மனக்குளத்தின் ஆழதிற்குள் அமிழ்ந்திருக்கும் கூலாங்கல்…
இணைய வெளியில் எனக்கு பிடித்த எழுத்தாழுமைகளின் நேர்காணலையோ அல்லது வேறேதாவது காணொளிகளையோ காணும் போது எல்லாம், என்னுடைய எண்ணங்கள் பின்னோக்கி போய் மனதின் ஓரத்தில் சலனமற்று இருக்கும் மாயக்குளத்தின் மீது கல்லெறிந்து விட்டுப் போய் விடுகின்றன. பவாவுடன் தனக்குள்ள நீண்டகால நட்பை பற்றிய ஜெயமோகனின் நேர்காணல் ஒன்றை இணையத்தில் காணொளியில் பார்த்துக்கொண்டிருந்தேன். பார்த்துக் கொண்டிருக்கும் போதே மனதின் மாயக்குளத்தினுள் அமிழ்ந்திருக்கும் ஒரு கூழாங்கல்லின் குளிர்ச்சியை உடல் உணரத்தொடங்கி சின்னதாய் சிலிர்த்து அடங்கியது. ஜெயமோகன் எதைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கையில் நினைவுகள் பின்னோக்கி போனது என்பதை அவதானிக்க முடியவில்லை. ஆனால் கூழாங்கல் ஏற்படுத்திய குளிர்ச்சியின் சிலிர்ப்பிற்குள் பயணிக்கலாம் எனத் தோன்றியது. போன முறையை போல் அதே உணவகத்துறையில் வேலை செய்து கொண்டிருக்கையில் நடந்த சம்பவம் தான். இம்முறை வேறு ஊர், வேறு ஒரு உணவகம் சார்ந்த கடை. ஆனால், அது முழுமையான உணவகம் அல்ல. இதுவே போதும் இதற்கு மேல் மேலும் விவரங்கள் வேண்டாம். காரணம் சில விஷயங்களை எப்பொழுதுமே முழுமையாய் சொல்லாமல் விடும் அதே நேரம், சொல்லப்போகும் சம்பவத்தின் ஆன்மாவை மட்டும் மிகச்சரியாய் வெளிப்படுத்துவதில் ஒரு அட்டகாசமான உச்சப்பட்ச சுவாரஸ்யம் இருக்கிறது. அந்த சுவாரஸ்யம் தான் பல நேரங்களில் என்னை எழுத தூண்டுகிற அதே நேரம், அது கொடுக்கும் ஒருவித உணர்வெழுச்சி எனக்கு மிக, மிகப் பிடித்திருக்கிறது. அதுவும் போக முழுமையாய் சொல்லாமல் இருப்பது பல வகைகளிலும் பாதுகாப்பானதும் கூட. இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் பார்வைக்கும் இது போய் சேரக்கூடிய வாய்ப்பிருப்பதால், என்னுடைய எழுத்து எந்த வகையிலும் அவர்களது வாழ்விற்குள் எதிர்மறை விஷயங்களை உருவாக்கிடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன். சரி விஷயத்திற்குள். நான் வேலை செய்துகொண்டிருந்த அந்த உணவகம் சார்ந்த கடையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்தேன். பெரும்பாலான நேரங்களில் சிந்தனை முழுவதுமே வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களே ஆக்கிரமித்திருக்கும் வேறு சிந்தனையே இருக்காது.
