தேவதை போல் தான் தெரிவார். காரணம், அந்த இதமான காலை குளிருக்கு அவர் கைகளில் ஏந்திவருவது எனக்கான சூடான காபியை. அந்த காப்பிக்கு தனியான சிறப்பு ஒன்று உண்டு. பொதுவாக பெரிய உணவங்களில் காபியை வட்டா செட் எனப்படும் ஒரு சின்ன கிண்ணம் மற்றும் அதற்குள் இருக்கும் சின்ன டம்ளரில் தான் தருவார்கள். அதனை நாம் ஆற்றிக் குடிக்க வேண்டும். இங்கே எனக்காகத் தயாராகி வரும் காபியானது, அந்த டம்ளரின் பாதிக்கு மேல் ஆனால், முக்கால் பாகத்தை தொடாத அளவு சரியாய் ஆற்றப்பட்டு, அதன் பின் டம்ளரின் மேல் நுனிவரை நுரை ததும்ப மிகச் சரியான சூட்டில் இருக்கும். அந்த காப்பியின் முதல் மிடறு நாவில் படும் நொடி இருக்கிறது இல்லையா. அந்த கணம் தெய்வீகமானது. ஆங்கிலத்தில் சொல்லப்படும் டிவைன் என்ற வார்த்தையின் அர்த்தம் அப்பொழுது விளங்கும்.

நான் வேலைப் பார்த்த அந்த உணவகத்தின் காப்பிக்கு ஒரு ரசிகர் படையே உண்டு. அதிகாலை உணவகம் திறப்பதற்கு முன்பாகவே சில பேர் கையில் அன்றைய தினசரியை வைத்துக் கொண்டு காத்திருப்பார்கள். அதிலும் ஒருவர் உள்ளே வந்தவுடன் டபுள் ஸ்ட்ராங் காபி ஒண்ணு சுகர் போடாதீங்க எனச் சொல்லி விட்டு, காபி தான் அமர்ந்திருக்கும் மேஜைக்கு வந்தடைந்தவுடன், அதனை உதட்டோரத்தில் வைத்து உறிஞ்சி பருகியபடி தான் கொண்டு வந்த அன்றைய தினசரி பத்திரிக்கையை பிரித்து படிக்க ஆரம்பிப்பார். சரியாக இருபது நிமிடம். படித்து முடிக்கும் தருவாயில் மீண்டும் முதலில் சொன்னது போலான காபியை மீண்டும் கொண்டுவரச் சொல்வார். அதையும் அவர் குடித்து முடிக்கும் தருவாயில் தினசரி பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் உள்ள மிஞ்சம் மீதி செய்திகளும் வாசித்து முடிக்கப்பட்டிருக்கும். அப்படியே தான் அருந்திய காபிக்கான ரசீதுடன் வந்து பணத்தை செலுத்திவிட்டு, காபி கொடுத்த சுவையின் மிச்சத்தை தன்னுடைய உதடுகளில் சுமந்தபடி தெய்வீகச் சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு செல்வார். அந்தக் காபியின் சுவைக்கு மிக, மிக முக்கியமான காரணம். அதனை தயாரித்து கொடுக்கும் அந்த மீசைக்கார நபரிடம் இருந்தது. ஆமாம் அந்த காபி தயாரிக்கும் வல்லுநரின் பெயர் தெரியாது. ஆனால் மீசைகாரர் என்றால் எல்லோருக்கும் தெரியும். அவர் காபி தயார் செய்யும் அழகு இருக்கிறதே, அதனை பார்க்கக் கண் கோடி வேண்டும். தான் செய்யும் வேலையை வேலையாக மட்டுமே பார்க்கும் பணியாளனுக்கும், அதனை ஒரு கலை போல் ரசித்து செய்யும் விற்பனனுக்குமான வித்தியாசம் அந்தப் புள்ளியில் தான் இருக்கிறது. அந்த மீசைகாரரின் முன்னால் இருக்கும் மேடையில் இருக்கும் பெரிய தட்டில் பெரும்பாலும் ஆறு அல்லது ஏழு வட்டா செட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவருடைய வலதுபுறம் டிக்காசன் இருக்கும் கெட்டில் பாத்திரம் இருக்கும். அதில் பொருத்தப்பட்டிருக்கும் குழாயின் வழியே வட்டாவில் டிக்காசனை பிடிப்பார். அதனை அப்படியே அங்கிருக்கும் வட்டாசெட்டுகளின் டம்ளரில் ஊற்றுவார் என்றெல்லாம் சொல்லமுடியாது. கைகளை வலதுபுறமிருந்து இடபுறத்தை நோக்கி வீசுகையில் முன்னால் இருக்கும் வட்டா செட்டுகளுக்குள் டிக்காசன் நிரம்பியிருக்கும். அவர் அப்படி கையை வீசுவதில் கூட ஒரு சின்ன லயம் இருக்கும். அதே பாணியில் சீனி பின்னர் பால் அவ்வளவு தான். தெய்வீகமான காபித் தயார். ஒவ்வொன்றாக அளவு பார்த்து ஊற்றும் கதையெல்லாம் கிடையாது. மீசைக்காரர் தன்னுடைய கரத்தால் டீக்காசனை வீசி கோப்பைகளை நிரப்பும் வேகம் இருக்கிறது இல்லையா?. அந்த லயத்தை படிக்கவே தனியான கவனம் தேவை. எனக்கு எப்பொழுது எல்லாம் தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் சும்மா அப்படியே உணவகத்தின் சமையலறையின் உள்ளே போய் மீசைக்காரரிடம் காபி வேண்டுமென கேட்டு வாங்கி அதனைப் பருகியபடியே, அந்த மீசைகாரின் கைகளின் தவழும் லயத்தில் வாடிக்கையாளர்களுக்கு தயாராகும் காபியை ரசித்தபடி நின்று கொண்டிருப்பேன். மகிழ்ச்சி.

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916