அப்பொழுதைய சமயத்தில் வேலை நேரத்தை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவது என்பது அரிதிலும் அரிதான விஷயம். அப்படியான நேரம் வாய்க்கையில், ஒன்று திரைப்படம் பார்க்க போவேன் அல்லது பாடல்கள் கேட்டுக்கொண்டிருப்பேன். இப்படியே போய் கொண்டிருந்த வாழ்வில், சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. வெகு சாதாரணமாக தொடங்கியது தான் அந்தச் சந்திப்பு. சம்பிரதாய பேச்சுகள் கூட அதிகம் கிடையாது. எந்தப் புள்ளியில் என் மனதில் தோன்றியது என்பதை இந்த நிமிடம் வரை என்னால் கணிக்க முடிந்ததே இல்லை. ஒரு வேளை அது தான் காதலின் இலக்கணமோ என்னவோ. ஆனால் அந்தப் பெண்ணை விரும்ப ஆரம்பித்திருந்தேன். அவர்களிடம் அதை சொல்ல வேண்டும், ஆனால் என்னை பற்றிய என்னுடய பிம்பமே அப்பொழுதைய சூழலில் எனக்கே நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஆனாலும் ஒரு உந்துதல் எதுவானாலும் பராவாயில்லை சொல்லிவிடுவது. அதன் பின் எது நடந்தாலும் ஏற்றுக்கொள்வது என முடிவெடுத்தேன். அந்த சமயம் ஆங்கில மாதத்தில் பிப்ரவரி நடந்து கொண்டிருந்தது, பிப்ரவரி பதினான்கு காதலர்தினம் அன்றே காதலை சொல்லிவிடுவது எனத் தீர்மானித்தேன். அந்தப் பெண் தினமும் காலை தனி போதனை வகுப்பிற்கு அதாவது டீயுசனிற்கு என்னுடைய உணவகத் துறை சார்ந்த கடையை தாண்டி தான் தினசரி போய்க் கொண்டிருந்தார். தினசரி கடையை திறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக கடையைக் கடந்து போவார். திரும்பி ஒரு மணி நேரத்தில் கடையைக் கடந்து வீட்டிற்கு போய் விடுவார். அவர் வந்து திரும்பி செல்லும் இரண்டு சமயங்களிலுமே கடை திறந்திருக்காது. அவரிடம் சொல்ல அவர் வந்து செல்லும் நேரமே எனக்கு வசதியாக தோன்றியது. சரியென்று எப்படி சொல்லப்போகிறோம் என்பதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட ஆரம்பித்தேன். இப்பொழுது நினைத்தாலும் நானா அது எனத் தோன்றும். அன்றைய சூழலில் என் அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டிய ஒரு பரிசுபொருளை தாயாரித்தேன். அது எம்மாதிரியான பரிசு என்றால், ஆங்கிலத்தில் I LOVE YOU என்ற மூன்று வார்த்தைகளை மனதில் வைத்து, மூன்று விதமான வெவ்வேறு விஷயங்களை தயார் செய்தேன். முதல் எழுத்திற்கு நான் எழுதிய ஒரு சின்ன கடிதம். இரண்டாம் எழுத்திற்கு அந்த வாரத்தில் காதலர் தின சிறப்பிதலாக வெளிவந்திருந்த வாரப்பத்திரிக்கையான குமுதம் புத்தகம். கடைசி வார்த்தைக்கு ஆனந்த விகடனில் இருந்து ஏற்கனவே வெளியாகியிருந்த காதல் படிக்கட்டுகள் எனும் புத்தகம் என மூன்றையும் வைத்து ஒரு பரிசுபொருளுக்கு கட்டி கொடுக்கப்படும் நாடாவால் கட்டி ஒரு மாதிரி பரிசுப்பொருளின் பாவணையில் தெரியும் ஒன்றை தயார் செய்துவிட்டேன்.
அன்றைக்கு காதலர் தினம் உலகத்தில் இருக்கும் அத்தனை கடவுள்களையும் வேண்டியபடி, உள்ளுக்குள் அடிப்பின்னியெடுத்துக்கொண்டிருந்த பயம் எனும் புயலை வெளிக்காட்டாமல், அடேய் சூனா பானா கவனமாடா என எனக்கு நானே சொல்லிக்கொண்டே, பரிசை எப்படியோ அவரிடம் கொடுத்துவிட்டேன். பரிசை அவர் கைகளில் கொடுக்கையில், சப்த நாடியும் அடங்கியது என்று சொல்வார்களே அதன் அர்த்தம் எனக்கு மிக, மிகத் தெளிவாக அன்று விளங்கியது. அந்தப் பரிசு பொருளில் வைத்து கொடுத்த என்னுடைய கடிதத்தில் உங்களின் முடிவை இந்த அலைபேசி எண்ணிற்கு அழைத்து சொல்லுங்கள் என, பணியில் இருந்த கடையின் எண்ணை கொடுத்திருந்தேன். பரிசை அவர் வாங்கி சென்ற கணத்தில் இருந்து, அவரின் முடிவிற்காக காத்திருந்த இடைவெளியில் வயிற்றிற்குள் பட்டாம்பூச்சி, டைனோடசர் என அனைத்து வித ஜீவராசிகளும் ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. சரியாக ஒரு மணிநேரம் எவ்வித அலைபேசி அழைப்பும் வரவில்லை. இன்றைக்கு கண்டிப்பாக மண்டகபடி தான் என மனதிற்குள் முடிவுசெய்திருந்த சமயத்தில், தூரத்தில் அவர் டீயுசன் முடித்து திரும்பி வருவது தெரிந்தது. மீண்டும் ஒரு முறை சப்தநாடியும் அடங்கியது. கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த என்னை நோக்கி நேராக வந்து நான் கொடுத்த பரிசை அப்படியே என்னிடம் திருப்பி கொடுத்துவிட்டு. எனக்கு அப்படியான எண்ணம் எதுமில்லை என சொல்லிவிட்டு விறுவிறு என கடந்து போய்விட்டார். இப்படி நடக்கும் வாய்ப்புகளும் அதிகம் என ஏற்கனவே சிந்தித்து வைத்துத்திருந்தேன் என்பதால் பெரியதான ஏமாற்றம் ஏதுமில்லை. எனக்கு அப்பொழுது இருந்த ஒரே மனநிலை, அவர் வேறு யாரிடமும் போய் என்னை பற்றி புகார் எதுவும் சொல்லாமல் என்னிடமே நேரடியாக வந்து அவரின் முடிவை கூறியது, ஒருவிதத்தில் மிகபெரும் நிம்மதியளித்தது. சரி இனிமேல் எக்காரணத்தை கொண்டும் தப்பித்தவறி கூட அவரை தொந்தரவு செய்யக்கூடாது என முடிவு செய்துவிட்டேன். என்னுடைய வேலை பளு என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன், அவர் தினசரி டீயுசன் போவது மட்டுமே உணவக கடையை தாண்டி அல்ல, அவர் தினமும் கல்லூரிக்கு செல்வதற்கும் மிகச்சரியாக உணவக கடையின் எதிர்புறமிருக்கும் பேருந்து நிறுத்தம் வந்து தான் பேருந்து ஏறிச் செல்வார்.
இனி அவ்வளவு தான் என முடிவெடுத்து ஒரு மணிநேரம் கூட ஆகியிருக்காது. அன்றைக்கே கல்லூரிக்கு செல்வதற்காக உணவக கடையில் எதிரே இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு சாலையை கடந்து செல்ல வந்து நின்றவர், எப்பொழுதும் போல் இயல்பாக இல்லாமல் தன்னுடைய முகத்தை அவர் கையில் வைத்திருக்கும் ஒரு பெரிய புத்தகத்தை வைத்து மறைத்திருந்தார். என்னை பார்ப்பதை தவிர்ப்பதற்காக அப்படி செய்கிறார் என விளங்கியது. அதே தான் அப்படியான எண்ணமில்லை என்று சொன்ன பிறகு, சாதாரணமாக கடந்து செல்லாமல் முகத்தை மறைக்கவேண்டிய அவசியமென்ன என யோசித்து கொண்டிருக்கையில் தான் அந்த சம்பவம் நடந்தது. அவருடன் எப்பொழுதும் அவருடைய நெருங்கிய தோழி ஒருவரும் கூடவே வருவார், இவர் தான் முகத்தை மறைத்திருந்தாரே ஒழிய அவருடன் வரும் தோழியின் முகம் தெளிவாய் தெரிந்தது. அப்பொழுது தான் கவனித்தேன் அந்த தோழியின் முகத்தில் ஒரு வெட்கம் கலந்து சிரிப்பு வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. இவர் அவரிடம் சிரிக்காதே, சிரிக்காதே என கைகளால் சைகை காட்டிக்கொண்டே இருப்பது தெரிந்தது. எனக்கு உடனடியாக விஷயம் விளங்கிவிட்டது. பரிசைத் திருப்பி கொடுத்துவிட்டு அப்படி ஒரு எண்ணமேயில்லை என்று சொன்னவர் மனதிற்குள் எனக்காய் சின்னதாய் ஒரு இடமிருக்கிறது ஆனால் அதனை ஒத்துக் கொள்ள அவருக்கு எதோ ஒரு தடை இருக்கிறது என்பது விளங்கியவுடன், மீண்டும் பட்டாம்பூச்சியும் டைனோசரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் ஒரு விஷயத்தை தெளிவாய் முடிவு எடுத்தேன். எக்காரணத்தை கொண்டும் அவராக வந்து சொல்லும் வரை, அவரை கடுகளவு கூட தொந்தர செய்திடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். அவரின் மனதிற்குள் இருக்கும் எண்ணத்தின் சிறுதுளி வெளிப்பட்ட நாளில் இருந்து என்னுடைய இரவுகள் வேறு உலகமாக மாறியது. அந்த உணவகம் சம்பந்தப்பட்ட கடை இரவு முடிய பிறகு, நான் மட்டுமே அந்த கடைக்குள் தங்கியிருப்பேன். அந்த கடையினுள் திரைப்பட பாடல் கேட்கும் சின்ன ஒலிபதிவு கருவி இருந்தது. ஆங்கிலத்தில் டேப்ரெக்கார்டர். அப்பொழுதைய நாட்களில் வெளிவந்திருந்த ஹேராம் படத்தின் பாடல்களுக்கு குறிப்பாக நீ பார்த்த பார்வை என்கிற பாடலுக்கு என் மனம், உடல், ஆன்மா என அனைத்தும் மிகப் பெரும் அடிமை. அன்றைக்கு இருந்த ஒலிநாடாவின் இரு பக்கத்திலும் அந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பதிவு செய்து வாங்கி வைத்திருந்தேன். கடை மூடிய பிறகு சாலையில் அனைத்துவிதமான சப்தங்களும் அடங்கிய பின்னரவுகளில் 10மணிக்கு மேல், கடைக்குள் ஒரு பக்கமிருக்கும் கண்ணாடி ஜன்னல் இரண்டையும் திறந்துவிடுவேன் வெளிக்காற்றின் குளிர் கடைக்குள் நிரம்ப ஆரம்பிக்கும். அப்படியே நடந்து போய் கடைக்குள் இருக்கும் ஐஸ்கீரிம் பேட்டியில் இருந்து அன்றைய நாட்களில் எனக்கு மிகவும் பிடித்தமான பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரிமை கண்ணாடி கோப்பையில் நிரப்பி கடைக்குள் இருக்கும் மேஜையில் வைத்துவிட்டு, ஒலிப்பதிவு கருவியில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என ஹேராம் திரைப்படப் பாடலை ஓடவிட்டு மேஜைக்கு அருகில் வருகையில், ஐஸ்கிரிம் அப்படியே தன்னுடைய கடினதன்மையிலிருந்து கொஞ்சமாய் உருகி இலகுவாகி சாப்பிடும் நிலைக்கு வந்திருக்கும். ஐஸ்கிரிமை எடுத்து உதட்டில் வைத்து நாவில் அதன் குளிர்ச்சி பரவ ஆரம்பிக்கையில், ஒலிக்க ஆரம்பித்த பாடலின் முதல் இரண்டு வரிகளும் எனக்காவே எழுதப்பட்டது போல் இருக்கும், நீர் பார்த்த பார்வைக்கொரு நன்றி, நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி எனத் தொடங்கும் பாடலை உருகி வழியும் ஐஸ்கிரிமோடு குளிர் காற்று வீசும் அந்த இரவை இளையராஜா எங்கெங்கோ கடத்திக்கொண்டுபோய் கொண்டேடேடே இருப்பார். நீளம் கருதி இத்துடன் நிறுத்துகிறேன். மகிழ்ச்சி.
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916